என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cyclone Michaung"
- மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய்
- ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
"மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.
ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
- வெள்ள நிவாரண தொகையாக தமிழ்நாடு அரசு கேட்டது ரூபாய் 38,000 கோடி
- உள்துறை அமைச்சகம் தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 276.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வருபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"ஒன்றிய உள்துறை அமைச்சகம் மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூபாய் 115.49 கோடியும், டிசம்பர் வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 160.61 கோடியும் ஆக மொத்தம் ரூபாய் 276.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆனால், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை ரூபாய் 682.63 கோடி.
இதில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் உள்ள இருப்பு தொகையான ரூபாய் 406.57 கோடியை கழித்தது போக மீதியுள்ள தொகையான ரூபாய் 276.10 கோடி தான் தற்போது தமிழ்நாட்டிற்கு உள்துறை அமைச்சகம் ஒதுக்கியுள்ளது.
நாம் கேட்ட நிவாரண நிதி ரூபாய் 38,000 கோடி.
ஆனால், மாநில பேரிடர் நிவாரண நிதியில் ஏற்கனவே இருந்த 406.57 கோடியை விடுவித்து மீதியுள்ள ரூபாய் 276.10 கோடியை தான் தமிழகத்திற்கு நிவாரண நிதியாக ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.
தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதியை ஒதுக்காமல் மாநில பேரிடர் நிவாரண நிதியாக ஏற்கனவே இருக்கிற தொகையை கழித்து விட்டு மீதி தொகையை உள்துறை அமைச்சகம் ஒதுக்கியிருப்பது ஒன்றிய பா.ஜ.க. அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.
இதன்மூலம் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் நாம் கேட்ட தொகையை ஒதுக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு மறுத்தது தெளிவாக தெரிகிறது. இந்த ஒதுக்கீடு யானைப் பசிக்கு சோளப் பொரி போட்டது போல் இருக்கிறது.
எனவே, தமிழகத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய நிவாரண நிதி வழங்காத பிரதமர் மோடி தமிழக மக்களுக்காக பேசுவது அப்பட்டமாக நீலிக் கண்ணீர் வடிப்பதாகத் தான் கருத முடியும்.
தமிழக மக்கள் மீதோ, தமிழக வாழ்வாதாரத்தின் மீதோ கொஞ்சம் கூட கருணை காட்டாத அணுகுமுறையை தான் பிரதமர் மோடி கையாண்டு வருகிறார் என்பதற்கு உள்துறை அமைச்சகத்தின் நிதி ஒதுக்கீடு மேலும் உறுதி செய்கிறது. இத்தகைய வஞ்சிக்கிற ஒன்றிய பா.ஜ.க.
அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- 2015ல் இருந்து ரூ.1.5 லட்சம் கோடி கேட்டுள்ளோம், ஆனால் ரூ.7000 கோடி தான் கொடுத்துள்ளனர்.
- மத்தியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே பாராமுகமாக செயல்படுகிறது.
சென்னை
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
யானைப் பசிக்கு சோளப்பொறி போல புயல் பாதிப்பிற்கு நிவாரணம் மத்திய அரசு வழங்கி உள்ளது.
2015ல் இருந்து ரூ.1.5 லட்சம் கோடி கேட்டுள்ளோம், ஆனால் ரூ.7000 கோடி தான் கொடுத்துள்ளனர்.
வட மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டால் வாரி வழங்குகிறார்கள்.
மத்தியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே பாராமுகமாக செயல்படுகிறது.
தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் நடத்துகிறது என்று கூறினார்.
- கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிச்சாங் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே.
மதுரை:
மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.115 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு ரூ.160.61 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24-ந்தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் நிதியை விடுவிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல... வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிச்சாங் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே. தமிழ்நாடு கேட்டதோ 38,000 கோடி.
பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம் என்று தெரிவித்துள்ளார்.
- விண்ணப்பதாரர்களின் வீடுகளில் தண்ணீர் தேங்கி வெள்ளத்தால் உண்மையில் பாதிக்கப்பட்டிருந்ததா? என்பதையும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
- தகுதியான விண்ணப்பதாரர்கள் பட்டியலை 4 மாவட்ட கலெக்டர்களும் அரசுக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
சென்னை:
மிச்சாங் புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் கனமழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.6 ஆயிரம் நிவாரண உதவி நியாய விலைக்கடை மூலம் வழங்கப்பட்டது.
