என் மலர்
நீங்கள் தேடியது "Arthritis"
- பல்லுக்கும் மொத்த உடம்புக்குமே நிறைய சம்பந்தம் இருக்கிறது.
- உப்பு கரைத்த சுடுநீரில் வாயை பல முறை கொப்பளிப்பது நல்லது.
பல்லுக்கும் முட்டிக்கும் மட்டுமல்ல, பல்லுக்கும் மொத்த உடம்புக்குமே நிறைய சம்பந்தம் இருக்கிறது. நீண்டகாலமாக உடம்பில் நோயோடு இருக்கிறவரின் பற்களை சோதித்துப் பார்த்தால், அந்த நோய்க்கான மூலகாரணம் பற்களில் தான் இருக்கும்.
பற்கள், ஈறுகள், வாயின் உட்பகுதிகள், நாக்கின் அடிப்பகுதியில் ஏற்படும் நோய்களினால் நோய்க்கிருமிகள் உருவாகின்றன. இவை ரத்தத்தின் மூலம் உடலில் பல்வேறு பாகங்களுக்கு பரவுகின்றன.
இந்த நோய்க்கிருமிகள் ரத்தத்தின் வழியாக பயணம் செய்து மூட்டுகளின் உள்ளிருக்கும் திரவத்தில் போய் சேர்ந்து மூட்டுகளுக்குத் தொந்தரவு கொடுக்க ஆரம்பிக்கும். எனவே பற்களுக்கும் மூட்டுவலிக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
தவிர்ப்பது எப்படி?
பொருத்தமான பற்பசை, பிரஷ்கள் கொண்டு தினமும் காலை-இரவு நேரங்களில் நன்றாக பல் துலக்க வேண்டும். பற்களுக்கு இடையில் சேரும் உணவுத்துகள்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.
தினமும் இரவு படுக்க போகும்முன் உப்பு கரைத்த சுடுநீரில் வாயை பல முறை கொப்பளிப்பது நல்லது. பலபேர் வாயை தண்ணீரில் கொப்பளிக்காமல் உதடுகளுக்கு மேலேயே தண்ணீரை வைத்து துடைத்துவிட்டு, வாயைக் கழுவிவிட்டேன் என்று வந்துவிடுகிறார்கள். இது மிகப்பெரிய தவறு.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. உதடு, வாய்-கன்னத்தின் உட்பகுதிகள் வீக்கம், ஈறுகளில் ரத்தக் கசிவு, புண், சீழ், கெட்ட நாற்றம் முதலியவைகள் இருந்தால் உடனே பல் மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது அவசியம்.
ஒரு பல் கெட்டுப் போய்விட்டால் அந்த பல்லைப் பிடுங்கி எறிவது மிகமிகச் சுலபம். ஆனால் மறுபடியும் அந்த இடத்தில் புதிய பல் வளராது. போனது போனதுதான். பற்களை ஒழுங்காக பராமரிக்காமல் ஒவ்வொரு பல்லாக பிடுங்கிக் கொண்டே வந்தால் உணவை சரியாக, முழுமையாக மெல்ல முடியாது.
வாயில் பற்கள் இல்லை என்றால் நாம் பேசும் பேச்சு மற்றவர்களுக்கு சரியாக புரியாது. சொற்கள் சரியாக வராது. பேச்சு குளறுகிற மாதிரி இருக்கும். மொத்தத்தில் பல் போனால் சொல் போய்விடும்.
- மூட்டு தேய்மானம் என்பது இன்று பொதுவாக பலரையும் பாதிப்பதாக உள்ளது.
- கால் வீக்கம், கால் வளைந்து இருப்பது பொதுவான அறிகுறிகளாகும்.
உடல் உழைப்பு மற்றும் உடற்பயிர்சி இல்லா வாழ்க்கை முறை, ஒரே இடத்தில் நீண்டநேரம் அமர்ந்து பணியாற்றுவது போன்றவர்களுக்கு மூட்டுத்தேய்மானம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
மூட்டு தேய்மானம் என்பது இன்று பொதுவாக பலரையும் பாதிப்பதாக உள்ளது. குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் இருக்கும். நடக்க, அன்றாட பணிகளை மேற்கொள்வதில் சிரமம், கால் வலி, மூட்டு இறுக்கமாகுதல், காலை இயல்பாக நீட்டி மடக்க முடியாதது, கால் வீக்கம், கால் வளைந்து இருப்பது பொதுவான அறிகுறிகளாகும்.
உடல் பருமனாக இருப்பவர்கள், எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்தே இருப்பவர்கள், அதிகமான உடலுழைப்பை செலுத்தி வேலைகள் செய்பவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொண்டால், தேய்மானத்தின் பாதிப்புக்கு நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
பிசியோதெரபி பயிற்சி, பணிகளை மாற்றி செய்வது, உடற்பயிற்சி செய்வது போன்ற எளிமையான வழிமுறைகள் வாயிலாக பாதிப்பு தீவிரமடையாமல் தடுக்கலாம்.
உணவுமுறைகளில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும். ஏனென்றால் துரித உணவுகளை சாப்பிடும் போது உடல் பருமன் ஏற்பட்டு மூட்டுவலி ஏற்படும். இதனால் டயட் ஃபாளோ செய்ய வேண்டும்.
மேலும் மூட்டு தேய்மானத்திற்கான ப்ரப் சிகிச்சை பற்றி விரிவான விளக்கம் அளிக்கிறார் டாக்டர் லட்சுமிநாதன்.
