search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "area rain"

    ஆலங்குளம்-கயத்தாறு பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழையால் மரங்கள்- மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. #Rain

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தென்காசி, செங்கோட்டை பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இந்த நிலையில் நேற்று பகல் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தியது. ஆனால் பிற்பகல் கருமேகங்கள் திரண்டு பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

    ஆலங்குளத்தில் நேற்று மாலை இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழையுடன் சூறைக்காற்றும் வீசியது. இதில் ஆலங்குளம் ஜோதிநகர் பகுதியில் ஆங்காங்கே மரங்களும், 7 மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. இதனால் ஆலங்குளம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பாப்பாக்குடி அருகே உள்ள இலந்தகுளத்தில் மின்னல் தாக்கியதில் தேவ அருள் குமார் என்பவரின் பசுமாடு பலியானது.

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கோவில்பட்டி, கழுகுமலை பகுதியிலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அதிகபட்சமாக கயத்தாறு பகுதியில் 45 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கழுகுமலையில் 10 மில்லி மீட்டரும், கோவில்பட்டியில் 6 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் ஆய்க்குடியில் 15.2 மில்லி மீட்டரும், தென்காசியில் 14.3 மில்லி மீட்டரும், சங்கரன் கோவிலில் 10 மில்லி மீட்டரும், குண்டாறு அணை 5 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவி 3 மில்லி மீட்டரும், செங்கோட்டை 2 மில்லி மீட்டரும், சிவகிரி மற்றும் அடவிநயினாரில் 1 மில்லி மீட்டரும் மழையும் பெய்துள்ளது.

    கோடை மழையின் போது இடி-மின்னலுடன் சூறாவளி காற்றும் வீசுவதால் பல்வேறு இடங்களில் பயிரிடப் பட்டுள்ள வாழை மரங்களும் சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் புகார் செய்து வருகிறார்கள்.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 4.86 கன அடி தண்ணீர் மட்டுமே பாபநாசம் அணைக்கு வந்தது. ஆனால் இன்று பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 71.30 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் சற்று உயர்ந்து இன்று காலை 17 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 49.28 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 46 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 75.72 அடியாக உள்ளது.

    குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் இன்றும் தண்ணீர் நன்றாக விழுந்தது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கோடை வெயிலுக்கு இதமாக வெளியூரில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து குளிக்க தொடங்கியுள்ளார்கள். இதைத்தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.  #Rain

    ×