என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arunachaleswarar temple"

    • அம்மனுக்கு சாதம், காய்கறிகள், வடை, பாயாசம் படைத்து பூஜை நடைபெறும்.
    • இன்று பிடாரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீப திருவிழாவும் ஒன்றாகும். இந்த விழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    விழாவிற்கு முன்பு காவல் தெய்வ வழிபாடு நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று மாலை திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து வாணவேடிக்கைகளுடன், மங்கள வாத்தியங்கள் முழங்க காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மன் எழுந்தருளி அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் வலம் வந்தார். அப்போது அம்மனை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) மாலை கோவில் வளாகத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.

    அப்போது அம்மனுக்கு சாதம், காய்கறிகள், வடை, பாயாசம் படைத்து பூஜை நடைபெறும். அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வருவார்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணத்தினால் கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெற்ற சாமி உலா இந்த ஆண்டு மாடவீதியில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    • இன்று விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    • வருகிற 6-ந்தேதி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். மேலும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர்.

    இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணத்தினால் விழா நாட்களில் சாமி வீதி உலா மற்றும் தேரோட்டம் ஆகியவை கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்றது.

    இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் சாமி வீதி உலா மற்றும் தேரோட்டம் வழக்கம் போல் மாட வீதியில் நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்னர் 3 நாட்கள் காவல் தெய்வ வழிபாடு நடைபெறும்.

    அதன்படி நேற்று முன்தினம் திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காமதேனு வாகனத்தில் மாட வீதியில் உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து நேற்று கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மனுக்கு படையலிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பிடாரி அம்மன் எழுந்தருளி கோவிலின் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் முன்பு தயார் நிலையில் இருந்த சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து அம்மன் மாட வீதி உலா நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

    உற்சவ நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இன்று (சனிக்கிழமை) விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அப்போது விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி மாட வீதி உலா நடைபெற உள்ளது.

    தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.30 மணியில் இருந்து 7 மணிக்குள் சாமி சன்னதியில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று காலை மற்றும் இரவில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற உள்ளது.

    அதைத்தொடர்ந்து 2-ம் நாள் விழாவில் இருந்து 9-ம் நாள் விழா வரை காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் மாட வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி விழாவும் நடைபெற உள்ளது.

    கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 6-ந் தேதி (10-ம் நாள் விழா) விடியற்காலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பின்னர் அன்று இரவு பஞ்ச மூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதி உலாவும் நடைபெற உள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக பிரார்த்தனை உண்டியல் வைக்கப்படும்.
    • பிரார்த்தனை உண்டியல் கோவில் கொடி மரம் அருகில் வைக்கப்பட்டது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 3-ம் நாளான நேற்று காலை 10 மணி அளவில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகரும், சந்திரசேகரரும் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர்.

    பின்னர் அங்கிருந்து வந்து ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் தயார் நிலையில் இருந்த மூஷிக வாகனத்தில் விநாயகரும், பூத வாகனத்தில் சந்திரசேகரரும் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் மேள தாளங்கள் முழங்க விநாயகரும், அதன் பின்னே சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

    மேலும் கோவிலில் நேற்று 1,008 சங்காபிஷேகமும், சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு யாக சாலை பூஜையும் நடந்தது.

    தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேலும் கோவில் கலையரங்கத்தில் பரதநாட்டியம், பக்தி சொற்பொழிவு போன்றவை நடைபெற்றது. இரவு 10 மணி அளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் சிம்ம வாகனம் மற்றும் வெள்ளி அன்ன வாகனத்தில் கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஆண்டு தோறும் தீபத் திருவிழாவின் 3-ம் நாள் விழாவின் போது பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக பிரார்த்தனை உண்டியல் வைக்கப்படும். அதன்படி 3-ம் நாள் விழாவை முன்னிட்டு நேற்று காலை கோவிலில் பிரார்த்தனை உண்டியல் கோவில் கொடி மரம் அருகில் வைக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

    தொடர்ந்து பக்தர்கள் பலர் பிரார்த்தனை உண்டியலில் காணிக்கை செலுத்தினர்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • 6-ந்தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது. 3-ம் நாளான நேற்று முன்தினம் இரவில் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், வெள்ளி மயில் வாகனத்தில் முருகரும், சிம்ம வாகனத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், அன்ன வாகனத்தில் பராசக்தி அம்மனும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து 4-ம் நாளான நேற்று காலை 10.30 மணியளவில் விநாயகர், பல்லக்கு வாகனத்திலும் சந்திரசேகரர், நாக வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க விநாயகரும், அதன்பின்னே நாக வாகனத்தில் சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிப்பட்டனர்.

    இரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் வெள்ளி கற்பக விருட்சம், காமதேனு வாகனம் மற்றும் இதர வெள்ளி வாகனங்களில் கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மகா தீபம் ஏற்றப்படுகிறது. மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம், தொடர்ந்து 11 நாட்கள் காட்சி அளிக்கும். மகா தீபத்திற்காக 4 ஆயிரத்து 500 கிலோ நெய், ஆவினில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

    மகா தீபத்திற்கு தேவையான நெய்யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இதற்காக ஆண்டுதோறும் தீபத் திருவிழாவின் போது கோவிலில் நேரடியாக நெய் விற்பனை தொடங்கப்படும். இதற்காக கோவிலின் ராஜகோபுரத்தின் அருகில் நேரடி நெய் விற்பனைக்கான கவுண்டர் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் பக்தர்கள் மகா தீப நெய் காணிக்கைக்கான ரசீது பெற்று நேரடியாக நெய் விற்பனை கவுண்டரில் வழங்கி செலுத்தினர்.

    கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு பணியில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட உள்ளனர். தீபத் திருவிழா எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நடைபெற வேண்டி மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று காலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலையில் உள்ள சாமி பாதத்திற்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்து திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் வழிபட்டனர்.

    • நாளை தேரோட்டம் நடக்கிறது.
    • அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 5-ம் நாளான நேற்று காலை 11 மணி அளவில் சின்ன ரிஷப வாகனத்தில் விநாயகரும், கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரரும் சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.

    பின்னர் அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க விநாயகரும், சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகள் மற்றும் கடைகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிப்பட்டனர்.

    முன்னதாக சாமி வீதியுலா சென்ற வாகனங்கள் மற்றும் மாட வீதியில் போலீசார் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தினர்.

    இரவு 11 மணி அளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் வெள்ளி பெரிய ரிஷப வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. முன்னதாக காலையில் 63 நாயன்மார்கள் வீதி உலா நடக்கிறது. பள்ளி மாணவர்கள் நாயன்மார்களை சுமந்து மாடவீதியை சுற்றி வருவார்கள்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நாயன்மார்கள் வீதியுலா நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு நாயன்மார்கள் வீதியுலா நடைபெற உள்ளதால் சாமியை மாணவர்கள் வரிசையாக சுமந்து வரும் காட்சியை காண பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

    தொடர்ந்து வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா நடைபெறுகிறது. இரவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் வீதி உலா நடக்கிறது.

    மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. காலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் விநாயகர் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    முதலில் விநாயகர் தேரும், அதைத்தொடர்ந்து முருகர் தேரும் வீதி உலா செல்கிறது. 2 தேர்களும் நிலைக்கு வந்ததும் பெரியதேரான (சாமி தேர்) மகா ரதம் இழுக்கப்படும். இதில் ஆண்கள் ஒருபக்கமும், பெண்கள் ஒருபக்கமும் வடம் பிடித்து தேர் இழுப்பார்கள். பெரியதேர் நிலைக்கு வந்ததும் இரவில் அம்மன் தேரோட்டம் நடக்கும். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். இந்த தேரின் பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும்.

    தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று காலை கோவிலில் பஞ்சமூர்த்திகளின் தேர்களில் பொருத்தப்படும் கலசங்களுக்கு சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் கலசங்கள் கோவிலில் இருந்து தேரடி வீதிக்கு கொண்டு வரப்பட்டு தேரோட்டம் நடைபெறும் வரிசை முறைப்படி முதலில் விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்களில் பொருத்தும் பணி நடைபெற்றது.

