என் மலர்
நீங்கள் தேடியது "Anbumani Ramdoss"
- ஊழலுக்கு எதிரான போராட்டங்களைக் கண்டு அரசும் காவல்துறையும் அஞ்சுவது ஏன்?
- அடக்குமுறைகளை கைவிட்டு, டாஸ்மாக் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.
டாஸ்மாக் ஊழல் போராட்டத்துக்கு முன்பே அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: போராட்டத்துக்கு முன்பே அண்ணாமலை உள்ளிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது!
ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவதற்கு முன்பே பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களை காவல்துறை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
ஊழலுக்கு எதிரான போராட்டங்களைக் கண்டு அரசும் காவல்துறையும் அஞ்சுவது ஏன்? தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடுவதற்கு கூட அனுமதி இல்லையா?
திமுகவினர் ஊழல் செய்யவில்லை என்றால் இத்தகைய அடக்குமுறைகளை கைவிட்டு, டாஸ்மாக் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- 7 மாதங்களில் மட்டும் மின்வாரியத்திற்கு ரூ.23,8653 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது.
- முந்தைய ஆண்டை விட அதிகமாக ரூ.9192.25 இழப்பைத் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் எதிர்கொண்டது.
51 சதவீதம் கட்டண உயர்வு, 96 சதவீத வருவாய் உயர்வு, ஆனாலும் மின்வாரியம் ரூ.6,920 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
51% கட்டண உயர்வு, 96% வருவாய் உயர்வு,
ஆனாலும் மின்வாரியம் ரூ.6920 கோடி இழப்பு:
இதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா?
தமிழ்நாட்டில் 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால் மின்வாரியத்தின் வருவாய் 96% அதிகரித்திருக்கும் போதிலும் இழப்பு தொடர்வதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
51% அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் கூட மின்வாரியத்தை லாபத்தில் இயக்க முடியவில்லை என்பது தான் அரசும் மின்வாரியமும் எந்த அளவுக்கு ஊழலில் திளைக்கின்றன என்பதற்கு சான்றாகும்.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தமிழ்நாடு மின்சார வாரியம் தாக்கல் செய்துள்ள 2023-24ம் ஆண்டிற்கான வரவு & செலவு கணக்குகளில் இருந்து பல புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.
திமுக ஆட்சியில் முதன் முதலாக 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் மூலம் 7 மாதங்களில் மட்டும் மின்வாரியத்திற்கு ரூ.23,8653 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது.
இதில் சுமார் 20% மின் வணிகம் அதிகரித்ததன் காரணமாக கிடைத்தது என்று வைத்துக் கொண்டாலும், மீதமுள்ள சுமார் ரூ. 18,400 கோடி கூடுதல் வருவாய் கட்டண உயர்வின் மூலம் கிடைத்தது. 2021&22ஆம் ஆண்டில் மின்வாரியத்தின் இழப்பு ரூ.9130 கோடி தான் என்பதால், கிடைத்த கூடுதல் வருவாயைக் கொண்டு மின்வாரியம் குறைந்தது ரூ.10,000 கோடி லாபம் ஈட்டியிருக்க வேண்டும். ஆனால், முந்தைய ஆண்டை விட அதிகமாக ரூ.9192.25 இழப்பைத் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் எதிர்கொண்டது.
2023- 24ஆம் ஆண்டில் வணிக நிறுவனங்களுக்கு 2.18% மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. வீடுகளுக்கும் அதே அளவு கட்டணம் உயர்த்தப்பட்டது. அது நேரடியாக மக்கள் மீது திணிக்கப்படவில்லை என்றாலும், மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு அரசால் நேரடியாக செலுத்தப்பட்டதால் மின்வாரியத்தின் வருவாய் குறையவில்லை.
அதனால், 2023- 24ஆம் ஆண்டிலாவது மின்சாரவாரியம் லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த ஆண்டிலும் மின்சாரவாரியம் தொடர்ந்து இழப்பைத் தான் சந்தித்திருக்கிறது.
