என் மலர்
நீங்கள் தேடியது "Cereals- Pulses"
- உணவு தானியங்களை முழுஉருவத்தோடு பார்த்தவர்கள் அரிதிலும் அரிதாகவே உள்ளனர்.
- தானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள் குறித்த அடையாளம் கூட இன்றைய இளம் தலைமுறையினருக்கு தெரியாது.
திருப்பூர்:
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு கீரைகள், காய்கறிகளுக்கு அடுத்தபடியாக தானியங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதுகுறித்து திருப்பூர் இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:-
தானியங்கள் பாரம்பரிய அரிசி வகைகளின் பயன்பாட்டால் நமது முன்னோர்கள் ஒவ்வொருவரும் 3 தலைமுறைகளை (ஒரு தலைமுறை என்பது 33 வருடம்) காணாமல் இறப்பை எய்ததில்லை. ஆனால் இன்றோ போதிய ஓய்வின்மை, தூக்கமின்மை, காலம் தவறிய உணவு, முறையற்ற உணவு பழக்கவழக்கங்களால் 2 தலைமுறைகளை கூட காண்பதே அரிதாக உள்ளது. மிக முக்கியமாக தானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள் குறித்த அடையாளம் கூட இன்றைய இளம் தலைமுறையினருக்கு தெரியாது. காசு கொடுத்தால் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோரில் பொருள் கிடைக்கிறது அவ்வளவுதான். அது மரத்தில் அல்லது செடியில் இருந்து காய்க்கிறதா? பூமிக்குள் விளைகிறதா? எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது என எதுவும் தெரியாது.உணவு தானியங்களை முழுஉருவத்தோடு பார்த்தவர்கள் அரிதிலும் அரிதாகவே உள்ளனர்.
கேழ்வரகு, கோதுமை, கம்பு, சோளம், திணை, சாமை உள்ளிட்டவை அரைக்கப்பட்டு மாவாக மட்டுமே கிடைக்கிறது.பயிறு வகைகளில் உளுந்து, துவரை, பாசிப்பயறு போன்றவை எந்திரத்தின் மூலம் உடைக்கப்பட்டதே கிடைக்கிறது. இதனால் பயிறு வகைகள் தானிய வகைகள் முழு உருவத்தை இளம் தலைமுறைகள் அறிவதிலும் அடையாளம் காண்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இளம் தலைமுறையினருக்கு தானியங்கள், பயிறு வகைகளை அடையாளப்படுத்தி அதன் மகத்துவத்தையும் மருத்துவ குணத்தையும் உணர்த்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.இல்லை என்றால் உணவில் பாரம்பரிய அரிசி வகைகளின் பயன்பாடு படிப்படியாக குறைந்து வருவது போன்று தானியங்கள் பயிறு வகைகளும் பயன்பாடும் குறைந்து விடும்.
விவசாயத்தை முழுமையாக இயற்கை முறைக்கு மாற்றுவதற்கு முழுமூச்சில் ஈடுபடுவதுடன் அதிக அளவில் தானியங்கள் பயிறு வகைகள் சாகுபடி செய்வதற்கும் முன்னுரிமை அளித்து வழிகாட்ட வேண்டும். மேலும் இளம் தலைமுறையினர் பாரம்பரிய அரிசி, தானியங்கள், பயிறு வகைகளின் முழுஉருவத்தை தெரிந்துகொள்ளும் வகையில் அவற்றின் புகைப்படங்களை பாடபுத்தகத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும். மேலும் வேளாண் துறையினர் மூலமாக அவற்றை அடையாளப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.