search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bharat Rashtra Samithi"

    • தமிழ்நாடு TN என்றும் கர்நாடகா KA என்றும் குறியிடப்பட்டுள்ளது
    • டிஆர்எஸ் கட்சியை குறிப்பிடும் வகையில் டிஎஸ் இருந்ததாக காங்கிரஸ் கூறி வந்தது

    1963லிருந்து, அரசாங்கங்களுக்கு இடையே இந்திய மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பதிவுகளின் போது, மாநிலங்களை குறிப்பதற்கு ஆங்கில எழுத்துக்கள் இரண்டினை கொண்டு குறிக்கும் முறை வழக்கத்தில் இருந்து வருகிறது.

    எடுத்துக் காட்டாக, கர்நாடகா - கேஏ (KA), கேரளா - கேஎல் (KL), தமிழ்நாடு - டிஎன் (TN) என குறிப்பிடப்பட்டு வருகின்றன.

    2014ல் ஆந்திர பிரதேச மாநிலத்திலிருந்து தெலுங்கானா எனும் தனி மாநிலம் உருவானது. அப்போது முதல், தெலுங்கானா டிஎஸ் (TS) எனும் இரு ஆங்கில எழுத்துக்களால் குறிப்பிடப்பட்டு வந்தது.

    கடந்த 2023 நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் தெலுங்கான மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வென்றது. அக்கட்சி சார்பில் முதல்வராக ரேவந்த் ரெட்டி (54) பொறுப்பேற்று கொண்டார்.

    தெலுங்கானா சட்டசபையின் பட்ஜெட் கூட்டம், பிப்ரவரி 8 அன்று மாநில கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் உரையுடன் தொடங்க உள்ளது.

    இந்நிலையில், நேற்று ரேவந்த் ரெட்டி தலைமையிலான கேபினெட் அமைச்சரவை, தெலுங்கானாவிற்கான ஆங்கில குறியீடை "டிஎஸ்" என்பதற்கு பதில் "டிஜி" (TG) என மாற்றியிருப்பதாக அறிவித்தது.

    இனி தெலுங்கானா மாநிலம், அரசு கோப்புகளிலும், வாகனங்களின் நம்பர் பிளேட்களிலும் டிஜி என குறிப்பிடப்படும்.

    முன்னர் ஆட்சியில் இருந்த பாரத் ராஷ்டிரிய சமிதி (BRS) கட்சியின் முந்தைய பெயரான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (TRS) எனும் பெயரை குறிப்பிடும் விதமாகவே முந்தைய அரசு, "டிஎஸ்" என உருவாக்கியிருந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

    அண்டே ஸ்ரீ இயற்றிய "ஜய ஜய ஹே தெலுங்கானா" எனும் பாடலை தெலுங்கானா மாநில கீதமாக அங்கீகரித்து கேபினெட் முடிவெடுத்துள்ளது.

    • சந்திரசேகர் ராவின் ரிமோட் கண்ட்ரோல், பிரதமர் மோடியிடம் இருக்கிறது.
    • பாரதிய ராஷ்டிர சமிதி இருக்கும் கூட்டணியில் காங்கிரஸ் சேராது.

    கம்மம் :

    தெலுங்கானாவில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சி தீவிர களப்பணி ஆற்றி வருகிறது. கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    கம்மம் பகுதியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது மாநிலத்தை ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி அரசையும், முதல்-மந்திரி சந்திரசேகர் ராவையும் கடுமையாக சாடினார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    'பாரதிய ராஷ்டிர சமிதி' என்பது, 'பா.ஜனதா உறவினர் சமிதி' போலத்தான். சந்திரசேகர் ராவ், தன்னை ஒரு பேரரசராகவும், தெலுங்கானாவை தனது பேரரசாகவும் நினைத்துக்கொள்கிறார்.

    பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி எப்போதும் பா.ஜனதாவுக்கு எதிராகத்தான் நின்று இருக்கிறது. ஆனால் சந்திரசேகர் ராவின் கட்சி, பா.ஜனதாவின் பி டீமாகத்தான் உள்ளது.

    சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது கட்சித் தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அவர்களை பா.ஜனதாவுக்கு அடிபணியச் செய்துள்ளது. தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவின் ரிமோட் கண்ட்ரோல், பிரதமர் மோடியிடம் இருக்கிறது.

    சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி இருக்கும் கூட்டணியில் காங்கிரஸ் சேராது. இதை பிற எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கூறிவிட்டேன்.

    காங்கிரஸ் கட்சி சமீபத்தில் கர்நாடகத்தில் ஒரு ஊழல் மற்றும் ஏழை விரோத அரசுக்கு எதிராக வெற்றி பெற்றது. ஏழைகள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் ஆதரவுடன் நாங்கள் அவர்களை தோற்கடித்தோம்.

