search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alcohol bars"

    • பல இடங்களில் அனுமதி இன்றி மதுக்கடை அருகே பார் செயல்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
    • சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 3 பார்களை ஆரம்பாக்கம் போலீசார் பூட்டி சீல் வைத்தனர்.

    திருவள்ளூர்:

    விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பெண்கள் உள்பட மொத்தம் 22 பேர் இறந்தனர். இந்த சோகம் நீங்குவதற்குள் தஞ்சாவூர் அருகே மதுகுடித்த 2 பேர் பலியானார்கள். அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் அனுமதி இன்றி மதுக்கடை அருகே பார் செயல்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, ஆர்.கே.பேட்டை ஆகிய 7 தாலுகாக்களில் மொத்தம் 137 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.

    இந்த கடைகளுக்கு, காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள, திருவள்ளூர் மேற்கு மாவட்ட டாஸ்மாக் குடோனில் இருந்து, பீர் வகைகள், மது பானங்கள், தினமும் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன.

    மொத்தம் உள்ள 137 டாஸ்மாக் கடைகளில், 56 கடைகளுக்கு அருகில் மட் டும், 'பார்' நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. மீதி உள்ள கடைகளுக்கு அருகில் பார்கள் செயல்பட அனுமதியில்லை. ஆனால் சிலர் அனுமதி இன்றி 'பார்'கள் நடத்தி வருவது விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணைப் போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் மேற்பார்வையில் போலீசார் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடை அருகில் இயங்கி வந்த பார்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

    திருவள்ளூர் டோல்கேட் அருகில் திருப்பாச்சூர் ஊராட்சியில் செயல்பட்ட மதுபாரில் திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் கமலஹாசன் தலைமையிலான தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். இதில் அந்த பார் அனுமதியின்றி இயங்கி வந்தது தெரிந்தது. இதையடுத்து திருப்பாச்சூர் வி.ஏ.ஓ., லோகநாதன் முன்னிலையில், போலீசார் மற்றும் கலால் துறையினர் அந்த மதுபாருக்கு சீல் வைத்தனர். இதேபோல் தலக்காஞ்சேரி, பெரியகுப்பம் மற்றும் திருவள்ளூர் பஸ் நிலையம் அருகே அனுமதியின்றி இயங்கிய மதுபாருக்கு சீல் வைக்கப்பட்டது.

    பொன்னேரி வெண்பாக்கம் லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு அனுமதி இல்லாமல் செயல்பட்ட 7 பார்களுக்கு கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. கிரியா சக்தி தலைமையில் கலால் தாசில்தார் குமார் துணை வட்டாட்சியர் தேன்மொழி வருவாய் ஆய்வாளர் ஜெயபிரபா முன்னிலையில் பொன்னேரி போலீசார் அனுமதி இல்லாமல் செயல்பட்ட பார்களுக்கு பூட்டு போட்டனர். இதேபோல் கும்மிடிப்பூண்டி, எளாவூர் பகுதியில் உள்ள இரண்டு பார்கள் மற்றும் சுண்ணாம்பு குளத்தில் உள்ள ஒரு பார் உட்பட சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 3 பார்களை ஆரம்பாக்கம் போலீசார் பூட்டி சீல் வைத்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி செயல்பட்ட மொத்தம் 71 மதுபார்களுக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வளவு நாட்கள் அனுமதி இன்றி இந்த மதுபார்கள் செயல்பட்டது எப்படி? அதிகாரிகள் உடந்தையாக உள்ளனரா? மதுபார்கள் யாரின் கட்டுப் பாட்டில் செயல்பட்டது என்பது குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் அனுமதியின்றி செயல்படும் மதுபார்கள் பற்றிய விபரங்களை சேகரித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 71 மதுபார்கள் ஒரே நாளில் சீல்வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×