என் மலர்tooltip icon

    கோவில்கள்

    • மலை உச்சியில் உள்ள கோவிலின் தீர்த்தத்தை ‘அஷ்டபத்ம குளம்’ என்று அழைக்கின்றனர்.
    • இந்த ஆலயத்தில் சித்திரை முதல் தேதியில் படித்திருவிழா நடைபெறும்.

    கேரள மாநிலத்தின் எல்லையில் காணப்படும் இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ளது, பண்பொழி. இங்கு சிறிய குன்றின் மீது திருமலை குமாரசுவாமி கோவில் இருக்கிறது. தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, பண்பொழி. இங்கு அருள்பாலிக்கும் திருமலைக் குமாரசாமியைத் தரிசனம் செய்ய, 626 படிக்கட்டுகள் ஏறிச் செல்ல வேண்டும். இந்த படிக்கட்டுகளின் வழியாக மலை ஏறிச் செல்லும் வழியில், இடும்பனுக்கும், தடுவட்ட விநாயகருக்கும் தனிக் கோவில்கள் இருக்கின்றன.

    கோவிலின் வடக்கு பிரகாரத்தில் தனிக் கோவிலில் வடக்கு திசை நோக்கி காட்சியளிக்கும் தில்லைக் காளி அம்மன், இந்த தலத்தின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறாள். மலை மீது வாகனங்களில் செல்வதற்கு ஏற்றவாறு சாலை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கிய கருவறையில் மூலவர் திருமலைக்குமரன் நான்கு கரங்களுடன், மேல் வலது கரத்தில் சக்தி ஆயுதம் ஏந்தியும், மேல் இடது கரத்தில் வச்சிராயுதம் ஏந்தியும், கீழ் வலது கரத்தில் அபய முத்திரை காட்டியும், கீழ் இடது கரத்தில் சிம்ம கர்ண முத்திரை காட்டியும் அருள்பாலிக்கிறார். அதோடு முருகன் அருகில் வேலும், சேவல் கொடியும் இருக்கிறது.

    தல வரலாறு

    முன் காலத்தில் திருமலைக் கோவிலில் ஒரு வேல் மட்டுமே இருந்தது. இங்கு பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் வேலுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகளை செய்து வந்தார். ஒருநாள் நண்பகல் பூஜையை முடித்து விட்டு, ஓய்வுக்காக அங்கிருந்த புளிய மரத்தடியில் படுத்திருந்தார். அப்போது, அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், "பட்டரே! இந்த மலை எனக்குச் சொந்தமானது. நான் இங்கிருந்து சற்று தொலைவில் உள்ள கோட்டைத்திரடு என்ற இடத்தில் சிலை வடிவில் இருக்கிறேன். நீ அங்கு சென்று எறும்புகள் சாரை சாரையாக செல்லும் ஒரு குழியை தோண்டிப்பார். அதற்குள் சிலை இருக்கும். அதை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபடு" என்றார்.

    தான் கண்ட கனவு பற்றி, அப்போது பந்தளத்தை ஆட்சி செய்த அரசருக்கு, கோவில் அர்ச்சகரான பூவன்பட்டர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து மன்னனின் உத்தரவின்பேரில், குறிப்பிட்ட இடத்தில் இருந்து முருகன் சிலை எடுத்து வரப்பட்டு, இந்த மலையின் மீது பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஆலயம் எழுப்பப்பட்டதாக தல வரலாறு சொல்கிறது. மலை மீது அமையப் பெற்றுள்ள இந்த கோவிலின் முகப்பில், 16 படிகள் ஏறிச் சென்று வணங்கும் சன்னிதியில் உச்சி பிள்ளையார் அருள்புரிகிறார். இந்த பதினாறு படிகளை ஏறிச் சென்று உச்சி பிள்ளையாரை வழிபட்டால் பதினாறு பேறுகளும் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இந்தக் கோவிலில் உள்ள முருகன் சிலையின் மூக்கில் சிறிய காயம் இருப்பதாகவும், மண்ணில் புதைந்திருந்த சிலையை தோண்டி எடுத்த போது இந்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு 'மூக்கன்', 'மூக்காண்டி' என்றும், பெண் குழந்தைகளுக்கு 'மூக்கம்மாள்' என்றும் பெயர் வைக்கும் வழக்கம் உள்ளது.

    மலை உச்சியில் உள்ள கோவிலின் தீர்த்தத்தை 'அஷ்டபத்ம குளம்' என்று அழைக்கின்றனர். இந்தக் குளத்திற்கு 'பூஞ்சுனை' என்ற பெயரும் உண்டு. முன் காலத்தில் இந்த குளத்தில் குவளை என்னும் மலர், நாள் ஒன்றுக்கு ஒரே ஒரு மலர்தான் பூக்குமாம். அந்த மலரை எடுத்து, சப்த கன்னிமார்கள், இத்தல முருகப்பெருமானை வழிபாடு செய்ததாக சொல்லப்படுகிறது. எனவேதான் இந்த தீர்த்தம் 'பூஞ்சுனை' என்ற பெயரைப் பெற்றது. மேலும் தீர்த்தக் கரையில் சப்த கன்னியர் திருமேனிகள் இருப்பதும் இதை உறுதிபடுத்துகிறது. அருணகிரிநாதர், தண்டபாணி சுவாமிகள், கவிராசப்பண்டாரத்தையா ஆகியோர், இத்தல முருகனைப் பற்றி பாடல் பாடியுள்ளனர். விசாக நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயமாக இந்த திருமலை முருகன் கோவில் திகழ்கிறது.

    இந்த ஆலயத்தில் சித்திரை முதல் தேதியில் படித்திருவிழா நடைபெறும். அதேபோல் வைகாசி விசாகம், கந்த சஷ்டி, கார்த்திகையில் தெப்பம், தைப்பூசம் போன்ற திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இந்த ஆலயம், தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    செங்கோட்டையில் இருந்து வடமேற்கில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் பண்பொழி கிராமம் உள்ளது. அங்கிருந்தும் 5 கிலோமீட்டர் சென்றால்தான் மலைமீது உள்ள திருமலை குமாரசாமி கடவுளை நாம் தரிசிக்க முடியும். இத்திருக்கோவில் செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. தென்காசி மற்றும் செங்கோட்டையில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

    • உலகிலேயே மிக உயர்ந்த இடத்தில் உள்ள நன்னீர் ஏரியாகவும் இந்த மானசரோவர் ஏரி கருதப்படுகிறது.
    • இமயமலையின் மீது 6,520 அடி உயரத்தில் ‘கவுரி குண்டம்’ என்ற ஏரி இருக்கிறது.

    சிவபெருமானின் வசிப்பிடமாக கருதப்படுவது, கயிலாய மலை. இமயமலைத் தொடரில் இந்த மலை அமைந்திருக்கிறது. சீனாவின் ஒரு பகுதியாகத் திகழும் திபெத்தில் இருக்கும் இந்த மலை, சுமார் 6,638 மீட்டர் (21 ஆயிரத்து 779 அடி) உயரம் கொண்டது. இந்த மலையில் இருந்து தான் சிந்து, சட்லெஜ், சுக்ரா, பிரம்மபுத்திரா போன்ற நதிகள் உற்பத்தியாகின்றன. கயிலாய மலைக்கு யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்த பயணத்தில் கயிலை மலையைச் சுற்றிலும் ஏராளமான தெய்வீகத் தன்மை கொண்ட இடங்கள் உள்ளன. அவற்றில் சில இங்கே...

    கயிலாய மலை

    சிவபெருமான் வசிக்கும் இடமாகவும், சொர்க்கத்திற்கு இணையான பூலோக பகுதியாகவும் இதனை பக்தர்கள் கருதுகின்றனர். உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பலரும் ஆர்வத்துடன் வந்து, மரியாதையுடன் வழிபட்டுச் செல்லும் புனிதமான இடங்களில் இதற்கே முதலிடம். இந்த மலைதான், இந்து சமயத்தின் ஆன்மிகத்தை வரையறுப்பதாக அமைந்திருக்கிறது.



    மானசரோவர் ஏரி

    திபெத்தின் புனிதமான ஏரி இது. அதுமட்டுமல்ல உலகிலேயே மிக உயர்ந்த இடத்தில் உள்ள நன்னீர் ஏரியாகவும் இந்த மானசரோவர் ஏரி கருதப்படுகிறது. திபெத்தின் 'ங்காரி' மாகாணத்தில் அமைந்த இந்த ஏரி, கடல் மட்டத்தில் இருந்து 4,590 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. வட்ட வடிவில் அமைந்த மானசரோவர் ஏரியின் சுற்றளவு 88 கிலோமீட்டர் ஆகும். இந்த ஏரியை வலம் வரும்போது, சுகு, ஜெய்தி ஆகிய இரண்டு இடங்களில் கயிலை மலையின் பிம்பத்தை காணலாம்.

    எம துவாரம்

    எமதர்மராஜனின் கதவு என்று பொருள் கொண்ட இந்த இடம், கயிலாய மலை- மானசரோவர் ஏரி பயணப் பாதையில் முக்கியமான ஒரு இடமாகும். கயிலாய மலையை சுற்றி வலம் வரத் தொடங்குவதற்கு முன்பு, இந்த கதவின் வழியாகச் சென்று வர வேண்டும். இந்த வாசலைக் கடந்து செல்பவர், தன்னைச் சுற்றியுள்ள எதிா்மறை சக்திகளில் இருந்தும், முன்ஜென்ம பாவங்களில் இருந்தும் விடுவிக்கப்படுவதாக நம்பிக்கை. எமதா்மன் இந்த கதவை, தனிப்பட்ட முறையில் காவல் காப்பதாக சொல்லப்படுகிறது. எதிர்மறையான சிந்தனை கொண்ட ஒருவரால், இந்தக் கதவை கடந்து செல்வது கடினம் என்கிறாா்கள்.

    பசுபதிநாதர் கோவில்

    காத்மாண்டுவில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, இந்த ஆலயம். சிவ பெருமானுக்காக அமைந்த இந்தக் கோவில், தியோபட்டன் நகரின் மையத்தில், பாக்மதி ஆற்றின் கரையில் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டிருக்கிறது. கயிலையில் வசித்த சிவன், சில காலம் வந்து தங்கியிருந்த இடமாக இந்த இடம் பார்க்கப்படுகிறது. மான் உருவத்தில் இருந்த ஈசனின் கொம்பை திருமால் தொட்ட போது, அவை உடைந்து சிதறின. அந்த துண்டுகளை சிவலிங்கமாக இங்கே விஷ்ணு பிரதிஷ்டை செய்ததாக வரலாறு.

    கவுரி குண்டம்

    இமயமலையின் மீது 6,520 அடி உயரத்தில் 'கவுரி குண்டம்' என்ற ஏரி இருக்கிறது. கேதார்நாத் கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ள இந்த இடமும், புனித யாத்திரை தலத்தில் ஒன்று. இங்கு வெந்நீர் ஊற்றுகள் காணப்படுகின்றன. பார்வதி தேவி இந்த குண்டத்தில் குளித்தபிறகே சிவபெருமானை மணந்ததாக நம்பிக்கை நிலவுகிறது. இங்கிருந்து 13 கிலோமீட்டரில் கேதார்நாத் கோவில் இருக்கிறது. இந்த கவுரி குண்டம் நீர் நிலைக்கு, 'கருணை ஏரி' என்ற பெயரும் உள்ளது.

    • ஆன்லைன் ரேடியோ ஒலிபரப்பு சன்னிதானத்தில் இருந்து செய்யப்படும்.
    • வானொலி நிலையத்தை நடத்துவதற்கான டெண்டர் தொடர்பான அறிவிப்பு வெளியீடு.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் அடுத்தமாதம் (நவம்பர்) 16-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை தேவசம்போர்டு செய்து வருகிறது.

    பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக ஆன்லைன் ரேடியோ சேவையை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தொடங்க உள்ளது. 

    "ரேடியோ ஹரிவராசனம்" என்ற பெயரில் அந்த ஆன்லைன் ரேடியோ தொடங்கப்படுகிறது. இது 24 மணி நேரமும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யப்ப பக்தர்கள் உலகம் முழுவதும் எங்கிருந்தாலும் கேட்கக்கூடிய வகையில் இந்த ஆன்லைன் ரேடியோ தொடங்கப்படுகிறது.

    ஆன்லைன் ரேடியோ ஒலிபரப்பு சன்னிதானத்தில் இருந்து செய்யப்படும். இதில் வழிபாடுகள், பக்தி பாடல்கள், கோவில் விழாக்களின் நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் சபரிமலையின் வரலாறு பற்றிய சிறப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படும்.

    மேலும், கோவில் மற்றும் அதன் பாரம்பரியங்கள் தொடர்பான நேர்காணல்கள் மற்றும் பேச்சுகளும் ஒலிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வானொலி நிலையத்தை நடத்துவதற்கான டெண்டர் தொடர்பான அறிவிப்பை திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்டிருக்கிறது.

    • மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 14 கோபுரங்கள் உள்ளன.
    • வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோவிலில் நடைபெறுவது சிதம்பரத்தில் தான்

    திருவண்ணாமலை கோவில்: திருவண்ணாமலை சுவாமி எப்போதும் ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார்.


    மதுரை மீனாட்சியம்மன் கோவில்: வேறு எந்த கோவிலிலும் இல்லாத அளவுக்கு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 14 கோபுரங்கள் உள்ளன.

    திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில்: இந்த கோவில் கும்பகோணம் அருகே உள்ளது. இந்த கோவிலில் தயாரிக்கும் எந்த நைவேத்தியப் பண்டங்களிலும் உப்பு சேர்ப்பதில்லை.


    ராமநாத சுவாமி கோவில்: இராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோவில் ஒரு சிவன் கோவில் ஆகும். இங்கு பெருமாள் கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கப்படுகிறது. மேலும் வேறு எந்த சிவன் கோவிலிலும் இது போன்று தீர்த்தம் கொடுப்பது இல்லை.

    சிதம்பரம் நடராஜர் கோவில்: சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் மூலவரே வீதிவலம் வருவம். மேலும் இந்த கோவிலின் அதிசயம் என்னவென்றால் ஒரே இடத்தில் நின்றபடி, ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும் தரிசிக்கலாம். அதுபோல் சைவர்களுக்குரிய திருவாதிரையும், வைணவர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோவிலில் நடைபெறுவது சிதம்பரத்தில் தான்.


    தக்கலை சிவன் கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கேரளபுரத்தில் சிவபெருமான் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலின் அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் ஒன்று இருக்கிறது. ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி சக்தி அதற்கு உண்டு. இந்த சிலை சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்டது.

    திருக்கோவிலூர் கோவில்: விழுப்புரத்தில் அமைந்துள்ள இந்த கோவிலில் தான் எல்லாத் திருத்தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு காணப்படும். ஆனால் இங்கு மட்டும் தான் வலது கையில் சங்கு இருக்கும்.


    பத்ரிநாத்: இமயமலைச் சாரலில் இருக்கும் திருத்தலங்களில் ஒன்று பத்ரிநாத். இங்கு மே மாதம் முதல் வாரம் நடை திறந்து நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மூடுவார்கள். கோவிலை மூடும் போது ஒரு தீபம் ஏற்றுவர். அந்த தீபம் மீண்டும் கோவில் மீண்டும் திறக்கப்படும் வரை அதாவது, ஆறுமாதம் வரை எரிந்துகொண்டே இருக்கும்.

    சமயபுரம்: சமயபுரத்திலுள்ள ஸ்ரீமாரியம்மன் உட்கார்ந்த கோலத்தில் இருக்கும். அதுவும் மிகப் பெரிய அளவில் இருக்கும். இவ்வளவு பெரிய ரூபமுள்ள அம்பிகை வேறு எந்த கர்பகிரகத்திலும் இல்லை. இது சில மூலிகைகளால் ஆக்கப்பட்டது.


