search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ART PERFORMANCES"

    • கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் பள்ளி, கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
    • நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 16-ந்தேதி முதல் தொடங்கி நாளை (25-ந்தேதி) வரை நடக்கிறது.

    ஒவ்வொரு நாளும் பள்ளி, கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. 8-ம் நாள் நிகழ்ச்சியில் ஜே.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக 10 மாணவ-மாணவிகளின் தனி நடனம், ஜோடி நடனம், பாடல் மற்றும் நாகரீக நடை ஆகிய நிகழ்ச்சிகளும், வைசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் சார்பாக மாணவ- மாணவிகள் 65 பேர் பங்குபெற்றனர்.

    இதில் இறைவனை வணங்கும் விதமாக பிராத்தனை நடனம், தமிழை வாழ்த்த தாயே தமிழே நடனம், பெண்மையின் பெருமையை போற்றும் பெண்மை நடனம், உழவுக்கும்,உழவனுக்கும் உயிர் கொடுக்க ஏர் நடக்கும் நடனம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. கல்லூரி ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் உட்பட பலர் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர்.

    நிகழ்ச்சி யில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு கேடயம் மற்றும் நற்சான்றிதழை வைசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி முதல்வர் வெள்ளைதுரை பாண்டியன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், ஆகியோர் வழங்கினர். மேலாண்மை இயக்குனர் வெள்ளத்தாய், கல்லூரி முதல்வர் ஈஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவில் நீதிபதி பேச்சு
    • மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது

    வேலூர்:

    வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட உணவு பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா நடந்தது.

    மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். விழாவுக்கு மாவட்ட வழங்கள் அலுவலர் சுமதி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட நுகர்வோர் நீதிபதி மீனாட்சி சுந்தரம் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

    நுகர்வோர்களுக்கு அதிக உரிமை உள்ளது. நீங்கள் வாங்கும் பொருள்களில் ஏதேனும் குறைகள் இருந்தால் நுகர்வோர் கோர்ட்டை அணுகலாம். ஆன்லைன் மூலமாகவே தங்களது புகார்களை பதிவு செய்யலாம்.

    பொதுவாக வீட்டில் பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் விபத்து ஏற்படும் போதும் அதற்கு காப்பீடு செய்து இருப்பார்கள் இழப்பீடு கிடைக்காவிட்டால் நுகர்வோர் கோர்ட்டை அணுகலாம்.

    மருந்து மாத்திரை காலாவதியாகி இருந்தாலும், மருத்துவ சிகிச்சையில் குறைபாடு இருந்தாலும் கோர்ட்டை அணுகலாம். அரசு துறைகளில் எந்த சேவை குறைபாடு இருந்தாலும் நுகர்வோர்கள் உங்களது உரிமைகளை பெறுவதற்கு கோர்ட்டை அனுகினால் தீர்வு கிடைக்கும்.

    பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்குகள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் உணவு பொருள் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் திறன் மேம்பாட்டு துறை, கூட்டுறவுத்துறை மருந்து கட்டுப்பாட்டு துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் விழிப்புணர்வு கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது இங்கு பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் செயல் விளக்கத்துடன் தெரிவிக்கப்பட்டது.

    விழாவில் மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

    முன்னதாக மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தொடங்கி வைத்தார்.

    • திருப்பத்தூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழா நடந்தது
    • பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையம் மூலம் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து குறித்து துண்டு பிரசுரம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காந்தி சிலை முன்பு நடைபெற்றது.

    திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி பேசியதாவது:-

    ஆண்டுதோறும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது விபத்துக்களால் கை கால் இழந்தவர்கள் உயிரிழந்தவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள் வாகனத்தை கவனத்துடன் சாலை விதிகளை மதித்து ஓட்ட வேண்டும், டிரைவர் உரிமம் இல்லாத எந்த நபரும் வாகனம் ஓட்ட கூடாது.

    18 வயது பூர்த்தி அடையாத எந்த நபரும், மோட்டார் வாகனம் ஓட்ட கூடாது.விதி மீறுவோருக்கு உரிமையாளரே பொறுப்பாளர் ஆவார்.

    18 வயது பூர்த்தி அடையாத எவரையும் வாகனம் ஓட்ட அனுமதித்தால் அவர் 3 மாதம் சிறை தண்டணை அல்லது ரூ.1000 அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

    உரிமம் பெற்று வாகனம் ஓட்ட வேண்டும். வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசுவதை தவிர்க்கவும். வாகனத்தை அதிக வேகம் மற்றும் அபாயகரமாக இயக்க வேண்டாம்.

    குடி போதையில் வாகனத்தை இயக்க வேண்டாம். சீட் பெல்ட் அணிந்து வாகனத்தை இயக்க வேண்டும். அதிக பாரம், உயரம் ஆட்களை ஏற்ற வேண்டாம். வாகனத்தின் சுமைகளின் மேல் ஆட்களை ஏற்ற கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலை நிகழ்ச்சியின் மூலம் மேளம் மற்றும் மயில், மாடு, ஆகிய வேடத்தில் வாகன விழிப்புணர்வு குறித்து பாட்டுக்களை பாடி ஊர்வலம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதில் இன்ஸ்பெக்டர் துரைசாமி சப்-இன்ஸ்பெக்டர்கள் அகிலன், செல்வராஜ் பலராமன் உடனிருந்தனர்.

    விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருந்தபோது 18 வயது முழுமை அடையாத சிறுவன் மற்றொரு சிறுவனை வாகனத்தில் உட்கார வைத்துக் கொண்டு வாகனத்தை ஓட்டி வந்தார். வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உய்யக்கொண்டான் திருமலை பகுதியில் அமைந்துள்ள பிரான்சிஸ்கன் தலைமை அலுவலகத்தின் கீழ் புனித பிரான்சிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
    • திருப்பலியை தொடர்ந்து பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    திருச்சி :

    திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியில் அமைந்துள்ள பிரான்சிஸ்கன் தலைமை அலுவலகத்தின் கீழ் புனித பிரான்சிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் அசிசியரின் நினைவு நாளை திருப்பெயர் கொண்ட நாம விழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்த திருப்பெயர் கொண்ட நாம விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் புனித பெரிய நாயக மாதா ஆலயத்தின் பங்குத்தந்தை அம்புரோஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இதில் பாதிரியார் ஜோசப் அருள்ராஜ், கன்னியாஸ்திரிகள் பிரமிளா, புஷ்பா, ஸ்டெல்லா, சோம ரசம்பேட்டை பங்குத்தந்தை எட்வர்ட் ராஜ், பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் பன்னீர்செல்வம், உய்யக்கொண்டான் பங்கு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், பிரான்சிஸ் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.

    இதில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியை தொடர்ந்து பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவ மாணவிகளின் பேச்சு, நடனம், நாடக போட்டிகள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இதில் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள், பங்கு மக்கள் மற்றும் பிற சபை சார்ந்த துறவிகள் திரளாக கலந்து கொண்டனர்.முடிவில் எட்வின் நன்றி கூறினார்.

    ×