என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "AyyappaTemple"
- சபரிமலை ஐயப்பன் கோவில் வருடம் முழுவதும் திறக்கப்படுவதில்லை.
- இந்த கோவிலில் நடக்கும் மண்டல பூஜை, மகர ஜோதி பூஜைகள் விசேஷமானவை
ஐயப்பன் அருள் பல அருள்பவன். புலியை வாகனமாகக் கொண்டவன். தவக் கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள் பாலித்துவரும் அருட்கடல்.
மகிஷி என்ற அரக்கியை வதம் செய்ய அவதரித்தவன் ஐயப்பன். ஐயப்பன் வரலாறு பற்றி கூறப்படுவதாவது:-
கேரளாவில் பந்தள மகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார் அந்த சமயத்தில் மகிஷி என்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள். அவர்களுக்கு உதவ சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவர்தான் ஐயப்பன். விஷ்ணு மோகினியாக மாற, சிவனுக்கும் மோகினிக்கும் (விஷ்ணுவுக்கும்)ஐயப்பன் பிறந்தார்.
குழந்தையாக பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்று விட்டனர் ஹரியும், விஷ்ணுவும், தெய்வ செயல்கள் அனைத்திற்குமே ஒரு காரணம் உண்டல்லவா? பக்திமானான பந்தள மகாரஜாவின் பிள்ளையில்லா குறையைத் தீர்க்கவே பரந்தாமனும், பரம்பொருளும் குழந்தையை அங்கேவிட்டுச் சென்றனர்.
வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் குழந்தையின் அழுகுரல் கேட்டான். எங்கு குழந்தை அழுகிறது என பதைபதைத்து தேடி மரத்தடியில் ஜொலிக்கும் தேஜசுடன் குழந்தை ஐயப்பனைக் கண்டான். ஆண்டாவா! என் குழந்தையில்லா குறை தீர்க்கவே இந்த குழந்தை இங்கு இருக்கிறதா என மகிழ்ந்து அந்தகுழந்தையை அரண்மனை கொண்டு சென்றான்.
அரசியும் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தாள். இருவரும் இறைவனுக்கு நன்றி செலுத்தினர். குழந்தையை கண்ட அனைவரும் சொக்கிப் போனார்கள்.ஜோதிடர்கள் இந்தக் குழந்தை தெய்வாம்சம் பொருந்திய குழந்தை எனக் கூறினர். கழுத்தில் மணியுடன் பிறந்ததால், குழந்தைக்கு மணிகண்டன் என்று பெயரிட முடிவு செய்து மணிகண்டன் என பெயரிட்டு அன்போடு பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் மகாராணிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அரசனும் அரசியும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. மணிகண்டன் வந்த நேரம் நமக்கும் குழந்தை பிறந்தது என ஆனந்தம் அடைந்தனர்.
ஆனால் எங்குமே நல் மனதைக் கெடுக்கும் புல்லுருவிகள் இருக்குமல்லவா? ஐயப்பன் உங்களுக்கு பிறந்த மகன் அல்ல. ஆனால் அவனையே தலைப்பிள்ளை போல் சீராட்டி வளர்க்கிறீர்கள். அதனால் அடுத்த மன்னனாக அவன் வரவே வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கு பிறந்த குழந்தையிருக்க வேறுயாரோ எப்படி அரசனாவது என அரசியின் மனதில் நஞ்சைக் கலந்தனர் சிலர்.
தீயபோதனைகளால் அரசியும் மனம் மாறினாள். தான் வயிற்று வலியால் அவதிப்படுவதாக பொய்யுரைத்தாள். அரசவை வைத்தியரை புலிப்பால் குடித்தால் மட்டுமே தன் வயிற்று வலி தீரும் என கூற வைத்தாள்.
