என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Anti corruption police"
- பத்திரப்பதிவு செய்ய வருவோரிடம் லஞ்சம் வாங்குவதாகவும் ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
- லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த திடீர் சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கவுண்டம்பாளையம்:
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் சப்ரிஜிஸ்டராக அருணா என்பவர் உள்ளார்.
இந்த நிலையில் பெரியநாயக்கன்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவில் அதிகளவில் மோசடிகள் நடப்பதாகவும், நில ஆவணங்களில் போலியாக திருத்தங்கள் செய்து பதிவு செய்வதாகவும், பத்திரப்பதிவு செய்ய வருவோரிடம் லஞ்சம் வாங்குவதாகவும் ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி திவ்யா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஷீலா, எழிலரசி மற்றும் போலீசார் நேற்று இரவு பெரியநாயக்கன்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றனர்.
பின்னர் அலுவலகத்தின் கதவுகளை அடைத்த லஞ்ச ஒழிப்பு போலீசார், உள்ளே இருப்பவர்களை வெளியே செல்லக்கூடாது என கூறி விட்டு சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வெளிநபர்கள் உள்ளே வருவதும் தடுக்கப்பட்டது.
அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையிலும் அங்குலம், அங்குலமாக சோதனை மேற்கொண்டனர். மேலும் அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்களிலும் சோதனை செய்தனர். இரவில் 7 மணிக்கு தொடங்கிய சோதனையானது நள்ளிரவையும் தாண்டி இன்று காலையும் நீடித்தது. இன்று காலை 7.30 மணியளவில் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையானது நிறைவடைந்தது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய சோதனை மேற்கொண்டதில், அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கான ஆவணங்களை கேட்டு, அலுவலகத்தில் இருந்த சப்ரிஜிஸ்டரிம் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர் எந்தவித பதிலும் அளிக்கவில்லை என தெரிகிறது.
இதையடுத்து இன்று காலை சோதனையை முடித்து கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், சப்ரிஜிஸ்டர் அருணாவை கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் ஆஜராகும்படி கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
இன்று காலை அவர் ஆஜரானதும், மீண்டும் பணம் தொடர்பான கேள்விகளை கேட்டு விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த திடீர் சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- அதிகாரி பழனி மற்றும் அவரது மனைவி பிரமிளா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- தற்போது எழும்பூரில் உள்ள குடும்ப நல மருத்துவ பயிற்சி மையத்தில் முதல்வராக உள்ளார்.
சென்னை:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனராக பணிபுரிந்தவர் பழனி. இவர் தற்போது எழும்பூரில் உள்ள குடும்ப நல மருத்துவ பயிற்சி மையத்தில் முதல்வராக உள்ளார்.
இவர் ரூ.1.79 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிபபு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து முகப்பேர் பகுதியில் உள்ள வி.ஜி.என். நகரில் உள்ள பழனியப்பன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, கீதா ஆகியோர் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தினர். இது தொடர்பாக சுகாதார அதிகாரி பழனி மற்றும் அவரது மனைவி பிரமிளா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கிருந்த நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.
- லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் சைமன் நகர் பகுதியை சேர்ந்தவர் தாணுமூர்த்தி (வயது 58). இவர் தென்காசி மாவட்டம் ஊத்துமலையில் சார்பதிவாளராக வேலை பார்த்து வருகிறார்.
