search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Metro"

    • கம்பா் தெருவில் இருந்து வரும் வாகனங்கள் ஜவஹா் சாலையை நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • ரமணா நகா் பிரதான தெருவில் இருந்து ஜவஹா் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸ் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பெரம்பூா் மாா்க்கெட் அருகே மெட்ரோ ரெயில் பணி நடைபெற உள்ளது. இப்பணி காரணமாக இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சோதனை அடிப்படையில், அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

    இதன்படி, மாதவரம் நெடுஞ்சாலை, மேல்பட்டி பொன்னப்பன் தெரு, லட்சுமி அம்மன் கோவில் தெருவில் இருந்து ஜவஹா் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதற்கு பதிலாக அந்த வாகனங்கள், சுப்பிரமணியம் தெருவில் திரும்பி வீர சாவா்க்கா் சாலை வழியாக செல்லலாம். அதேபோல, ஜவஹா் சாலையில் உள்ள மேற்குத் தெருக்களான ஆசாத் தெரு, திருவள்ளுவா் தெரு, ஜீவானந்தன் தெரு ஆகியவை மூடப்படும்.

    இந்த தெருக்களிலிருந்து வரும் வாகனங்கள் சுப்பிரமணியம் தெரு, சுபாஷ் சந்திரபோஸ் தெரு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

    கம்பா் தெருவில் இருந்து வரும் வாகனங்கள் ஜவஹா் சாலையை நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே, கம்பா் தெரு, இளங்கோ தெரு, சிதம்பரம் தெரு ஆகிய இடங்களிலிருந்து வரும் வாகனங்கள் கவுதமா் தெரு, அசோகா் தெரு வழியாக ஜவஹா் சாலை அல்லது மாதவரம் நெடுஞ்சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

    மேலும், ரமணா நகா் பிரதான தெருவில் இருந்து ஜவஹா் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக வாகனங்கள், எஸ்.எஸ்.வி.கோவில் சாலை, வீர சாவா்க்கா் தெரு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2 வழித்தடங்கள் மூலம் மெட்ரோ ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
    • மெட்ரோ ரெயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரெயில் சேவை மிகவும் கை கொடுத்து வருகிறது.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து விமான நிலையம், புறநகர் ரெயில் நிலையம், பஸ் நிலையம் போன்றவற்றை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 2 வழித்தடங்கள் மூலம் மெட்ரோ ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

    இதனால் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகிறார்கள். மெட்ரோ ரெயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், வாரதி இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோவில் ஒரு நாள் சுற்றுலா அட்டை வழங்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ரூ.100 செலுத்தி சுற்றுலா அட்டை பெற்று மெட்ரோ ரெயிலில் அளவற்ற பயணங்களை மேற்கொள்ளலாம். ஆனால் பயணிகள் ரூ.150 செலுத்தி ரூ.100 சுற்றுலா அட்டை பெற்று திருப்பி செலுத்தியவுடன் ரூ.50 வைப்பு தொகை தரப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • தற்பொழுது அடிக்கிற வெயிலில் சென்னை மெட்ரோவில் மக்கள் செல்ல அதிகம் விரும்புகின்றனர்.
    • இதுகுறித்து தற்பொழுது சென்னை மெட்ரோ நிறுவனம் அவர்களது எக்ஸ் தளத்தில் அறிக்கையை பதிவிட்டுள்ளனர்.

    சென்னை மெட்ரொ இரயில் நிறுவனம் சென்னையில் மக்களுக்கு போக்குவரத்து வசதியை 2015 ஆம் ஆண்டில் இருந்து சேவையை வழங்கி வருகிறது.

    மெட்ரோ தொடங்கிய ஆரம்பத்தில் மக்கள் மெட்ரோ சேவையை குறைவாகவே பயன்படுத்தி வந்தனர். ஆனால் நாட்கள் கடந்து செல்ல செல்ல இச்சூழல் மாறிக்கொண்டே வருகிறது. தற்பொழுது அடிக்கிற வெயிலில் சென்னை மெட்ரோவில் மக்கள் செல்ல அதிகம் விரும்புகின்றனர். பொதுமக்களுக்கு அவர்கள் செல்லும் இடத்திற்கு வேகமாகவும் டிராஃபிக்கில் சிக்காமல் செல்ல முடிகிறது.

