search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Auckland"

    • நியூயார்க் நகரில் 200க்கும் மேற்பட்ட விமான சேவைகள் நிறுத்தப்பட்டன
    • ஆக்லேண்டு பகுதியில் 249 மில்லிமீட்டர் மழைபொழிவு ஏற்பட்டது

    கடந்த செப்டம்பர் 29 அன்று அமெரிக்காவின் முக்கிய பெருநகரமான நியூயார்க் நகரில் திடீரென பெய்த பெருமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் ஆங்காங்கே வெள்ள பெருக்கு ஏற்பட்டது. 200க்கும் மேற்பட்ட பல விமான சேவைகள் நிறுத்தப்பட்டு நகரின் ஒரு சில பிராந்தியங்களுக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்படும் அளவிற்கு நிலைமை மோசமடைந்தது.

    நகரில் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அவ்வப்போது புகைப்படங்களும், வீடியோக்களும் பயனர்களால் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வந்தது.

    அவ்வாறு வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில் ஒரு பல்பொருள் அங்காடியில் முழங்கால் அளவு வரை நீர், நதி போல் ஓடுவதும், அதில் மிதக்கும் பொருட்களை தாண்டி அக்கடைக்கு வந்த பல வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்துடன் தண்ணீர் நடுவே மெதுவாக நடந்து செல்வதையும் காண முடிந்தது.

    மேலும் அந்த வீடியோவில், "பிரளயத்தை போன்ற வெள்ளத்தில் நியூயார்க் மக்கள் ஒரு பெரிய மளிகை கடையில், ஓடி வரும் தண்ணீரில், மிதக்கும் மளிகை பொருட்கள், மிருகங்களுக்கு நடுவே பொருட்களை வாங்கி செல்கின்றனர்" என ஒரு குறுஞ்செய்தியும் பதிவிடப்பட்டிருந்தது.

    ஆனால், ஆய்வில் இது உண்மையல்ல என தெரிய வந்துள்ளது. உண்மையில், இந்த வீடியோவில் காணப்படும் சம்பவம் பல மாதங்களுக்கு முன் 2023 ஜனவரி 28 தேதியிட்ட ஒரு வீடியோவில் உள்ளது.

    நியூசிலாந்து நாட்டின் ஆக்லேண்டு நகரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 24 மணி நேர இடைவெளியில் 249 மில்லிமீட்டர் மழைப்பொழிவு ஏற்பட்ட போது அங்குள்ள கிலென்ஃபீல்டு சூப்பர் மார்கெட் (Glenfield Super Market) எனும் பல்பொருள் அங்காடியில் பொருட்களை வாங்க வந்தவர்கள் சிக்கி கொண்டு மெதுவாக வெளியேறியது வீடியோ பதிவாகி வெளியிடப்பட்டது.

    அந்த சம்பவம் குறித்த வீடியோவைத்தான் நியூயார்க் நகர வெள்ளத்துடன் தொடர்புபடுத்தி தவறுதலாக வலைதளங்களில் சிலர் வெளியிட்டுள்ளனர்.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.


    ×