    திருநீர்குகை: இந்த குகை தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிமலையில் உள்ளது. இந்த குகையில் விபூதி அள்ள அள்ள வந்து கொண்டே இருக்கும். இதனால் தான் இந்த குகைக்கு திருநீர்குகை என்று பெயர் வந்தது. மேலும் கதிர்காமம், மருதமலை, திருநீற்று மலை, கங்கை கரையில் உள்ள திருவருணை ஆகிய திருத்தலங்களிலும் திருநீறு தானாகவே விளையும்.

    ரத்னகிரி மலை: இந்த மலையில் உள்ள முருகனுக்கு பால் கொண்டு அபிஷேகம் செய்த சிறிது நேரத்திலேயே அது தயிராக மாறிவிடும்.

    சென்னிமலை முருகன்: இம்மலையில் உள்ள முருகனுக்கு தயிர் கொண்டு அபிஷேகம் செய்யும் போது அது புளிப்பதில்லை.


    வேலப்பர் கோவில்: தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் உள்ள இந்த கோவிலில் உள்ள மூலவர் சுயம்பு மூர்த்தி. இந்தக் கோவிலின் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டேயிருக்கும்.

    ஏகாம்பரநாதர் கோவில்: காஞ்சி அமைந்துள்ள இந்த கோவிலில் அம்மன் சந்நிதி இல்லை.

    காசியில் பல்லிகள் இருந்தாலும் அவைகள் ஒலிக்காது. மேலும் இந்நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரை கருடன் பறக்காது.

    குளித்தலை, மணப்பாறை வழியில் ஐவர் மலை என்ற ரத்தினகிரி மலை உள்ளது. இம்மலையின் மேல் காகங்கள் பறக்கவே பறக்காது.

    நவக்கிரகப் பிரதிஷ்டை கோவில் வடகிழக்குப் பகுதியில்தான் அமைய வேண்டும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது.

    ஆழ்வார்குறிச்சியில் உள்ள நடராஜர் சிலை ஒரே கல்லினால் கட்டப்பட்டது. அதை தட்டினால் வெண்கல ஓசை அதிலிருந்து வரும்.

    • அழகான முன் மண்டபத்தைக் கடந்து இடதுபுறம் திரும்பியதும் அன்னையின் கருவறையைக் காணலாம்.
    • அன்னையின் தலையில் அழகிய கிரீடம்.

    திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு தெற்குப் பகுதியில் சிறுவாச்சூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது மதுர காளி அம்மன் ஆலயம். சென்னையில் இருந்து சுமார் 280 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த கிராமம்.

    அங்கு, இயற்கை எழில் கொஞ்சி விளையாடும் சூழலில் அன்னை மதுர காளியம்மன் அமர்ந்து அருளாட்சி புரிகிறாள்.

    அன்னைக்கு நான்கு கரங்கள். இடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டுக் கொண்டு அமர்ந்திருக்கிறாள். அன்னையின் காலடியில் ஒரு சிம்மம் வாலை உயர்த்திக்கொண்டு பற்கள் எல்லாம் தெரிய கர்ஜித்த நிலையில் ஒரு காலைத் தூக்கி அறையக் காத்திருக்கிறது.

    அன்னையின் தலையில் அழகிய கிரீடம். அன்னையின் முகத்தில் புன்னகை இல்லை. கண்களிலும் புன்னகையின் பிரதிபலிப்பைக் காண முடியவில்லை.

    தல புராணம் :

    ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தின் நாயகி கண்ணகி.தன் கணவனுக்கு அநியாயமாக இழைக்கப்பட்ட கொடுமையை எண்ணி வெகுண்டு புயலாக மாறினாள். மன்னனிடம் தன் கணவன் கோவலன் குற்றமற்றவன் என நிரூபித்தாள். தவறு செய்த மன்னன் இறந்தான். அவள் கோபம் குறையவில்லை. மதுரையை தன் கற்பின் வலிமையால் எரித்தாள். அப்போதும் அவள் சினம் தீரவில்லை. இந்த கண்ணகியே சிறுவாச்சூர் மதுர காளியம்மன் என கோவில் புராணம் கூறுகிறது.

    மன அமைதியை இழந்த கண்ணகி வடக்கு நோக்கி இரவு பகலாக நடக்கத் தொடங்கினாள். ஒருநாள் இரவு சிறுவாச்சூர் வந்தடைந்தாள். சிறுவாச்சூரின் வழிபாட்டு தெய்வம் செல்லியம்மன். அந்த ஊரில் இருந்த செல்லியம்மன் ஆலயத்தில் அன்றைய இரவை கழிக்க எண்ணிய கண்ணகி அந்த ஆலயத்தில் தங்கினாள். அவள் அங்கு தங்க வேண்டாம் என செல்லியம்மன் கூற, காரணம் கேட்டாள் கண்ணகி.

    தன்னை ஒரு மந்திரவாதி ஆட்டிப்படைப்பதாகவும் அவன் வரும் நேரத்தில் கண்ணகி அங்கிருந்தால் அவளுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் எனக் கூறினாள்.அந்த மந்திரவாதியை தான் கவனித்துக் கொள்வதாக உறுதியளித்த கண்ணகி, அன்று இரவு அங்கு தங்கினாள்.

    செல்லியம்மன் சொன்னபடியே இரவு பெருத்த ஆரவாரத்துடன் கோவிலின் உள்ளே நுழைந்தான் மந்திரவாதி. அவனை வதம் செய்து, செல்லியம்மனைக் காப்பாற்றினாள் கண்ணகி.

    தன்னை பெரும் துன்பத்திலிருந்து காப்பாற்றிய கண்ணகியை அதே கோவிலில் நிரந்தரமாகத் தங்கும்படி கேட்டுக் கொண்ட செல்லியம்மன் தான் அருகில் உள்ள மலையில் வசிக்கும் தன் அண்ணனான பெரியசாமி கோவிலில் போய்த் தங்கிக் கொள்வதாகக் கூறினாள்.

    சொன்னபடியே தனது கோவிலை கண்ணகியிடம் விட்டுவிட்டு மலைக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டாள் செல்லியம்மன்.

    மதுரையிலிருந்து வந்த கண்ணகியிடம் கோவிலை விட்டுச் சென்றதால் அது முதல் அந்தக் கோவில் மதுரை காளியம்மன் கோவில் என அழைக்கப்பட்டு வந்தது. பின்னர், அப்பெயர் மருவி 'மதுர காளியம்மன்' கோவில் ஆனது.

    தன்னை வேண்டுபவர்களுக்கு மதுரமான (இனிமையான) பலன்களைத் தருவதால் இந்த அம்மனுக்கு மதுர காளியம்மன் என்ற பெயர் வெகு பொருத்தமே என பக்தர்கள் கூறுகின்றனர்.

    சிறுவாச்சூருக்கு வெள்ளிக்கிழமை வந்த மதுர காளியம்மன் பக்தர்களுக்கு திங்கட்கிழமை தான் காட்சி தருகிறாள். எனவே, இந்த ஆலயம் வாரத்தில் திங்கள், வெள்ளி என இரண்டு நாட்கள் மட்டுமே திறந்திருக்கும். மற்ற நாட்களில் மதுர காளியம்மன் செல்லியம்மனுடன் தங்குவதற்காக மலைக்கு சென்றுவிடுவதாக ஐதீகம். இந்த இரு நாட்கள் தவிர ஆலய சிறப்பு திருநாட்கள், திருவிழாக் காலங்களில் ஆலயம் திறந்திருக்கும்.

    • 108 திவ்ய தேசங்களில் இது 81 வது திவ்ய தேசம்.
    • ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி சந்திர விமானத்தின் கீழ் காட்சி தருகிறார்.

    பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 81 வது திவ்ய தேசம். நவதிருப்பதிகளில் முதலாவதாகவும், நவகிரக ஸ்தலங்களில் சூரிய ஸ்தலமாகவும் இந்த ஸ்ரீ கள்ளபிரான் திருக்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி சந்திர விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். நான்கு புஜங்களுடன், கையில் தண்டத்துடன், ஆதி சேஷனைக் குடையாகக் மார்பில் மஹா லக்ஷ்மியுடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

    பிரகாரத்தில் வைகுந்தவல்லித் தாயார் சன்னதி உள்ளது. மேலும் நரசிம்மர் சன்னிதி, கோதண்ட ராமர் சன்னிதியும் உள்ளன. சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில், பௌர்ணமி நாளன்று, சூரியனின் கதிர்கள் பெருமாளின் பாதத்தில் படும்படி, இதற்கு ஏற்றாற் போல் சுவாமி சன்னதி எதிரிலுள்ள கொடி மரம், மேரு வடிவ பலிபீடம் தென்புறம் விலகியிருக்கிறது. இத்தலம் சூரிய தோஷ பரிகார ஸ்தலம் ஆகும். ஆதித்ய ஹ்ருதயம் சேவிக்க அருமையான பலன் உண்டு.

    தல வரலாறு:

    முன்பு ஒரு சமயம் சத்யலோகத்தில் பிரளயம் ஏற்பட்டது. அப்போது அயன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். அதையறிந்த கோமுகசுரன், அவரிடமிருந்து வேதங்களை அபகரித்து சென்றான். துயில் நீங்கி எழுந்த பிரம்மன் அதற்காக வருந்தி, அதனை அவனிடமிருந்து மீட்கும் பொருட்டு மகாவிஷ்ணுவைக் குறித்து தவம் செய்ய எண்ணி, தன் கையில் இருந்த தண்டத்தை ஒரு பிரம்மாச்சாரியாக மாற்றி "பூவுலகில் தாமிரபரணி நதிக்கரையில் தவம் புரிய ஒரு இடத்தை பார்த்து வா" என்று அனுப்பினார்.

    அவனும் நதியின் இரு கரையிலும் பார்த்து விட்டு இறுதியாக திருக்கோளுருக்கு அருகில் உள்ள ஜயந்திபுரிக்கு வந்தான். அங்கு ஒரு மோகினியைக் கண்டு மோகித்து அவளுடன் காலம் கழித்து நான்முகன் கட்டளையை மறந்தான்.

    இதையறிந்த சதுர்முகன் தன் கையிலிருந்த கெண்டியை ஓர் பெண்ணாக்கி " பெண்ணே! தவம் இயற்ற தாமிரபரணி நதிக்கரையில் ஒரு நல்ல இடம் பார்த்து வா" என்று அனுப்பினார். அவளும் வெகு நாள் பூவுலகில் சுற்றி சோலைகள் நிறைந்த இந்த பரமபாவனமான இடமே தவத்திற்குரியது என்று பிரம்மனிடம் தெரிவித்தாள்.

    பிரம்மனும் இங்குவந்து கடும் தவம் செய்ய, திருமால் அதற்கு இரங்கி சதுர்முகனுக்கு நேரில் காட்சி கொடுத்து, கோமுகாசுரனை முடித்து அவனிடமிருந்த வேதங்களை மீட்டு பிரம்மனிடம் அளித்தார்.

    பிரம்மனும் "அகல் விசும்பும் நிலனும் இருளார் வினைகெட செங்கோல் நடாத்துவீர்" எப்படி வைகுந்தத்திலிருந்து இங்கு எழுந்தருளி சேவை சாதித்தீரோ அவ்வண்ணமே இங்கு எப்பொழுதும் சேவை சாதித்து அடியார்களின் "செடியாய வல்வினைகளை தீர்த்து அருள் புரிய வேண்டும்" இத்திருப்பதியும் ஸ்ரீ வைகுண்டம் என்ற திருநாமத்துடன் விளங்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய, பெருமாளும் அவ்வாறே இங்கு கோயில் கொண்டார்.

    பிரம்மனும் தனது கெண்டியால் தாமிரபரணி தீர்த்தத்தை எடுத்து பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்ததாலும், நதிக்கரையில் கலசத்தை ஸ்தாபித்ததாலும், இத்தீர்த்தம் " கலச தீர்த்தம்" என்று வழங்கப்படுகின்றது. பிரம்மன் வைகுண்ட நாதருக்கு சைத்ர உற்சவம் நடத்தி பின் சத்திய லோகம் சென்றார்.

    இத்தலத்தில் காலதூஷகன் என்ற கள்வன் ஒருவன் இருந்தான். அவன் திருடச்செல்லும் போது வைகுந்த நாதரிடம், தேவா! நான் எவ்விடத்தில் திருடச்சென்றாலும் ஒருவரும் அறியாவண்ணம் திருடிவர வேண்டும்.

    அவ்வாறு திருடிய பணத்தில் பாதியை உமக்கு காணிக்கையாகத் தருவேன் என்று வணங்கிச் செல்வான். குறுகிய காலத்தில் ஏராளமான செல்வத்தை கொள்ளை அடித்தான், தான் கூறியது போலவே அதில் பாதியை பெருமாளுக்கு காணிக்கையாக்கி வந்தான்.

    ஒரு நாள் அரசன் அரண்மனையில் திருடும் போது அவனது சில சகாக்கள் அரச சேவகர்களிடம் மாட்டிக்கொண்டனர். அவர்கள் அரச தண்டனைக்கு பயந்து காலதூஷகனை காட்டிக்கொடுத்து விடுவதாக கூற அவனும் பகவானை சரணடைந்து துதி செய்ய, கருணைக் கடலான கார்முகில் வண்ணரும் வயது முதிர்ந்த வேடத்தில் வந்து அப்பா நீ அஞ்ச வேண்டாம் தஞ்சமென்றவரை ஆதரிப்பது என் கடமை என்றார்.

    பிறகு பகவான் கால்தூஷகனாக வடிவெடுத்து அரண்மனைக்கு செல்ல வழியில் திருடர்கள் இவரை நோக்கி இவனே எங்கள் தலைவன் என்று கூற சேவகர்கள் அவரை அரண்மனைக்கு அழைத்து சென்று அரசன் முன்னர் நிறுத்தினர்.

    மன்னனும் நீ யார்? நீ இருப்பது எவ்விடம்? எதற்காக அரண்மனையில் புகுந்து கொள்ளையடித்தாய்? என்று வினவினான். அது கண்ட வைகுந்தநாதனாக இருந்து சோரநாதனான, காலதூஷகனான பெருமாள் அரசே! என் பெயர் கள்ளர் பிரான், ஸ்ரீவைகுண்டம் எனது இருப்பிடம், என் பிழைப்புக்காக உன் பணம் முழுவதையும் திருடினேன். உன் குற்றத்தை நீ தெரிந்து கொள்ளவில்லை பணத்திற்கு பங்காளிகள் நால்வர். அவர்கள் தர்மம், அக்னி, திருடன், ராஜா. இவற்றில் முந்தியது தருமம், தருமம் செய்யப்படாத செல்வம் கள்வனாகிய என்னால் அபகரிக்கப்பட்டது. எனவே இனி தர்மம் செய்வாய் என்றார்.

    அது கேட்ட அரசனும் சிங்காதனத்தில் இருந்து எழுந்து நமக்கு நற்புத்தி புகட்டியவர் பகவானே என்று தீர்மானித்து வைகுந்த நாதா! கள்ளர் பிரானே! இன்று முதல் தாங்கள் சோரநாதன் (கள்ளர் பிரான்) என்ற திருநாமத்துடன் எழுந்தருளியிருத்தல் வேண்டும் என்று விண்ணப்பித்தான். அது முதல் உற்சவர் கள்ளர்பிரான் என்று வழிபடப்படுகின்றார்.

    சித்திரை பெருந்திருவிழாவின் போது நம்மாழ்வார், பொலிந்து நின்ற பெருமாளுடன் ஸ்ரீவைகுண்டம் எழுந்தருளுவார். பெருமாளை மங்களாசாசனம் செய்தபின் அன்ன வாகனத்தில் எழுந்தருளும் சடகோபருக்கு கள்ளபிரான், பொலிந்து நின்ற பிரான், வரகுண மங்கை எம் இடர் கடிவான், திருப்புளிங்குடி காய்சினவேந்தன் ஆகிய நான்கு பெருமாள்களும் கருட வாகனத்தில் சேவை சாதிக்கின்றனர்.