    கடந்த 2 வருடங்களாக பக்தர்களின்றி கோவில் வளாகத்திற்குள்ளேயே தேரோட்டம் நடைபெற்றதால் இந்த ஆண்டு மாட வீதியில் நடைபெற உள்ள தேரோட்டத்தை காண மக்கள் மற்றும் பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

    • இன்று தேரோட்டம் நடக்கிறது.
    • காலை முதல் இரவு வரை தேரோட்டம் நடைபெறும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் 6-ம் நாளான நேற்று காலை 11 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் மர யானை வாகனத்திலும், சந்திரசேகரர் வெள்ளி யானை வாகனத்திலும் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது 63 நாயன்மார்கள் வீதிஉலாவும் நடைபெற்றது. நாயன்மார்களை சுமந்து செல்வதற்காக பள்ளி மாணவர்கள் காலையிலேயே கோவிலுக்கு வந்திருந்தனர்.

    அவர்கள் 63 நாயன்மார்களை தங்கள் தோள்களில் சுமந்து மாடவீதியில் செல்ல தொடர்ந்து திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் வீதி உலா வந்தனர்.

    பின்னர் விநாயகரும், சந்திரசேகரரும் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கடந்த 2 வருடங்களாக தீபத் திருவிழாவின் போது 63 நாயன்மார்கள் உற்சவ வீதிஉலா நடைபெறவில்லை.2 ஆண்டுகளுக்கு பிறகு நாயன்மார்களை மாணவர்கள் சுமந்து செல்லும் காட்சியை காண மாடவீதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிப்பட்டனர்.

    இரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் வெள்ளி தேர், வெள்ளி இந்திர விமானம், வெள்ளி விமானங்களில் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வெள்ளி தேரையொட்டி திருவண்ணாமலை நகரத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்ததால் நூற்றுக்கணக்கான போலீசார் திருவண்ணாமலை நகர மற்றும் மாட வீதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. காலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்குகிது. முதலில் விநாயகர் தேரும், அதைத்தொடர்ந்து முருகர் தேரும் வீதிஉலா செல்கிறது. 2 தேர்களும் நிலைக்கு வந்ததும் பெரியதேர் (சாமி தேர்) இழுக்கப்படும். இதில் ஆண்கள் ஒருபக்கமும், பெண்கள் ஒருபக்கமும் அணிவகுத்து வடம் பிடித்து தேர் இழுப்பார்கள். தேரோட்டத்தையொட்டி மாடவீதிகள் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்வார்கள். பெரியதேர் நிலைக்கு வந்ததும் இரவில் அம்மன் தேரோட்டம் நடக்கும். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். இந்த தேரின் பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும். சண்டிகேஸ்வரர் தேரை சிறுவர், சிறுமியர்கள் இழுப்பார்கள். காலை முதல் இரவு வரை தேரோட்டம் நடைபெறும்.

    தேரோட்டத்தையொட்டி திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் இன்று ஈடுபட உள்ளனர். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • 6-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது.
    • ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு கட்டணச்சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும்.

    திருவசண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவில் வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. இதனை காண்பதற்கு ரூ.500 கட்டணத்தில் 500 அனுமதி சீட்டுகளும், அன்று மாலை 6 மணிக்கு மகா தீப தரிசனம் செய்ய ரூ.600 கட்டணத்தில் 100 அனுமதி சீட்டுகள் மற்றும் ரூ.500 கட்டணத்தில் 1,000 அனுமதி சீட்டுகள் வழங்கப்பட உள்ளன.

    இந்த அனுமதி சீட்டுகள் https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற அருணாசலேஸ்வரர் கோவில் இணையதளம் வழியாக நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் வெளியிடப்பட உள்ளது.

    கட்டணச்சீட்டு பெற ஆதார் அட்டை, செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கண்டிப்பாக தேவை. ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு கட்டணச்சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும். கட்டணச்சீட்டு பதிவு செய்தவுடன் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் ஓ.டி.பி.எண் குறுஞ்செய்தி பதிவு செய்தவரின் செல்போன் எண்ணிற்கு வரும்.