2023- 24ஆம் ஆண்டில் மின்வாரியத்தின் மொத்த வருவாய் ரூ.97,757 கோடி ஆகும். இது 2021-22ஆம் ஆண்டின் வருவாயான ரூ.49,872 கோடியை விட 96%, அதாவது ரூ.47,885 கோடி அதிகமாகும்.
இடைப்பட்ட காலத்தில் மின் வணிகம் 1137.8 கோடி அதிகரித்துள்ளது. 2022&ஆம் ஆண்டில் ஒரு யூனிட்டின் சராசரி கட்டணம் ரூ.5.60 என்பதால், அதன் மூலம் கிடைத்த ரூ.6371 கோடியை கழித்தாலும் கூட, கட்டண உயர்வின் மூலம் மட்டும் இரு ஆண்டுகளில் மின்சார வாரியத்திற்கு ரூ.41,514 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
அதன் காரணமாக மின்சார வாரியம் குறைந்தது ரூ.32 ஆயிரம் கோடி லாபம் ஈட்டி இருக்க வேண்டும். ஆனால், ரூ.6920 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. இரு ஆண்டுகளில் வருவாய் ரூ.41,514 கோடி அதிகரித்திருந்தாலும் கூட, இழப்பு ரூ.2210 கோடி மட்டும் தான் குறைந்திருக்கிறது என்றால், கட்டண உயர்வால் கூடுதலாக கிடைத்த மீதமுள்ள ரூ.39,304 கோடி எங்கே சென்று மாயமானது?
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பு தொடர்வதற்குக் காரணம் அங்கு நடைபெறும் ஊழல்கள் தான். தமிழ்நாடு மின்வாரியம் நிலுவையில் உள்ள மின்திட்டங்களை செயல்படுத்தி, மின்னுற்பத்தியில் தன்னிறைவு பெற்றால் ஆண்டுக்கு ரூ.40,000 கோடிக்கும் மேலாக லாபம் ஈட்ட முடியும்.
ஆனால், அவ்வாறு நடந்தால் ஆட்சியாளர்களால் கமிஷன் வாங்கி கோடிகளை குவிக்க முடியாது என்பதற்காகவே மின்திட்டங்களை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர்.
மின்சாரத்தை வாங்குவதில் எந்த அளவுக்கு கொள்ளை நடந்திருக்கிறது என்பதை மின்வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களே தெளிவாக நிரூபிக்கின்றன.
2021- 22ஆம் ஆண்டில் மின்வாரியத்தின் மொத்த மின் வணிகம் 8200.20 கோடி யூனிட் ஆகும். இதில் தனியாரிடமிருந்து வாங்கப்பட்டது 7262.90 கோடி யூனிட். அதாவது மின்வாரியத்தின் மொத்த வணிகத்தில் 12.91% மட்டும் தான் மின்வாரியத்தால் சொந்தமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள 87.09% மின்சாரம் தனியாரிடமிருந்தும், மத்தியத் தொகுப்பிலிருந்தும் தான் வாங்கப்படுகிறது. 2023- 24ஆம் ஆண்டில் மொத்த வணிகமான 9338 கோடி யூனிட்டுகளில் 8290.60 கோடி யூனிட்டுகள், அதாவது 88.79% வெளியாரிடமிருந்து வாங்கப்பட்டிருக்கிறது.
ஒரு மாநிலத்தின் மின்வாரியம் அதன் மொத்த வணிகத்தில் சுமார் 90% மின்சாரத்தை வெளியிலிருந்து அதிக விலைக்கு வாங்கினால் எவ்வாறு லாபம் ஈட்ட முடியும்?
வெளியிலிருந்து வாங்கப்படும் மின்சாரத்தின் அளவு இரு ஆண்டுகளில் 14% மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், செலவு 70% அதிகரித்திருக்கிறது. 2021&22ஆம் ஆண்டில் ஒரு யூனிட் மின்சாரம் சராசரியாக ரூ.4.50க்கு வாங்கப்பட்ட நிலையில், 2023&24ஆம் ஆண்டில் இது ரூ.6.72 ஆக அதிகரித்திருக்கிறது. இது 49.33% உயர்வு ஆகும். மின்சாரத்தின் விலை இந்த அளவுக்கு உயருவதற்கு வாய்ப்பே இல்லை.
ஆட்சியாளர்களுக்கு தங்களுக்குத் தேவையானவற்றை பெறுவதற்காகவே இந்த அளவுக்கு அதிகவிலை கொடுத்து மின்சாரத்தை வாங்கியிருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் சிலரே கூறுகின்றனர்.
ஒரு மின்வாரியம் ஆண்டுக்கு ரூ.55,754 கோடிக்கு வெளியில் மின்சாரம் வாங்கினால், அதில் எந்த அளவுக்கு ஊழல் செய்திருக்கக் கூடும் என்பதை பொதுமக்கள் மற்றும் நடுநிலையாளர்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.
அதேபோல், தமிழ்நாடு மின்வாரியத்தின் மூலம் சொந்தமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு இந்தக் காலத்தில் வெறும் 21% மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், அதற்கான ஆன செலவு மட்டும் 77% உயர்ந்திருக்கிறது.
இதுவும் எங்கேயும் நடக்காத அதிசயம். 2021&22ஆம் ஆண்டில் 2552 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ.14,061 கோடி, அதாவது ஒரு யூனிட்டுக்கு ரூ.5.50 செலவாகியுள்ளது.
ஆனால், 2023&24ஆம் ஆண்டில் 3110.60 கோடி யூனிட் உற்பத்தி செய்ய ரூ.24,920 கோடி செலவாகியுள்ளது. ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ.8.01 செலவாகியுள்ளது.
இது 46% உயர்வு ஆகும். சந்தனக் கட்டைகளை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்தால் கூட இந்த அளவு செலவாகாது எனும் நிலையில், நிலக்கரி அதிக விலை கொடுத்து வாங்கியதால் தான் இவ்வளவு அதிக செலவாகியிருக்கும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
மின்வாரியத்தின் வருவாய் 96% அதிகரித்த பிறகும் ரூ.6920 கோடி இழப்பில் இயங்குவது தான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையா? என்பதை ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும்.
வெளியாரிடம் வாங்கும் மின்சாரத்தின் விலை 49.33% அளவுக்கும், மின்வாரியத்தின் உற்பத்திச் செலவு 46% அளவுக்கு உயர்ந்ததன் காரணம் என்ன? என்பது குறித்து உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- நாங்கள் கூட்டணியில் தான் இருக்கிறோம், அதிமுக தான் கூட்டணியில் இருந்து விலகி உள்ளது.
- சமூக நீதி எங்கள் உயிர் மூச்சு. சமூக நீதிக்காக போராடும் ஒரே தலைவர் ராமதாஸ்.
கிருஷ்ணகிரியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
பாமக- பாஜகவுன் கூட்டணி சேர்வது புதிதல்ல. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் 6 ஆண்டுகள் பாமக கூட்டணியில் இருந்தது.
திமுகவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தது. பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவதை முதலமைச்சர் ஆச்சரியத்துடன் பார்க்கின்றார்.
நாங்கள் கூட்டணியில் தான் இருக்கிறோம், அதிமுக தான் கூட்டணியில் இருந்து விலகி உள்ளது.
2014ம் ஆண்டு எனக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள். எப்போதும் தர்மபுரி மக்களுக்கு உண்மையாக இருப்பேன். என் மீது நம்பிக்கை வைத்ததற்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன்.
நான் அப்போது கொண்டு வந்த திட்டங்கள் முழுமை அடையவில்லை. நிலுவையில் உள்ள திட்டங்களை சௌமியா அன்புமணி முடித்து வைப்பார்.
பிரச்சினையும், தீர்வும் நமக்கு நன்றாக தெரிகிறது. அதிகாரம் வந்தால் ஒரே நாளில் தர்மபுரியின் 90 சதவீத பிரச்சிவைகளையும் தீர்க்க முடியும்.