    • மவுன யோக நிலையில் தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் காட்சி தருகிறார்.
    • குரு தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள முன்னூர் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீ பிருஹன் நாயகி சமேத ஆடவல்லீஸ்வரர் கோவில். இக்கோவில் மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட 300-வது சிவன் கோவில் ஆகும். அதனால் தான் இந்த ஊரின் பெயரும் முன்னூர் என்று அழைக்கப்படுகிறது. முன்னூருக்கு வந்தால் முன்னேற்றம் உண்டு என்பது வாக்காக உள்ளது.

    ஆடவல்லீஸ்வரர் இந்த கோவிலில் தெற்கு திசையை நோக்கி சுயம்பு ரூபமாக லிங்க வடிவத்தில் காட்சியளிக்கிறார். இதற்கான காரணம் பசு, புற்றுகளிலே பால் சுரந்து, அந்த புற்றுகளில் இருந்து சிவபெருமான் தோன்றியதாக புராணத்தில் உள்ளது. இந்த கோவில் சுமார் 1300 ஆண்டுகள் பழமையானது என்பதை குறிப்பிடும் கல்வெட்டுகள் உள்ளது.

    இரண்டாம் குலோத்துங்க சோழனுக்கு, பார்வதி சிவனுடன் நடனமாடிய காட்சி கிடைக்கப்பெற்றதை அடுத்து இங்குள்ள சிவனுக்கு ஆடவல்லீஸ்வரர் என பெயர் வந்துள்ளது, இந்த இடம் தென் கயிலாயம் என்றும் பூஜிக்கப்படுகின்றது.

    கி.மு. 1700-ம் ஆண்டில் இருந்து 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில் இதுவாகும். 44 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இந்த கோவிலின் திருப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் ஆடவல்லீஸ்வரர், அம்பாள் ப்ருஹன்நாயகி தவிர ஆறுமுகங்களுடன் அருளும் சுப்பிரமணிய சுவாமியும் முக்கியமானவர்.

    இவர் நல்லியக்கோடான் மன்னனுக்கு போரில் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்துள்ளதாக இங்குள்ள கல்வெட்டுக் குறிப்புகள் சொல்கின்றன. இந்த ஆலயத்தில் பிரதோஷங்கள், சங்கடஹர சதுர்த்தி, மகா சிவராத்திரி, கிருத்திகை வழிபாடு என பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

     மாதந்தோறும் வரக்கூடிய பிரதோஷ தினங்களில் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்கிறார்கள். இது மட்டும் இல்லாமல் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பரிகார தலமாக மேற்கு நோக்கி இருக்கக்கூடிய குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இங்கு நெய் விளக்கேற்றி வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.

    நவக்கிரகங்களில் சுப கிரகமாகத் திகழ்பவர் பிருகஸ்பதி என்று வணங்கப்படும் குரு பகவான். இந்திரன் உள்ளிட்ட தேவர்களுக்கெல்லாம் ஆசிரியராக விளங்கும் இவர், நான்கு வேதங்களிலும் புலமை மிக்கவர். ஒழுக்கத்தினாலும், கடும் தவ வேள்விகளாலும் இவரிடம் உள்ள ஆன்ம ஒளியைக் கண்டு ஈரேழு பதினான்கு உலகத்தவரும் இவரைப் பணிந்து போற்றி வணங்கினர்.

    முக்காலத்தையும் முன்கூட்டியே அறியக்கூடிய சக்தியும் ஞானமும் பெற்றதனால் தனக்கு நிகர் எவருமே இல்லை என்ற கர்வம், குரு பகவானுக்கு சில விநாடிகள் ஏற்பட்டது. தேவர்களேயானாலும் கர்வம் கூடாது என்பது தர்மத்தின் நியதி. இதற்கு மாறாக மனம் மாசுபட்டு குரு பகவான் நடந்து கொண்டதால் தன் தவ வலிமையையும், தெய்வீக ஒளியையும் இழக்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது.

    சிறிது நேர கர்வத்தினால் தனக்கு இத்தகைய நிலை ஏற்பட்டதே என்று எண்ணி மனம் வருந்திய தேவ குரு, படைப்புக் கடவுளான பிரம்ம தேவரை வணங்கி, தான் இழந்த பலத்தை மீண்டும் பெற வழி கூறியருளுமாறு வேண்டினார்.

    குரு பகவானின் நிலை கண்டு வருந்திய பிரம்ம தேவரும் மனமிரங்கி, பூவுலகில் முன்னூற்று மங்கலம் என்று பூஜிக்கப்படும் திருத்தலம் சென்று அங்குள்ள பிரம்மதீர்த்தத்தில் நீராடி, அன்னை பார்வதி தேவியுடன் ஆனந்தத் திருநடனம் புரியும் ஆடவல்லீஸ்வரப் பெருமானைக் குறித்து தவமியற்றினால் இழந்த தவ வலிமைகளை மீண்டும் பெறலாம் என உபாயம் கூறியருளினார்.

    குருபகவான், ஆடவல்லீஸ்வரப் பெருமானைக் குறித்து நீண்ட நாட்கள் தவமியற்ற, அவரது தவவலிமையால் மனம் மகிழ்ந்த ஈசன், அன்னை பார்வதி தேவியுடன் தரிசனமளித்து குரு பகவானுக்குத் தவ பலத்தையும் ஆன்ம ஒளியையும் மீண்டும் வழங்கி அருள்புரிந்தார்.

    நவக்கிரகங்களில் முழுமையான சுபபலம் பெற்ற குரு பகவான் சர்வேஸ்வரனால் ஆட்கொள்ளப்பட்ட இத்திருத்தலம் அன்றிலிருந்து 'தென் திருக்கயிலாயம்' என்றும், 'பூவுலகின் கயிலை' என்றும் போற்றப்படுவதாக தல புராணம் சொல்கிறது. இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கும் ஈசன், தென்திசை நோக்கி எழுந்தருளியிருக்கிறார்.

    ஜாதகத்தில் 8-ம் இடமாகிய ஆயுள் ஸ்தானத்தில் தோஷம் இருப்பவர்களுக்கும், கடும் நோயினால் அவதியுறுபவர்களுக்கும், அளவற்ற இரக்கம் காட்டி அவர்களைக் காப்பாற்றவே இறைவன் தென்திசை நோக்கி எழுந்தருளியுள்ளதாக இத்தல வரலாறு தெரிவிக்கிறது.

    மேற்கு திசை நோக்கி இருக்கும் தட்சிணாமூர்த்தி சனகாதி முனிவர்களுக்கு மவுன யோக நிலையில்  இத்தலத்தில் காட்சி தந்து அருளியுள்ளார் என்று பிரம்மாண்ட புராணம் தெரிவிக்கின்றது. இதன் காரணமாகவும், தேவ குருவான பிருகஸ்பதிக்கு இழந்த தவ வலிமையை மீண்டும் அளித்து அருள்பாலித்த தலம் என்பதாலும் இறைவன் தென்திசை நோக்கி அருள்பாலிப்பதாக சொல்கிறார்கள்.

    இந்த ஆலயம் மிகச் சிறந்த ஒரு குரு தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. பொதுவாக தட்சிணாமூர்த்தியானவர், தென்திசை நோக்கிதான் வீற்றிருப்பார். ஆனால் இந்த ஆலய தட்சிணாமூர்த்தி மேற்கு திசை நோக்கி இருப்பது காணக்கிடைக்காத காட்சியாகும்.

    வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடுவதாக நம்பிக்கை உள்ளது.

    • நரசிம்மர் இடது மடியில் லட்சுமி தேவி அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார்.
    • தாயாகிய லட்சுமி, அவரை வணங்கிய நிலையில் இருக்கிறாள்.

