என் மலர்
நீங்கள் தேடியது "Bodi"
- தலைமறைவாக உள்ள ஜிதேந்திரகுமாரை தேடி வருகின்றனர்.
- கைப்பற்றப்பட்ட 7 லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகில் உள்ள முந்தல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சாராயம் காய்ச்சப்படுவதாக உத்தமபாளையம் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள சோதனை சாவடியில் சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு வேனை நிறுத்தி ஆய்வு செய்தனர்.
அப்போது தண்ணீர் குடிப்பதற்கு பயன்படுத்தப்படும் கேன்களில் குடிநீர் கொண்டு செல்வது போல 6 பாட்டில்களில் கள்ளச்சாராயம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் வேனை ஓட்டி வந்த கேரள மாநிலம் நெடுங்கண்டம் அருகில் உள்ள பத்துவலவு பகுதியை சேர்ந்த சுகேரியா குரியன் (வயது 52) என்பவரை கைது செய்தனர்.
இவரிடம் விசாரணை நடத்தியதில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஜிதேந்திரகுமார் என்பவரிடம் இருந்து சாராயம் காய்ச்சுவதற்கான மூலப்பொருட்களை வாங்கி கடந்த பல ஆண்டுகளாக இந்த வியாபாரம் செய்து வந்துள்ளார். காய்ச்சிய சாராயத்தை கேரளாவில் உள்ள தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார் என்று போலீசார் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுகேரியா குரியனை கைது செய்து வேனையும் கைப்பற்றினர். தலைமறைவாக உள்ள ஜிதேந்திரகுமாரை தேடி வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட 7 லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
- உரிமம் இன்றி நாட்டுத்துப்பாக்கியை கார்த்திக் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே ஒருவர் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட எஸ்.பி.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எஸ்.பி. தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையில் ஏட்டு ராம்குமார் சேதுபதி மற்றும் போலீசார் போடி புதூர் ரெயில்வே லைன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அய்யாவு மகன் கார்த்திக் (வயது 42) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
இதில் உரிமம் இன்றி நாட்டுத்துப்பாக்கியை கார்த்திக் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அவர் எதற்காக இதனை பதுக்கி வைத்திருந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பேருந்தில் பயணித்த சுமார் 16க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
- அதிர்ஷ்டவசமாக அப்போது சாலையில் மற்ற வாகனங்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மேலசொக்கநாதபுரம்:
மூணாறில் இருந்து சென்னை நோக்கி ஆம்னி பஸ் வந்தது. இதில் 16க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் போடி ரெயில்வே கேட் பகுதியில் வந்த போது திடீரென பின் பக்க டயர் வெடித்து தீ பிடித்து புகை மண்டலமாக காட்சியளித்தது.
இதைப் பார்த்ததும் டிரைவர் துரிதமாக செயல்பட்டு பஸ்சை ஓரமாக நிறுத்தினார். இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதனால் பேருந்தில் பயணித்த சுமார் 16க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதிர்ஷ்டவசமாக அப்போது சாலையில் மற்ற வாகனங்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நீண்ட தூரம் செல்லும் ஆம்னி பஸ்களை முறையாக பராமரித்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 2 ஆண்டுகளாக பரத நாட்டிய பயிற்சி பெற்றார்.
- பரத நாட்டியத்திலும் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினார்.
மேலசொக்கநாதபுரம்:
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தை சேர்ந்த சண்முகமணி-நளினி தம்பதியின் மகள் சனா (வயது11). இவர் அமெரிக்காவில் பிறந்துவளர்ந்தவர். இருந்தபோதும் தாய் தந்தையர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதால் தமிழக கலைகள் மீது சிறுமிக்கு மிகுந்த ஆர்வம் இருந்து வந்தது.
இதனால் தமிழகத்தின் பாரம்பரிய கலையான பரத நாட்டியம் கற்க ஆர்வம் கொண்டார். அதன்படி அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் போடியில் கடந்த 2 ஆண்டுகளாக பரத நாட்டிய பயிற்சி பெற்றார்.
பரதநாட்டியம் பயின்று வரும் காலகட்டத்தில் பள்ளி படிப்பு கெடாமல் இருப்பதற்காக இங்குள்ள தனியார் ஆங்கில வழி கல்வியில் 5-ம் வகுப்பு வரை பயின்று வந்தார்.
மேலும் பரத நாட்டியத்திலும் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினார். இதனையடுத்து உலக சாதனைக்காக பரத முத்திரைகள் செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
இவர் 27 வினாடிகளில் 52 பரத முத்திரைகள் செய்து காட்டி விருக்ஷா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
அவருக்கு போடி முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் சான்றுகள் மற்றும் பதக்கங்கள், கேடயங்களை வழங்கி வாழ்த்தினார்.