தர்மபுரி மக்களின் முன்னேற்றம் தான் எனக்கு முக்கிய வேலை. மேடைக்காக பேசவில்லை, உணர்வுப்பூர்வமாக பேசுகிறேன். திட்டங்கள் முழுமை அடையாததற்கு காரணம், முன்பு நீங்கள் தேர்வு செய்த எம்.பி.
பாமக நிறுவனர் ராமதாஸ் போராடியதால் தான் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் வந்தது.
முதல்வர் ஸ்டாலினும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தர்மபுரிக்கு என்ன செய்தனர் ?
பாஜகவுடன் திமுக ஏன் முன்பு கூட்டணிக்கு சென்றது? பல முறை நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்துள்ளோம், புதிதாக சேரவில்லை.
சமூக நீதி எங்கள் உயிர் மூச்சு. சமூக நீதிக்காக போராடும் ஒரே தலைவர் ராமதாஸ். எந்த கூட்டணியில் இருந்தாலும் சமூக நீதியில் சமரசம் கிடையாது.
யார் பிரதமராக இருந்தாலும் சமூக நீதியை நாங்கள் விட்டு கொடுத்ததில்லை. அதிமுகவிற்கு, பாமக துரோகம் செய்யவில்லை.
உழைத்து உழைத்து, மாறி மாறி உங்களை நாங்கள் முதல்வராக்கி வருகிறோம். வன்னியர்களுக்கு மனதார இட ஒதுக்கீடு அளித்ததா அதிமுக ? கடுமையாக போராட்டம் நடத்தினோம். அப்போதும் இட ஒதுக்கீடு அளிக்கவில்லை.
தேர்தல் நெருங்கும் சமயத்தில் இட ஒதுக்கீட்டை அதிமுக அறிவித்தது. எனக்கு சீட்டு வேண்டாம். இட ஒதுக்கீடு கொடுத்தால் போதும் என்றார் ராமதாஸ்.
இட ஒதுக்கீட்டை வைத்து பேரம் பேசினார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமிக்கு சமூக நீதி பற்றி கவலை கிடையாது. அரைகுறையாக சட்டம் வந்ததால்தான் நீதிமன்றம் ரத்து செய்தது.
நாங்கள் இல்லை என்றால் அதிமுக ஆட்சி எப்போதோ முடிந்திருக்கும். நாங்கள் துரோகம் செய்யவில்லை, தியாகம் செய்தோம்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இட ஒதுக்கீடு பற்றி பேசினார்களா ? ஒரு அதிமுக எம்எல்ஏ-ஆவது பேசினாரா ?
பாமக துரோகம் செய்யவில்லை, துரோகம் செய்தது அதிமுக தான். என் மனதில் அவ்வளவு ஆதங்கம் இருக்கிறது.
காலம் முழுவதும் அதிமுகவுடன் இருப்போம் என ஸ்டாம்ப் பேப்பரில் எழுதிக் கொடுத்தோமா ? கருணாநிதி இருந்திருந்தால் இந்நேரம் கையெழுத்து போட்டிருப்பார்.
நமது நோக்கம் தர்மபுரியின் வளர்ச்சி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி விளையாட்டுத்தனமாக உள்ளார்.
- திமுகவும், அதிமுகவும் இணைந்து சண்டை மூட்டி விட்டார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில், விக்கிரவாண்டியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், விழுப்புரம் தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதிரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
திமுக, அதிமுக வேண்டாம். மாற்றம் வேண்டுமென மக்கள் நினைக்கின்றனர்.
தமிழகத்தில் போதைப் பொருளால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆளும் கட்சி வேண்டாம். ஆண்ட கட்சி வேண்டாம் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
ரவிக்குமார் எம்.பி., தொகுதி மக்களுக்கு என்ன செய்தார் ? ரவிக்குமார் தொகுதிக்கு எதுவும் செய்யாமல் மீண்டும் வாக்கு கேட்டு வருகிறார்.
