என் மலர்
நீங்கள் தேடியது "Annapoorani worship which bestows unfailing wealth"
- தங்க அன்னபூரணியை தரிசிக்கவே காசி யாத்திரை செல்கின்றனர்.
- அன்னபூரணியை வணங்கினால் வற்றாத செல்வங்களும், உணவும் கிடைக்கும்.
நாம் உண்ணும் உணவுகள் அனைத்தையும் விளைவிப்பதும், அதற்கு ஆதாரமாய் இருப்பதும் அன்னபூரணியே. இந்த அன்னபூரணியை தனத்திரயோதசி தொடங்கி தீபாவளி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் விரதமிருந்து பூஜை செய்து வணங்கலாம். நம்முடைய வீட்டில் அன்னபூரணி உருவச்சிலை வைத்து பூஜை செய்து வணங்கிட அனைத்து நலன்களையும் வளங்களையும் தருவாள்.
தீபாவளி நாளில் லட்சுமி குபேரபூஜை செய்வது போல நாம் அன்னபூரணியை விரதமிருந்து வணங்கினால் வற்றாத செல்வங்களும், உணவும் கிடைக்கும் என்பது ஐதீகம். காசியில் அன்னபூரணி அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரத்தில் பால் அன்னம் தந்து உலக உயிர்களின் அன்னதோஷம் என்னும் வறுமை அண்டாதவாறு அருள்புரிகிறாள்.
தனதிரயோதசி தொடங்கி தீபாவளி, அமாவாசை நாட்களில் காசியில் தங்கமயமாய் காட்சி தரும் அன்னபூரணியை தரிசிக்க வாழ்நாள் முழுவதும் அள்ள அள்ள குறையாத அன்னத்தையும் செல்வத்தை வழங்கிடுவாள் இந்த நாட்களில் தங்க அன்னபூரணியை தரிசிக்கவே பெரும்பாலானோர் காசி யாத்திரை செல்கின்றனர்.
காசியில் தீபாவளியன்று அன்னக்கூடம் என்ற நிகழ்வில் பலவித உணவுகள், பலகாரங்கள் வைத்து பூஜை செய்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படும். மறுநாள் லட்டு தேரில் அன்னபூரணி ஊர்வலம் வருவாள். எண்ணற்ற லட்டுகளால் உருவான தேரில் உள்ள லட்டுக்களை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுப்பார்கள்.
அன்னபூரணி அவதாரம் எப்படி நிகழ்ந்தது. அவர் காசிக்கு எப்படி வந்தார்? என்பதே ஒரு புராண கதையாக சொல்லப்படுகிறது. நான்முகன் என்று போற்றப்படும் பிரம்மனுக்கு முன்பு ஐந்து தலைகள் இருந்தனவாம். இதனால் கர்வம் அதிகமாக இருந்தது. பார்வதி, பரமசிவன், பிரம்மா ஆகிய மூவருக்கும் இடையேயான சிறு பிரச்சினையில் பிரம்மனின் ஒரு தலையை சிவனார் அறுத்து விட்டார்.
இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. பிச்சாடனார் சிவபெருமான் பிரம்மனின் கபாலம் சிவன் கையிலேயே ஒட்டி கொண்டது. இந்த தோஷம் நீங்க பிட்சாடனாராக சிவபெருமான் பல இடங்களில் பிச்சை பெற்றார். ஆயினும் சிவன் கையை விட்டு கபாலம் விழவில்லை. அந்த பாத்திரத்தில் எந்த பொருளும் தங்கவில்லை. அதேநேரம் பிரம்மதேவனை பார்த்து சிவனார் என நினைத்து வணங்கிய பார்வதி, தனக்குத்தானே தண்டனை கொடுத்துக் கொண்டு அன்னபூரணியாக அவதரித்து காசியில் தவம் செய்தாள்.
இந்த சமயத்தில்தான் பிட்சாடனாராக வந்த சிவபெருமான் அன்னபூரணியிடம் பிச்சை பெற்றார். அப்போது பிரம்மனின் கபாலம் சிவபெருமான் கையைவிட்டு விலகியது. சிவனின் பசியை தீர்க்க வந்த அன்னபூரணி உலக பசிப்பிணி தீர்க்க காசியிலேயே தங்கிவிட்டார் என்கிறது புராணக்கதை.
காசியில் நவரத்ன சிம்மாசனத்தில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் அன்னையின் ஒரு கரத்தில் அட்சய பாத்திரமும், மறு கரத்தில் தங்க கரண்டியுடன் கூடிய தங்கத்தில் ஜொலிக்கும் அன்னபூரணியை தீபாவளியின்போது மூன்று நாட்களுக்கு மட்டுமே தரிசிக்க முடியும். அன்னையிடம் பிச்சை கேட்கும் பிட்சாடனார் உருவமும் அருகில் ஆரடி உயரத்தில் உள்ளது. இந்த சிலை வெள்ளியால் செய்யப்பட்டது. நாமும் இந்த தீபாவளி திருநாளில் அன்னபூரணியை வழிபட்டு வற்றாத செல்வம் பெறுவோம்.