முற்றிலும் தமிழ் பேசத் தெரியாத நிலையில் தமிழர்களின் பாரம்பரிய நாட்டியக் கலையான பரதநாட்டியம் பயில்வதற்கு அமெரிக்காவில் இருந்து போடி வந்து பரத முத்திரைகளில் உலக சாதனை படைத்து மீண்டும் அமெரிக்கா திரும்ப செல்ல உள்ளார்.
- சுமார் 1 மணி நேரம் அதே இடத்தில் நின்றது.
- புகைப்படம் எடுத்த போதும் சேவல் அதே இடத்தில் ஒற்றைக்காலில் நின்றது.
போடி:
தேனி மாவட்டம் போடியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு சஷ்டி, கிருத்திகை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
மேலும் பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்ற நாட்களில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம்.
இக்கோவிலில் தை மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது திடீரென கோவிலுக்குள் சேவல் ஒன்று பறந்து வந்தது.
அந்த சேவல் யாரும் எதிர்பாராத வகையில் கொடிமரம் அருகே சென்றது. பின்னர் கொடிமரத்துக்கும், பலி பீடத்துக்கும் இடையே ஒற்றைக்காலில் ஏறி நின்றது. பக்தர்கள் அனைவரும் முருகப்பெருமானை கைகூப்பி வணங்குவது போல சேவல் ஒற்றைக்காலை தூக்கியபடி சுமார் 1 மணி நேரம் அதே இடத்தில் நின்றது.
இதைப் பார்த்த பக்தர்கள் பரவசமடைந்ததுடன் முருகனுக்கு அரோகரா என்று கோஷங்கள் எழுப்பினர். ஆனால் பக்தர்கள் கோஷம் எழுப்பியபோதும் தன்னை புகைப்படம் எடுத்த போதும் அதனை பொருட்படுத்தாமல் சேவல் அதே இடத்தில் ஒற்றைக்காலில் முருகப்பெருமானை வழிபடுவது போல நின்றது.
தமிழ் கடவுளான முருகனுக்கு சேவற்கொடியோன் என்ற பெயர் உண்டு. அவருடைய கொடியில் சேவல் சின்னம் இடம் பெற்றிருக்கும். இதன் காரணமாகவே தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற முருகப்பெருமானுக்கு சேவலை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.
அதன்படி பக்தர் காணிக்கையாக செலுத்திய சேவல் ஒற்றைக்காலில் நின்று கிருத்திகை நாளில் முருகப்பெருமானை மனமுருக வழிபட்ட சம்பவம் பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மேலசொக்கநாதபுரம்:
போடியை சேர்ந்தவர் தாகுல்சிங்(வயது59). இவர் டி.வி.கே.கே.நகர் பகுதியில் பஞ்சு கமிசன் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிச்சென்றுள்ளார். நள்ளிரவு சமயத்தில் உள்ளே புகுந்த மர்மநபர்கள் கடையின் பூட்டை உடைத்துள்ளனர். கல்லாவில் இருந்த ரூ.50,000த்தை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
மறுநாள் காலை தாகுல்சிங் கடைக்கு வந்து பார்த்தபோது பணம் கொள்ளைபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போடி டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கொள்ளைச்சம்பவங்கள் அரங்கேறி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து செயின்பறிப்பது, கடைகளை உடைத்து பணம் கொள்ளையடிப்பது தொடர் கதையாகி வருகிறது. எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தேனி:
போடி அருகே உள்ள புதுக்காலனி சுப்புராஜ்நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி வனிதா (வயது 40). இவருக்கும் உறவினராக காளியப்பன் (56) என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று துக்க வீட்டு நிகழ்ச்சியில் காளியப்பனும், வனிதாவும் கலந்து கொண்டனர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த காளியப்பன், அவரது மனைவி கச்சம்மாள், மகன்கள் மாரிமுத்து, தங்கபாண்டி ஆகியோர் வனிதாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து காளியப்பனை கைது செய்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் மணல் கடத்தல் மற்றும் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள், மாணவர்களை குறிவைத்து வியாபாரிகள் கஞ்சாவை விற்பனை செய்து வருகின்றனர்.
கஞ்சா கும்பலை போலீசார் கைது செய்தாலும் தொடர்ந்து விற்பனை அதிகரித்து உள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு போடி டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கீழத்தெரு பகுதியில் உள்ள வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பதாக போலீசாருக்கு தகவல் எட்டியது. போலீசார் அந்த வீட்டில் சோதனை போட்டனர். அப்போது அங்கு 2 கிலோ கஞ்சா பதுக்கி இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்.
