search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chaos"

    • பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி ரகசிய கூட்டம் நடத்தினர்.
    • ஆளும் அரசுக்கு எதிராக பேசும் நிலை ஏற்படும் எனவும் எச்சரித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    சமீபத்தில் நடந்து முடிந்து பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா அமைச்சர் நமச்சிவாயம் தோல்வி அடைந்தார். இதனால், என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆட்சி அமைந்தது முதலே நிர்வாக பதவியில் இல்லாத ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவி வழங்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், 3 ஆண்டு ஆட்சி நிறைவுற்ற நிலையிலும் இதுவரை வாரியத் தலைவர் பதவி வழங்கப்படவில்லை.

    அதோடு, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கூட தங்கள் தொகுதி களுக்கு தரப்படவில்லை என்று பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் குமுறலில் உள்ளனர்.

    இத்தகைய சூழலில் ஆளுங்கட்சியாக இருந்தும் தேர்தலில் தோல்வி அடைந்தது கூட்டணிக்குள் மனகசப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சமீபத்தில் தேர்தல் தோல்விக்கு பிறகு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி ரகசிய கூட்டம் நடத்தினர்.

    அதையடுத்து மாநிலத்தலைவர் செல்வகணபதி யிடம், தங்களுக்கு சுழற்சி முறையில் அமைச்சர் பதவி தரவேண்டும்-வாரியத்தலைவர் பதவிகளை உடன் நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இல்லாவிட்டால் சட்டமன்றத்தில் ஆளும் அரசுக்கு எதிராக பேசும் நிலை ஏற்படும் எனவும் எச்சரித்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, "முதல் அமைச்சர் ரங்கசாமி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் உணவு விருந்துக்கு அழைத்துள்ளார்" என்று அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு முதல்-அமைச்சர் அலுவலகத்திலிருந்து வந்தது.

    ஆளுங்கட்சியைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தரப்பில், தேர்தல் தோல்வியை பற்றி ஆராய்வும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பேசவும் முதல்- அமைச்சர் அழைத்து இருக்கலாம் என எண்ணினர்.

    இதனால், அங்கு கூட்டத்தில் பேச முன்கூட்டியே தயார் செய்து தீர்மானத்துடன் பல எம்.எல்.ஏ.க்கள் வந்தனர். ஆனால், தனியார் ஓட்டலுக்கு வந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் ஒட்டலில் ஏற்கெனவே தலைமைச் செயலர், கலெக்டர், அரசு அதிகாரிகளும் வந்திருந்தனர்.

    அரசு அதிகாரிகளை வைத்துக் கொண்டு அரசியல் பேச வாய்ப்பும் இல்லை என்ற சூழலில் முதல்- அமைச்சர் ஏன் அழைத்தார் என குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் அமைதியாக காத்திருந்தனர். முதல்-அமைச்சர் ரங்கசாமி சிறிது நேரத்துக்கு பிறகு வந்தார்.

    அவர் அனை வரையும் நேரடியாக உணவு சாப்பிட அழைத்து சாப்பிட தொடங்கி னார். விருந்து முடிந்து அதிகாரிகளை அனுப்பிய பிறகு முதல்-அமைச்சர் பேசுவார் என ஆளுங்கட்சியினர் நினைத்தனர். ஆனால், முதல்-அமைச்சர் ரங்கசாமி சாப்பிட்ட பிறகும் ஏதும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    இதனால் எதற்காக நம்மை விருந்து சாப்பிட அழைத்தார் என்று தெரியாமலேயே குழப்பத்தில் ஆளுங்கட்சி கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் புறப்பட்டனர். இதன் பிறகுதான் காங்கிரஸ்- தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்- அமைச்சர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடப்பட்டிருந்தது தெரியவந்தது.

    ஆனால் காங்கிரஸ்- தி.மு.க., சில சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் விருந்தில் பங்கேற்கவில்லை.

    இதுதொடர்பாக விசாரித்த போது, தேர்தலை அமைதியாக நடத்தியதற்காக முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக முதல்-அமைச்சர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

    ×