இதில் சென்னை மாவட்டத்தில் மட்டும் 13.72 லட்சம் பேருக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது. சர்க்கரை கார்டு, எந்த பொருளும் வாங்க முடியாத கார்டுதாரர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள், வெளியூரில் இருந்து இங்கு தங்கி வேலை செய்வோருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொதுமக்கள் விண்ணப்பம் எழுதி கொடுத்திருந்தனர். ரேஷன் கார்டு இல்லாதவர்களும் எழுதி கொடுத்தால் அவர்களது விண்ணப்பமும் நிவாரணம் வழங்க பரிசீலிக்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.
அதனை தொடர்ந்து 5.5 லட்சம் பேர் ரூ.6 ஆயிரம் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். இதில் ரேஷன் கார்டு இணைத்து 2 லட்சத்து ஆயிரம் பேரும், ரேஷன் கார்டு இல்லாமல் 3 லட்சத்து 5 ஆயிரம் பேரும் மனு கொடுத்து இருந்தனர்.
இந்த விண்ணப்பங்கள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வந்தது.
அது மட்டுமின்றி அந்தந்த வார்டு வருவாய், சுகாதாரம், பொறியியல் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்து வந்தனர்.
விண்ணப்பதாரர்களின் வீடுகளில் தண்ணீர் தேங்கி வெள்ளத்தால் உண்மையில் பாதிக்கப்பட்டிருந்ததா? என்பதையும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதே போல் ரேஷன் கார்டு இல்லாதவர்களின் விண்ணப்பங்களுடன் ஆதார் மற்றும் முகவரி சான்றுக்கான வாடகை ஒப்பந்தம், கியாஸ் பில், வங்கி கணக்கு புத்தகம், ஓட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு வந்தது.
இதில் தகுதியான நபர்களை கண்டறிந்து கணக்கெடுக்கப்பட்டு வந்தது. ஆய்வு நடத்திய அதிகாரிகள் தகுதியான விண்ணப்பதாரர்களை வீட்டின் முன்பு போட்டோவும் எடுத்து பதிவு செய்தனர்.
இந்த பணிகள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது. இப்போது இந்த கள ஆய்வு அனைத்தும் நிறைவடைந்துவிட்டது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் பட்டியலை 4 மாவட்ட கலெக்டர்களும் அரசுக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இந்த பட்டியலில் சுமார் 5 லட்சம் பேர் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.
எனவே விரைவில் 5 லட்சம் பேருக்கு ரூ.6 ஆயிரம் பணம் கிடைக்க உள்ளது. முதலமைச்சரின் அனுமதி பெற்று நிதித்துறையில் இருந்து பணம் ஒதுக்கப்பட்டதும் ரூ.6 ஆயிரம் பெறுவதற்கான முறையான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆந்திரா, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு அதிக அளவில் அரிசி விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
- நெல்லின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது.
சென்னை:
சென்னையில் அரிசி விலை திடீரென உயர்ந்துள்ளது. ரூ.1300-க்கு விற்பனையான 25 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ.100 அதிகரித்து ரூ.1400-க்கு விற்பனையாகிறது.
இதேபோன்று அரிசியின் தரத்தை பொறுத்து அனைத்து மூட்டைகளும் 100 முதல் 200 ரூபாய் வரையில் உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது அறுவடை காலம் ஆகும். இந்த நேரத்தில் அரிசியின் விலை சற்று குறைந்திருக்கும். ஆனால் தற்போது விலை ஏறி உள்ளது என்று கூறியிருக்கும் வியாபாரிகள் மிச்சாங் புயலும் இதற்கு ஒரு காரணம் என்று குறிப்பிட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக அரிசி மொத்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
ஆந்திரா, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு அதிக அளவில் அரிசி விற்பனைக்கு கொண்டு வரப்படும். மிச்சாங் புயல் பாதிப்பால் அறுவடை நேரத்தில் காற்று அதிகமாகி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் பரப்பளவில் 30 மூட்டைகள் விளையும் இடத்தில் புயல் பாதிப்பு காரணமாக 18 மூட்டை நெல்லே உற்பத்தியாகி உள்ளது. இதனால் நெல்லின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது.
அறுவடை நேரத்தில் காற்று அதிகமாக வீசியதன் மூலம் நெற்பயிரில் பால் சிதறி தரமும் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே அரிசியின் விலை உயர்ந்துள்ளது. கிலோவுக்கு ரூ.4 வரையிலும் விலை அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆயிரக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து தனித்தீவுகளாக மாறின.