    இது தெலுங்கானாவிலும் நடைபெறும். மாநிலத்தின் பெரும் பணக்காரர்கள், அதிகாரம் மிக்கவர்கள் ஒருபுறம் இருக்கின்றனர். மறுபுறம் ஏழைகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்கள் எங்களுடன் இருக்கின்றனர். கர்நாடகாவில் நடந்தது இங்கேயும் நடக்கும்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    • தெலுங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
    • சந்திரசேகர் ராவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது.

    புதுடெல்லி :

    தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவ் தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற பெயரில் தொடங்கிய கட்சி, பின்னர் பாரத ராஷ்டிர சமிதி என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பாரத ராஷ்டிர சமிதி நிர்வாகிகள் 35 பேர் நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரத ராஷ்டிர சமிதி நிர்வாகிகள் 35 பேரும், தாங்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், தெலுங்கானா கம்மத்தில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுவோம். அதில் அனேகமாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொள்வார் என்று தெரிவித்தனர்.

    காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பாரத ராஷ்டிர சமிதி நிர்வாகிகளில் கம்மம் மக்களவை தொகுதி முன்னாள் எம்.பி. பொங்குலெட்டி ஸ்ரீனிவாஸ் ரெட்டியும், ஆந்திரா, தெலுங்கானா முன்னாள் மந்திரி ஜூபள்ளி கிருஷ்ணா ராவ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் அடங்குவர்.

    தெலுங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தை சுமார் 10 ஆண்டுகளாக ஆண்டுவரும் சந்திரசேகர் ராவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் ஆளுங்கட்சியில் இருந்து 35 நிர்வாகிகள் காங்கிரசுக்கு இடம்பெயர்ந்திருப்பது அக்கட்சிக்கு ஒரு புத்துணர்வை அளித்திருக்கிறது.

    • விளக்கேற்ற ஒரு தீப்பொறி போதும்.
    • எதிரிகள் சிலரால் ஜீரணிக்க முடியாமல் போகலாம்.

    ஐதராபாத் :

    தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் அமைக்கப்பட்டு உள்ள பிரமாண்ட அம்பேத்கர் சிலையை முதல்-மந்திரியும், பாரதிய ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர் ராவ் நேற்று திறந்து வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, மத்தியில் பாரதிய ராஷ்டிர சமிதி ஆட்சி அமைக்கும் என கூறினார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், 'பாரதிய ராஷ்டிர சமிதி மராட்டியத்தில் மிகப்பெரிய ஆதரவைப் பெற்றது. மேற்கு வங்காளம், பீகார் மற்றும் உத்தரபிரதேசத்திலும் இதைப்போன்ற ஆதரவை எதிர்பார்க்கிறது. நான் சில விஷயங்களைச் சொல்கிறேன். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் அடுத்த அரசு நம்முடையது.

    இதை நம் எதிரிகள் சிலரால் ஜீரணிக்க முடியாமல் போகலாம். ஆனால் விளக்கேற்ற ஒரு தீப்பொறி போதும்' என்று கூறினார். மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, தலித் பந்து திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் சந்திரசேகர் ராவ் கூறினார்.

    இந்த திட்டத்தின் கீழ், தலித் குடும்பத்தினருக்கு தொழில் தொடங்குவதற்காக ரூ.10 லட்சம் மானியமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன், திருமாவளவன் சந்திப்பு.
    • புதிய கட்சி தொடக்க விழாவில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பங்கேற்பு.

    ஐதராபாத்:

    தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவரும் தெலுங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர ராவ் தேசிய அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை தமது தலைமையின் கீழ் ஒருகிணைக்கும் நடவடிக்கையில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.

    இதற்காக இன்று பாரத ராஷ்டிரிய சமிதி என்ற புதிய தேசிய கட்சியை அவர் தொடங்கி உள்ளார். ஐதராபாத்தில் உள்ள தெலுங்கானா பவனில் நடைபெற்ற விழாவில் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர். 


    மாநில கட்சியாக இருந்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தேசிய கட்சியாக பாரத ராஷ்டிர சமிதி என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. புதிய கட்சி தொடக்கத்தையொட்டி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தொண்டர்கள் ஐதராபாத்தில் பட்டாசுகளை வெடித்தும், இளஞ் சிவப்பு நிறத்தை தூவியும் கொண்டாடினர்.


    முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர ராவ், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் அந்தந்த மாநில அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து தமது கட்சி போட்டியிடும் என்று அவர் தெரிவித்திருந்தார்.இதற்காக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதனிடையே நாட்டில் பா.ஜ.க.வை வளர்த்து விடுவதற்காகவே சந்திரசேகரராவ் புதிய கட்சியை தொடங்கியுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியை அழிக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடியின் கட்டளைப்படி சந்திரசேகர ராவ் செயல்படுவதாகவும், தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டி உள்ளார்.

    ×