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில். இந்த கோவில் ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இங்கு நரசிம்மர் இடது மடியில் லட்சுமி தேவியுடன் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    பெருமாளின் உக்கிரத்தை குறைக்க தாயாரை மார்கண்டேய மகரிஷி வேண்டிக் கொண்டார். அதன்படி, தாயார், பெருமாளை நோக்கி கைகூப்பி பக்தனுக்கு சாந்த மூர்த்தியாக அருள்பாலிக்கும் படி வேண்டி கொண்டார். அதன்பேரில் சாந்த மூர்த்தியாக பிரகலாத வரதனாக பெருமாள் காட்சி தந்தார். எனவே இந்த தலத்தில் தற்போதும் பக்தனுக்காக தாயார் கும்பிட்ட நிலையில் நரசிங்க பெருமாளோடு காட்சி அளித்து வருகிறார்.

    இந்த தலத்தில், நரசிம்மர் கோபம் தணிந்து மக்களுக்கு அருள்செய்ய வேண்டுமென தாயாகிய லட்சுமி, அவரை வணங்கிய நிலையில் இருக்கிறாள். நரசிம்மரின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது. இத்தலத்தில் உள்ள அனுமன் சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிப்பது சிறப்பு.

    திந்திருணி வனத்தில் இருந்த திண்டி, முண்டி, கிங்கிலி, கிலாலி என்ற அரக்கர்கள், இப்பகுதியில் தவம் செய்து வந்த முனிவர்களை கொடுமைப்படுத்தினர். அரக்கர்களிடமிருந்து தங்களை காக்க வேண்டி முனிவர்கள் திருமாலிடம் முறையிட்டனர்.

    இவர்களது வேண்டுதலை ஏற்ற பெருமாள், அரக்கர்களை அழித்து முனிவர்களை காப்பதற்காக தன்னிடமிருந்த சங்கு, சக்கரத்தை அனுமனிடம் கொடுத்து போருக்கு அனுப்பி வைத்தார்.

    அதன்படி அனுமனும் அரக்கர்களை அழித்து முனிவர்களின் வேள்வி தடையின்றி நடைபெற அருள் பாலித்தார். இதனால் இத்தலத்தில் உள்ள அனுமன் சங்கு, சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் அருள் பாலிக்கிறார்.

    கொடிமரத்தின் அருகில் நரசிம்மரை வணங்கியபடி கருடாழ்வார் உள்ளார். மூலவர் லட்சுமி நரசிங்கப்பெருமாள் அமர்ந்த கோலத்தில், தனது இடது தொடைமீது மகாலட்சுமியை அமரச் செய்துள்ளார். தாயார் கனகவல்லி தனி சன்னதியில் உள்ளார். உற்சவர் வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் உள்ளார்.

    இத்தனை அற்புதங்களை கொண்ட லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் செல்வம் பெருகும். கடன் பிரச்சினை அகலும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் தோஷம் நீங்கும். திருமணம் கைகூடும். சாந்த மூர்த்தியாக தாயாருடன் காட்சிதரும் இத்தல நரசிம்மரை புரட்டாசி சனியன்று வணங்கினால் கணவன், மனைவி இடையே உள்ள பிரச்னைகள் தீர்ந்து இணக்கம் அதிகரிக்கும்.

    திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய 3 நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், ராகுதிசை நடப்பவர்களுக்கும், ஏழரை சனியின் தாக்கத்தில் உள்ளவர்களுக்கும் இந்த கோவில் பரிகார தலமாக உள்ளது. கோவிலின் தெற்கு பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் தாயார் சன்னதியும், வடமேற்கு பகுதியில் ஆண்டாள் சன்னதியும், பின்புறத்தில் ஆஞ்சநேயர் சன்னதியும் அமைந்துள்ளது.மேலும் இந்த கோவிலில் சக்கரத்தாழ்வார், கோதண்டராமர், வேணுகோபாலர் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் தினமும் 2 கால பூஜைகள் நடந்து வருகிறது.

    • வடமாநிலத்தில் முக்கிய தலங்களில் வைஷ்ணவி தேவி தலமும் ஒன்று.
    • ஆண்டுதோறும் 8 மில்லியன் பக்தர்கள் இங்கு வருகை தருகிறார்கள்.

    வடமாநிலத்தில் வழிபடும் முக்கிய தலங்களில் வைஷ்ணவி தேவி தலமும் ஒன்று. கடல் மட்டத்தில் இருந்து 5,200 அடி உயரத்திலும், கத்ராவின் திரிகுடா மலைத்தொடரின் மேல் 1,700 மீட்டர் உயரத்திலும் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. ஜம்மு காட்ரா நகரில் இருந்து 46 கிலோமீட்டர் தொலைவில் குகைக் கோவிலாக இது அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் அருளும் வைஷ்ணவி தேவியைத் தரிசிக்க ஆண்டுதோறும் 8 மில்லியன் பக்தர்கள் இங்கு வருகை தருகிறார்கள். இது திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு அடுத்து, அதிகப்படியான எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறது.

     தல வரலாறு

    ஜஸ்துமல் என்னும் தேவி உபசாகருக்கு, வைஷ்ணவி தேவியே மகளாக பிறந்தாள். அழகும் அறிவும் கொண்டு வளர்ந்த வைஷ்ணவி தேவி, மங்கைப்பருவம் எய்தினாள். அவளது அழகில் மயங்கிய பைரவன் என்னும் அசுரன், அவளைத் துரத்தினான். அசுரனிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள ஓடிய வைஷ்ணவி தேவி, ஒரு குகையில் போய் ஒளிந்துகொண்டாள். அங்கே அவளுடைய சுய சொரூபம் சக்தி வடிவமாக வெளிப்பட்டது. இதையடுத்து அந்த அன்னையானவள், குகைக்கு வெளியே வந்து அந்த அசுரனுடன் போரிட்டு அவனைக் கொன்றாள்.

    வைஷ்ணவி தேவி, அசுரனின் தலையை வெட்டியபோது, அவன் உடல் குகையின் வாசலிலும், பைரவகாடி அருகில் உள்ள மலையில் அவனது தலையும் விழுந்தது. அந்த அசுரன் இறக்கும் தருவாயில் தன் தவறை உணர்ந்து, வைஷ்ணவி தேவியிடம் மன்னிப்பு கேட்டான். அதைக் கேட்டு மனம் இரங்கிய அன்னை, "பிற்காலத்தில் இந்தக் குகைக் கோவிலை நாடி வரும் பக்தர்களின் பாதம் பட்டு, நீ முக்தியை பெறுவாய்" என்று வரமளித்தாள்.

    இன்றும் குகை கோவிலுக்கு வரும் பக்தர்கள், திரும்பிச் செல்லும்போது, பைரவகாடிக்குச் சென்று அந்த அசுரனையும் வழிபட்டுச் செல்கிறார்கள். அன்று வைஷ்ணவி தேவி அசுரனுக்கு அஞ்சி ஒளிந் திருந்த குகையே, இன்று வைஷ்ணவி தேவி கோவிலாக விளங்குகிறது.

    இந்த ஆலயத்தில் வைஷ்ணவி தேவிக்கு சிலை வடிவம் இல்லை. அன்னை இங்கு அரூபமாக இருந்து அருள்பாலிக்கிறாள். இந்த ஆலயம் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மூன்று மாதங்கள் தவிர, மற்ற அனைத்து மாதங்களிலும் 24 மணி நேரமும் திறந்திருக்கும். இங்குள்ள கருவறையில், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி மூவரும் அருள்பாலிக்கிறார்கள்.

    இத்தலத்துக்கு வருபவர்கள் முதலில் ஜம்முவுக்கு வந்து, அங்கிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள கட்ரா என்னும் சிறிய ஊருக்குள் வரவேண்டும். அங்கு வைஷ்ணவி தேவியைத் தரிசிக்க பதிவு செய்துகொள்ள வேண்டும். குழுவாகவோ, தனி நபராகவோ நமது விவரங்களைக் கொடுத்தால் இலவச தரிசன டிக்கெட்டுகளை அங்கிருக்கும் வைஷ்ணோதேவி போர்டு வழங்குகிறது. இந்த டிக்கெட்டுகள் இருந்தால் தான் கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    மலைப்பாதையில் நடக்க இயலாதவர்கள், குதிரை அல்லது டோலி மூலமாக செல்லவும் வசதிகள் உள்ளன. பக்தர்கள் 'ஜெய் மாதா' என்ற கோஷத்துடன் மலைப்பாதையில் நடந்து சென்று வைஷ்ணவி தேவியை தரிசிக்கிறார்கள். மலைப் பாதை தொடங்கத்தில் உள்ள பாண்கங்கா என்ற நதியில் முதலில் நீராட வேண்டும்.