- 'அன்கிலோசிங் ஸ்பான்டிலைடிஸ்’ என்பது வாத நோய்களில் ஒன்று.
- முதுகெலும்பு மற்றும் இடுப்பு எலும்பு இடையே மூட்டுகளில் வீக்கம்.
'அன்கிலோசிங் ஸ்பான்டிலைடிஸ்' என்பது வாத நோய்களில் ஒன்றாகும். சித்தமருத்துவத்தில் 85 வகை வாத நோய்களை சித்தர்கள் கூறியுள்ளனர். இந்நோயில் முதுகில் உள்ள முதுகெலும்புகள் இடைவெளியின்றி ஒன்றாக இணைகின்றன. இதனால் முதுகெலும்பின் நெகிழ்வுத்தன்மை குறைகிறது. சிலநேரங்களில் விலா எலும்புகளும் பாதிக்கப்படலாம். இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். பெண்களைவிட ஆண்களை அதிகமாக பாதிக்கும்.
அறிகுறிகள்:
நோயின் முக்கிய அறிகுறி முதுகெலும்பு மற்றும் இடுப்பு எலும்பு (சாக்ரோலியாக் மூட்டுகள்) இடையே உள்ள மூட்டுகளில் வீக்கம் காணப்படும். இந்த வீக்கம் முதுகெலும்பின் மற்ற பகுதிகளுக்கும் பரவலாம். இதனால் முதுகு அல்லது பிட்டத்தில் கடுமையான வலி காணப்படும். காலை நேரங்களில் வலி அதிகமாவது அல்லது வலியினால் இரவில் தூக்கம் வராமல் வேதனைப்படுவது போன்ற சிரமங்களை சந்திக்க நேரிடும்
குதிகாலின் பின்புறம் தசைநார்கள் இணைக்கும் இடங்களில் வலி, நடப்தில் சிரமம் போன்ற பாதிப்புகளும் இருக்கலாம். இந்தநோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் HLA-B27 மரபணு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் இந்த மரபணு இல்லாதவர்களுக்கும் இந்நோய் ஏற்படுகிறது.
சித்த மருத்துவம்:
இந்த நோய்க்கு சிறந்த சித்த மருந்துகள் உள்னை. இவற்றை சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உட்கொள்வது அவசியம்.
1. சண்டமாருதச் செந்தூரம் 100 மி.கி. முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கிட குங்கிலிய பற்பம் 200 மி.கி. இவைகளுடன் அமுக்கரா' சூரணம் 1 கிராம் சேர்த்து காலை இரவு இருவேளை தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
2 கந்தி மெழுகு 500 மி.கி.கலை. இரவு இருவேளை சாப்பிட வேண்டும். வலியுள்ள இடங்களில் விடமுட்டி தைவம் உளுந்து தைலம், கற்பூராதி தைலம் சிவப்பு குங்கிலியத் தைலம் இவைகளில் ஒன்றை தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.
3. உட்கார்ந்து வேலை செய்பவர்கள், சில மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து நடந்து விட்டு மீண்டும் உட்கார வேண்டும். முதுகெலும்பு வளையாமல் நேர்பட உட்காருவது நல்லது.
- எலும்புகள் அல்லது தசைகளுக்குள் ஏற்படும் காயங்களாலும் மூட்டுவலி வருகிறது.
- காலையில் எழுந்தவுடன் வலி ஏற்பட்டு நடக்க சிரமப்படுதல்
மூட்டுகளில் ஏற்படுகின்ற காயங்கள் அல்லது புண்கள், இவற்றால் வீக்கம் அல்லது வலி ஏற்படுகிறது. மூட்டுகளில் உள்ள குருத்தெலும்புகள், தசைநார்கள், எலும்புகள் அல்லது தசைகளுக்குள் ஏற்படும் காயங்களாலும் மூட்டுவலி வருகிறது. ஆனால் பெரும்பாலும் குருத்தெலும்பு தேய்வால் வருகின்ற கீல்வாதம் தான் அதிகம். எலும்பில் உள்ள குருத்தெலும்பு தேய்வால் வருகின்றது.
கீல்வாதம் (ஆஸ்டியோ ஆர்தரைடிஸ்):
இவ்வகை மூட்டுவலி வயதானவர்களையும், பெண்களையும் மிக அதிகமாக பாதிக்கிறது. இந்த வகை வாதத்தில், கால் மூட்டுகளில் உள்ள எலும்புகளின் முனைகளை, குஷன் போன்று பாதுகாக்கும் குருத்தெலும்பு படிப்படியாக பலவீனமடைந்து, இறுதியாக, குருத்தெலும்பு முற்றிலும் தேய்ந்துவிடுகிறது. மூட்டுகளிடையே உள்ள சினோவியல் திரவமும் அளவில் குறைகிறது. இதனால் கால் முட்டி எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி, கடுமையான கால் வலி, வீக்கம், சூடு இவற்றை ஏற்படுத்துகிறது.
