search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "blacklists"

    • திருப்பூரில் 90 சதவீதம் குறு, சிறு, நடுத்தர பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களே உள்ளன.
    • ஆடைக்கான தொகை உரிய காலத்தில் வெளி மாநில வர்த்தகரிடமிருந்து கிடைப்பது அவசியமாகிறது.

    திருப்பூர் :

    உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் பலர் இணைந்து ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை தொழில்முனைவோர் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளனர்.ஆடைகளை பெற்றுக்கொண்டு தொகை கொடுக்காமல் ஏமாற்றும் வர்த்தகர் விவரங்கள் அடங்கிய கருப்பு பட்டியல் தயாரித்து தங்கள் உறுப்பினர்களுக்கு இந்த குழுவினர் பகிர்ந்துவருகின்றனர்.

    இது குறித்து இந்தக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் கூறியதாவது:-

    திருப்பூரில் 90 சதவீதம் குறு, சிறு, நடுத்தர பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களே உள்ளன. பொருளாதாரத்தின் விளிம்பில் உள்ள இந்நிறுவனங்களுக்கு தயாரித்து அனுப்பிய ஆடைக்கான தொகை உரிய காலத்தில் வெளி மாநில வர்த்தகரிடமிருந்து கிடைப்பது அவசியமாகிறது.சில வர்த்தகர்கள் பல லட்சம் ரூபாய் மதிப்பில் ஆடை தயாரித்து பெற்றுக்கொண்டு தொகை வழங்காமல் ஏமாற்றி விடுகின்றனர். திருப்பூரில் பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்துக்கான போதிய களம் இல்லை.இதை சாதகமாக பயன்படுத்தி, ஒரே வர்த்தகர் சுலபமாக அடுத்தடுத்து பல ஆடை உற்பத்தியாளர்களை ஏமாற்றி விடுகிறார். இதனால், வங்கி கடன் செலுத்த முடியாமை ஜாப்ஒர்க் கட்டணங்கள் செலுத்துவதில் சிக்கல், புதிய ஆர்டர்களை கையாளமுடியாமை என பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்குள் தள்ளப்படுகின்றன.

    சில உற்பத்தியாளர்கள் இனி நிறுவனத்தை இயக்கவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். நாளுக்குநாள் விஸ்வரூபம் எடுத்துவரும் இந்த பிரச்சினைக்கு விரைந்து முற்றுப்புள்ளி அவசியமாகிறது.தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத்தில்(சைமா) உறுப்பினராக உள்ள ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் சங்கம் சாராத உறுப்பினர்கள் இணைந்து புதிய குழுவை உருவாக்கியுள்ளோம். இதுவரை 300 பேர் உறுப்பினராக உள்ளனர்.

    இந்த குழுவில் உறுப்பினராக உள்ள ஆடை உற்பத்தியாளர்கள் அளிக்கும் விவரங்கள் மற்றும் பல்வேறு வகைகளில் மோசடி வர்த்தகர் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.அதனடிப்படையில், மோசடி வர்த்தகர் விவரங்கள் அடங்கிய கருப்பு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த பட்டியலில் இதுவரை, வெளிமாநில வர்த்தகர்கள் 60 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    greatup.in என்கிற இணையதளத்தில் இந்த கருப்பு பட்டியல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.பதிவு செய்த குழு உறுப்பினர்கள் இந்த பட்டியலை பெறமுடியும். பின்னலாடை உற்பத்தியாளர்கள், ஏமாற்று வர்த்தகர் குறித்து எளிதில் தெரிந்துகொண்டு முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு தங்களை பாதுகாத்துக்கொள்ள இந்த பட்டியல் கைகொடுக்கிறது.குழு உறுப்பினர் நிறுவனங்கள் இணைந்து நூல் உட்பட ஆடை தயாரிப்பு மூலப்பொருட்களை சீரான விலைக்கு, மொத்தமாக கொள்முதல் செய்வது, தொழில் வளர்ச்சி, தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக தொடர் கருத்தரங்குகளும் நடத்திவருகிறோம்.குழுவில் இணைய விரும்பும் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள், 88831 33396 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×