    இந்த நதியானது, வைஷ்ணவி தேவி தொடுத்த பாணத்தால் உருவானதாக சொல்கிறார்கள். அங்கிருந்து சரண்பாதுகா என்ற இடத்தை அடையலாம். இது வைஷ்ணவி தேவி இளைப்பாறிய இடம். மொத்தம் 12 கிலோமீட்டர் தூரம் உள்ள மலைப்பாதையில், முதல் 10 கிலோமீட்டர் தூரம் ஏற்றமாகவும், அடுத்த 2 கிலோமீட்டர் தூரம் இறக்கமாவும் அமைந்திருக்கிறது.

    இந்த 12 கிலோமீட்டர்களையும் கடக்கும்போது, பக்தர்கள் மிகுந்த களைப்பை சந்திக்க வாய்ப்பிருக்கிறது. அதற்காக வழியில் ஜூஸ், காபி கடைகளும், அவசரத்துக்கு உதவ மருந்துக் கடைகளும் இருக்கின்றன.

    செல்லும் வழியில் குகை ஒன்று உள்ளது. அந்த குகைக்குள் நுழைந்து அங்குள்ள தேவ கன்னிகை விக்கிரகத்தை தரிசித்து பின்னர் பயணத்தைத் தொடரவேண்டும். தேவியை தரிசிப்பதற்கு சுமார் 1 கிலோமீட்டருக்கு முன்பு பூஜைக்குரிய பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். குகைக் கோவிலை அடைந்தவுடன் கர்ப்பக்கிரகம் உள்ளது. அதன் உள்ளே இடதுபுறம் சரஸ்வதி தேவியும், வலது புறம் துர்க்கையும், நடுவில் மகாலட்சுமியும் உள்ளனர். இந்த மூன்று சக்திகளின் உருவமே வைஷ்ணவி தேவி என்று சொல்கிறார்கள்.

    இவ்வாலயத்தில் உள்ள வைஷ்ணவி தேவியிடம் வேண்டிய அனைத்தும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

    தேவியை தரிசித்த பின்பு பக்தர்களுக்கு பிரசாதமாக நாணயங்களைக் கொடுப்பார்கள். அதைக் கொண்டுவந்து வீட்டில் வைத்தால் எதிரிகள் பயம் விலகும். அச்சம் நீங்கும். செல்வம் நிலைக்கும் என்கிறார்கள்.

     

    • 3 நாள் வசந்தோற்சவம் நிறைவடைந்தது.
    • உற்சவர்கள் புறப்பட்டு ஏழுமலையான் கோவிலுக்கு திரும்பினர்.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாட்கள் வசந்தோற்சவம் நடந்து வந்தது. முதல் நாள் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலில் இருந்து திருச்சி வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகள் வழியாக வசந்த மண்டபத்துக்கு சென்று வசந்தோற்சவம் கண்டனர்.

    2-வது நாள் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளி நான்கு மாடவீதிகள் வழியாக வசந்த மண்டபத்துக்கு சென்று வசந்தோற்சவம் கண்டனர்.

    கடைசி நாளான நேற்று முன்தினம் உற்சவர்களான ஸ்ரீதேவி பூதேவி, மலையப்பசாமி மற்றும் சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் மற்றும் ருக்மணி, சத்தியபாமா ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் இருந்து புறப்பட்டு தனித்தனி திருச்சி வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகள் வழியாக வசந்த மண்டபத்தை அடைந்தனர்.

    அங்கு மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவர்களான சாமிகள், தாயார்களை ஒரே மேடையில் வைத்து மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகிய நறுமண திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    வசந்தோற்சவம் முடிந்ததும் வசந்த மண்டபத்தில் இருந்து உற்சவர்கள் புறப்பட்டு ஏழுமலையான் கோவிலுக்கு திரும்பினர். இதோடு 3 நாள் வசந்தோற்சவம் நிறைவடைந்தது.

    மேற்கண்ட நிகழ்ச்சியில் திருமலை பெரிய ஜீயர் சுவாமி, சின்னஜீயர் சுவாமி, தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி, தேவஸ்தான இணை அதிகாரி கவுதமி, தலைமை செய்தி மற்றும் மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி டி.ரவி, கோவில் துணை அதிகாரி லோகநாதன் மற்றும் அலுவலர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • அழகர் மலை உச்சியில் வற்றாத நூபுர கங்கை நதி ஓடுகிறது.
    • துர்வாச முனிவர் சுதபஸ் முனிவரை மண்டூகம் ஆகும்படி சாபம் விடுத்தார்.

    சித்திரை திருவிழாவையொட்டி அழகர் கோவிலில் இருந்து மதுரை நோக்கி புறப்படும் கள்ளழகர், மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை காண மட்டும் இங்கு வருவதில்லை. மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிப்பதற்காகவும் வருகிறார் என்கிறது புராண வரலாறு.

    அதாவது, அழகர் மலை உச்சியில் வற்றாத நூபுர கங்கை நதி ஓடுகிறது. இதில் ஒரு நாள் சுதபஸ் என்ற முனிவர், தண்ணீரில் மூழ்கி நீராடி மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது பிரபல முனிவரான துர்வாச முனிவர் தனது சீடர்களுடன் நூபுர கங்கைக்கு வந்தார். அவரை சுதபஸ் முனிவர் கவனிக்கவில்லை. நீண்ட நேரம் கழித்து பூஜைகளை செய்த பின்னரே, துர்வாச முனிவரை வரவேற்றார்.

    இதனால் துர்வாச முனிவர் கோபமடைந்து சுதபஸ் முனிவரை மண்டூகம் (தவளை) ஆகும்படி சாபம் விடுத்தார். அதிர்ச்சி அடைந்த சுதபஸ் முனிவர், தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார்.

    அதற்கு துர்வாச முனிவர், சித்திரை மாதம் பவுர்ணமிக்கு மறுநாள் கிருஷ்ணபட்ஷ பிரதமை திதியில் கள்ளழகராக சுந்தரராஜ பெருமாள் வந்து சாப விமோசனம் அளிப்பார் என்று கூறிவிட்டு சென்றார்.

    சாபத்தினால் தவளையாக மாறிய சுதபஸ் முனிவர், சுந்தரராஜ பெருமாளை நினைத்து தவம் இருந்தார். தவத்தினால் மனம் இறங்கிய சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் கோலத்தில் மதுரை வந்து மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கினார் என வரலாறு கூறுகிறது.

    இந்த சம்பவத்தை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வைகை ஆற்றில் அமைந்து உள்ள தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி நேற்று நடந்த நிகழ்ச்சியில் மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

     மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியில் நாரை பறக்கவிடுவது வழக்கம். இதற்காக உயிருடன் நாரையை பிடித்து வருவார்கள். இதை பல தலைமுறையாக தேனூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர்தான் செய்து வருகின்றனர். இதுகுறித்து தற்போது நாரை பிடித்து வந்த மணிமாறன் கூறியதாவது:-

    மதுரை தேனூரை சேர்ந்த எங்கள் குடும்பத்தினர்தான் பல தலைமுறையாக மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியின்போது பறக்க விடுவதற்காக நாரை பிடித்து வந்து கொடுக்கிறோம். நாரையை பிடிப்பதற்காக கடும் சிரமப்படுவோம்.

    இதற்காக நிலத்தில் விவசாயம் செய்வது போல தண்ணீர் நிரப்பி வைத்து, உழுத நிலமாக மாற்றுவோம். அங்கு இரை தேடி வரும் நாரைகளை பிடிப்போம்.

