search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "children education"

    சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் இளம் மாணவர்கள் வரை பலரும் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்றே கூறிவிடலாம். அதனால் அவர்களை அறியாமலே படிப்பில் ஈடுபாடு குறைகிறது.
    முன்பு தொலைக்காட்சிகள் மாணவர்கள் மற்றும் இல்லத்தரசிகளின் நேரத்தை விரயமாக்கும் சாதனமாக இருந்தது. அதனால் தொலைக்காட்சிப் பெட்டிக்கு “முட்டாள் பெட்டி” என்ற பெயருண்டு. அந்த அளவுக்கு நம்மை சிந்திக்கவிடாமல் கட்டிப்போடக் கூடியதாக இருந்தது தொலைக்காட்சிகள்.

    இன்று தொலைக்காட்சிகளின் இடத்தை ஸ்மார்ட்போன்கள் பிடித்துக் கொண்டன. சொல்லப்போனால் தொலைக்காட்சிகளைவிட நவீனமாக நம்மை கட்டிப் போட்டிருக்கின்றன ஸ்மார்ட்போன்கள். குறிப்பாக சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் இளம் மாணவர்கள் வரை பலரும் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்றே கூறிவிடலாம்.

    அதனால் அவர்களை அறியாமலே படிப்பில் ஈடுபாடு குறைகிறது. இதை கண்டித்தால் பெற்றோரின் மீது வெறுப்பு காட்டுகிறார்கள் மாணவர்கள். கட்டுப்பாட்டை மீறி ரகசியமாக செல்போன் பயன்படுத்தத் தொடங்கிவிடுகிறார்கள் பலர்.

    ஸ்மார்ட்போன்களை கல்விக்கு உகந்த வகையில் பயன்படுத்த முடியும். ஆனால் சமூக வலைத்தளங்களில் உலவுதல், விளையாட்டு அப்ளிகேசன்களில் மூழ்குதல், இசை கேட்டல் என பலவிதங்களிலும் நேரத்தை வீணாக்கிவிடுகிறார்கள். மனம் அதற்கு அடிமையாகிவிடுவதால் வகுப்பில் ஒருமுகத்துடன் பாடங்களை கவனிக்க முடிவதில்லை. எப்போது வகுப்பு முடியும் என்ற ஏக்கமும், மன உளைச்சலும் தொற்றிக் கொள்கிறது. சமூக வலைத்தளங்களில் யார், என்ன பதிவிட்டார்களோ? என ஏங்கத் தொடங்கிவிடுகிறது மனம்.



    ஏறத்தாழ போன் அடிமையாகிவிட்ட இந்த மனநிலை வாழ்க்கையில் பலவிதங்களில் எதிரொலிக்கும். பெற்றோர் மீதும், ஆசிரியர் மீதும் வெறுப்பு வரும். வலைத்தளங்களில் தம்மை ஆதரிக்காதவர்கள் மீதும் வெறுப்பு ஏற்படும். இன்னும் நிறைய ஆதரவை பெற வேண்டும் என்ற ஏக்கமும் அதிகரிக்கும். இது தீவிர மனஅழுத்த பாதிப்பில் தள்ளிவிடும். இரவில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதால் தூக்கமும் கெடுகிறது. மொத்தத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு கல்வியையும், சுமுகமான வாழ்க்கை முறையையும் முற்றிலும் பாதிக்கிறது.

    இதில் இருந்து மீண்டு வருவது மிக கடினமான ஒன்றாகும். அதிக மன உறுதி கொண்ட வெகுசிலரே ஸ்மார்ட்போன் பயன்பாட்டை குறைத்து நல்வழிக்குத் திரும்புகிறார்கள். பலர் சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்திற்கு சிகிச்சை பெறும் இளையதலைமுறையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    பெற்றோர் ஸ்மார்ட்போன்களை படிக்கும் குழந்தைகளிடமும், இளைஞர்களிடமும் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் அளவுடன் ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டும். சிறிது நேர பயன்பாட்டிற்குப் பிறகு போனை அணைத்துவிட்டு, படிப்பு மற்றும் இதர பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

    புத்தகம் வாசிப்பது, இசையை ரசிப்பது, வெளியில் விளையாடச் செல்வது, தியானம் செய்வது, கலைப் பணியில் ஈடுபடுவது, செய்முறை பயிற்சிகளில் தங்களை ஈடுபடுத்துவது போன்ற பயிற்சிகளால் மனதை ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கலாம். இளமைப் பருவம் கல்விக்கானது என்பதை உணர்ந்தால் மற்றவற்றின் மீதான மோகத்தை குறைத்து வெற்றிபெற உங்களால் முடியும்! 
    ×