    இதுகுறித்து தற்பொழுது சென்னை மெட்ரோ நிறுவனம் அவர்களது எக்ஸ் தளத்தில் அறிக்கையை பதிவிட்டுள்ளனர்.

    அந்த வகையில் கடந்த மாதம் சென்னை மெட்ரோ இரயில்களில் 80 லட்ச பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: 01.01.2024 முதல் 31.01.2024 வரை மொத்தம் 84,63,384 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    01.02.2024 முதல் 29.02.2024 வரை மொத்தம் 86,15,008 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    01.03.2024 முதல் 31.03.2024 வரை மொத்தம் 86,82,457 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.04.2024 முதல் 30.04.2024 வரை மொத்தம் 80,87,712 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி. இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகப்பட்சமாக கடந்த மாதம் 8 ஆம் தேதி 3.24 லட்சம் பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    தற்பொழுது சென்னை மெட்ரோ சேவை மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலும், கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரையிலான கட்டமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ்அப் ஆன்லைன் டிக்கெட் எடுக்க முடியாது.
    • சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ செயலி, பேடிஎம், சிங்கார சென்னை கார்டு, சிஎம்ஆர்எல் டிராவல் கார்டு பயன்படுத்த வலியுறுத்தல்.

    சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய கவுண்டரில் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுப்பதை தவிர்க்கும் வகையில் மெட்ரோ ரெயில் நிர்வாகம் பயணிகள் டிக்கெட்டுகள் பெற பல்வேறு ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ செயலி, பேடிஎம், சிங்கார சென்னை கார்டு, சிஎம்ஆர்எல் டிராவல் கார்டு போன்றவை மூலம் டிக்கெட் பெற்று பயணிகள் பயணம் மேற்கொள்ள முடிவும்.

    அதேபோல் வாட்ஸ்அப் சாட்பாட் (WhatsApp Chatbot) மூலமாகவும் வாட்ஸ்அப் ஆன்லைன் டிக்கெட் எடுத்து பயணம் செய்யலாம். ஆனால் தற்போது வாட்ஸ்அப் சாட்பாட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக செயல்படவில்லை என சென்னை மெட்ரோ ரெயில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் மேற்கொண்ட மற்ற வசதிகைள பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டுள்ளது. பயணிகளில் அசௌகரித்திற்கு வருந்துவதாகவும், தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டபின் அதுகுறித்து அப்டேட் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

    • நகரின் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களிலும், நிமிடங்களில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வித சிரமும் இன்றி பயணிக்க செய்யும் சேவையை மெட்ரோ ரெயில் வழங்குகிறது.
    • சென்னை மெட்ரோ ரெயில்களில் நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

    சென்னை :

    பொதுமக்களின் அதிநவீன போக்குவரத்து முறையாக அறிமுகமாகி இன்று அத்தியாவசிய போக்குவரத்து சேவையாக உருவெடுத்து இருக்கிறது சென்னை மெட்ரோ ரெயில். நகரின் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் துவங்கப்பட்டு, தற்போது நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதில் இருந்தே, மெட்ரோ ரெயில் சேவைக்கு இருக்கும் வரவேற்பை புரிந்து கொள்ள முடியும்.

    நகரின் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களிலும், நிமிடங்களில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வித சிரமும் இன்றி பயணிக்க செய்யும் சேவையை மெட்ரோ ரெயில் வழங்குகிறது. இதனால் சென்னை மெட்ரோ ரெயில்களில் நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக க்யுஆர் குறியீடு, வாட்ஸ்அப், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையான ஆன்லைன் முறைகளில் பயணச்சிட்டு விநியோகிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று காலை செயலி மற்றும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் பெறும் வசதி தடைபட்டது. இதனால் பயணிகள் மெட்ரோ ரெயில் நிலைய கவுண்டர்களில் டிக்கெட் பெற்றுக் கொண்டு பயணத்தை மேற்கொண்டனர்.

    இதையடுத்து, தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகள் செயலி மற்றும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்த நிர்வாகம் சிஎம்ஆர்எல்-ல் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாக தெரிவித்துள்ளது.

    • தற்போது உள்ள 1 மற்றும் 2-ம் கட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில் பாதைக்கு மேலே இந்த வழித்தடம் அமைகிறது.
    • அந்த பகுதியை பயணிகள் மெட்ரோ ரெயில் மூலம் கடக்கும் போது புதிய உணர்வை ஏற்படுத்தும்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயிலின் 2-வது கட்ட திட்டப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் 5-வது வழித்தடத்தில் கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் பிரமிக்க வைக்கும் உயரத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.

    தற்போது உள்ள 1 மற்றும் 2-ம் கட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில் பாதைக்கு மேலே இந்த வழித்தடம் அமைகிறது.

    இதனால் அந்த பகுதியை பயணிகள் மெட்ரோ ரெயில் மூலம் கடக்கும் போது புதிய உணர்வை ஏற்படுத்தும். இன்னும் சில ஆண்டுகளில் புதிய பாதையில் பயணிக்கும் போது நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்படும் மேம்பாலம், குறுக்காக கீழே செல்லும் மெட்ரோ ரெயில்களை பார்த்து ரசிக்க முடியும்.

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தில் இதுவரை இல்லாத உயரத்திற்கு கிண்டியில் மிக உயரமான தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மிக உயரமான தூண்களை கட்டமைக்கும் பணி சவாலாக உள்ளது எனவும் இந்த வேலையை லார்சன் அண்ட் டூப்போரா நிறுவனம் மேற்கொண்டு உள்ளது.

    இதுகுறித்து திட்ட இயக்குனர் டி.அர்ச்சுணன் கூறியதாவது:-

    விம்கோ நகர்-விமான நிலையம், சென்ட்ரல்-பரங்கிமலை மெட்ரோ ரெயில் வழித்தடத்திற்கு மேலே இந்த மேம்பாலம் அமைவது பெரும் சவாலான பணியாகும்.

    'பேலன்ஸ் கான்டிலீவர்' என்ற பொறியியல் முறையை பின்பற்றி சமச்சீர் காண்டிலீவர் முறை 2 காரணங்களுக்காக எடுக்கப்படுகிறது.


    சாலையில் அதிக போக்குவரத்து இருக்கும் போது தரையில் குறைந்த இடவசதி இருப்பதாலும் இந்த முறை செயல்படுத்தப்படுகிறது. மேலும் தூண்களை மிக உயரத்தில் கட்ட வேண்டும். இந்த முறையில் தூண்களுக்கு இடையே உள்ள தூரம் மிக அதிகம். முதல் கட்ட மெட்ரோ ரெயில் பணியில் அதே முறையை பயன்படுத்தி தூண்கள் கட்டப்பட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுபற்றி எல் அண்ட் டி திட்ட மேலாளர் கிருஷ்ண பிரபாகர் கூறியதாவது:-

    சமச்சீரான கேண்டிலீவர் கட்டுமானத்தில் கத்திப்பாரா சந்திப்பில் மேற்கொள்ளப்பட்டு பட்ரோடு மற்றும் ஆலந்தூர் இடையே கூர்மையான வளைவை உருவாக்க சிறப்பு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. 125 மீட்டர் சுற்றளவுக்கு இந்த வளைவலான பாதை அமைகிறது.

    கத்திப்பாரா மேம்பாலத்தின் அதிகபட்ச உயரம் 12 மீட்டர் என்றாலும் சென்னை மெட்ரோ ரெயிலின் தாழ்வாரம் 20 மீட்டர் உயரத்தில் செல்கிறது. தூண்கள் 30 மீட்டருக்கும் அதிகமான உயரத்துடன் இருப்பதால் கான்கிரீட் அல்லது கட்டிட இடிபாடுகள் எவர் மீதும் விழாமல் இருக்கவும் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்கவும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறோம்.

    மிக உயரமான தூண்கள் அடித்தளம் கத்திப்பாராவில் உள்ள பால்வெல்ஸ் சாலையில் உள்ளது. இது சாதாரண தூண் போல் இல்லாமல் மிகப்பெரியது.

    உயரமான தூணின் அடித்தளம் 1.5 மீட்டர் விட்டம் மற்றும் 12 பைல்கள் கொண்டதாகவும் தற்போது அடித்தளம் அமைக்கப்பட்டு விட்டதால் தூண் கட்டுவதற்கான முக்கிய பணிகள் தொடங்க உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடிவதால் பொதுமக்களிடையே நாளுக்கு நாள் மெட்ரோ ரெயிலுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
    • 119 கி.மீ. நீளத்திற்கு நடைபெற உள்ள மெட்ரோ ரெயில் பணிகள் 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விமான நிலையம் முதல் சென்ட்ரல் ரெயில் நிலையம் வரையில் ஒரு வழித்தடத்திலும், விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை மற்றொரு வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடிவதால் பொதுமக்களிடையே நாளுக்கு நாள் மெட்ரோ ரெயிலுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை 16.07 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் சிறுசேரி- கிளாம்பாக்கம், பூந்தமல்லி- பரந்தூர், கோயம்பேடு- ஆவடி ஆகிய 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன.

    கோயம்பேடு- ஆவடி மெட்ரோ சேவைக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது.

    119 கி.மீ. நீளத்திற்கு நடைபெற உள்ள மெட்ரோ ரெயில் பணிகள் 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    • போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை.
    • அண்ணாசாலையிலிருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் ரோடு x ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை ஒயிட்ஸ் சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதிகளில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    * பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பிலிருந்து ஒயிட்ஸ் சாலை x திரு.வி.க. சந்திப்பு வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

    * ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து அண்ணாசாலை நோக்கி ஒயிட்ஸ் சாலையில் வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் திரும்பி தங்களது இலக்கை அடையலாம்.

    * அண்ணாசாலையிலிருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் ரோடு x ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

    * அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஒயிட்ஸ் சாலை X திரு.வி.க. சந்திப்பில் இருந்து பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் இயக்கப்பட்டு ராயப்பேட்டை மணிக்கூண்டிற்கு சென்றடையும்.

    வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    • இந்திய மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
    • மெட்ரோ ரெயில்களில் ஒப்பிடும் போது இதுவே மிக நீளமான 'யு' கர்டர் ஸ்பான் ஆகும்.

    இந்திய மெட்ரோ ரெயில் கட்டுமானத்தில் முதன்முதலாக புதுமையான புல்லர் ஆக்சில் முறையைப் பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

    நேரு நகர் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் மேம்பட்ட கிரேன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 20 மீட்டர் உயரத்திற்கு 30 மீட்டர் யு கர்டரைக் கொண்டு செல்வதற்கும், அமைப்பதற்கும் மேம்பட்ட புல்லர் ஆக்சில் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளார்.

    இதுகுறித்து இந்திய மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் நேரு நகர் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் இந்திய மெட்ரோ திட்டங்களில், முதன்முறையாக மேம்பட்ட கிரேன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 20 மீ உயரத்திற்கு 30 மீ யு கர்டரைக் கொண்டு செல்வதற்கும், அமைப்பதற்கும் மேம்பட்ட புல்லர் ஆக்சில் அமைப்பை அறிமுகப்படுத்தி, சென்னை மெட்ரோ ரெயில் மைல்கல்லில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியுள்ளது. இத்திட்டத்திற்கான ஒப்பந்தம் லார்சன் & டூப்ரோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மற்ற மெட்ரோ ரெயில்களில் ஒப்பிடும் போது இதுவே மிக நீளமான 'யு' கர்டர் ஸ்பான் ஆகும்.

    பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த கனரக வாகனம் 12 அச்சுகளில் தலா 8 டயர்களுடன் மொத்தம் 96 டயர்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மெட்ரோ இரயில் கட்டுமானத்தில் U Girder பணிக்கு தேவையான தடையற்ற போக்குவரத்து, எடை விநியோகம் நிலைத்தன்மை மற்றும் நெகிழ்வுத்தன்மை போன்ற பணிகள் உறுதி செய்யப்படும்.

    சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் திட்ட குழுவினர் இணைந்து இந்த புல்லர் ஆக்சில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 30மீ நீளமுள்ள 185 மெட்ரிக் டன் எடை கொண்ட U-கர்டரைக் வெற்றிகரமாக நிறுவியுள்ளது.

    சென்னை மெட்ரோ இரயில் திட்டக் குழு இதுபோன்ற புதுமையான தீர்வுகளை கட்டுமான பணிகளில் பயன்படுத்துவதால், இந்திய மெட்ரோ துறையின் வரலாற்று மைல்கல் சாதனையை அடையாளப்படுத்துவது மட்டுமல்லாமல், சிக்கலான மற்றும் லட்சியத் திட்டங்களைத் துல்லியமாகவும் நிபுணத்துவத்துடனும் செயல்படுத்த பெரிதும் உதவுகிறது.

    ஒக்கியம்பேட்டை மற்றும் காரப்பாக்கம் இடையே முதல் நீளமான 'யு' கர்டர் ஸ்பான் இன்று (10.01.2024) அமைக்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரெயில்

    நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு. தி.அர்ச்சுனன், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பொது ஆலோசகர்கள் மற்றும் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த நிகழ்வின் போது உடன் இருந்தனர்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் மேம்பாலத்தை அகற்ற வேண்டியது இருக்கும்
    • விம்கோ நகர் நிலையத்திற்கு மேலே 20 அடுக்கு மாடி கட்டிடம் மற்றும் 4 அடுக்கு கார் பார்க்கிங் கட்ட திட்டம்

    சென்னை:

    சென்னையில் உள்ள போக்குவரத்துகளில் மெட்ரோ ரெயில் சேவை மிக முக்கியமானது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வருகின்றனர்.

    தற்போது 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மெட்ரோ ரெயில் சேவையை விரிவாக்கம் செய்யும் திட்டங்களும் தீட்டப்பட்டு அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

    அந்த வகையில் வெளிநாடுகளில் இருப்பது போன்று அடுக்குமாடி கட்டிடங்கள் வழியாக மெட்ரோ ரெயில்கள் செல்லும் வகையில் சென்னை திருமங்கலம் பகுதியில் 12 மாடி கட்டிடம் வழியாக மெட்ரோ ரெயில்கள் செல்லும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், கட்டிடங்கள், மக்கள், செயல்பாடுகள் மற்றும் பொது போக்குவரத்தை ஒன்றாக கொண்டுவருவதற்காக மெட்ரோ நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்தும் வகையில் போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டு திட்டங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.

    3 இடங்களில் நிலையங்களை கட்டுவதற்கான செலவு 2-ம் கட்ட திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. இதற்காக மாநில அரசிடம் நிதி கோருவோம் என்றார்.


    இந்த திட்டத்திற்காக திருமங்கலத்தில், மேம்பாலம் அருகே முன்பு 3 வீடுகள் இருந்த 450 மீட்டர் நீளமுள்ள நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. திருமங்கலத்தில் உள்ள மேம்பாலத்திற்கு மேல் மெட்ரோ ரெயில் நிலையத்துடன் ஒருங்கிணைந்த நடைபாதையை உருவாக்க வேண்டியுள்ளது. ஆனால் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் மேம்பாலத்தை அகற்ற வேண்டியது இருக்கும் என்றார். மேலும், கோயம்பேடு மெட்ரோ நிலையத்தை 2-ம் கட்டமாக விரிவாக்கம் செய்யவும், ஆவடிக்கு 3-வது வழித்தடத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டு 3 வழித்தடங்களையும் இணைக்கும் பொதுவான பாதை அமைக்கப்படும்.திருமயிலையில் குறைந்தபட்சம் 5 இடங்களில் உள்நுழைவு பகுதி அல்லது வெளியேறும் இடங்களில் ஒன்று புதிய பல மாடி கட்டிடத்தில் இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    விம்கோ நகர் நிலையத்திற்கு மேலே 20 அடுக்கு மாடி கட்டிடம் மற்றும் 4 அடுக்கு கார் பார்க்கிங் ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோன்ற வசதிகள் பல இடங்களில் உள்ளன.

    சீனாவில் சோங்கிங் பகுதியில் 19 மாடி குடியிருப்பு வளாகத்தில் 6-வது மாடியில் மெட்ரோ நிலையம் உள்ளது. இந்தியாவிலும் கூட, நாக்பூரில் உள்ள ஜீரோ மைல் மெட்ரோ நிலையத்திற்கு மேலே 15 அடுக்கு நட்சத்திர ஓட்டல் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இது 3 மாடி வாகன நிறுத்தும் இடத்திற்கு மேலே கட்டப்பட்டுள்ளது. எப்போதும் ரெயில்கள் முழுவதுமாக ஓடினாலும் இயக்க செலவு மற்றும் கடனை திருப்பி செலுத்துவதற்கு வெறும் டிக்கெட் வருவாயை கொண்டு சமாளிக்க முடியாது. எனவே, விளம்பரங்கள் வைப்பது, மெட்ரோ நிலையங்களில் சில்லறை விற்பனை நிலையங்களை அனுமதிப்பது மற்றும் சொத்துக்களை உருவாக்குவது போன்றவையே அதிக வருவாயை ஈட்டுவதற்கு ஒரே வழி என கூறப்பட்டுள்ளது. 

