search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "assembly election 2023"

    • 5 மாநில தேர்தல்களை எதிர் கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன
    • 4 காங்கிரஸ் முதலமைச்சர்களில் 3 பேர் ஓபிசி வகுப்பினர் என்றார் ராகுல்

    அடுத்த வருடம் இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய ஆளும் பா.ஜ.க.வை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியை தேர்தலில் வெல்ல இந்திய தேசிய காங்கிரஸை உள்ளடக்கிய 25 கட்சிகளுக்கும் மேற்பட்ட "இந்தியா கூட்டணி" தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, இந்தியாவில் வரும் நவம்பர் இறுதிக்குள் தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று, இந்திய தேர்தல் ஆணையம், இத்தேர்தலுக்கான அட்டவணையை அறிவித்துள்ளது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகளும் டிசம்பர் 5 அன்று வெளியிடப்படும்.

    இந்த 5 மாநில தேர்தல்களிலும், அடுத்த வருட அகில இந்திய தேர்தலிலும் வெற்றி காண அரசியல் கட்சிகள் மும்முரமாக உள்ளன.

    இப்பின்னணியில் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடியது. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    காங்கிரஸ் காரிய கமிட்டி, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பிற்கு முழு ஆதரவு தெரிவிக்க முடிவெடுத்துள்ளது. ஏழைகளை முன்னேற்ற சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு முன்னேற்ற பாதையாக அமையும். இந்திய பிரதமர் நரேந்திர மோடி இக்கணக்கெடுப்பை நடத்தும் திறன் படைத்தவரல்ல. காங்கிரஸின் 4 முதலமைச்சர்களில் 3 பேர் ஓபிசி (OBC) எனப்படும் இதர பிற்படுத்தபட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். ஆனால், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள 10 முதலமைச்சர்களில் ஒருவர் மட்டுமே ஓபிசி வகுப்பை சேர்ந்தவர். பிரதமர் ஓபிசி மக்களின் நலன்களுக்காக உழைக்கவில்லை. அவர்களின் கவனத்தை முக்கிய பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்பும் முயற்சியில்தான் ஈடுபடுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சமீபத்தில் பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில், அம்மாநிலத்தில் 36 சதவீதம் பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்றும், பிற்படுத்தப்பட்டவர்கள் 27 சதவீதம் என்றும் பொதுப்பட்டியலில் 15 சதவீதம் பேர் உள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.

    ×