    பிடிபட்ட உடன் நாரைகள், எந்த உணவை கொடுத்தாலும் உண்ணாது. அவற்றை எச்சரிக்கையுடன் பாதுகாக்க வேண்டும். சாப விமோசன நிகழ்ச்சி முடிந்த உடன், நாங்கள்தான் நாரையை பறக்க விடுவோம். நாரை எந்த திசையை நோக்கி பறக்கிறதோ, அந்த பகுதி இந்த ஆண்டு செழிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. இந்த வேலையை தலைமுறை, தலைமுறையாக செய்வது மகிழ்ச்சியை தருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொடூரமான நோய்களில் குறிப்பிடத்தக்கது பொறாமை.
    • பொறுமையுடன் இருப்பது தான் பொறாமையை வெல்ல அருமருந்தாகும்.

    மனித இனத்தை ஆட்டிப்படைக்கும் கொடூரமான நோய்களில் குறிப்பிடத்தக்கது பொறாமை.

    பிறர் நன்றாக வாழ்ந்தால், மகிழ்ச்சியாக இருந்தால், வசதி வாய்ப்புகளோடு சுகமான வாழ்க்கையை அனுபவித்தால் அதை ஏற்றுக்கொண்டு வாழ்த்தும் மனப்பக்குவம் நம்மில் பலருக்கு இருப்பதில்லை.

    ஒருவரது நிறைவான வாழ்க்கைக்கு காரணம் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகள் என்பதை மனித மனம் ஏற்க மறுக்கிறது. அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெறும் அளவுக்கு அவரது இறையச்சம், வணக்க வழிபாடுகள், நற்சிந்தனை, நற்செயல்கள் அமைந்துள்ளதை காணத் தவறிவிடுகிறார்கள்.

    நாமும் இறையச்சத்துடன் வாழ்ந்து, நற்செயல்கள் செய்து இறைவனின் திருப்பொருத்தத்தை பெற வேண்டும் என்ற விருப்பத்தை வளர்க்க முன்வருவதில்லை. அதற்கு பதிலாக அந்த மனிதர் மேல் பொறாமை கொள்கிறார்கள். `அவருக்கு மட்டும் ஏன் இந்த சிறப்பான வாழ்வு கிடைத்துள்ளது' என்று வெறுப்பை வளர்க்கிறார்கள். வெறுப்பு பகை உணர்வை உருவாக்குகிறது.

    உலக வாழ்க்கையில் இன்று மக்களிடம் காணப்படும் போட்டி, பொறாமைகள் காரணமாகத்தான் பல்வேறு மோதல்களும், பிரச்சினைகளும், கருத்து வேறுபாடுகளும் தோன்றுகின்றன. ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது பொறாமை கொண்டால் அது அவனையே அழிக்கிறது. பொறாமை குணம் அவனது மனதில் தங்கி கோபத்தையும், குரோதத்தையும் வளர்க்கிறது. இது அவனது உடல் நலத்துக்கே தீங்காக முடிகிறது.

    பொறாமை குணம் இருக்கும் இடத்தில் அமைதியும், சாந்தியும் இருப்பதில்லை. அது மனிதனை தீய வழியில் தள்ளிவிடுகிறது. இதனால் அவன் பாவங்களை செய்யவும், தவறான வழியில் நடக்கவும் முன்வருகின்றான்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'பொறாமை கொள்வது நன்மைகள் அனைத்தையும் தின்று விடும், நெருப்பு விறகை தின்பதைப் போல'.

    ஹஜ்ரத் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், 'நாங்கள் பெருமானார் (ஸல்) அவர்களின் சபையில் அமர்ந்திருந்தோம். அப்பொழுது 'சுவர்க்கத்திற்கு தகுதியானவர் ஒருவர் வருவார்' என்று நபி அவர்கள் கூறினார்கள்.

    நாங்கள் பார்த்தோம், மதீனாவாசிகளில் ஒரு மனிதர் தொழுகைக்கு முன் தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு (ஒளூ செய்து கொண்டு) தன் தாடியில் தண்ணீர் சொட்ட தனது இரு காலணிகளையும் வலது கையில் கொண்டு வந்தார். மறுநாளும் அதே மாதிரி சொன்னார்கள். அவரே வந்தார்.

    மூன்றாம் நாளும் அவ்வாறே சொன்னார்கள். அவரே வந்தார். பெருமானார் (ஸல்) அவர்கள் அந்த அவையை விட்டு சென்ற பிறகு ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்கள் அவரை பின்தொடர்ந்து அவருடைய வீட்டிற்கே சென்று விட்டார்கள். அவரிடம் சொன்னார்கள், `நான் என் தந்தையிடம் கோபித்துக் கொண்டு வந்துள்ளேன். தங்களுடைய இல்லத்தில் தங்குவதற்கு அனுமதி தாருங்கள்' என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள் `தாராளமாக தங்கிக் கொள்ளுங்களேன்' என்றார்.

    ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்கள் மூன்று நாள் அவருடைய வீட்டில் தங்கினார்கள். அதைப் பற்றி சொல்லும் பொழுது `அவரை இரவு நேரத்தில் நான் கண்காணித்தேன். அவர் விழித்திருந்து வணக்கம் புரிவதை நான் காணவில்லை. தூக்கத்தில் புரண்டு படுக்கும் பொழுது மட்டும் அல்லாஹ்வை திக்ரு செய்வதை நான் கண்டேன். காலையில் பஜ்ரு நேரம் வந்தவுடன் பர்ளை நிறைவேற்றுகிறார். வேறு எந்த பெரிய வணக்கமும் இல்லை.

    இதை நான் குறைத்து மதிப்பிட்டுவிட்டு, நான் அவரிடம் சொன்னேன் 'எனக்கும் என் தந்தைக்கும் மத்தியில் எந்தவித கருத்து வேறுபாடுமில்லை, ஆனால் பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களை சுவனவாசி என்று கூறினார்கள்.

    தங்களிடம் என்ன தான் அமல் இருக்கின்றது என்பதை பார்ப்பதற்காகவும், அதை நான் பின்பற்றலாம் என்ற எண்ணத்திலும் வந்தேன். ஆனால் தங்களிடம் எந்த ஒரு பெரிய வணக்கத்தையும் காணவில்லை. விஷயம் அவ்வாறு இருக்க, பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களை சுவர்க்கவாசி என்று எப்படி கூறினார்கள்? என்று தெரியவில்லையே' என்று கூறிவிட்டு புறப்படலானேன்.

    பின்னால் இருந்து என்னை அவர் அழைத்தார். அப்போது அவர் சொன்னார் 'நான் யாரின் மீதும் குரோதமோ, பொறாமையோ கொள்ளமாட்டேன். யாருக்கு எதை கொடுக்க இறைவன் நாடியிருக்கிறானோ அதை அவன் கொடுக்கிறான். நாம் ஏன் பொறாமை கொள்ள வேண்டும்' என்றார்.

    உடனே அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் சொன்னார்கள், 'ஆம், இது தான் தங்களை சுவனவாசியாக ஆக்கிவிட்டது'. அவர் தான் சஃதிப்னு அபி வக்காஸ் என்ற நபித்தோழர் ஆவார்.

    இந்த சம்பவம் அடுத்தவர் மீது பொறாமை கொள்ளாமல் இருந்தாலே சுவனம் கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது.

    நபி (ஸல்) கூறினார்கள்: "பகைமை கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். புறக்கணிக்காதீர்கள். சகோதரர்களாக, அல்லாஹ்வின் அடிமைகளாக வாழுங்கள். ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்து ஒதுக்கிட வேண்டாம்." (நூல்: புகாரி)

    நம் மீது யாராவது ஒருவர் பொறாமை கொள்வாரேயானால் பொறுமையை மேற்கொள்ளவேண்டும், பழிவாங்கிவிடக் கூடாது. பொறுமையுடன் இருப்பது தான் பொறாமையை வெல்ல அருமருந்தாகும்.

    ×