பாமக வேட்பாளர் முரளி சங்கரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
அதிமுக, திமுக என இருவரும் நம்மை ஏமாற்றிவிட்டார்கள். கல்வி, வேலை வாய்ப்பிற்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி விளையாட்டுத்தனமாக உள்ளார்.
தேர்தல் வந்தால் தான் திமுகவிற்கு மக்கள் நியாபகம் வருகிறது. திமுகவில், விசிகவுக்கு பொது தொகுதி கொடுக்காதது ஏன் ?
சமூக நீதி வழங்கி கொண்டிருக்கும் ஒரே கட்சி பாமக. திமுகவும், அதிமுகவும் இணைந்து சண்டை மூட்டி விட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜெயக்குமார் படுகொலை வழக்கில் உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்.
- தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முழுமையாக பாதிக்கப்பட்டிருப்பதையே காட்டுகிறது.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் 2 நாட்களாக மாயமான நிலையில், இன்று வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
உடலை மீட்ட போலீசார் இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயக்குமாரின் மரணத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர ஜெயக்குமார் படுகொலைக்கு காவல்துறையே பொறுப்பு என்றும், இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமார் தனசிங் , உவரியை அடுத்த கரைசுத்துபுதூர் என்ற இடத்தில் உள்ள அவரது தோட்டத்தில் கொடூரமான முறையில் எரித்துக் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
ஓர் அரசியல் கட்சியின் மாவட்டத் தலைவராக இருப்பவர், காவல்துறையில் புகார் அளித்தும் கூட அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முழுமையாக பாதிக்கப்பட்டிருப்பதையே காட்டுகிறது.
காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் மகிழுந்து அவரது தோட்டத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. அவரது உடல் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டுள்ளது. அவரது உடலின் பெரும்பகுதி எரிக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மைகளை வைத்துப் பார்க்கும் போது அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கு காரணங்கள் உள்ளன. அவரது உடலை படம் பிடிப்பதற்குக் கூட காவல்துறையினர் பத்திரிகையாளர்களை அனுமதிக்காதது ஐயத்தை உறுதி செய்திருக்கிறது.
ஜெயக்குமாரை கடந்த 3 நாட்களாகவே காணவில்லை. இது தொடர்பாக அவரது மனைவியும், மகனும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அவர்களுக்கு முன்பாக கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி ஜெயக்குமாரே தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறை செயல்பட்டிருந்தால் ஜெயக்குமாரை காப்பாற்றியிருக்கலாம். ஆனால், காவல்துறை செயல்படத் தவறி விட்டது. ஜெயக்குமாரின் படுகொலைக்கு காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும்.
ஜெயக்குமார் படுகொலை வழக்கில் உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். இந்த வழக்கை தமிழகக் காவல்துறை விசாரித்தால் உண்மை வெளிவராது. அதனால் இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கடைசியாக கடந்த மார்ச் 14-ஆம் நாள் பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது.
- உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போதும் அதன் பயன்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.
சென்னை:
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 68 அமெரிக்க டாலராக குறைந்திருக்கும் நிலையில், அதற்கு இணையாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைக்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
இந்தியாவில் கடைசியாக கடந்த மார்ச் 14-ஆம் நாள் பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. அப்போது உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 89.94 டாலராக இருந்தது. அப்போது இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை ரூ. 55.69 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.56.45 ஆகவும் இருந்தது. இப்போது கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 68 டாலராக குறைந்து விட்ட நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலின் அடக்கவிலை முறையே ரூ.42.09, ரூ.42.63 ஆக குறைந்திருக்கிறது.
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் போதெல்லாம் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்கள், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போதும் அதன் பயன்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.
கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபோது, சில காலம் பெட்ரோல், டீசல் விலைகள் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை என்பது உண்மை தான். ஆனால், அதனால் ஏற்பட்ட இழப்பை விட, அதிக லாபத்தை கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த காலத்தில் பெட்ரோல், டீசலை அதிக விலைக்கு விற்றதன் மூலம் எண்ணெய் நிறுவனங்கள் ஈட்டியுள்ளன.