முடக்கு வாதம் (ருமட்டாய்டு ஆர்தரைடிஸ்):
முடக்கு வாதம் என்பது ஒரு தன்னுடல் தாக்கக் கோளாறு. நம் உடல் நோய் எதிர்ப்பு அமைப்பு நம் சொந்த உடலின் திசுக்களை தவறுதலாக தாக்கும்போது இது நிகழ்கிறது. இவ்வகை வாதத்தில் எலும்பில் தேய்வுகள் இருக்காது. ஆனால் வலி, வீக்கம், காலையில் எழுந்தவுடன் வலி ஏற்பட்டு நடக்க சிரமப்படுதல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
யூரிக் அமிலம் அதிகமாவதால் ஏற்படும் கீல்வாதம்:
ரத்தத்தில் யூரிக் அமில அளவு அதிகரித்து, மூட்டு களில் உள்ள இடைவெளிகளுக்குள் அமிலம் படிந்து வீக்கம், வலியை ஏற்படுத்துகிறது.
பாக்டீரியா தொற்றால் ஏற்படும் செப்டிக் ஆர்தரைடிஸ்:
செப்டிக் ஆர்தரைடிஸ் என்பது பாக்டீரியா தொற்று காரணமாக உருவாகிறது. நம் மூட்டுகளிடையே உராய்வைத் தடுக்க சினோவியல் திரவம் உள்ளது. பாக்டீரியாக்கள் இந்த திரவத்தில் நுழையும் போது, அவை குருத்தெலும்புகளை சேதப்படுத்தி இறுதியில் மூட்டு வலி, வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
மேற்கூறிய வாத வகைகளில் பெரும்பாலும் லும்பு குருக் குருத்தெலும்பு தேய்வால் வருகின்ற ஆஸ்டியோ ஆர்தரைடிஸ் வகை வாதம் தான், வயதான ஆண்கள் மற்றும் மகளிரை அதிக மாக பாதிக்கிறது. மாதவிடாய் முடிந்த மகளிருக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைபாட்டால் எலும்பு அடர்த்தி குறைவதும் முக்கிய காரணமாகும். இதற்கான மருத்துவ முறை பற்றி பார்ப்போம்.
தவிர்க்க வேண்டியவை:
உடல் பருமன் இருந்தால் அதை குறைக்க வேண்டும். எளிய உடற்பயிற்சிகள் செய்ய செய்ய வேண்டும். எலும்புகளின் அடர்த்திக்கு கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். தினமும் அதிகாலை வெயில் அல்லது மாலை இளவெயிலில் சிறிது நேரம் நடக்கலாம். குளிப்பதற்கு வெந்நீர் சிறந்தது, புளிப்பு சுவை உணவுகளை அளவோடு எடுக்க வேண்டும்.
மருந்துகள்:
சித்த மருத்துவத்தில் இந்த நோய்க்கு சிறப்பான மருந்துகள் உள்ளது. இவைகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும்.
* அமுக்கரா சூரணம் 1 கிராம், குங்கிலிய பற்பம் 200 மி.கி, முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி, ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி. இவைகளை மூன்று வேளை, தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
* அமுக்கராச் சூரணம் 1 கிராம், பூரணச் சந்திரோதயம் 100 மி.கி., சங்கு பற்பம் 200 மி.கி. இவற்றை மூன்று வேளை தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
* நொச்சி இலை, பழுத்த எருக்கிலை, வாத நாராயணன் இலை, தழுதாழை இலை இவைகளை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் வலியுள்ள மூட்டுகளில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
* வாத கேசரிதைலம், கற்பூராதி தைலம், விடமுட்டி தைலம், சிவப்பு குங்கிலியத் தைலம் இவைகளில் ஒன்றை வலியுள்ள மூட்டுகளில் தேய்த்து வெந்நீர் ஒத்தடம் கொடுக்க வலி குறையும்.
- பாதத்தில் ஓரளவு அழுத்தத்தை ஏற்படுத்தும்.
- மார்பிள் கற்களின் லேசான குளுமை சிலருக்கு ஒத்துக்கொள்ளாது.
மணல் வெளி, புல் வெளி, கல், முள் பாறைகள் போன்ற எந்த இயற்கையான நிலப்பரப்பிலும் நடப்பதற்காக படைக்கப்பட்டதே நம்முடைய பாதங்கள் ஆகும். இயற்கையான நிலப்பரப்பில் வெறும் பாதத்துடன் நடக்கும்போது பாதங்களுக்கு தொடு உணர்ச்சி, உறுதி, ஆரோக்கியம், ஆயுள் முழுக்க உழைப்பதற்கு சக்தி கிடைக்கிறது. அதோடு, மைனஸ் 5 டிகிரி குளிரிலிருந்து அதிக வெப்பமான 45 டிகிரி வரை குளிர், வெப்பம் ஆகிய இரண்டையும் தாங்கக் கூடிய சக்தி பாதங்களுக்கு இருக்கிறது.
செருப்பு அணிந்தே வாழ்ந்து பழக்கப்பட்டவர்களுக்கு சில அடிகள் தூரம் கூட கடும் வெயிலில் செருப்பில்லாமல் நடக்க முடியாது. துடித்து விடுவார்கள்.
இயற்கையாக உள்ள தரைத்தளத்தைத் தவிர, மனிதனால் உருவாக்கப்பட்ட தரைத்தளத்தில்- அதாவது டைல்ஸ், மார்பிள் பதித்த தரைகளில் தொடர்ந்து நடந்து வந்தால், பாதங்களிலும், கால்களிலும் சின்னச்சின்ன பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.