தாணுமூர்த்தி கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக வேலை பார்த்து வந்தார். அப்போது 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் லட்சக்கணக்கில் பணம் சிக்கியது. அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கிருந்த நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் தாணு மூர்த்தி மீது நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சார்பதிவாளர் தாணுமூர்த்தி மீது லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து அவரது வீடுகளில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள 2 இடங்களில் லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி. ஹெக்டேர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் இன்று காலை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
நாகர்கோவில் சைமன் நகர் பகுதியில் உள்ள சார்பதிவாளர் தாணுமூர்த்தி வீட்டிற்கு இன்று காலை 7.30 மணிக்கு இன்ஸ்பெக்டர் பெஞ்சமின் தலைமையில் போலீசார் சென்றனர். வீட்டில் சார்பதிவாளர் தாணுமூர்த்தி மற்றும் அவரது மனைவி இருந்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
வீட்டிலிருந்த ஆவணங்கள் குறித்த தகவல்களையும், சார்பதிவாளர் தாணுமூர்த்தியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கேட்டறிந்தனர். காலை தொடங்கிய சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. இதேபோல் திங்கள்நகர் காந்திநகரில் உள்ள தாணுமூர்த்தியின் மனைவி வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரமா தலைமையிலான போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். காலை 7 மணிக்கு சோதனை தொடங்கியது. வீட்டில் இருந்த தாணு மூர்த்தியின் மாமனார், மாமியார் மற்றும் அவரது மனைவியின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
வீட்டிலிருந்த சில ஆவணங்களை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர். சார்பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சொத்து குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட சொத்துகளை ஏலம் விடக்கோரி மனு
- முடக்கப்பட்ட வங்கி கணக்கில் உள்ள பணம் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
சொத்து குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஏலம் விட வேண்டும் என ஆர்.டி.ஐ. ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
வழக்கு விசாரணை முடிவடைந்து, குற்றவாளிகள் தண்டனை அனுபவித்த நிலையில், அரசு வழக்கறிஞர் ஒருவரை நியமித்து சொத்துகள் ஏலம் விடுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அத்துடன் சொத்து குவிப்பு வழக்கில் என்னென்ன இணைக்கப்பட்டிருந்தன என்ற விவரங்கள் முழுவதையும் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என தமிழக லஞ்சத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழக லஞ்சத்துறை அதிகாரிகள் சார்பில் ஜெயலலிதாவின் முழு சொத்து பட்டியலை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். பொருட்களை ஏலம் விடுவதற்கான வழிமுறைகளை அரசு வழக்கறிஞரிடம் இருந்து கேட்டறிந்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டவர்களின் முடக்கப்பட்ட வங்கி கணக்கில் உள்ள பணம், வைப்புநிதி உள்ளிட்ட விவரங்களை வருகிற 31-ந்தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என நீதிபதி கூறினார்.
மனுதாக்கல் செய்திருந்த நபர், ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சால்வை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஏலம் விட வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு நீதிபதி, சட்ட விரோதமாக சேர்த்த சொத்துகள் பட்டியலில் இல்லாததை ஏலம் விட முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.
ஜெயலலிதாகவின் ஆயிரக்கணக்கான சேலைகள், செருப்புகள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவை சட்டவிரோதமாக சேர்த்த சொத்து பட்டியலில் இல்லை.
- சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஒரு கடிதம் எழுதினார்.
- 28 வகையான பொருட்களை பெற்ற பாஸ்கரன் யார்? என்ற கேள்வி எழுந்தது.
பெங்களூரு:
சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்தாலும், சுப்ரீம் கோர்ட்டு அதை உறுதி செய்து தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பு ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூன்று பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்து விடுதலை ஆகினர்.
இந்த நிலையில் இந்த சொத்து குவிப்பு வழக்கில் 30 கிலோ தங்க, வைர நகைகள், புடவைகள், செருப்புகள் உள்பட 29 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த பொருட்களை ஏலம் விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி பெங்களூருவை சோ்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நடைபெற்ற விசாரணையின்போது, அரசு சிறப்பு வக்கீலாக கிரண் ஜவளி நியமிக்கப்பட்டார். அவர் இந்த வழக்கில் ஆஜராகி வந்தார்.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர், அந்த சிறப்பு கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்து, தாங்கள் வாரிசுகள் என்பதால் ஜெயலலிதாவின் பொருட்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிடக் கோரினர். இந்த மனுவை சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு தொடர்பான பொருட்களில் கர்நாடக அரசிடம் தற்போது 30 கிலோ தங்கம், வைரம் போன்ற ஆபரணங்கள் மட்டுமே உள்ளன. மீதமுள்ள 28 வகையான பொருட்கள் குறித்த தகவலை சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்திக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவிக்க வேண்டும் என்று வாய்மொழியாக நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையே கடந்த 9-5-2023 அன்று தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ஜெயலலிதாவின் 28 வகையான பொருட்களை பெங்களூரு கோர்ட்டில் உடனடியாக ஒப்படைக்குமாறு அவர் கோரினார்.