வீட்டில் இருந்த முருகேசன், அவரது மனைவி சரசு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் தொடர்ந்து அந்த பகுதியில் கஞ்சா பதுக்கி விற்று வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
போடி:
கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி மற்றும் போடிமெட்டு, கம்பம்மெட்டு ஆகிய பகுதிகளில் அதிகளவு ஏலக்காய் விளைவிக்கப்படுகிறது. இந்த ஏலக்காய் தேனி மாவட்டம் போடி முந்தல் சாலையில் உள்ள இந்திய நறுமணப்பொருட்கள் வாரியத்தில் ஏலம் எடுக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இங்கு நடந்த ஏலத்தில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டு போட்டிபோட்டு ஏலக்காயை வாங்கினர்.
அதிகபட்சமாக ஒருகிலோ ரூ.2025-க்கு விற்பனையானது. நடுத்தரவகை ஏலக்காய் ஒரு கிலோ ரூ.1500 வரை விலைபோனது. தற்போது ஏலத்தோட்டங்களில் காய்கள் இல்லை. இதனால் வரத்து குறைந்துள்ளது.
மேலும் சில வியாபாரிகள் அதிகவிலை கிடைப்பதற்காக ஏலக்காய்களை பதுக்கி வைத்து விற்பனை செய்கின்றனர். இதனால் இருப்பு ஏலக்காய் வைத்து ஏலம் எடுப்பவர்கள் மட்டுமே விலை ஏற்றத்தால் பயன்படுகிறார்கள். விவசாயிகளுக்கு விலை கிடைப்பதில்லை.
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகே உள்ள செல்லாயிபுரத்தைச் சேர்ந்தவர் செல்லையா (வயது 28). மெக்கானிக்காக இருந்தார். அவரது மனைவி பாண்டீஸ்வரி.
கணவன் மனைவி 2 பேரும் சிலமலையில் உள்ள சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் காய்கறி வாங்க சென்றனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.
சங்கராபுரம் கூட்டுறவு வங்கி எதிரே வந்த போது சரவணன் என்பவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். கண் இமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் செல்லையா தனது மனைவி கண் முன்னே துடிதுடித்து இறந்தார்.
படுகாயமடைந்த சரவணன் போடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் குருநாதன். பால்வியாபாரி. இவரது வீடு அந்த பகுதியில் ஏ.டி.எம். எதிரே உள்ளது. சம்பவத்தன்று குருநாதன் தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று விட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் மாடி வழியாக ஏறினர். பின்னர் அங்குள்ள கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து அதில் இருந்த நகை, ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இன்று காலை குருநாதன் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 50 பவன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளைபோனதாக தெரிவித்தார்.
இது குறித்து போடி தாலுகா போலீசில் குருநாதன் புகார் செய்தார் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்க மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. இது வீட்டில் இருந்து சாலை ஓரம் நின்றது.
எனவே கொள்ளையர்கள் அந்த வழியாக தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டத்தில் இருந்து கேரள பகுதிக்கு அதிக அளவு ரேசன் அரிசி கடத்தப்படுகிறது. அரசு பஸ் எஸ்டேட் தொழிலாளர்கள், மோட்டார் சைக்கிள் மேலும் கழுதைகள் மூலமும் ரேசன் அரிசியை கடத்தி வருகின்றனர்.
உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது ரோந்து சென்று அரிசி கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்த போதும் ரேசன் அரிசி கடத்தல் குறையவில்லை. விற்பனையாளர்கள் மொத்தமாக வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனை ஒரு கும்பல் கேரளாவுக்கு கடத்தி வருகிறது.
இது குறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. கலெக்டர் உத்தரவுப்படி போடி தாசில்தார் ஆர்த்தி, போடி வட்ட வழங்கல் துறை அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் குழுவினர் பஸ் நிலைய பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
மூணாறு செல்லும் அரசு பஸ்சில் ஒரு நபர் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருந்தார். அதிகாரிகள் மற்றும் குழுவினரை பார்த்ததும் அந்த நபர் அரிசி மற்றும் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றார்.
அதிகாரிகள் அதனை சோதனையிட்ட போது கேரளாவுக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்த 200 கிலோ ரேசன் அரிசி என தெரிய வந்தது. ரேசன் மூட்டைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த அதிகாரிகள் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் அவற்றை ஒப்படைத்து தப்பி ஓடிய நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.