மார்பிள் கற்களின் மேற்பரப்பில் வெறும் பாதத்துடன் நடக்கும் போது பாதத்தில் ஓரளவு அழுத்தத்தை ஏற்படுத்தும். அத்துடன், மார்பிள் கற்களின் லேசான குளுமை சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. மார்பிள், டைல்ஸ் போன்றவற்றின் மேல் நடக்கும்போது வழுக்கிவிடுமோ சறுக்கிவிடுமோ என்ற ஒரு சின்ன தயக்கத்தோடு சாதாரணமாக நடக்காமல் பாதங்களைப் பார்த்து பார்த்து வைத்து நடப்பதால் சிலருக்கு முழங்கால் வலி, கணுக்கால் வலி வரலாம்.
சிலருக்கு வீட்டுக்குள்ளேயே செருப்பு அணிந்து நடக்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுரை சொல்வதுண்டு. எது எப்படி சொல்லப்பட்டாலும் மார்பிள், டைல்ஸ்களில் தொடர்ந்து நடக்கும் போது சின்ன சந்தோஷம், புத்துணர்ச்சி மனிதனுக்குக் கிடைக்கிறது. ஆனால் வாதம் போன்ற பிரச்சினைகளை உண்டாக்க வாய்ப்பில்லை என்றே சொல்லலாம்.
- மக்களை அலற வைக்கும் நோய்களில் டெங்குவுக்கு முக்கிய இடம் உண்டு.
- எலும்பை முறித்ததுபோல் எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படும்.
மழைக்கால மாதங்களில் மக்களை அலற வைக்கும் நோய்களில் டெங்குவுக்கு முக்கிய இடம் உண்டு. கடுமையான காய்ச்சல், வயிற்றுவலி, தாங்க முடியாத அளவு தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, கண்ணுக்கு பின்புறம் வலி, தொடர்ச்சியான வாந்தி, களைப்பு ஆகியவை டெங்குவுக்கான அறிகுறிகள். எலும்பை முறித்ததுபோல் எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படுவது, இந்த நோயை இனம்காட்டும் முக்கிய அறிகுறி. வாந்தியும் வயிற்றுவலியும் ஆபத்தான அறிகுறிகள். உடலில் அரிப்பும் ஏற்படும், சிவப்பு புள்ளிகள் தோன்றும்.
பெரும்பாலானோருக்கு 7-ம் நாளில் காய்ச்சல் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் காய்ச்சல் குறைந்ததும் ஓர் அதிர்ச்சிநிலை உருவாகும். இப்படியானால் ஆபத்து அதிகம். இவர்களுக்கு கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும். சுவாசிக்க சிரமப்படுவார்கள். ரத்த அழுத்தமும் நாடித்துடிப்பும் குறைந்து, சுயநினைவை இழப்பார்கள்.
பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால் பரவும் டெங்கு வைரசானது, ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை அழித்துவிடும். இவைதான் ரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்புமூட்டு ஆகியவற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும். இதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பும் ஏற்படலாம்.
கைக்குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் இது ஏற்படுமானால் மிகவும் கவனத்துடன் விரைந்து உரிய சிகிச்சை பெற வேண்டும். டெங்கு நோய்க்கென்று தனியாக சிகிச்சையோ தடுப்பூசியோ இல்லை. டெங்கு தானாகத்தான் சரியாக வேண்டும். அதுவரை ரத்தக்கசிவு, குறை ரத்தஅழுத்தம், மூச்சிளைப்பு போன்ற ஆபத்தான விளைவுகளைக் கட்டுப்படுத்தவே சிகிச்சை தரப்படும். எனவே, டெங்கு காய்ச்சலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, இந்த ஆபத்தான பின்விளைவுகள் வரவிடாமல் தவிர்க்க வேண்டியது முக்கியம்.
- மூட்டுகளில் தேய்மானம் உண்டாகும் போது வலி உண்டாகும்.
- மூட்டுகளில் ஜவ்வு குறைந்து நாளடைவில் வலி அதிகரிக்க செய்யும்.
எலும்பின் நடுவில் இருக்கும் மூட்டுகளில் தேய்மானம் உண்டாகும் போது வலி உண்டாக்க கூடும். பொதுவாக வயதான பிறகு தான் தேய்மானம் உண்டாகும் ஆனால் தற்போது வயதானவர்களை காட்டிலும் இளம் வயதினரையும் மூட்டு வலி பிரச்சினை விட்டுவைக்கவில்லை. தலைவலி வந்தால் மாத்திரை போட்டுக்கொள்வது போல் மூட்டு வலிக்கு அவ்வப்போது வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துகொள்வதால் தற்காலிகமாக வலி குறையும். ஆனால் மூட்டு எலும்புகளில் ஜவ்வு குறைந்து நாளடைவில் வலி அதிகரிக்கச் செய்யும்.
நடக்கும் போதும், உட்கார்ந்து எழும் போதும் படிகளில் ஏறும் போதும் ஒருவித சத்தம் கேட்கும். இவைதான் தொடக்க கால மூட்டுவலியின் அறிகுறிகள். இதற்கு முன்னோர்கள் மூலிகை எண்ணெய் தைலத்தை காய்ச்சி பயன்படுத்துவார்கள். தொடர்ந்து ஒரு மண்டலம் தேய்த்து வந்தால் வலி குறைந்து மூட்டுகளின் உள் இருக்கும் ஜவ்வு பகுதியும் பாதுகாப்பாக இருக்கும்.
எல்4, எல்-5, எஸ்-1 முதுகு தண்டுவட பாதிப்பு, டிஸ்க் பஞ்ச் ஆகிவிட்டது, முதுகு தண்டுவடப்பகுதியில் வலி அதிகமாக உள்ளது, என்னால் பாத்ரூம் கூட செல்ல முடியவில்லை என்று பலரும் புலம்புவார்கள். அவர்களுக்கு இந்த விராலி இலை போட்டு காய்ச்சிய எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வீட்டிலேயே இந்த மூலிகை எண்ணெய்யை தயாரிக்க முடியும். எப்படி தயாரிக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
விராலி இலை- ஒரு கைப்பிடி
நல்லெண்ணெய்- 250 கிராம்
செய்முறை:
ஒரு இரும்பு கடாயில் சுத்தமான நல்லெண்ணெய் சேர்த்து அது காய்ந்ததும் இதில் ஒரு கைப்பிடி விராலி இலைகளை கழுவி விட்டு உலர்ந்த பிறகு அந்த எண்ணெயில் போட்டு நன்றாக காய்ச்ச வேண்டும். நன்றாக இலை காய்ந்து பிரவுன் கலர் வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி அப்படியே ஒரு நாள் முழுவதும் வைத்துவிட்டு மறுநாள் ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டு தேவையான போது உபயோகப்படுத்த வேண்டும்.
மூட்டுவலி இருக்கும் போது லேசாக சூடுபடுத்தி மூட்டுகளில் தேய்த்து வந்தால் வலி குறையும். தொடர்ந்து 10 நாட்கள் தேய்த்துவந்தாலே அதன் பலனை நன்றாக உணர முடியும்.
- வாய்ப்புண், குடல் புண் (அல்சர்) குணமாகும்.
- இதய துடிப்பை சீராக வைத்திருக்கும்.
பொதுவாகவே பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும். உடலில் எந்தவொரு பிரச்சினை என்றாலும் முதலில் டாக்டர்கள் கூறும் ஒரே விஷயம் பழங்கள் சாப்பிட வேண்டும் என்று தான். காரணம் என்னவென்றால் தற்போதைய சமூகத்தில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் தவிர்க்கும் விஷயம் என்றால் அது பழங்கள் சாப்பிடுவது தான்.
பழங்களின் வகைகள் ஏராளம். அதிலும் ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு நன்மைகள் இருகிறது. அந்தவகையில் விளாம்பழம் சாப்பிட்டால் என்ன நன்மைகள் என்று தெரிந்துக்கொள்வோம்.
* பற்களை வலுடையச் செய்கிறது.
* உடலின் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
* தலை வலி குறையும்.
* கண்பார்வை மங்கல் குணமாகும்.
* பசியை தூண்ட செய்யும்.
* இதயத்தை பலம் பெற செய்யும்.
* மூட்டு வலி, உடல் வலி போன்றவற்றை போக்கும்.
* இதய துடிப்பை சீராக வைத்திருக்கும்.
* வாயுத் தொல்லை நீங்கும்.
* நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.
* எலும்புகள் வலுவடையும்.
* ரத்தத்தை சுத்திகரிக்கிறது.
* நினைவாற்றல் அதிகரிக்கும்.
* பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் தீரும்.
* உடல் வளர்ச்சி மற்றும் தசை வளர்ச்சிக்கு சிறந்தது.
* வாய்ப்புண், குடல் அல்சர் குணமடையும்.
* வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை தீரும்.
இந்த விளாம்பழம் ஆகஸ்டு மாதம் முதல் நவம்பர் மாதம் வரை கிடைக்கும். ஆகவே இதை இந்த காலக்கட்டத்தில் வாங்கி சாப்பிடுவது நல்லது.
- முதுகுத்தண்டு சார்ந்த அழுத்தத்தால் வரக்கூடிய வலிகள்.
- மூட்டுகள் அனைத்தையும் பலப்படுத்த உதவும் மூலிகைகள் ஆயுர்வேதத்தில் உண்டு.
மூட்டுவலி.. ஒன்றை மட்டும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. உடலில் தோள்பட்டை, கை மூட்டு, கால் மூட்டு என்று உடலில் எங்கெல்லாம் மூட்டுகளின் இணைப்புகள் உள்ளனவோ அங்கு பலவீனமடையும் இடத்தில் மூட்டுகளில் வலியை உணரலாம்.
முடக்குவாதம் சார்ந்த மூட்டுவலிகள், முதுகுத்தண்டு சார்ந்த அழுத்தத்தால் வரக்கூடிய வலிகள், குனிய முடியாமல் இருப்பது, நிமிர முடியாமல் இருப்பது, சற்று கனமாக இருந்தாலும் எடை தூக்க முடியாமல் இருப்பது என்று பல வலிகள் அனுபவிப்பது எல்லாமே மோசமான அசெளகரியம். இந்த மூட்டு வலிகளின் தீவிரம் குறைய மூட்டுகள் அனைத்தையும் பலப்படுத்த உதவும்
மூலிகைகள் ஆயுர்வேதத்தில் உண்டு. அப்படியான மூலிகைகளை ஒன்றிணைத்து செய்யகூடிய சரக்கொன்றை கஷாயம் தயாரிக்கும் முறை குறித்து இப்போது பார்க்கலாம்.
சிற்றரத்தை சூரணம் - 2 கிராம்
நெருஞ்சில் சூரணம் - 2 கிராம்
ஆமணக்கு சூரணம் - 2 கிராம்
தேவதாரு சூரணம் - 2 கிராம்
முக்கிரட்டை சூரணம் - 2 கிராம்
சீந்தில்கொடி சூரணம் - 2 கிராம்
சரக்கொன்றை சூரணம் - 2 கிராம்
தண்ணீர் - 300 மில்லி
செய்முறை:
தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து அனைத்து மூலிகைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். 100 மில்லியாக வந்ததும் வடிகட்டி குடிக்கவும். கசப்பு சுவை சார்ந்தது என்றாலும் கூட மூட்டுகளுக்கு அருமையான பலமான வலுவை அளிக்கும். எல்லா விதமான வலிகளை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்க செய்கிறது. முதுகுத்தண்டு, மூட்டு வலி பாதிப்புக்கு அறுவைச் சிகிச்சைதான் தீர்வு என்று சொல்லப்பட்டாலும் இந்த மூலிகை கஷாயம் வலியற்ற வேதனையற்ற நிலையை அளிக்கிறது. இவை அனைத்தும் உடலின் தேய்மானத்தை குறைத்து உடல் ஆரோக்கியம் காக்கும். மூட்டுகளை பலப்படுத்தி உடலை பலப்படுத்த இந்த கஷாயம் உதவும்.
மருந்துகள், களிம்புகள் கூட இந்த கஷாயம் குடித்து வருவதன் மூலம் வலிகள் குறையும். தொடர்ந்து 2 மண்டலங்கள் என சாப்பிட்டு வந்தால் வலிகள் 30-50 சதவீதம் வரை குறைவதை உணர்வீர்கள். இது உடல் அமைப்புக்கு மட்டும் அல்லாமல் உடல் செயல்பாடு அனைத்துக்கும் இவை முக்கியமானது. மூளை அனுப்பும் தகவல் சிறு மூளை வழியாக முதுகுத்தண்டுக்கு வந்து அங்கிருந்து உற்பத்தியாகும் நரம்புகளின் செயல்பாடு காரணமாக தான் உடல் சீராக இயங்குகிறது.
- இளம் வயதினரும் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்.
- இஞ்சியும் மூட்டு வலியை விரட்டும் ஆற்றல் கொண்டது.
மூட்டு வலி வயதானவர்களைத்தான் பாதிக்கும் என்ற நிலைமை மாறிவிட்டது. இளம் வயதினரும் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக, ஜாக்கிங், ரன்னிங் பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர்களும், உடற்பயிற்சிக்காக சைக்கிள் ஓட்டும் இளைஞர்களும், மூட்டு வலி சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள். எலும்பு மண்டல அமைப்பு பலவீனமாக இருப்பதே மூட்டுவலிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. ஆரம்ப நிலையிலேயே ஒரு சில பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து வந்தால் மூட்டுவலி பிரச்சினை தலைதூக்காமல் பார்த்துக்கொள்ளலாம். அதற்கு இளைஞர்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள்:
* ஆப்பிள் சிடர் வினிகர் மூட்டுவலியை குறைக்கும் தன்மை கொண்டது. அதனுடன் தேங்காய் எண்ணெய்யையும் சம அளவு
சேர்த்து மூட்டு பகுதிகளில் தடவி மசாஜ் செய்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
* இஞ்சியும் மூட்டு வலியை விரட்டும் ஆற்றல் கொண்டது. இஞ்சி எண்ணெய்யை தினமும் இரண்டு முறை மூட்டுகளில் தடவி வந்தால் போதும். நல்ல மாற்றம் தெரியும்.
* இஞ்சியை டீயாகவும் பருகிவரலாம். இஞ்சியை கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டி அதனுடன் தேன், எலுமிச்சை சாறு கலந்து ருசிக்கலாம்.
* இஞ்சியுடன் மஞ்சளையும் சேர்த்தும் பயன்படுத்தலாம். இரண்டையும் நீரில் கால் மணி நேரம் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அந்த நீரை வடிகட்டி, அதனுடன் தேன், எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.
* பாலுடன் மஞ்சள் தூள், சர்க்கரை கலந்தும் இரவில் பருகி வரலாம். தொடர்ந்து பருகிவந்தால் மூட்டுவலி பிரச்சினை நிரந்தரமாக நீங்கிவிடும்.
* எலுமிச்சை சாறை நீரில் கலந்தோ, எலுமிச்சை டீயாகவோ பருகி வரலாம். இதுவும் மூட்டுவலிக்கு நிவாரணம் தரக்கூடியது.
- 11 நாட்கள் எடுத்துக்கொண்டால் உடலில் இருக்கக்கூடிய வியாதிகள் அனைத்தும் குணமாகும்.
- கலப்படம் நிறைந்த உணவுகளையும் தான் நாம் சாப்பிட்டு வருகிறோம்.
நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, நரம்புகளில் அடைப்பு, முழங்கால் வலி, மூட்டுவலி, இடுப்பு வலி, கண்பார்வை குறைபாடு, கெட்ட கொலஸ்ட்ரால் இதனால் வரக்கூடிய உடல்பரும் போன்ற தொந்தரவுகள் இருந்தால் இந்த மருந்தை தொடர்ந்து 11 நாட்கள் எடுத்துக்கொண்டால் உடலில் இருக்கக்கூடிய வியாதிகள் அனைத்தும் குணமாகும்.
இப்போது இருக்கக்கூடிய டிஜிட்டல் உலகத்தில் நோய்களுக்கு பஞ்சம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு காரணம் நம்முடைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கம் தான். உணவு பழக்கவழக்கங்கள் இப்போது முற்றிலும் மாறிவிட்டது. நாம் இப்போது சாப்பிடக்கூடிய உணவுகள் நமக்கு 100 சதவீதம் ஊட்டச்சத்தை கொடுக்கிறதா என்றால் நிச்சயமாக கிடையாது.
ஊட்டச்சத்து இல்லாத உணவுகளையும், கலப்படம் நிறைந்த உணவுகளையும் தான் நாம் சாப்பிட்டு வருகிறோம். அதனால் அதனுடைய விளைவு நிச்சயமாக நோய்கள் தான். இதனால் பல ஆஸ்பத்திரிகளுக்கு சென்று அலைவதை நிறுத்திவிட்டு முதலில் வீட்டில் உபயோகப்படுத்தக்கூடிய பொருட்களை பயன்படுத்தி செய்யக்கூடிய மருந்தை 11 நாட்களுக்கு சாப்பிடும் போது பல நோய்கள் குணமாகும். அதாவது உங்களுக்கு மாரடைப்பு, ரத்தக்குழாய் அடைப்பு மற்றும் இதயம் சம்பந்தமான எந்த நோய்களுக்கும் இந்த குடிநீரை பயன்படுத்தி நிவாரணம் பெறமுடியும். அதேபோல் உங்கள் நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டு அதனால் வரும் சிக்கல்களை இந்த மருந்து தீர்க்கும். இந்த எளிதான குடிநீரை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
தண்ணீர்-250 கிராம்
வெந்தயம் -ஒரு டீஸ்ஸ்பூன்
கறிவேப்பிலை- ஒரு கைப்பிடி
பட்டை- ஒருதுண்டு
இஞ்சி- ஒரு டீஸ்பூன் (துருவியது)
செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து 250 கிராம் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். இந்த 250 கிராம் தண்ணீர் 150 கிராம் அளவுக்கு குறுகி வரும் அளவிற்கு காய்ச்சி எடுக்க வேண்டும். இந்த பொருட்களில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் தண்ணீரில் இறங்கி வரும் அளவுக்கு காய்ச்சி எடுக்க வேண்டும். அதற்கு அடுப்பை மிதமான தீயில் வைத்தே இந்த மருந்தை காய்ச்சி எடுக்க வேண்டும். அதன்பிறகு இதனை வடிகட்டியில் வடிகட்டி இந்த தண்ணீரை 11 நாட்கள் தொடர்ச்சியாக குடித்து வர வேண்டும்.
இதில் சுவைக்காக எதுவும் சேர்க்க வேண்டாம். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டுமானால் சிறிதளவு தேன் சேர்த்துக்கொள்ளலாம். இதனை 11 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நீங்களே பிரம்மித்து போகிற அளவுக்கு உங்களுக்கு நிறைய பலன்கள் கிடைக்கும்.
அதாவது நரம்புகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் முதற்கொண்டு எல்லாவிதமான பிரச்சினைகளும் நீங்கி நரம்புகள் சிறப்பாக செயல்பட ஆரம்பிக்கும். அதேபோல் மூட்டுவலி, முழங்கால் வலி போன்ற பிரச்சினைகளுக்கும் சிறப்பான தீர்வாக இருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். கபநோய்களுக்கும் சிறந்த தீர்வினை அளிக்கும்.
வாதம், பித்தம், கபம் இந்த மூன்றையும் ஒழுங்குபடுத்தக்கூடிய ஆற்றல் இந்த குடிநீருக்கு உள்ளது. உங்களை நீங்கள் கட்டுடலாக வைத்துக்கொள்ளவும் இந்த குடிநீர் உதவியாக இருக்கும். கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதற்கும் இது பெரிதும் உதவியாக இருக்கிறது.
- தொடர் வலிகள் நமக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துவதுடன் நம் அன்றாட வாழ்வையும் பாதிக்கிறது.
- தொடர்ச்சியாக இருக்கும் வலிகளை எப்போதும் இருப்பதுதானே என்று புறக்கணிக்கக் கூடாது.
உடம்பு வலி என்பது பொதுவாக அனைவருக்கும் வரும் ஒரு உடல் நல பிரச்சனைதான். சில சமயங்களில் உடல் வலி பின்னி எடுக்கும். அதற்கு காய்ச்சல் அல்லது அதிக அளவில் ஏதேனும் பளு தூக்கியது போன்றவை காரணமாக இருக்கலாம். ஆனால், அடிக்கடி உடல் வலி ஏற்படுகிறது அல்லது காரணமே இல்லாமல் உடல் வலி ஏற்படுகிறது என்றால், அலட்சியம் வேண்டாம். உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். ஏனென்றால், அது ஃபைப்ரோமியால்ஜியா என்னும் தசைநார் வலி என்னும் நோயாக இருக்கலாம்.
ஃபைப்ரோமியால்ஜியா என்பது சோர்வு, தூக்கம், நினைவாற்றல் மற்றும் மனநிலை பிரச்சினைகள் ஆகியவற்றுடன் பரவலான தசைக்கூட்டு வலியால் வகைப்படுத்தப்படும் ஒரு கோளாறு ஆகும். பரவலான வலி, சோர்வு, அறிவாற்றல் சிரமங்கள், ஒற்றைத்தலைவலி மற்றும் பிறவகையான தலைவலி போன்றவையாக இருக்கலாம்.
சிலருக்கும் உடல் ரீதியான காயம், தொற்று, அறுவை சிகிச்சை, குழந்தை பேறு ஆகியவற்றின் காரணமாவோ அல்லது மிக மோசமான மன நிலை பாதிப்பின் காரணமாகவோ ஏற்படக் கூடும். உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகவும் தசைநார் வலி ஏற்படக் கூடும்.
இந்த தசை நார் நோயினால், ஆண்களை விட அதிக அளவில் பெண்கள் தான் பாதிக்கப்படுகின்றனர் என புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இந்த நோய் எதனால் ஏற்படுகிறது என்பதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், மரபு ரீதியாக இந்த நோய் ஏற்பட்டிருந்தால், அவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
உடம்பு வலி என்பது பொதுவாக அனைவருக்கும் ஏற்படும். ஆனால், அடிக்கடி உடல் வலி ஏற்படுகிறது அல்லது காரணமே இல்லாமல் உடல் வலி ஏற்படுகிறது என்றால் அலட்சியம் செய்யாமல் உடனடியாக டாக்டரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.
தொடர் வலிகள் நமக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துவதுடன் நம் அன்றாட வாழ்வையும் பாதிக்கிறது. சில நேரங்களில் அவை பெரிய நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். முடக்கு வாதம், கீல்வாதம், ஃபைப்ரோமியால்ஜியா, வயிற்றுப் புண்கள், புற்றுநோய், மல்டிபிள் ஸ்களீரோசிஸ், எய்ட்ஸ் மற்றும் பித்தப்பை நோய் போன்ற நோய்களுக்கான வலி சாதாரண வலி போன்றுதான் இருக்கும், ஆனால் சரியான நேரத்தில் கவனிக்காமல் விட்டால் பெரும் ஆபத்திற்கு வழிவகுக்கலாம்.
நெஞ்சு வலி: உயிருக்கு ஆபத்தான அறிகுறியாகும். இதனை எளிதாக எடுத்துக்கொண்டு கண்டிப்பாக புறக்கணிக்கக்கூடாது. மூட்டு வலி: இது காயம், வீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் ஏற்படலாம். வலியின் அடிப்படைக் காரணத்தைக் கண்டறியவும்.
தசை வலி: இது முக்கியமாக வைட்டமின் டி குறைபாடு காரணமாக ஏற்படுகிறது, மேலும் நகர்ப்புறங்களில், இது உடலின் பல்வேறு பகுதிகளில் தசை வலிகளை ஏற்படுத்தும். வைட்டமின் டி போதுமான உடலுக்கு கிடைத்தால் இந்த சிக்கலைத் தீர்க்க முடியும்.
தலைவலி: அடிப்படையில் தலைவலியின் வகைகள் மற்றும் தீவிரத்தன்மை அடிப்படைக் காரணங்களைத் தீர்மானிக்கிறது. அடிக்கடி ஏற்படும் தலைவலி ஒற்றைத் தலைவலியின் அறிகுறியாக இருக்கலாம், அதே நேரத்தில் தூக்கமின்மை, மன அழுத்தம், ஆகியவையும் தலைவலிக்கு வழிவகுக்கும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கும், இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் தலைவலி வரலாம்.
வயிற்று வலி: இது இரைப்பை குடல் கோளாறுகள், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் அல்லது இனப்பெருக்க அமைப்பு பிரச்சினைகள் போன்ற பல காரணிகளால் ஏற்படலாம். வயிற்று வலி அஜீரணம் முதல் அல்சர் வரை எதனாலும் ஏற்படலாம், மேலும் நெஞ்சு வலி மாரடைப்பின் அறிகுறியாக கூட இருக்கலாம்.
முதுகு வலி: 5 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, மரப்புத்தன்மையை ஏற்படுத்தலாம். பல மணிநேரம் உட்கார வேண்டிய வேலையில் இருந்தால், உங்கள் தோள்பட்டை பகுதியும் பாதிக்கப்படலாம். ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் சிறந்தது. இந்த வலி தொடர்ந்தால் கீல்வாதம் மற்றும் பிற எலும்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
கால் வலி: தசை இறுக்கம் அல்லது ஆழமான நரம்பு இரத்த உறைவு போன்ற பல காரணங்களால் கால் வலி ஏற்படலாம். இருப்பினும், கால் வலி கடுமையாக இருந்தால், திடீரென்று வந்தால், அல்லது வீக்கம் அல்லது சிவத்தல் போன்ற பிற அறிகுறிகளுடன் சேர்ந்து இருந்தால், இரத்த உறைவு அல்லது நரம்பு சேதம் போன்ற மிகவும் தீவிரமான நிலையின் அறிகுறியாக இருக்கலாம்.
தொடர்ச்சியாக இருக்கும் வலிகளை எப்போதும் இருப்பதுதானே என்று புறக்கணிக்கக் கூடாது. மன அழுத்தம் மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறை என்று என்ன காரணம் கூறினாலும், பிற்காலத்தில் அது ஒரு ஆபத்தான பிரச்சனையாக மாறும்போது வருந்தப்போவது நாம்தான். தலைவலி தொடர்ச்சியாக இருந்தால் மூளை கட்டியாக இருக்க வாய்ப்புள்ளது, நெஞ்சுவலி தொடர்ந்து இருந்தால் இதய நோய்க்கு வாய்ப்புள்ளது, வயிற்று வலி இரைப்பை குடல் கோளாறுகளாக இருக்கலாம். எனவே எதையும் மருத்துவரிடம் ஆலோசித்துவிடுவது நல்லது. அன்றாட வாழ்வில் பொதுவாக வரும் வலிகளையும், அதன்பின் இருக்கும் தீவிரத்தன்மையையும் தெரிந்துகொள்ளுங்கள். விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.