இந்த நிலையில் நரசிம்மமூர்த்திக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் வடக்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு சியாமளாதேவி அதற்கு தபால் மூலம் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
''நீங்கள் கடந்த 9-5-2023 அன்று எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்படவில்லை.
அதற்கு பதிலாக அந்த பொருட்கள் மதிப்பீட்டு பணிகளுக்கு பிறகு பரிந்துரைக்கப்பட்ட நபரான (நாமினி) பாஸ்கரனிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக எங்களிடம் எதுவும் நிலுவையில் இல்லை''.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை கடிதத்தில் கூறப்பட்டுள்ள நபரான பாஸ்கரன் யார்? என்பது தெளிவாக கூறப்படவில்லை. ஏனென்றால், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் சகோதரியான ஸ்ரீதளா தேவியின் கணவரது பெயரும் பாஸ்கரன் (வயது 58). இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 17-ந்தேதி மரணம் அடைந்தார்.
இன்னொரு பாஸ்கரன், டி.டி.வி.தினகரனின் சகோதரர் ஆவார். ஆனால், இந்த இரு பாஸ்கரனிடமும் ஜெயலலிதாவின் 28 வகையான பொருட்கள் ஒப்படைக்கப்படவில்லை. அப்படி என்றால், 28 வகையான பொருட்களை பெற்ற பாஸ்கரன் யார்? என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பாஸ்கரன் என்பவரிடம்தான் 28 வகையான பொருட்களும் ஒப்படைக்கப்பட்டதாக ஜெயலலிதா தரப்பு வக்கீல் ஒருவர் தெரிவித்தார்.
28 வகையான பொருட்கள் எவை?
1.பட்டுப்புடவைகள்-11,344
2.குளிர்சாதன எந்திரங்கள்-44
3.தொலைபேசிகள்-33
4.சூட்கேசுகள்-131
5.கைக்கெடிகாரங்கள்-91
6.சுவர்கெடிகாரங்கள்-27
7.மின்விசிறிகள்-86
8.அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகள்- 146
9.டீப்பாய்கள்-34
10.மேஜைகள்-31
11.மெத்தைகள்-24
12.உடை அலங்கார டேபிள்கள்-9
13.அலங்கார தொங்கும் மின்விளக்குகள்-81
14.ஷோபா ஷெட்டுகள்-20
15.செருப்புகள்-750 ஜோடிகள்
16.உடை அலங்கார டேபிள் கண்ணாடிகள்-31
17.மதுபானம் அருந்தும் கண்ணாடி டம்ளர்கள்-215
18.இரும்பு பெட்டகங்கள்-3
19.சால்வைகள்-250
20.குளிர்பதன பெட்டிகள்-12
21.டி.விக்கள்-10
22.வி.சி.ஆர்.கள்-8
23.வீடியோ கேமரா-1
24.சி.டி.பிளேயர்கள்-4
25.ஆடியோ பிளேயர்கள்- 2
26. ரேடியோ பெட்டிகள்-24
27.வீடியோ கேசட்டுகள்-1,040
28. 700 கிலோ வெள்ளி பொருட்கள்.
- பொதுப்பணி துணை வளாக கட்டிடத்தில் நீர் மேலாண்மை பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்தன.
- ரூ.2¼ லட்சம் பணத்தை யார்-யார் கொடுத்தார்கள்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் ஏராளமான அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இங்குள்ள பொதுப்பணி துணை வளாக கட்டிடத்தில் நீர் மேலாண்மை பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து நேற்று இரவு அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
நீர்வள துறையின்கீழ் கடல் அரிப்பு தடுப்பு பிரிவு ஒன்றும் தனியாக செயல்பட்டு வருகிறது. அங்கு உதவி செயற்பொறியாளராக உள்ள பாஸ்கரன் அறையிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
இதில் அவரது அறையில் கட்டு கட்டாக பணம் சிக்கியது. அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் எண்ணி பார்த்தபோது அதில் ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 540 பணம் இருந்தது தெரியவந்தது.