ஐயப்பன் அறிய மாட்டானா உண்மையை. தாய்க்கு புலிப்பால் கொண்டு வர காடு நோக்கி புறப்பட்டான். வழியில் அரக்கி மகிஷி ஐயப்பனைத் தடுததாள். வில்லெடுத்தான் வில்லாளி வீரன். வதம் செய்தான் மகிஷியை. அவன் அவதார மகிமை பூர்த்தி பெற்றது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
இந்திரனே புலியாக மாற, மற்ற தேவர்கள் புலியாக புடை சூழ புலிமேல் ஏறி நாடு சென்றான் ஐயப்பன். புலிமேல் வந்த மணிகண்டனைக் கண்டு பதறிப் போனாள் அரசி. தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு புலிகளை திருப்பி அனுப்புமாறு வேண்டினாள். ஐயப்பனும் அவ்வாறே செய்து அருளினார்.
மேலும் தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும் தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்கு வருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் தவக் கோலத்தில் அமர்ந்தார் அருள்தரும் ஐயப்பன்.
இன்றும் நாம் ஐயப்பனை அங்கு அந்த தவக் கோலத்தில் காணலாம். ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டியிருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதற்கும் ஒருகாரணம் கூறப்படுகிறது.
ஐயப்பனைக் காண பந்தள மகாரஜா ஒரு முறை வந்த போது ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால் எழ முயன்ற போது இறைவன் தனக்கு மரியாதை செய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காக தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி அவர் தூக்கி போட்ட போது அந்த அங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்றே எழுந்திருப்பது போல் தோன்றும் எனக் கூறுகிறார்கள்.
மற்ற கோவில்கள் போல் சபரிமலை ஐயப்பன் கோவில் வருடம் முழுவதும் திறக்கப்படுவதில்லை. ஒவ்வொரு மலையாள மாதத்தின் கடைசி நாள் மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மலையாள மாதத்தின் 5-வது நாளன்று நடை சார்த்தப்படும்.
ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர ஜோதி பூஜைகள் விசேஷமானவை.
தல வரலாறு :
கொட்டாரக்கரைப் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது பணியாளர்கள் சிலருடன் ராமேஸ்வரத்திற்குப் புனிதப் பயணம் சென்று திரும்பிக் கொண்டிருந்தார். காட்டின் வழியாக வந்து கொண்டிருந்த அவர், வழியில் இருந்த கல்லடையாற்றின் கரையில் தங்கி ஓய்வெடுத்தார். அவருடன் வந்த பணியாளர்கள், அங்கே உணவு தயாரிக்கும் பணியைத் தொடங்கினர்.
நிலத்தில் புதைந்திருந்த ஒரு கல்லைப் பார்த்த பணியாளர் ஒருவர், அந்தக் கல்லுடன் மேலும் இரு கற்களை வைத்து, அந்த இடத்தில் அடுப்பு மூட்டுவதென்று முடிவு செய்தார். பின்னர் அவர், அங்கே கிடைத்த இரண்டு கற்களை எடுத்துக் கொண்டு போய் நிலத்தில் புதைந்திருந்த கல்லின் அருகில் வைத்தார். அடுப்புக்காக வைத்திருந்த மூன்று கற்களில், நிலத்தில் புதைந்திருந்த கல் மட்டும் சிறிது உயரமாக இருந்தது.
உடனே அந்தப் பணியாளர், நிலத்தில் புதைந்திருந்த கல்லை, அதைவிடப் பெரிதான ஒரு கல்லை எடுத்துக் கொண்டு வந்து உடைக்க முயன்றார். அப்போது, நிலத்தில் புதைந்திருந்த கல் உடையாமல், உடைக்கப் பயன்படுத்திய பெரிய கல் எட்டுத் துண்டுகளாக உடைந்து போனது. உடைந்து போன எட்டுத் துண்டுக் கற்களில் இருந்தும் ரத்தம் வழியத் தொடங்கியது.
அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பணியாளர், மற்ற பணியாளர்களை அழைத்து உடைந்த கற்களில் இருந்து ரத்தம் வழியும் செய்தியைச் சொன்னார். அவர்களும் அதனைக் கண்டு பயந்தனர். பின்னர் அவர்கள், தங்கள் உரிமையாளரான யாத்ரிகரிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தனர்.