    கட்டணச்சீட்டு பதிவிற்கு பயன்படுத்தப்படும் அதே மின்னஞ்சல் வழியாக கட்டணச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவிறக்கம் செய்யப்பட்டு பரணி தீபம் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் 6-ந் தேதி அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவிறக்கம் செய்யப்பட்டு மகா தீபம் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் மதியம் 2.30 முதல் 3.30 வரை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    இந்த 2 தீப நிகழ்வுகளை காணவரும் பக்தர்கள் அசல் கட்டணச்சீட்டு மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றுடன் குறிப்பிட்ட நேரத்திற்குள் கோவிலின் அம்மணி அம்மன் கோபுரம் (வடக்கு கோபுரம்) வழியாக அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள் வருகை தர தவறும் சேவார்த்திகளை கண்டிப்பாக அனுமதிக்க இயலாது. இணையதளம் வழியாக கட்டணச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து வருகை தர இருக்கும் சேவார்த்திகள் மேலே குறிப்பிடப்பட்ட விதிமுறைகளை பின்பற்றி கோவிலுக்கு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.

    பக்தர்கள் தீபத்திருவிழா பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள வசதியாக 1800 425 3657 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு பயன் பெறுலாம். கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள க்யூஆர் கோடு பலகையினை பயன்படுத்தி பக்தர்கள் நன்கொடைகளை இணையதளம் மூலம் செலுத்தலாம். மகா தீபத்திற்கு பிரார்த்தனை நெய் குடத்திற்கான காணிக்கை கட்டண சீட்டுகள் ராஜகோபுரம் (கிழக்கு கோபுரம்) அருகில் உள்ள திட்டிவாயில் பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் திருமஞ்சன கோபுரம் (தெற்கு கோபுரம்) நுழைவு வாயில் ஆகிய இடங்களில் விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஒருபுறம் ஆண்களும் மறுபுறம் பெண்களும் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
    • பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 6-ந்தேதி காலை பரணி தீபம் மாலை 6 மணிக்கு மாலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

    தீபத் திருவிழாவையொட்டி தொடர்ந்து இரவு மாட வீதிகளில் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் வீதி உலா நடந்து வருகிறது. நேற்று இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது. இதில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    தீபத் திருவிழாவில் 7-வது நாளான இன்று பஞ்ச மூர்த்திகள் மகா தேரோட்டம் நடந்தது. காலை 6.45 மணிக்கு விநாயகர் தேர் புறப்பாடு நடைபெற்றது. ஒருபுறம் ஆண்களும் மறுபுறம் பெண்களும் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

    இதைத் தொடர்ந்து விநாயகர் தேர் நிலைக்கு வந்த பிறகு முருகர் தேரோட்டம் நடைபெற்றது. மதியம் 1.30 மணிக்கு மேல் அருணாசலேஸ்வரர் மகாதேரோட்டம் நடந்தது.

    அதனைத் தொடர்ந்து பெண்களால் இழுக்கப்படும் அம்மன் தேரோட்டமும், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறுகிறது.

    2 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற்றதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். ரத வீதிகளில் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்துச் சென்றனர்.

    ராஜகோபுரம் முன்பு ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இதனால் அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் பக்தர்கள் பரவசத்துடன் காணப்பட்டனர்.

    கார்த்திகை தீபத்திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும் நாளன்று நேர்த்தி கடனாக கரும்பில் சேலையால் தொட்டில் கட்டி தங்கள் குழந்தையை சுமந்தபடி மாட வீதியை வலம் வருவார்கள். அதன்படி, இன்று ஏராளமான பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    தேரோட்ட த்தையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன.