உலக அளவில் தேவை குறைந்திருப்பதன் மூலம் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.13.60, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.13.82 குறைக்கப்பட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடந்த பல ஆண்டுகளாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஓரளவாவது நிவாரணம் வழங்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- பின்னணியில் அதிகார மையத்தில் இருப்பவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறி இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
- படையப்பா நகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அனைத்து வசதிகளுடன் பேருந்து நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், நகரத்திற்கு வெளியே 8.5 கி.மீ தொலைவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தனியார் நில வணிக நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தின் மதிப்பை பல கோடி உயர்த்தும் நோக்குடன் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.
இதன் பின்னணியில் அதிகார மையத்தில் இருப்பவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறி இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
ராசிபுரம் நகர மக்கள் மற்றும் வணிகர்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, படையப்பா நகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். புதிய பேருந்து நிலையத்தை தனியார் நில வணிக நிறுவனத்துக்கு சாதகமாக படையப்பா நகரில் அமைக்க தீர்மானிக்கப்பட்டதன் பின்னணியில் நிகழ்த்தப்பட்ட பேரங்கள், நடந்த ஊழல்கள் ஆகியவை குறித்து விரிவான விசாரணை நடத்தவும் அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- 1992-ஆம் ஆண்டில் டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்பை ஏற்ற ரத்தன் டாட்டா தமது குழுமத்தை உலகம் முழுவதும் பரப்பினார்.
- இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்தாலும் ஏழைகளைப் பற்றியே சிந்தித்தவர் ரத்தன் டாடா.
சென்னை:
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
உலகப்புகழ் பெற்ற தொழில் வணிக நிறுவனமான டாட்டா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாட்டா உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
இந்தியாவின் தொழில் வணிக வரலாற்றையும், தாராளமயமாக்கல் வரலாற்றையும் ரத்தன் டாட்டா அவர்களை விலக்கி விட்டு எழுத முடியாது. இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் 1992-ஆம் ஆண்டில் டாட்டா குழுமத்தின் தலைவர் பொறுப்பை ஏற்ற ரத்தன் டாட்டா தமது குழுமத்தை உலகம் முழுவதும் பரப்பினார்.
கல்வி, சுகாதாரம், துப்புறவு உள்ளிட்டவற்றுக்காக வாரி வழங்கியவர். முக்கியத் துறைகளில் இந்தியாவின் கொள்கைகளை வகுக்க துணை நின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்திய ரத்தன் டாட்டா வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்பார் என்று தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இந்தியாவின் புகழ்பெற்ற டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவரும், வணிகத்தில் அறத்தைக் கடைபிடித்தவருமான ரத்தன் டாட்டா அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
எளிய பின்னணியில் இருந்து உயர்ந்த ரத்தன் டாட்டா, இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்தாலும் ஏழைகளைப் பற்றியே சிந்தித்தவர். ஏழைகளுக்கும் மகிழுந்து கிடைக்க வேண்டும் என்று போராடியவர். அவரது மறைவு இந்தியத் தொழில்துறைக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.
இந்தியத் தொழில்துறையில் அறம் என்றால் ரத்தன் டாட்டாவின் பெயர் தான் நினைவுக்கு வரும் என்ற அளவுக்கு வரலாற்றில் அவரது பெயர் நிலைத்து நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.
- தேவையான உரங்கள் கூட தடையின்றி கிடைப்பதை தமிழக அரசால் உறுதி செய்ய முடியாதது கண்டிக்கத்தக்கது.
- சில தனியார் கடைகளில் யூரியா உரம் கிடைத்தாலும் கூட, அவர்கள் 25% வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்கின்றனர்.