அவர் உடைந்து கிடக்கும் கற்களிலிருந்து வழியும் ரத்தத்தை நிறுத்த முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. ராமேஸ்வரத்திலிருந்து தான் கொண்டு வந்திருந்த புனித நீரை உடைந்த கற்களின் மீது தெளித்தார். உடனே கற்களிலிருந்து வழிந்த ரத்தம் நின்று போனது.
அப்போது யாத்ரிகருக்கு, உடைந்து கிடப்பது சாதாரணமான கல் இல்லை என்பதும், அந்தக் கல் பரசுராமரால் நிறுவப்பட்ட தர்ம சாஸ்தா ஐயப்பன் உருவம் என்பதும் தெரிந்து மறைந்தது. அதனைத் தொடர்ந்து அவர், ஐயப்பனை நினைத்து வணங்கி, தனது பணியாளர்கள் தெரியாமல் செய்த தவறை மன்னிக்க வேண்டினார். பின்னர் அவர், தனது பணியாளர்கள் செய்த தவறுக்குப் பரிகாரமாக, அந்த இடத்தில் பாலகன் உருவில் ஐயப்பனுக்குச் சிலையமைத்துக் கோவில் கட்ட முடிவு செய்தார்.
அங்கு நடந்ததைக் கேள்விப்பட்டக் கொட்டாரக்கரை மன்னர் அவ்விடத்திற்கு வந்து, பிராமணரின் கோவில் கட்டுமானப் பணிக்குத் தேவையான நிலத்தை வழங்கிப் பொருளுதவிகளையும் செய்தார் என்று இக்கோவிலின் தல வரலாறு சொல்லப்படுகிறது.
இக்கோவில் பந்தளம் மன்னரால் கட்டப்பட்டது என்றும், இவ்விடத்தை யாத்ரிகர் கண்டறிந்து சொன்னார் என்றும் மற்றொரு வரலாற்றுத் தகவலும் தெரிவிக்கப்படுகிறது.
கோவில் அமைப்பு :
கேரளக் கட்டுமான அமைப்பில் கட்டப்பட்டிருக்கும் இக்கோவிலின் கருவறையில் ஐயப்பன் பாலகன் வடிவில் பால சாஸ்தாவாகக் காட்சி தருகிறார். இவரைக் குளத்துப்புழா பாலகன் என்றும் அழைக்கின்றனர். இக்கோவில் கருவறையில், பரசுராமர் நிறுவியதாகக் கருதப்படும் மூல சாஸ்தா சிலையின் உடைந்து போன எட்டு துண்டுகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. இக்கோவில் கருவறையின் நுழைவு வாசல் சிறுவர்கள் செல்லும் அளவிற்கான உயரத்தில் இருக்கிறது. கோவில் வளாகத்தில், நாகராஜர், யட்சி சன்னிதிகளும், சிவபெருமான், விஷ்ணு, கணபதி, பூதத்தான், மாம்பழத்துறை அம்மன் மற்றும் கருப்பசாமி சிலைகளும் நிறுவப்பட்டிருக்கின்றன.
இங்கு ஐயப்பனுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. வழிபாட்டின் போது, கருவறையில் வைக்கப்பட்டிருக்கும் மூலச் சிலையாகக் கருதப்படும் எட்டு கற்களும் ஒன்று சேர்க்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. பின்னர், அந்த எட்டு கற்களும் வழக்கமான இடத்தில் வைக்கப்பட்டு விடுகின்றன.
மலையாள நாட்காட்டியின்படி, மேஷம் (சித்திரை) மாதம் வரும் விசுப் பெருவிழா இக்கோவிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஐயப்பன் மண்டல வழிபாட்டு நாட்களில் இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.
இக்கோவிலில் விஜயதசமி நாளில் ‘வித்யாரம்பம்’ எனப்படும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்வில், பள்ளியில் புதிதாகச் சேரவிருக்கும் குழந்தைகளுக்கு எழுத்துப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பங்கேற்கும் குழந்தைகளுக்குப் பாலகனான சாஸ்தா நல்ல கல்வியைத் தருவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இங்குள்ள யட்சி அம்மன் சன்னிதி முன்பாகத் தொட்டில் கட்டி வழிபாடு செய்தால், விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. கோவில் வளாகத்திலுள்ள நாகராஜரை வழிபடுபவர்களுக்கு, நாகதோஷம் உள்ளிட்ட தோஷங்கள் நீங்கும் என்கின்றனர். கோவிலுக்கு அருகில் இருக்கும் கல்லடையாற்றில் மீன்களுக்குப் பொரி வாங்கிப் போட்டால், தீராத தோல் நோய்கள் எதுவாக இருப்பினும் நீங்கும் என்கிற நம்பிக்கையும் நிலவுகிறது.
ஐயப்பனின் ஐந்து தோற்றங்கள் :
மனித வாழ்க்கையை ஐந்து பருவங்களாக சாஸ்திரங்கள் பிரித்துச் சொல்கின்றன. பிறந்தது முதல் பதினெட்டு வயது வரையிலான குழந்தைப் பருவம், ‘பால்ய பருவம்’ எனப்படுகிறது. இந்தப் பருவத்தை விளக்கும் தோற்றத்திலான ஐயப்பன் திருத்தலமாகக் குளத்துப்புழா இருக்கிறது. பத்தொன்பது முதல் முப்பத்தைந்து வயது வரை உள்ள இளமைப் பருவம், `யவன பருவம்’ எனப்படுகிறது.
இந்தப் பருவத்தை விளக்கும் ஐயப்பன் தலமாக ஆரியங்காவு இருக்கிறது. முப்பத்தாறு முதல் ஐம்பத்தைந்து வயது வரை குடும்பத்தினருக்கான பருவம் `கிரஹஸ்த பருவம்’ எனப்படுகிறது. இப்பருவத்தை விளக்கும் ஐயப்பன் தலமாக அச்சன்கோவில் அமைந்திருக்கிறது. ஐம்பத்தொன்று முதல் எண்பத்தைந்து வயது வரையிலான துறவு நிலை `வானப்பிரஸ்தம்’ எனப்படுகிறது. இப்பருவத்தை விளக்கும் ஐயப்பன் தலமாகச் சபரிமலை இருக்கிறது. எண்பத்தாறு வயது முதலானது ‘ஏகாந்த நிலை’ எனப்படுகிறது. இதனை விளக்குவதாகக் காந்தமலை இருக்கிறது.
மீனூட்டு :
குளத்துப்புழா ஐயப்பனின் அழகில் மயங்கிய மச்சக் கன்னி ஒருத்தி, அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். ஆனால், ஐயப்பன் அவரைத் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். அதனால் அவள், ‘உங்களைப் பார்த்துக் கொண்டே இந்தப் பகுதியில் வாழும் வரத்தையாவது எனக்குத் தர வேண்டும்’ என்று ஐயப்பனிடம் வேண்டினாள். அவரும் தானிருக்கும் இடத்தின் அருகில் ஓடும் ஆற்றில் மீனாக இருக்கும்படி அருளினார். அதனைத் தொடர்ந்து, மச்சக்கன்னியும் அவள் தோழிகளும் இக்கோவிலின் அருகே சென்று கொண்டிருக்கும் கல்லடையாற்றில் மீன்களாக வாழ்ந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், இங்குள்ள மீன்களுக்குப் பொரியை உணவாக வழங்கி வேண்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இதற்கு ‘மீனூட்டு’ என்று பெயர்.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம் :
கேரள மாநிலம், திருவனந்தபுரம் நகரில் இருந்து 64 கிலோமீட்டர் தொலைவிலும், கொல்லம் நகரில் இருந்து 59 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டிலுள்ள செங்கோட்டை நகரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கிறது குளத்துப்புழா. மேற்கண்ட மூன்று ஊர்களில் இருந்தும் ஏராளமான பேருந்து வசதி கள் உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்