search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aundipatti market"

    • ஆடி முதல் நாளான இன்று புதுமணத் தம்பதிகளுக்கு விருந்து வழங்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
    • சந்தையில் ஆட்டு இறைச்சி மற்றும் கோழி விற்பனை அமோகமாக நடைபெற்றது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் தினசரி மற்றும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பல்வேறு பகுதிகளில் இன்று இறைச்சி விற்பனை அமோகமாக நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ஆடி மாதத்தில் புதிதாக திருமணம் செய்த தம்பதியை தங்கள் வீட்டுக்கு அழைத்து விருந்து வைப்பது தொன்று தொட்டு கடைபிடிக்கும் பழக்கமாக இருந்து வருகிறது. நகரங்களில் இது போன்ற பழக்கம் மறந்து விட்டாலும் கிராமங்களில் இன்றளவும் தவறாமல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி புதிதாக திருமணம் செய்த மகள் மற்றும் மருமகனை ஆடி முதல் நாளில் வரவழைத்து அவர்களுக்கு புத்தாடை வழங்கி கறி விருந்து சமைத்து பரிமாறுவார்கள். மேலும் அவர்களுக்கு சீர் வரிசையும் வழங்கி ஒரு வாரம் தங்கள் வீட்டில் வைத்து உபசரிப்பார்கள்.

    ஆடி விருந்து என்பது தலை ஆடி, நடு ஆடி, கழிவு ஆடி என 3 வகைகளில் விருந்து அளிக்கப்படுகிறது. ஆடி முதல் நாளில் அளிக்கப்படும் விருந்து தலை ஆடி என்றும் 2 வாரங்கள் கழித்து அளிக்கப்படும் விருந்து நடு ஆடி என்றும், கடைசி நாளில் அளிக்கப்படும் விருந்து கழிவு ஆடி என அழைக்கப்படுகிறது.

    பெரும்பாலும் புதுமணத் தம்பதிகளுக்கு தலை ஆடி மற்றும் நடு ஆடியிலேயே விருந்து வைப்பது வழக்கமாக உள்ளது. கழித்து கட்டிய மருமகனுக்கு கழிவு ஆடி என்ற பழமொழி உள்ளது. இதனால் கடைசி ஆடியில் மருமகனை அழைத்தால் அது கவுரவ குறைச்சலாக இன்று வரை கிராமங்களில் கருதப்படுகிறது. இதனால் அவரவர் வசதிக்கேற்றபடி புதுமணத்தம்பதிகளுக்கு விருந்து அளித்து வருவது வழக்கமாக உள்ளது.

    அதன்படி ஆடி முதல் நாளான இன்று புதுமணத் தம்பதிகளுக்கு விருந்து வழங்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனால் சந்தையில் ஆட்டு இறைச்சி மற்றும் கோழி விற்பனை அமோகமாக நடைபெற்றது. வழக்கமாக பண்டிகை நாட்களில் கொண்டாடப்படுவதைப் போல ஆடியிலும் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதால் ஏராளமான ஆடுகள், கோழிகள் அறுக்கப்பட்டு விற்பனைக்கு வந்தன.

    அதிகாலை முதல் ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இதனை வாங்கிச் சென்றனர். இதே போல காய்கறிகள் விற்பனையும், ஜவுளி உள்ளிட்ட விற்பனையும் அதிகமாக நடந்ததால் பெரும்பாலான வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ×