search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "civilians train picket protest"

    விழுப்புரம் அருகே மூடிக்கிடக்கும் ரெயில்வே கேட்டை திறக்கக்கோரி பொதுமக்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே கொத்தமங்கலம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    விழுப்புரம்-காட்பாடி செல்லும் பயணிகள் ரெயில் கொத்தமங்கலம் கிராமத்தின் வழியாக செல்கிறது.

    தற்போது அந்த கிராமத்தில் ரெயில்வே பாலம் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் வசிப்பவர்கள் சுமார் ½ கிலோ மீட்டர் தூரம் சுற்றிசென்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் கடைகளுக்கு சென்று வருகின்றனர்.

    இந்த பகுதியில் மழை பெய்ததால் அந்த பகுதியில் உள்ள பாதை சேறு, சகதியுடன் காட்சியளிக்கிறது. இதனால் கொத்தமங்கலம் கிராமத்து மக்கள் அந்த வழியில் செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.

    இந்தநிலையில் கொத்தமங்கலம் பகுதியில் ரெயில்வே பாலம் கட்டும் இடத்திற்கு அருகில் ஆளில்லா ரெயில்வே கேட் ஒன்று உள்ளது. அந்த கேட் மூடப்பட்டுள்ளது.

    பாலம் கட்டும் பணி முடிவடையும் வரை அந்த ரெயில்வே கேட் திறந்துவிட்டால் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு உரிய நேரத்தில் செல்லமுடியும்.

    ரெயில்வேகேட்டை திறக்கக்கோரி ரெயில்வே துறை அதிகாரிகளிடம் கொத்தமங்கலம் பகுதி மக்கள் மனு கொடுத்து வந்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கொத்தமங்கலத்தில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தின் அருகே திரண்டனர்.

    பின்னர் காட்பாடியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த பயணிகள் ரெயிலை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்கே பொதுமக்கள் இருப்பதை பார்த்த ரெயில் என்ஜீன் டிரைவர் ரெயிலை நிறுத்தினார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த காணை சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அவர்களிடம் கொத்தமங்கலம் பகுதியில் மூடிக்கிடக்கும் ரெயில்வே கேட்டை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பகுதி பொதுமக்கள் ரெயில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த ரெயில் மறியல் போராட்டத்தால் ½ மணிநேரம் காலதாமதமாக காட்பாடி-விழுப்புரம் பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது.
    ×