என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arunachaleswarar temple"

    • கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 24-ந்தேதி தொடங்கி டிசம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது.
    • தீபத் திருவிழாவுக்கு 52 இடங்களில் அன்னதானம் வழங்கலாம்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா, துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வருகிற 24-ந்தேதி தொடங்கி டிசம்பர் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    இதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது.

    "கார்த்திகை தீபத் திருவிழாவில் இந்த ஆண்டு அதிகபட்சமாக 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்ற வகையில், அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். தீபத் திருநாளில் ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    கோவில் வளாகம் மற்றும் கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

    கடந்த 2 ஆண்டுகளாக 5 தேர்களும் இயக்கப்படவில்லை. பெல் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் 5 தேர்களையும் 2 முறை ஆய்வு செய்து சான்று வழங்க வேண்டும்.

    புதிதாக அமைக்கப்பட்டு வரும் முருகர் தேரை வெள்ளோட்டம் பார்க்க வேண்டும். பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசன கட்டண டிக்கெட் விற்பனை குறித்து கோவில் இணையதளத்தில் வெளியிடப்படும்.

    தீபத் திருநாளன்று திருவண்ணாமலை நகருக்குள் வெளியூர் வாகனங்கள் வருவதற்கு அனுமதி இல்லை.

    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை கூட இயக்கக்கூடாது. மாட வீதி மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைவாக அகற்ற வேண்டும்.

    பெயரளவில் இல்லாமல் மருத்துவ முகாம்களை செயல்படுத்த வேண்டும். கடந்த கால அனுபவங்கள் மூலமாக, பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட நிகழ்வுகளை மனதில் கொண்டு புதிய வழிமுறையை உருவாக்க வேண்டும்.

    கிரிவலப் பாதையில் பழுதடைந்துள்ள கழிப்பறைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். கோவிலில் உள்ள கழிப்பறைகளையும், திருப்பதிக்கு நிகராக சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் கூடுதல் எண்ணிக்கையில் குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும். தூய்மைப் பணியாளர்கள் மூலம் உடனுக்குடன் குப்பைகளை அகற்ற வேண்டும்.

    தீபத் திருவிழாவுக்கு 52 இடங்களில் அன்னதானம் வழங்கலாம்.

    இதற்கான இடத்தை தேர்வு செய்து, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோர்ட்டு உத்தரவுபடி, தீபத் திருநாளில் மலை மீது ஏறுவதற்கு 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

    இவர்களுக்கு, திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் அன்றைய தினம் காலை 6 மணி முதல் 7 மணி வரை அனுமதி சீட்டு வழங்கப்படும். அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 2,700 பஸ்கள் இயக்கப்படவுள்ளன. சிறப்பு ரெயில் இயக்குவது குறித்து பரிந்துரைக்கப்படும்"

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இந்த ஆண்டு 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • மகா தீபம் ஏற்றுவதற்கு 3,500 கிலோ நெய், 1,000 மீட்டர் திரி பயன்படுத்துவது வழக்கம்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் மாதம் 24-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது. 27-ந் தேதி அதிகாலையில் கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும்.

    விழாவின் சிகர நிகழ்ச்சி டிசம்பர் மாதம் 6-ந் தேதி நடக்கிறது. அன்று காலை பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

    மகா தீபம் ஏற்றுவதற்கு 3,500 கிலோ நெய், 1,000 மீட்டர் திரி (காடா துணி) பயன்படுத்துவது வழக்கம். கொரோனா தளர்வுகளை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் இந்த ஆண்டு 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி தீபத் திருவிழாவிற்கான விரிவான ஏற்பாடுகள் கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றது.

    இந்த நிலையில் மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அலுவலகம் அருகில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. இதில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் நெய் காணிக்கைக்காக பணம் செலுத்தி வருகின்றனர்.