    • 6-ந்தேதி மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
    • மலை மீது 2 ஆயிரத்து 500 பக்தர்கள் மட்டுமே ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

    கலெக்டர் முருகேஷ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் படி மகா தீபம் ஏற்றப்படும் மலை மீது 2 ஆயிரத்து 500 பக்தர்கள் மட்டுமே ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

    தீப தரிசன நாளான டிசம்பர் 6-ந் தேதி காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை முதலில் வரும் 2 ஆயிரத்து 500 பக்தர்கள் மட்டும் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். அதற்காக 6-ந் தேதி திருவண்ணாமலை செங்கம் சாலை கிரிவலப்பாதையில் உள்ள கலைஞர் கருணாநிதி கலை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் காலை 6 மணி முதல் 2 ஆயிரத்து 500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும். முதலில் வரும் 2 ஆயிரத்து 500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்படும். மலை ஏற அனுமதி சீட்டு பெற வரும் பக்தர்கள் ஆதார் அடையாள அட்டை, வாக்களர் அடையாள அட்டை மற்றும் பிற இதர அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றின் நகலினை சமர்ப்பித்து அனுமதி சீட்டு பெற்று கொள்ளலாம்.

    மலை ஏறும் பக்தர்கள் பே கோபுரம் அருகில் உள்ள வழியாக மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள். மற்ற வழிகளில் மலையேற கண்டிப்பாக அனுமதி வழங்கப்பட மாட்டாது.

    6-ந் தேதி மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு செல்லும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும் காலி தண்ணீர் பாட்டில்களை மலையில் இருந்து இறங்கி வரும் போது திரும்ப கொண்டு வர வேண்டும். மலையேறும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யினை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும். வேறு எந்த இடத்திலும் நெய்யினை ஊற்றவோ, நெய் தீபம் ஏற்றவோ கூடாது.

    இந்த நிபந்தனைகளை தவறாது கடைபிடித்து அண்ணாமலையார் மலை மீது ஏறுவதற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மாட விதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் தேர் நீந்தி வந்தது.
    • இந்த தேர் பெண்களால் மட்டுமே இழுக்கப்படும்.

    திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா முன்னிட்டு நேற்று பஞ்ச மூர்த்திகள் தேர்த்திருவிழா நடைபெற்றது முதலில் விநாயகர் தேர் காலை 6 45க்கும் தொடங்கி 10 20க்கு நிலைக்கு வந்தன.

    அதனைத் தொடர்ந்து முருகர் 10.35க்கும் தொடங்கி 2.50 மணிக்கு நிலைக்கு வந்த சேர்ந்தன. தொடர்ந்து அண்ணாமலையார் பெரிய தேர் மாலை 3. 47 க்கு தொடங்கியது பெரிய தேர் தொடங்கியது.

    அப்போது அண்ணாமலையாருக்கு அரோகரா என்று விண்ணதிர கோஷம் மிட்டு பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுக்க தொடங்கினர்.

    மாட விதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் தேர் நீந்தி வந்தது. பின்பு இரவு 11 42 மணிக்கு நிலைக்கு வந்து அடைந்தன இதனைத் தொடர்ந்து அம்மன் தேர் நள்ளிரவு ஒரு மணிக்கு தொடங்கியது. இந்த தேர் பெண்களால் மட்டுமே இழுக்கப்படும். இது தேர் மாட வீதியை உலா வந்து விடியற்காலை 4 மணிக்கு வந்து நிலைக்கு சேர்ந்தன. இதனுடன் சண்டிகேஸ்வரர் தேரும் வலம் வந்தது.

    • இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும்.
    • இத்தீபம் 11 நாட்கள் எரியும்.

    திருவண்ணாமலை கோவிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்படும். அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும். கோவில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படும்.

    ஒருவனே அனைத்தும் என்ற தத்துவத்தை விளக்கும் விதமாக அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் சன்னதியின் ஈசான மூலையில் இருந்து தீபம் ஏற்றப்படும். மடக்கில் நெய்தீபம் ஏற்றப்படும், இந்த தீபத்திலிருந்து உலக தோற்றத்திற்கு காரணமான பஞ்ச பூத தத்துவத்தை விளக்கும் விதமாக 5 தீபங்கள் ஏற்றப்படும்.

    அந்த 5 தீபங்களும் ஒவ்வொரு சன்னதியாக கொண்டு செல்லப்பட்டு அனைத்து சன்னதிகளிலும் தீபம் ஏற்றப்படும். பின்னர் இந்த தீபங்கள் ஒரே தீபத்தில் சேர்க்கப்படும். இறைவன் அனைத்தும் நிறைந்தவன் என்ற தத்துவத்தை இது விளக்குகிறது. உயிர்களின் தோற்றத்திற்கு காரணமான பஞ்ச பூதங்களிலும், இறைவன் கலந்து இருப்பதை விளக்குகிறது. இது பரணி தீபமாகும்.

    அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.

    மாலை 6 மணிக்கு இந்த பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே எடுத்துவந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள தீபக் கொப்பரையில் ஒன்றுசேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்றுவிடுவார். இது இரண்டு நிமிட தரிசனம்தான். அப்போதே வாசல் வழியே பெரிய தீவட்டியை (ஜலால ஒளியை) ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். இதற்காகவே காத்திருந்தோர் மலைமீது உடனே மகாதீபம் ஏற்றிவிடுவர். மக்கள் கோஷமாக "அண்ணாமலைக்கு அரோஹரா' எனக்கூறி தரிசனம் கண்டபின், இல்லம் சென்று வீடு முழுவதும் தீபமேற்றி மாவிளக்கேற்றி பூஜை செய்துவிட்டு விரதம் முடிப்பார்கள்.

    ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3,000 கிலோ பசுநெய், 1,000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள்.

    தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள்தான். இவர்களின் பரம்பரையினர்தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள். தீப விழாவன்று இவர்கள் ஆலயத்தில் கூடுவார்கள். ஆலயத்தார் இவர்களை கவுரவித்தபின் தீபம் ஏற்றும் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள். மூன்று மணி நேரத்தில் மலை உச்சியை அடைந்து விடுவார்கள்.

    ஜலால தீப அடையாளம் கண்டபின் தீபம் ஏற்றி விடுவார்கள். இத்தீபம் 11 நாட்கள் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும். திருப்புகழ் மண்டபம் ஆலயத்தில் அமைந்துள்ளது. இங்குதான் சமயச் சொற்பொழிவுகள் நடைபெறும். இவ்வாலயம் முழுவதும் சுற்றிப் பார்க்க மூன்று மணி நேரம் ஆகும்.

    லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்பால் ஈர்க்கும் அண்ணாமலையை தரிசிப்போம்! பிறவிப் பிணி நீங்கி நல்வாழ்வு பெறுவோம்!

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

    • பிரம்ம தீர்த்தத்தில் சுப்ரமணியர் சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும்.
    • மகாதீபத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தீப திருவிழா கோவிலின் வளாகத்திற்குள் பக்தர்களின்றி நடைபெற்றது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டு உள்ளதால் இந்த ஆண்டு தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது.

    அதன்படி இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதனை முன்னிட்டு நாளை அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற உள்ளது.

    அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்படும். இதையடுத்து பிரம்ம தீர்த்தத்தில் சுப்ரமணியர் சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும்.

    மாலையில் பஞ்சமூர்த்திகள், சாமி சன்னதி முன்பாக எழுந்தருள்வார்கள். அதைத்தொடர்ந்து 6 மணிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்படும். அதேநேரத்தில் மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

    அப்போது கோவிலில் கூடியிருக்கும் பக்தர்கள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்வார்கள். மகாதீபத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். மகா தீபம் ஏற்றியதும் கிரிவலப்பாதையில் இருக்கும் பக்தர்கள் மலையை நோக்கி மகாதீபத்தை வணங்குவார்கள். மகாதீபம் ஏற்றப்படும் நாளில் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மலையில் தீபம் ஏற்றும் வரை தங்கள் வீடுகளிலோ, வியாபார நிறுவனங்களிலோ மின்விளக்குகள் போடமாட்டார்கள். அதன்பின்னரே ஏற்றுவார்கள்.

    பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் சென்னை உள்ளிட்ட இடங்களிலிருந்து சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன.

    இவை இன்று (திங்கட்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளது. அதனால் இன்று முதல் திருவண்ணாமலை நகர் முழுவதும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும்.

    பாதுகாப்பு பணிக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் சுமார் 12 ஆயிரம் போலீசார் திருவண்ணாமலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ×