search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Attur election"

    ஆத்தூர் அருகே பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1.24 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    ஆத்தூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் உள்ளிட்டவைகள் பட்டுவாடா செய்யாமல் தடுப்பதற்கான நடவடிக்கையில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.இதற்காக சேலம் மாவட்டத்தில் 33 பறக்கும் படைகள், 33 நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கை மற்றும் சந்தேக இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இன்று அதிகாலை ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் கூட்ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சேலத்தை நோக்கி வேன் ஒன்று வந்தது. இந்த வேனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள். இதில் வேனுக்குள் 3 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து வேனில் இருந்தவர்களிடம் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? இந்த நகையை எங்கு கொண்டு செல்கிறீர்கள்? இதற்கு உரிய ஆவணங்கள் ஏதேனும் இருக்கிறதா? என அதிகாரிகள் விசாரித்தனர்.

    அதற்கு அவர்கள், தாங்கள் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து ஒரு தனியார் ஏஜென்சி நிறுவனம் மூலமாக வேனில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை எடுத்துக் கொண்டு சேலத்தில் உள்ள நகைக் கடைகளில் கொடுப்பதற்காக வருகிறோம் என தெரிவித்தனர். ஆனால், தங்கம் மற்றும் வெள்ளிக்கான உரிய ஆவணங்கள் தங்களிடம் இல்லை என கூறினர்.

    இதனால் தேர்தல் பறக்கும் படை 3 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்தது. இதன் மதிப்பு ரூ.1 கோடியே 24 லட்சத்து, 54 ஆயிரத்து 648 ஆகும்.

    இது குறித்து ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியரும், தேர்தல் உதவி அலுவலருமான அபுல்காசிமுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவரிடம் தங்கம்- வெள்ளி ஆகியவற்றை பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

    பின்னர் கோட்டாட்சியர் அபுல் காசிம் , பார்வையிட்டு ஆய்வு செய்கையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி நிர்ணயிக்கப்பட்ட மதிப்பை விட அதிகமாக இருந்ததால் தங்கம்-வெள்ளி ஆகியவற்றை அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வில்லை.

    இது குறித்து கோட்டாட்சியர் அபுல்காசிம் சேலம் மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, தங்கம்- வெள்ளி ஆகியவற்றுக்கு உரிய வருமானவரி செலுத்தி இருக்கவில்லை என்றால் அதனை பறிமுதல் செய்து விடுவார்கள் என பறக்கும் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. #LSPolls

    ×