    பணம் செலுத்தும் பக்தர்களுக்கு அதற்கான ரசீது உடனுக்குடன் வழங்கப்படுகிறது. ஒரு கிலோ நெய் ரூ.250, அரை கிலோ நெய் ரூ.150, கால் கிலோ நெய் ரூ.80 என்ற அடிப்படையில் நெய் காணிக்கையை செலுத்தலாம் என்று கோவில் அலுவலர்கள் தொிவித்தனர்.

    • அன்னாபிஷேக விழா 7-ந்தேதி நடைபெற உள்ளது.
    • 7-ந்தேதி பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் அன்னாபிஷேகமும் ஒன்றாகும்.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆகம விதிகளின்படி ஐப்பசி மாத ஆவணி நட்சத்திர தினத்தன்று உலக உயிர்களுக்கு உணவு அளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அன்னாபிஷேக விழா நடக்கிறது. இந்த ஆண்டிற்கான அன்னாபிஷேக விழா வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

    அதனால் அன்னாபிஷேகம் நடைபெறும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. மாலை 6 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும் வருகிற 7-ந் தேதி மற்றும் 8-ந் தேதி ஆகிய நாட்களில் பவுர்ணமி வருகிறது.. அன்றைய தினங்களில் அதிகளவில் பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பக்தர்கள் நெடுநேரம் காத்திருப்பதை தவிர்க்கவும், விரைந்து தரிசனம் செய்வதற்கு ஏதுவாகவும் 7 மற்றும் 8-ந் தேதிகளில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

    மேலும் பவுர்ணமி தினத்தன்று எவ்வித தரிசனத்திற்கும் முன்னுரிமை வழங்கப்படமாட்டாது என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • பவுர்ணமி நாளை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை நிறைவடைகிறது.
    • சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரத்திற்கு மேலானதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்ல மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    கடந்த மாதம் பவுர்ணமியின் போது கிரிவலம் சென்ற பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரத்திற்கு மேலானதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (திங்கட்கிழமை) மாலை தொடங்கி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை நிறைவடைகிறது.

    மேலும் இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாவான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தீபத் திருவிழாவின் போது எவ்வாறு பக்தர்களை கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிப்பது, பக்தர்கள் வந்து செல்லும் வழி குறித்து வருகிற பவுர்ணமி நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களை வைத்து ஒத்திகை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலை கோவிலில் கலெக்டர் முருகேஷ் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாநில தடகள சங்க தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், கோவில் இணை ஆணையர் அசோக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் ராஜகோபுரத்தில் இருந்தும், அம்மணி அம்மன் கோபுரத்தில் இருந்தும் கோவிலில் சாமி மற்றும் அம்மன் சன்னதிகளில் பக்தர்கள் வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்ய செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

    மேலும் தீபத் திருவிழாவின் போது கோவிலில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து கலெக்டரிடம் கேட்ட போது, பவுர்ணமி நாட்கள் மற்றும் தீபத் திருவிழாவின் போது பக்தர்கள் எந்தவித இடையூறு இன்றி சாமி தரிசனம் செய்வதற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது என்றார்.

    • பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
    • பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர். திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 4.44 மணிக்கு தொடங்கி மறுநாள் 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4.48 மணிக்கு நிறைவடைகின்றது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    • இன்று மாலை வரை பவுர்ணமி உள்ளது.
    • மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மாலை 4.44 மணி அளவில் தொடங்கியது. பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று பகலில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மாலை 5.45 மணியில் இருந்து ½ மணி நேரம் திடீரென மழை பெய்தது.

    மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று இரவு மட்டுமின்றி இன்று காலை வரை பக்தர்கள் தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்றனர். அதுமட்டுமின்றி நேற்று மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அம்மணி அம்மன் கோபுர வாசலில் சிறப்பு தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சிறுவர் முதல் முதியவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிதவித்தனர். போலீசாரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தனர்.

    மேலும் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு தண்ணீர் வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர். அதுமட்டுமின்றி போலீசாரும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் பக்தர்கள் செல்லும் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை வரை பவுர்ணமி உள்ளதால் இன்றும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • இரவில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது.
    • 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட சுற்று பாதையில் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் மாலை 4.44 மணி அளவில் தொடங்கியது. இதனால் நேற்று முன்தினம் பகலில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். இரவில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. இதனால் கிரிவலப்பாதையில் பக்தர்கள் வெள்ளம்போல் காட்சி அளித்தனர். பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

    பவுர்ணமி நேற்று மாலை 4.48 மணி வரை இருந்ததால் 2-ம் நாளாக நேற்று பகலிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அப்போது அவர்கள் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் சாமி தாிசனம் செய்தனர். தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கோவிலை சுற்றியுள்ள ஒத்தவாடை தெருவை சுற்றி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்று இரவு வரை பக்தர்கள் தனித்தனியாக கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.

    • 2,692 சிறப்பு பஸ்கள் 6,431 நடை இயக்கப்படும்.
    • தீபத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தீபத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டதாவது:-

    திருவண்ணாமலை சுற்றிலும் 13 தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. தற்போது 9 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக 19 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    2,692 சிறப்பு பஸ்கள் 6,431 நடை இயக்கப்படும். கோவில், மாடவீதிகள் மற்றும் கிரிவலப்பாதையில் 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

    மேலும் 7 டிரோன்கள் மூலமும், 57 கண்காணிப்பு கோபுரங்கள் மூலமும் கண்காணிக்கப்பட உள்ளது. மலை மீது ஏறுவதற்கு 2,500 பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். மலை மீது ஏறக்கூடிய 23 வழிகளில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    • கார்த்திகை தீப திருவிழா 27-ந் தேதி தொடங்க உள்ளது.
    • டிசம்பர் 6-ந்தேதி மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வருகிற 27-ந் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 6-ந் தேதி அதிகாலை கோவிலின் கருவறையின் முன்பு சரியாக 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை கோவிலின் பின்புறம் அமைந்துள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.

    கடந்த கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டு காலமாக மாடவீதியில் சாமி உலா நடைபெறாமல் 5-ம் பிரகாரத்தில் நடைபெற்றது. இதனால் பல்வேறு சாமி வீதி உலா வாகனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்தது. ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் முடிவடைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மாடவீதியில் சாமி வீதியுலா நடைபெற உள்ளது.

    சாமி மற்றும் அம்பாள், திருவிழா நடைபெறும் 10 நாட்களும் காலை மாலை என இரு வேளைகளிலும் இந்திர விமானம், குதிரை வாகனம், சிம்ம வாகனம், புருஷாமிருகம், தங்க ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.

    அதன்படி சாமி மற்றும் அம்பாள் வீதியுலா வரும் வாகனங்கள் அனைத்தும் 1000 கால் மண்டபம் அருகே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திர விமானம், பூத வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் முழுமையாக சீரமைக்கப்பட்டு தற்போது பல்வேறு வண்ணங்களில் வர்ணம் தீட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் 7-ம் நாள் திருவிழா அன்று மாடவீதியில் வலம் வரும் பஞ்சமூர்த்திகள் தேர்களில் பொருத்தப்படும் குதிரைகளுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. கோவிலில் உள்ள சன்னதி கோபுரங்களுக்கு மின்விளக்குகள் அலங்கரிக்கும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    • 27-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குகிறது.
    • ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் பொது மற்றும் கட்டண தரிசன வழியில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. இதனால் திருவண்ணாமலை ஈசான்யா மைதானம், காந்திநகர் பைபாஸ் பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து சென்றன.

    மேலும் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவிலில் கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குகிறது.

    இதையொட்டி விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விழா நாட்களில் சாமி வீதி உலா செல்லும் வெள்ளி வாகனங்கள் சுத்தம் செய்யப்பட்டு, 'பாலீஷ்' போடும் பணியும், கோவிலை சுற்றி வண்ண விளக்குகள் பொறுத்தும் பணியும் நடந்து வருகின்றது.