காவிரி பாசன மாவட்டங்களில் உரத் தட்டுப்பாட்டால் உழவர்கள் பாதிக்கப்படுவதாகவும், தாராளமாக கிடைக்க நடவடிக்கை தேவை எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் மு.க.ஸ்ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நெற்பயிர்களுக்குத் தேவையான யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் கிடைக்காமல் உழவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நாட்டின் முதன்மைத் தொழிலான விவசாயத்திற்கு தேவையான உரங்கள் கூட தடையின்றி கிடைப்பதை தமிழக அரசால் உறுதி செய்ய முடியாதது கண்டிக்கத்தக்கது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நிலப்பரப்பில் சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. முன்கூட்டியே நடவு செய்யப்பட்ட பயிர்கள் குருத்து வெடிக்கும் நிலையில் உள்ளன. தாமதமாக நடவு செய்யப்பட்ட பயிர்கள் இப்போது தான் செழித்து வளரத் தொடங்குகின்றன. இரு நிலையில் உள்ள பயிர்களுக்கும் யூரியாவும், பொட்டாஷும் பெருமளவில் தேவை. ஆனால், காவிரி பாசன மாவட்டங்களில் தனியார் கடைகளில் மட்டுமின்றி, கூட்டுறவு சங்கங்களில் கூட அந்த உரங்கள் கிடைக்கவில்லை.
சில தனியார் கடைகளில் யூரியா உரம் கிடைத்தாலும் கூட, அவர்கள் 25% வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்கின்றனர். அதைக் கட்டுப்படுத்தவோ, பிற பொருட்களை வாங்க வேண்டும் என்று கட்டுப்படுத்தாமல் அதிகபட்ச சில்லறை விலைக்கு தனியார் கடைகளில் உரம் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்யவோ தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ்நாட்டில் உரத்திற்கு எந்த தட்டுப்பாடும் இல்லை, கூட்டுறவு சங்கங்களில் 32,755 டன் யூரியா, 13,373 டன் பொட்டாஷ், 16,792 டன் டி.ஏ.பி, 22,866 டன் காம்ப்ளெக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். அந்த உரங்கள் எல்லாம் எங்கிருக்கின்றன என்பது தெரியவில்லை. அமைச்சர் குறிப்பிடும் அளவுக்கு உரங்கள் இருப்பு இருந்தால் காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு நிலவுவது ஏன்? என்பதை அரசு விளக்க வேண்டும். காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி வெற்றிகரமாக அமைவதை உறுதி செய்ய தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
- பா.ம.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது.
- முகுந்தனுக்கு மாநில இளைஞரணி தலைவராக நியமனம் செய்ததற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார்.
சென்னை:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள பட்டானூரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க. சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது.
அந்தக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், அன்புமணியின் சகோதரி மகன் முகுந்தனுக்கு மாநில இளைஞரணி தலைவராக நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த அறிவிப்புக்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது.
நான் யாரை நியமிக்கிறேனோ அவர்கள் தான் நிர்வாகிகள். நான் உருவாக்கிய கட்சி. எனது முடிவை ஏற்காதவர்கள் வெளியேறி விடலாம் என ராமதாஸ் அழுத்தமாகக் கூறினார். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அன்புமணியை சமாதானம் செய்ய கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் குழு ஒன்றை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பா.ம.க.வில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், பா.ம.க.வில் ஏற்பட்ட பிரச்சனை கருத்து வேறுபாடு அல்ல, கருத்து பரிமாற்றம் என தெரிவித்தார்.
- தமிழ்நாட்டில் கொடூரமான குற்றங்கள் நடப்பது வாடிக்கையாகி விட்டது.
- குற்றங்கள் தொடர்பாக புலன் விசாரணை செய்வதும், குற்றங்களைத் தடுப்பதும் வேறு வேறானவை.
ராணிப்பேட்டை காவல்நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு நடந்த சம்பவம் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கான சாட்சி என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.
தமிழ்நாட்டில் கொடூரமான குற்றங்கள் நடப்பது வாடிக்கையாகி விட்டது. எந்தக் குற்றம் நடந்தாலும் அது தொடர்பாக யாரையாவது கைது செய்து கணக்குக் காட்டுவதையும், அதையே அரசின் சாதனையாக காட்டிக் கொள்வதையும் தான் திராவிட மாடல் அரசு வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய நாடகங்களின் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது.
குற்றங்கள் தொடர்பாக புலன் விசாரணை செய்வதும், குற்றங்களைத் தடுப்பதும் வேறு வேறானவை. குற்றங்களைத் தடுப்பது தான் காவல்துறையின் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும். காவல் நிலையத்தின் மீதே பெட்ரோல் குண்டு வீசலாம் என்ற துணிச்சல் குற்றவாளிகளுக்கு வருகிறது என்றால் தமிழக காவல்துறை மீதான அச்சம் போய்விட்டது என்று தான் பொருள். தமிழக காவல்துறை கடந்த நான்காண்டுகளாக ஆளுங்கட்சியினரின் கைப்பாவையாக மாறியிருப்பதும், மக்களைக் காக்கத் தவறி விட்டதும் தான் இதற்கு காரணம் ஆகும்.
ஸ்காட்லாந்துயார்டு காவல்துறைக்கு இணையானதாக கூறப்பட்ட தமிழக காவல்துறையின் வீழ்ச்சிக்கு திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இனியாவது இழந்த பெருமையை மீட்டெடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- கலைஞர் நூற்றாண்டு காய்கறி அங்காடி என்று பெயர் சூட்ட திமுக அரசு திட்டமிட்டது.
- தமிழக அரசு இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.
திருத்தணியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் காய்கறி சந்தைக்கு பெருந்தலைவர் காமராசரின் பெயரை நீக்கி விட்டு, கலைஞர் நூற்றாண்டு காய்கறி அங்காடி என்று பெயர் சூட்ட தி.மு.க. அரசு முடிவு செய்திருந்தது.
இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், கலைஞர் நூற்றாண்டு சந்தை என்று பெயர் சூட்டும் திட்டம் கைவிடப்படுவதாகவும், ஏற்கனவே இருந்து வந்த பெருந்தலைவர் காமராசரின் பெயரால் பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி என்று அழைக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது
இது பாமக எதிர்ப்புக்கு கிடைத்த வெற்றி என பாமக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது:-
திருத்தணி காய்கறி சந்தைக்கு மீண்டும் காமராசர் பெயர்: பாமக எதிர்ப்புக்கு கிடைத்த வெற்றி!
திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.3.02 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ள காய்கறி சந்தைக்கு கலைஞர் நூற்றாண்டு சந்தை என்று பெயர் சூட்டும் திட்டம் கைவிடப்படுவதாகவும், ஏற்கனவே இருந்த வந்த பெருந்தலைவர் காமராசரின் பெயரால் பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி என்று அழைக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.
திருத்தணியில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் காய்கறி சந்தைக்கு பெருந்தலைவர் காமராசரின் பெயரை நீக்கி விட்டு, கலைஞர் நூற்றாண்டு காய்கறி அங்காடி என்று பெயர் சூட்ட திமுக அரசு திட்டமிட்டது.
இந்த முடிவை கடுமையாக எதிர்த்த நான், தமிழ்நாட்டுக்கு அடையாளம் தேடித் தந்த பெருந்தலைவரின் பெயரை நீக்கக்கூடாது என்றும், அவ்வாறு நீக்கினால் மிகப்பெரிய அளவில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தேன்.
அதைத் தொடர்ந்து தமிழக அரசு இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், புகழுக்கும் காரணமாக இருந்த காமராசர் போன்ற தலைவர்களின் பெயர்கள் எங்கு சூட்டப்பட்டிருந்தாலும், அதன் பெயரை நீக்கும் அல்லது மாற்றியமைக்கும் அரசியலை தமிழக அரசு செய்யக்கூடாது.
அரசின் திட்டங்களுக்கும், கட்டிடங்களுக்கும் ஏற்கனவே சூட்டப்பட்டுள்ள தலைவர்களின் பெயர்கள் நீடிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.