என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anbumani Ramdoss"

    • தமிழ்நாட்டில் கொடூரமான குற்றங்கள் நடப்பது வாடிக்கையாகி விட்டது.
    • குற்றங்கள் தொடர்பாக புலன் விசாரணை செய்வதும், குற்றங்களைத் தடுப்பதும் வேறு வேறானவை.

    ராணிப்பேட்டை காவல்நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு நடந்த சம்பவம் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கான சாட்சி என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.

    தமிழ்நாட்டில் கொடூரமான குற்றங்கள் நடப்பது வாடிக்கையாகி விட்டது. எந்தக் குற்றம் நடந்தாலும் அது தொடர்பாக யாரையாவது கைது செய்து கணக்குக் காட்டுவதையும், அதையே அரசின் சாதனையாக காட்டிக் கொள்வதையும் தான் திராவிட மாடல் அரசு வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய நாடகங்களின் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது.

    குற்றங்கள் தொடர்பாக புலன் விசாரணை செய்வதும், குற்றங்களைத் தடுப்பதும் வேறு வேறானவை. குற்றங்களைத் தடுப்பது தான் காவல்துறையின் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும். காவல் நிலையத்தின் மீதே பெட்ரோல் குண்டு வீசலாம் என்ற துணிச்சல் குற்றவாளிகளுக்கு வருகிறது என்றால் தமிழக காவல்துறை மீதான அச்சம் போய்விட்டது என்று தான் பொருள். தமிழக காவல்துறை கடந்த நான்காண்டுகளாக ஆளுங்கட்சியினரின் கைப்பாவையாக மாறியிருப்பதும், மக்களைக் காக்கத் தவறி விட்டதும் தான் இதற்கு காரணம் ஆகும்.

    ஸ்காட்லாந்துயார்டு காவல்துறைக்கு இணையானதாக கூறப்பட்ட தமிழக காவல்துறையின் வீழ்ச்சிக்கு திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இனியாவது இழந்த பெருமையை மீட்டெடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • கலைஞர் நூற்றாண்டு காய்கறி அங்காடி என்று பெயர் சூட்ட திமுக அரசு திட்டமிட்டது.
    • தமிழக அரசு இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

    திருத்தணியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் காய்கறி சந்தைக்கு பெருந்தலைவர் காமராசரின் பெயரை நீக்கி விட்டு, கலைஞர் நூற்றாண்டு காய்கறி அங்காடி என்று பெயர் சூட்ட தி.மு.க. அரசு முடிவு செய்திருந்தது.

    இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், கலைஞர் நூற்றாண்டு சந்தை என்று பெயர் சூட்டும் திட்டம் கைவிடப்படுவதாகவும், ஏற்கனவே இருந்து வந்த பெருந்தலைவர் காமராசரின் பெயரால் பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி என்று அழைக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது

    இது பாமக எதிர்ப்புக்கு கிடைத்த வெற்றி என பாமக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது:-

    திருத்தணி காய்கறி சந்தைக்கு மீண்டும் காமராசர் பெயர்: பாமக எதிர்ப்புக்கு கிடைத்த வெற்றி!

    திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.3.02 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ள காய்கறி சந்தைக்கு கலைஞர் நூற்றாண்டு சந்தை என்று பெயர் சூட்டும் திட்டம் கைவிடப்படுவதாகவும், ஏற்கனவே இருந்த வந்த பெருந்தலைவர் காமராசரின் பெயரால் பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி என்று அழைக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.

    திருத்தணியில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் காய்கறி சந்தைக்கு பெருந்தலைவர் காமராசரின் பெயரை நீக்கி விட்டு, கலைஞர் நூற்றாண்டு காய்கறி அங்காடி என்று பெயர் சூட்ட திமுக அரசு திட்டமிட்டது.

    இந்த முடிவை கடுமையாக எதிர்த்த நான், தமிழ்நாட்டுக்கு அடையாளம் தேடித் தந்த பெருந்தலைவரின் பெயரை நீக்கக்கூடாது என்றும், அவ்வாறு நீக்கினால் மிகப்பெரிய அளவில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தேன்.

    அதைத் தொடர்ந்து தமிழக அரசு இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், புகழுக்கும் காரணமாக இருந்த காமராசர் போன்ற தலைவர்களின் பெயர்கள் எங்கு சூட்டப்பட்டிருந்தாலும், அதன் பெயரை நீக்கும் அல்லது மாற்றியமைக்கும் அரசியலை தமிழக அரசு செய்யக்கூடாது.

    அரசின் திட்டங்களுக்கும், கட்டிடங்களுக்கும் ஏற்கனவே சூட்டப்பட்டுள்ள தலைவர்களின் பெயர்கள் நீடிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சாதி, மதம் தாண்டி நாம் ஒற்றுமையாக நின்று தருமபுரி மாவட்டத்திற்கு காவிரி உபரி நீர் திட்டத்தை கொண்டு வர வேண்டும்.
    • தருமபுரி மாவட்டத்தில் 18 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். இந்த திட்டம் நிறைவேற்றினால் 15 லட்சம் மக்கள் பயன்படுவார்கள்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூரில் இன்று நடைபயணம் மேற்கொண்ட அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

    தருமபுரியில் காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி 3 நாட்கள் நான் நடைபயணத்தை தொடங்கி இருக்கிறேன். இன்று 3-வது நாளாக தொடங்கி உள்ளேன். நடைபயணத்தின் போது பொதுமக்களிடம் காவிரி உபரி நீர் திட்டம் குறித்து விழிப்புணர்வு நோட்டிசை வழங்கியுள்ளேன்.

    இந்த திட்டம் பற்றி நான் மக்களுக்கு எடுத்து கூறினேன். தமிழ்நாட்டில் மழை குறைவாக பெய்யும் மாவட்டம் தருமபுரி. இந்த மாவட்டத்தில் தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் மின்மோட்டார் மூலம் தருமபுரி மாவட்ட ஏரி, குளங்களுக்கு நிரப்ப வேண்டும்.

    ஆடிப்பெருக்கு விழாவின் போது காவிரி ஆற்றில் இருந்து 16 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. தருமபுரி மாவட்டத்திற்கு வெறும் 3 டி.எம்.சி. தண்ணீர் மட்டும் தான் ஏரி, குளங்களுக்கு நிரப்ப தேவைப்படும். மேட்டூர் அணைக்கு பிறகு எந்த அணையும், தடுப்பு அணையும் கிடையாது.

    கடந்த 7 முறை ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. அரசிடம் மனு கொடுத்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கேட்டால் நிதி இல்லை என்று கூறியுள்ளார்கள். தற்போது தி.மு.க. அரசிடம் மனு கொடுத்தோம். அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

    சாதி, மதம் தாண்டி நாம் ஒற்றுமையாக நின்று தருமபுரி மாவட்டத்திற்கு காவிரி உபரி நீர் திட்டத்தை கொண்டு வர வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் 18 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். இந்த திட்டம் நிறைவேற்றினால் 15 லட்சம் மக்கள் பயன்படுவார்கள்.

    தமிழக அரசிடம் இந்த காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி மீண்டும் மனு கொடுக்கிறோம். அப்படியும் இந்த திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்காவிட்டால் கடுமையான போராட்டம் நடத்துவோம்.

    காவிரி நீரை கொண்டு வர பா.ம.க. 30 ஆண்டுகள் போராடியதால் தான் தற்போது குடிக்க தண்ணீர் கிடைத்துள்ளது.

    முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் குடிநீர் கொண்டு செல்ல 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்றியுள்ளார். ஆனால் தருமபுரி மாவட்டத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களது இந்த திட்டம் கொண்டு வந்ததால் அடுத்த 50 ஆண்டுகள் வரை பிரச்சினை இருக்காது.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

    • பாலியல் குற்றங்களுக்கான தண்டனை குறித்த அச்சம் இல்லாதது தான் குற்றங்கள் பெருகுவதற்கு காரணம் ஆகும்.
    • பாலியல் குற்றங்களைத் தடுக்க கடுமையான தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டியது அவசியம்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    தேனி மாவட்டம் எரசக்கநாயக்கனூரில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஒருவன், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியை தீயிட்டு எரித்துள்ளான். பாதிக்கப்பட்ட சிறுமி 65 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள். இக்கொடிய நிகழ்வு கண்டிக்கத்தக்கது.

    சிறுமியை சிதைக்க முயன்ற கொடியவன் கஞ்சா போதையில் இருந்துள்ளான். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. பாலியல் குற்றங்களுக்கான தண்டனை குறித்த அச்சம் இல்லாதது தான் குற்றங்கள் பெருகுவதற்கு காரணம் ஆகும்.

    பாலியல் குற்றங்களைத் தடுக்க கடுமையான தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டியது அவசியம். அதற்கு போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் கட்டாயம். ஆனால், தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மட்டுமே போக்சோ நீதிமன்றங்கள் உள்ளன. இது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது.

    தமிழ்நாட்டில் போக்சோ சட்டப்படி தொடரப்பட்ட 14,380 வழக்குகளில் 7187 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் போக்சோ நீதிமன்றங்களைத் தொடங்க வேண்டும். பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×