    மேலும் மதுரையை சேர்ந்த சிவனடியார்கள் உழவார பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரம், பலி பீடம் மற்றும் விளக்குகளை சுத்தம் செய்தனர்.

    • குபேர லிங்கத்தை தரிசனம் செய்து கிரிவலம் சென்றால் செல்வ செழிப்புடன் வாழலாம்.
    • கார்த்திகை மாதம் சிவராத்திரி நாளான நேற்று குபேர கிரிவலம் நடைபெற்றது

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலப்பாதை அமைந்துள்ளது. 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த கிரிவலப்பாதையில் அஷ்டலிங்க கோவில்கள் உள்ளன. கிரிவலப்பாதையில் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    கடந்த சில ஆண்டுகளாக திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் என்ற வழக்கம் ஏற்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் சிவராத்திரி நாளன்று குபேரன் பூமிக்கு வந்து அருணாசலேஸ்வரரை வணங்கி கிரிவலம் வருகிறார் என்று கூறப்படுகிறது. அதனால் அன்றைய தினத்தில் கிரிவலப் பாதையில் உள்ள 7-வது லிங்கமாக உள்ள குபேர லிங்கத்தை தரிசனம் செய்து கிரிவலம் சென்றால் செல்வ செழிப்புடன் வாழலாம் என்று பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    அதன்படி கார்த்திகை மாதம் சிவராத்திரி நாளான நேற்று குபேர கிரிவலம் நடைபெற்றது. குபேர கிரிவலம் செல்ல மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உகந்தநேரம் என அறிவிக்கப்பட்டு இருந்ததால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து குபேர லிங்க கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் சென்றனர்.

    மாலை 6 மணியளவில் குபேர லிங்க கோவிலில் மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது குபேர லிங்க கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இரவிலும் பக்தர்கள் பலர் கிரிவலம் சென்றனர்.

    குபேர கிரிவலத்தை யொட்டி திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • நாளை துர்க்கை அம்மன் உற்சவம் நடக்கிறது.
    • 6-ந்தேதி மலை உச்சியில் மகா தீப தரிசனம் நடைபெற உள்ளது.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கார்த்திகை தீபத்திருவிழா கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெற்றது. சாமி உலா, தேரோட்டம் ஆகியவை கோவிலின் 5-ம் பிரகாரத்தில் நடைபெற்றது.

    தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டு உள்ளதால் வழக்கம் போல் கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

    இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும்.

    முதல் நாள் விழாவின் போது காலை மற்றும் இரவில் விநாயகர், வள்ளி தெய்வானையும் சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெறும். மற்ற நாட்களில் காலையில் விநாயகர், சந்திரசேகரரும், இரவில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெறும்.

    தொடர்ந்து விழாவின் 7-ம் நாளான வருகிற டிசம்பர் மாதம் 3-ந் தேதி (சனிக்கிழமை) பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கோவிலில் சாமி சன்னதியில் கருவறைக்கு முன்பகுதியில் அதிகாலை 4 மணியளவில் பரணி தீப தரிசனமும், மாலை 6 மணியளவில் கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீப தரிசனமும் நடைபெற உள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் தெப்பல் உற்சவம் மற்றும் 10-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

    கொடியேற்றத்திற்கு முந்தைய 3 நாட்கள் காவல் தெய்வங்கள் உற்சவம் நடைபெறும். அதன்படி நாளை (வியாழக்கிழமை) துர்க்கை அம்மன் உற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று இரவு திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காமதேனு வாகனத்தில் மாட வீதி உலா நடைபெறும்.

    தொடர்ந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கோவில் வளாகத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் பிடாரி அம்மன் உற்சவம் நடைபெறும். அன்று அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் மாட வீதி உலா நடைபெறும். தொடர்ந்து 26-ந் தேதி (சனிக்கிழமை) மூஷிக வாகனத்தில் விநாயகரும், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதி உலா நடைபெற உள்ளது.

    இவ்விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ×