search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arbitration Council"

    • மூலப்பொருட்கள் கிடைப்பதில் நிறுவனங்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.
    • சங்க உறுப்பினர்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் கொங்கு மெயின் ரோடு தனலட்சுமி தியேட்டர் பின்புறம் பி.கே.ஜி., லே அவுட்டில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்துக்கு (டிப்மா) விற்பனை மையத்துடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. டிப்மா சங்க தலைவர் சண்முகம், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் செல்வம் மற்றும் நிர்வாக குழு, செயற்குழு பிரதிநிதிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் டிப்மா சங்க தலைவர் சண்முகம் கூறியதாவது:-

    பாலிபேக் உற்பத்தி மூலப்பொருட்கள் கிடைப்பதில் நிறுவனங்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனை போக்கும் வகையில், டிப்மாவின் மூலப்பொருள் விற்பனை மையமும் புதிய கட்டிடத்தில் செயல்பட உள்ளது. பாலிபேக்கில் பிரிண்டிங் செய்வதற்கான இங்க் ரகங்கள், ரெடியூசர் உள்பட அனைத்து உதிரி பொருட்களும், மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு சங்க உறுப்பினர்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும். பாலிபேக் நிறுவனங்களுக்கு விரைவாகவும், தட்டுப்பாடு இன்றி சீரான விலைக்கு மூலப்பொருட்கள் கிடைப்பதன் மூலம் நிறுவனங்களின் உற்பத்தி மேம்படும்.தொழில் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் ஆர்பிட்ரேசன் கவுன்சிலில் டிப்மா சங்கம் உறுப்பினராக இணைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

    • பின்னலாடை உற்பத்தி, ஜாப்ஒர்க் சார்ந்த 20 சங்கங்கள் உறுப்பினராக உள்ளன.
    • 3 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி கவுன்சில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பின்னலாடை துறையினர் தங்களுக்குள் வர்த்தகம் சார்ந்து ஏற்படும் பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காணும்வகையில் ஆர்பிட்ரேஷன் கவுன்சிலை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர். இதில் பின்னலாடை உற்பத்தி ,ஜாப்ஒர்க் சார்ந்த 20 சங்கங்கள் உறுப்பினராக உள்ளன. ஒவ்வொரு சங்கத்திலிருந்தும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு ஆர்பிட்ரேஷன் கவுன்சில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிறது. 3 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி கவுன்சில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

    ஆடை உற்பத்தியாளர்கள் - ஜாப்ஒர்க் நிறுவனத்திரிடையே ஏற்படும் நிதி சார் பிரச்சினைகள்,ஏற்றுமதியாளர் - வெளிநாட்டு வர்த்தகரிடையே ஏற்படும் நிதி சார்ந்த பிரச்சினைகளுக்கு, இந்த கவுன்சில் சுமூக தீர்வு காண்கிறது.சைமா மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கங்கள், ஆர்பிட்ரேஷனில் பிரதான உற்பத்தியாளர் சங்கங்களாக அங்கம்வகித்து வருகின்றன. இந்நிலையில் ஆர்பிட்ரேஷன் கவுன்சிலில் இருந்து விலக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன், ஆர்பிட்ரேஷன் கவுன்சில் செயலாளர் ராமசாமிக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க 262வது செயற்குழு கூட்டம் கடந்த மார்ச் 6ல் கூடியது. இதில் ஆர்பிட்ரேஷன் கவுன்சிலில் தொடரலாமா என விவாதிக்கப்பட்டது. ஆர்பிட்ரேஷன் கவுன்சிலில் இருந்து விலகலாம் என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆர்பிட்ரேஷன் கவுன்சிலின் ஆயுட்கால உறுப்பினர் என்கிற நிலையை ஏற்றுமதியாளர்கள் சங்கம் வாபஸ் பெறுகிறது.இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.கடிதத்தை பெற்றுக்கொண்ட ஆர்பிட்ரேஷன் கவுன்சில், விலகல் முடிவை மறுபரீசீலனை செய்யுமாறு ஏற்றுமதியாளர் சங்கத்துக்கு பதில் கடிதம் அனுப்பிவைத்துள்ளது.

    • 6 மாதமாகியும் கட்டண தொகை வழங்க மறுப்பதாக, ஆடை உற்பத்தி நிறுவனம் மீது சாய ஆலை கவுன்சிலில் புகார் அளித்துள்ளது.
    • ஆய்வு முடிவுகள் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் முத்தணம்பாளையத்தை சேர்ந்த உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனம் அருள்புரத்தில் உள்ள சாய ஆலைக்கு பின்னல் துணிக்கு சாயமேற்றுவதற்கான ஆர்டர் வழங்கியுள்ளது.அதனடிப்படையில் துணிக்கு சாயமேற்றி வழங்கியுள்ளது சாய ஆலை. துணியை பெற்றுக்கொண்ட ஆடை உற்பத்தி நிறுவனம் சாய ஆலைக்கு உரிய கட்டண தொகையை வழங்காமல் இழுத்தடித்துவருகிறது.

    இதையடுத்து கட்டண தொகை 3.50 லட்சம் ரூபாயை பெற்றுத்தருமாறு ஆடை உற்பத்தி நிறுவனம் மீது ஆர்பிட்ரேசன் கவுன்சிலில் புகார் அளித்துள்ளது சாய ஆலை.இது குறித்து ஆர்பிட்ரேசன் கவுன்சில் தலைவர் கருணாநிதி கூறியதாவது:-

    6 மாதமாகியும் கட்டண தொகை வழங்க மறுப்பதாக, ஆடை உற்பத்தி நிறுவனம் மீது சாய ஆலை கவுன்சிலில் புகார் அளித்துள்ளது. சாயமேற்றிய துணியில் ஆடை தயாரித்து ஷோரூமுக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் ஆடையிலிருந்து சாயம் பிரிந்து வெண்மையாக மாறுகிறது.தரமற்ற முறையில் சாயமேற்றியதாலேயே கட்டண தொகை வழங்கவில்லை என ஆடை உற்பத்தியாளர் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.இருதரப்பினரிடமும் உரிய ஆவணங்களை கேட்டுள்ளோம். மேலும் சாயமேற்றிய துணி மாதிரி பெறப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். ஆய்வு முடிவுகள் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×