    • 43 சுரங்கப்பாதை ரெயில் நிலையங்கள் என மொத்தம் 119 மெட்ரோ ரெயில் நிலையங்கள் வருகின்றன.
    • அடையாறு ஆற்றை கடந்து, அடையாறு சந்திப்பு நிலையத்துக்கு சென்றடைய உள்ளது.

    திருவான்மியூர்:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி மாதவரம் பால்பண்ணை -சிறுசேரி சிப்காட் வரையும் (45.4கி.மீட்டர்), கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி பணிமனை வரையும் (26.1கி.மீட்டர்), மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையும் (44.6கி.மீட்டர்) என மொத்தம் 116.1 கி.மீட்டர் தூர நீளத்திற்கு 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது.

    இதில் மொத்தம் 76 உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள், 43 சுரங்கப்பாதை ரெயில் நிலையங்கள் என மொத்தம் 119 மெட்ரோ ரெயில் நிலையங்கள் வருகின்றன. 73.5 கி.மீட்டர் தூரத்துக்கு உயர் மட்ட பாதையும், 42.6 கி.மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதையும் அமைக்கப்படுகிறது. இதில் மாதவரம் பால்பண்ணை-சிறுசேரி சிப்காட் வரை உள்ள வழித்தடத்தில் 28 சுரங்கப்பாதை ரெயில் நிலையங்களும், 19 உயர்நிலை ரெயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. இந்த வழித்தடத்தில் பசுமை வழிச்சாலை பகுதியில் 1.2 கி.மீ., துாரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி, கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. முதல் சுரங்கம் தோண்டும் எந்திரமான 'காவேரி' சுரங்கப் பாதை அமைத்து திரு.வி.க., பாலம் அருகே அடையாறு ஆற்றை கடந்து, அடையாறு சந்திப்பு நிலையத்துக்கு சென்றடைய உள்ளது.

    முதல் சுரங்கம் தோண்டும் எந்திரம் மூலம் இதுவரை 560 மீட்டர் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி முடிந்து உள்ளன. 2-வது எந்திரம் மூலம் 200 மீட்டருக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் பருவ மழை, வெள்ளம் உள்ளிட்டவற்றால் தாமதமாகி வந்த அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி அடுத்த வாரத்தில் தொடங்க உள்ளது. அடையாறு ஆற்றின் கீழ் 70 அடி ஆழத்தில், சுரங்கப்பாதை பணி அமைக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து மெட்ரோ நிறுவன அதிகாரி ஒருவர் கூறும்போது. அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி அடுத்த மாதம் (ஜனவரி) முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான, ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

    • சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் தொடங்கியதில் இருந்து இதுநாள் வரை சுமார் 24 கோடி பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
    • பயணிகளின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், பயணிகளை ஊக்குவிக்கவும் வழங்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், தற்போது 54.6 கி.மீ. நீளத்தில், நீல வழித்தடத்தில் விமான நிலையம் மெட்ரோ முதல் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ வரை மற்றும் பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை மெட்ரோ ரெயில் சேவைகளை வழங்கி வருகிறது. சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் தொடங்கியதில் இருந்து இதுநாள் வரை சுமார் 24 கோடி பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    இந்நிலையில், சென்னை மெட்ரோ ரெயில்களில் சிங்கார சென்னை அட்டைகளை பயன்படுத்தி பயணம் செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், 15.12.2023 முதல் 15.03.2024 வரை 3 மாதங்கள் என ஒவ்வொரு மாதமும் அதிகமாக பயணம் செய்யும் முதல் 40 பயணிகளை தேர்வு செய்து அவர்களுக்கு பரிசு பொருள் வழங்கப்படும்.

    * முதல் மாதம் 15.12.2023 முதல் 14.01.2024 வரை

    * இரண்டாவது மாதம் 15.01.2024 முதல் 14.02.2024 வரை

    * மூன்றாவது மாதம் 15.02.2024 முதல் 15.03.2024 வரை

    இதில் தேர்ந்தெடுக்கப்படும் பயணிகளுக்கு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி உடன் இணைந்து பரிசு பொருள்களை வழங்கும்.

    பயணிகளின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், பயணிகளை ஊக்குவிக்கவும் இவை வழங்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மெட்ரோ பயணிகள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×