அந்த பணத்துக்கு உதவி செயற்பொறியாளர் பாஸ்கரனிடம் போலீசார் கணக்கு கேட்டனர். ஆனால் அவர் உரிய கணக்கு காட்டாததால் ரூ.2¼ லட்சம் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து உதவி செயற்பொறியாளர் பாஸ்கரனை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். நீர் மேலாண்மை துறையின் கீழ் பணிபுரியும் ஒப்பந்ததாரர்களின் உரிமத்தை புதுப்பித்து கொடுப்பதற்காக அவர்களிடமிருந்து பெறப்பட்ட லஞ்ச பணமாக இது இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ரூ.2¼ லட்சம் பணத்தை யார்-யார் கொடுத்தார்கள்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எழிலகம் வளாகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று இரவு விடிய விடிய சோதனை நடத்தி இந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதனால் எழிலகம் வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
- கொரோனா காலங்களில் பிளீச்சிங் பவுடர் கொள்முதலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
- முறைகேட்டில் ரூ.27.84 லட்சம் வரை கையாடல் செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
தருமபுரி:
பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் என்பவர் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகார் காரணமாக தருமபுரியில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக கிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கருவூல காலனி பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர், காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், ஏரியூர், தருமபுரி, நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்தார். தற்போது அவர் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார்.
கிருஷ்ணன் கடந்த 2019-ம் ஆண்டு பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றியபோது அரசின் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக கொரோனா காலங்களில் பிளீச்சிங் பவுடர் கொள்முதலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சேலம் மாவட்ட லஞ்சஒழிப்பு துறை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணா ராஜன் வழக்கு பதிவு செய்து பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் வீட்டில் சோதனை செய்ய உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர், இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர், தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கருவூல காலனியில், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணனின் வீட்டில் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த முறைகேட்டில் ரூ.27.84 லட்சம் வரை கையாடல் செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதில் விழுப்புரம் மாவட்டம் சாலமேடு அசனகுளம் பகுதியைச் சேர்ந்த பாப்பாத்தி என்பவருக்கு சொந்தமான ஸ்ரீநடியம்பாள் ஏஜென்சி நிறுவனத்திற்கும், சென்னை பத்மாவதி நகரைச் சேர்ந்த வீரய்யா பழனிவேலுக்கு சொந்தமான நாக டிரேடர்ஸ் நிறுவனத்திற்கும், சுப்பாராவ் நகரைச் சேர்ந்த தாகீர்உசேன் என்பவருக்கு சொந்தமான கிரசண்ட் டிரேடர்ஸ் நிறுவனத்திற்கும், காஞ்சிபுரம் மடிவாக்கம் பகுதியில் உள்ள வனரோஜா என்பவருக்கும் சொந்தமான ஆர்.வி.என் என்ற நிறுவனத்திற்கும் இந்த முறைகேடுகளில் தொடர்பு உள்ளது என்று லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரியவந்தது. அந்த 4 நிறுவனங்களிலும் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அந்தந்த நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
- சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடப்பதாக கூறப்படுகிறது.
- அலுவலகத்தில் பணியாற்றும் 36 பேரில் 12 பேரிடம் கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 7 ஆயிரத்து 856 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர், ராஜாஜிபுரம், விவேகானந்தர் தெருவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகம் மூலமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயனாளிகள் ரூ.2.10 லட்சம் அரசு மானியத்துடன் தாங்களாகவே வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரசின் விதிமுறைகளை மீறி பெருமளவில் முறை கேட்டில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதனையடுத்து திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகத்தில் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர்கள் தமிழரசி, சுமித்ரா மற்றும் மாவட்ட ஆய்வு குழு அலுவலர் நாராயணன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை 3 மணியளவில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது.
இந்த அலுவலகம் சென்னையில் இருந்து திருவள்ளூருக்கு மாற்றப்பட்டதில் கடந்த ஓராண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 30 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடப்பதாக கூறப்படுகிறது.
மேலும் சென்னையையும் சேர்த்தால் 85 ஆயிரம் வீடுகளில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பிருப்பதால் இது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
இந்த சோதனையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு செயற்பொறியாளர் அலுவலகத்தில் பணியாற்றும் 36 பேரில் 12 பேரிடம் கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 7 ஆயிரத்து 856 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
திருவள்ளூரில் இயங்கும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு செயற்பொறியாளர் மற்றும் ஊழியர்களிடம் துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்