search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CSK fans"

    • சிஎஸ்கே அணிக்கு எதிராக ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.
    • 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது சென்னை அணி.

    மும்பை:

    ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

    வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கெய்க்வாட் 69 ரன்களும், ஷிவம் துபே 66 ரன்களும் எடுத்தனர்.

    இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். ஆனால் மற்ற வீரர்கள் சொதப்பியதால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.

    மும்பையில் நடந்த இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு இணையாக சிஎஸ்கே ரசிகர்களும் மைதானத்தில் இருந்தனர். இறுதியில் வெற்றி சென்னை பக்கம் தான் என கிட்டத்தட்ட முடிவாகியது. அந்த சமயத்தில் ரோகித் சர்மா சதம் அடித்தார்.

    உடனே சுற்றியிருந்த மும்பை ரசிகர்கள் உள்பட சிஎஸ்கே ரசிகர்கள் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். குறிப்பாக சிஎஸ்கே அணியின் ஜெர்சி அணிந்திருந்த ஒரு ரசிகர் மும்பை சா ராஜா ரோகித் சர்மா என முழக்கமிட்டார். மேலும் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக சிஎஸ்கே ரசிகை மும்பை இந்தியன்ஸ் கொடியை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    சென்னை ரசிகர்கள் மும்பை அணியின் முன்னாள் கேப்டனுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • சேப்பாக்கத்தில் சிஎஸ்கே, கேகேஆர் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடந்தது.
    • இதில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது.

    சென்னை:

    சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடந்தது.

    முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 137 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் 34 ரன்கள் எடுத்தார்.

    சென்னை அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    இதையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

    அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தபோது ஷிவம் துபே ஆட்டம் இழந்தார். அதன்பின், டோனி களம் இறங்குவார் என அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த வேளையில், ட்ரெஸ்சிங் ரூமில் இருந்து ரவீந்திர ஜடேஜா சிரித்தபடியே பேட்டினை எடுத்துக்கொண்டு மைதானத்திற்குள் நுழைய முயலுவதுபோல சென்று பின் திரும்பவும் ட்ரெஸ்சிங் ரூமிற்கு உள்ளே சென்றார்.

    இதனைப் பார்த்த சக சி.எஸ்.கே. வீரர்கள் மற்றும் ரசிகர்களின் சிரிப்பலையில் அரங்கம் அதிர்ந்தது.

    சிறிது நேரத்தில் வெளியே வந்த மகேந்திர சிங் டோனிக்கு அரங்கமே அதிரும் அளவுக்கு ரசிகர்கள் கரகோஷங்களை எழுப்பி தங்களது உற்சாக வரவேற்பினை அளித்தனர்.

    இதுதொடர்பான காட்சிகளை டிரெஸ்சிங் ரூமில் இருந்து மேலே இருக்கையில் அமர்ந்திருந்த ரசிகர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட, அது வைரலாகி வருகிறது.

    • சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி ஆட்டம் நடைபெறுவதாக தகவல் பரவியிருக்கிறது.
    • இந்த பயிற்சி ஆட்டத்தை பார்க்க கட்டணம் வசூலிக்கப்படவில்லை எனவும் தகவல் பரவியிருக்கிறது.

    சென்னை:

    2024-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

    இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

    அந்த வகையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி ஆட்டம் நடைபெறுவதாகவும் அதனை பார்க்க கட்டணம் வசூலிக்கப்படவில்லை எனவும் தகவல் பரவியிருக்கிறது. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் டோனியை காண்பதற்காக மதியம் முதல் இரவு வரை காத்துக் கொண்டிருந்தனர்.

    ஆனால் இந்த செய்தி தவறானது என சேப்பாக்கம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் விரக்தியடைந்த ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி டோனி டோனி என முழக்கமிட்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் ரசிகர்களை கலைந்து செல்லுமாறு தெரிவித்தனர்.

    இதனால் சோகத்துடன் சேப்பாக்கத்தில் இருந்து ரசிகர்கள் கலைந்து சென்றனர். டோனியை பார்க்க வந்த நாங்கள் சிஎஸ்கே வீரர்கள் சென்ற பஸ்சை மட்டும் தான் பார்த்தோம் என மனகுமுறலுடன் ரசிகர்கள் கூறி சென்றனர். 

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.
    • வெற்றி பெற்றதையடுத்து சிஎஸ்கே வீரர்கள் அவர்களது மனைவியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    பரபரப்பான ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது. அகமதாபாத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் ஆடிய நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன் குவித்தது. 215 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. 

    இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்றதையடுத்து சிஎஸ்கே வீரர்கள் அவர்களது மனைவியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






     



    • டோனியை காண்பதற்காகவே இவ்வளவு தூரம் பயணித்து வந்ததாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.
    • நேற்றைய போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டது.

    நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற இருந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருந்தன. கனமழை தொடர்ந்து பெய்து வந்ததால் போட்டி ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெறம் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இறுதிப்போட்டியை காண வெளி மாநிலங்களில் இருந்து அகமதாபத்துக்கு வந்த ரசிகர்களுக்கு மழையால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. நேற்றைய போட்டிக்கான டிக்கெட்டுகள் நாளை (இன்று) செல்லுபடியாகும். டிக்கெட்டுகளை பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டது.

    அதனால் இறுதிப்போட்டியை பார்த்து விட்டுதான் ஊருக்கு செல்வதாக முடிவெடுத்த ரசிகர்கள், நள்ளிரவில் அகமதாபாத் ரெயில் நிலையத்தில் உறங்கினர். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    டோனியை காண்பதற்காகவே இவ்வளவு தூரம் பயணித்து வந்ததாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.

    • இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஜடேஜா வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
    • ஜடேஜாவின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு குறித்து டோனி புகழாரம் சூட்டினார்.

    சென்னை:

    ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிபையர்-1 ஆட்டத்தில் சென்னை - குஜராத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 173 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

    இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஜடேஜா வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அவர் பேட்டிங்கில் 16 பந்தில் 22 ரன்களும், பந்துவீச்சில் 4 ஓவர்களில் 18 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது சிறப்பான ஆட்டத்தினால் அவருக்கு மிகுந்த மதிப்புமிக்க வீரர் விருது வழங்கப்பட்டது.

    போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த கேப்டன் டோனி, ஜடேஜாவின் பந்து வீச்சு திருப்பு முனையாக அமைந்தது எனவும் பேட்டிங்கில் கடைசி நேரத்தில் அவர் அடித்த ரன்களே வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது எனவும் டோனி கூறினார்.

    இந்நிலையில் ஜடேஜா தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் விருது வாங்கிய புகைப்படத்தை பதிவிட்டுட்டுள்ளார். அந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

    அதில் அப்ஸ்டாக்ஸ்-க்கு தெரியுது. ஆனால் சில ரசிகர்களுக்குதான் தெரியவில்லை என டுவிட் செய்துள்ளார்.

    டோனியின் பேட்டிங்கை பார்ப்பதற்பாக ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்களில் ஜடேஜா அவுட் ஆக வேண்டும் என ரசிகர்கள் கூச்சலிட்டனர். இதனை ஒரு பேட்டியில் கூட இதை பற்றி ஜடேஜா கூறியிருந்தார். ஜடேஜா மற்றுமின்றி சில வீரர்களும் வியப்புடன் கூறினார்.

    ஆனால் இந்த பதிவில் ஜடேஜா கூறியிருப்பது தன்னை அவுட் ஆக சொன்ன சில ரசிகர்களை மறைமுக தாக்குவது போல இருந்ததாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.

    ×