- பெரும்பாலான இடங்களில் வெள்ளம் தேங்கி இருந்ததால் சேத மதிப்பை சரியான முறையில் கணக்கிட முடியவில்லை.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ந்தேதி பெய்த பெருமழை வெள்ளத்தில் நெல்லை மாவட்டத்தில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன.
மாவட்டத்தின் பல பகுதிகளில் சாலைகள், பாலங்கள் சேதமடைந்தன. டவுன் கருப்பந்துறை உள்ளிட்ட சில பகுதிகளில் ஆற்றுப்பாலம் உடைந்து விழுந்தது. மின்சார கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.
மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்கள் பெருமளவில் சேதம் அடைந்தன. இந்த பாதிப்புகளை கடந்த 21-ந்தேதி மத்திய குழுவினர் முதல்கட்டமாக நெல்லை வந்து ஆய்வு செய்தனர்.
அதனைத்தொடர்ந்து 2-வது முறையாக இன்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆலோசகர் கே.பி.சிங் தலைமையில், மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை விஜயகுமார், மத்திய நிதி அமைச்சகத்தை சார்ந்த ரங்கநாதன் ஆதம், மின்சக்தி துறையை சேர்ந்த ராஜேஷ் திவாரி, மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தை சேர்ந்த தங்கமணி, புதுடெல்லியில் உள்ள ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் கே.எம். பாலாஜி, மத்திய வேளாண் இயக்குனர் கே.பொன்னுசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் 2 குழுவாக பிரிந்து மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்தனர்.
இவர்களோடு தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டவர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மழை வெள்ள பாதிப்புக்கு முன்னும், மழை உள்ள பாதிப்பு அடைந்த போதும், மழை வெள்ள பாதிப்புக்கு பின் சீரமைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளையும் ஒளிபரப்பு செய்து மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளித்தார்.
பின்னர் மழை வெள்ளம் பாதிப்படைந்த பகுதிகளை 2 குழுக்களாக சென்று பார்வையிட்ட மத்திய குழு அதிகாரிகள் நெல்லை சந்திப்பு கருப்பந்துறை பகுதியில் அமைந்துள்ள தாமிரபரணி தரைமட்ட பாலத்தை ஆய்வு செய்தனர்.
மழை வெள்ள பாதிப்பால் சிதலமடைந்து 3 நாட்களில் சரி செய்யப்பட்ட பாலத்தின் புகைப்படங்கள் காட்சிபடுத்தப்பட்டிருந்ததை பார்த்த அதிகாரிகள் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாகவும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
அப்பகுதியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட பாலமும் மழை வெள்ளத்தால் சேதமடைந்த நிலையில் தற்காலிகமாக குழாய்கள் அமைக்கப்பட்டு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவது தொடர்பாகவும் அதிகாரிகள் மத்திய குழு அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து மத்திய குழு அதிகாரிகளை பேட்டி எடுக்க முயன்றபோது, தமிழக அரசு மழை வெள்ள பாதிப்பு பணிகளை சிறப்பாக கையாண்டுள்ளது என என ஒரு வரியில் சொல்லி சென்றனர்.
தொடர்ந்து நெல்லை மாவட்டம் சீவலப்பேரி பகுதியில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பு மற்றும் அதனை சரி செய்யப்பட்ட பணிகளையும், அம்பாசமுத்திரம், நெல்லை வட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் செய்த பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- பாபநாசம், மணிமுத்தாறு அணையில் இருந்து உபரிநீர் செல்லும் வரை வெள்ளநீர் கால்வாயில் தண்ணீர் செல்லும்.
- குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக இன்று தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர் உத்தரவுப்படி மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் பாசன பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இன்று முதல் 445 கனஅடிக்கு குறையாமல் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதன் மூலம் அம்பாசமுத்திரம் வட்டம், பாளை, நாங்குநேரி, திசையன்விளை, தூத்துக்குடி மாவட்ட வட்டங்களில் உள்ள சுமார் 23 ஆயிரத்து 152 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
கடந்த டிசம்பர் 17-ந்தேதி வெள்ளநீர் கால்வாயில் பரிசோதனை அடிப்படையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கொழுமடை குளம் உடைக்கப்பட்டதாக கூறப்பட்டது. அன்றைய தினம் அதிக கனமழையால் உடைப்பு ஏற்பட்டது. இந்த கால்வாய் திறக்கப்பட்டதாலேயே அந்த ஊர் பாதுகாக்கப்பட்டதாக கலெக்டர், நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு பின் தெரிவித்து உள்ளனர்.
தற்போது அந்த உடைப்பு சரிசெய்யப்பட்டு வெள்ளநீர் கால்வாயில் நேற்று முன்தினம் முதல் 1,200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பல விமர்சனங்கள் வந்தாலும் வெள்ளநீர் கால்வாய் மூலம் நாங்குநேரி, ராதாபுரம், திசையன்விளை, திருச்செந்தூர், சாத்தான் குளம் ஆகிய பகுதிகள் பயன்பெறும்.
பாபநாசம், மணிமுத்தாறு அணையில் இருந்து உபரிநீர் செல்லும் வரை வெள்ளநீர் கால்வாயில் தண்ணீர் செல்லும்.
முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழகத்தை விட உத்தரபிரதேசத்தில் அதிக முதலீடு வந்துள்ளது என கூறியுள்ளார். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் உத்தரப்பிரதேசம், குஜராத்தில் முதலீடு செய்கிறது. இதன் காரணமாக தமிழகத்தை விட அங்கு முதலீடுகள் அதிகமாக உள்ளது. அந்த மாநில அரசுகள் செலுத்தும் வரியில் அவர்களுக்கு 2 ரூபாய் 19 பைசா திருப்பி அளிக்கப்படுகிறது. நமது மாநிலத்திற்கு அப்படி திருப்பி அளிக்கப்படுவதில்லை.
குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த தொழில் அதிபர்களுக்கு இதுபோன்று நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இதுவே அங்கு அதிக முதலீடுகள் செல்ல காரணம்.
கடும் நிதி நெருக்கடியில் மத்திய அரசு ஒரு ரூபாய் கூட தராத நிலையிலும் மிச்சாங் புயல், தென் தமிழகத்தில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவைகளை தமிழக அரசு திறமையாக கையாண்டுள்ளது.
தமிழக அரசின் நடவடிக்கைகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மிச்சாங் புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
- ஜனவரியில் 2 சனிக்கிழமைகள், பிப்ரவரியில் 2 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்.
சென்னை:
சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மிச்சாங் புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. வெள்ள பாதிப்பு காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய வேலை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
* 4 வாரங்களுக்கு சனிக்கிழமைகளில் அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள்.
* ஜனவரியில் 2 சனிக்கிழமைகள், பிப்ரவரியில் 2 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்.
* ஜன.6, 20 மற்றும் பிப்.3, 17 ஆகிய தேதிகளில் பள்ளிகள் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
- சென்னையில் 4,034 உள்சாலைகளும், 87 பேருந்து வழிடத்தட சாலைகளும் சேதம் அடைந்து இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
- சாலைகள் சேதம் அடைந்ததில் கோடம்பாக்கம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது.
சென்னை:
சென்னையில் புயல் மழையால் சாலைகள் கடுமையாக சேதம் அடைந்தன. நகரில் உள்ள பேருந்து சாலைகள், தெருக்களில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக மாறின. ஒரு சில இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
வெள்ளத்தில் பெரும்பாலான சாலைகள் மிகவும் மோசமடைந்த நிலையில் அவற்றை உடனே சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. புதிய சாலைகள் போடுவதற்கு காலதாமதமாகும் என்பதால் தற்சமயம் பள்ளங்களை நிரப்புவதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர்.
சென்னையில் 4,034 உள்சாலைகளும், 87 பேருந்து வழிடத்தட சாலைகளும் சேதம் அடைந்து இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணி தொடங்கியுள்ளது. ஆர்.கே. மடம் சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளங்களை தொழிலாளர்கள் சரி செய்தனர்.
சாலைகள் சேதம் அடைந்ததில் கோடம்பாக்கம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 1056 சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. மாம்பலம், தியாகராய நகர், கோடம்பாக்கம் பகுதியில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நீண்ட நாட்கள் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றதால் சாலைகளில் அதிக பள்ளம் ஏற்பட்டு உள்ளன.
ராயபுரம் மண்டலத்தில் 567 சாலைகள், அண்ணாநகர் மண்டலத்தில் 396 சாலைகளை அதிகாரிகள் கண்டறிந்து உள்ளனர். அண்ணாநகரில் 12068 சதுர மீட்டருக்கு சாலைகள் சேதம் அடைந்துள்ளன.
தேனாம்பேட்டை மண்டலத்தில் 381, திரு.வி.க. நகர் 331, மாதவரம் 273, தண்டையார்பேட்டை 214, சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளன. மற்ற மண்டலங்களில் 200-க்கும் குறைவான சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
தெருக்களில் பள்ளம் இருந்தால் 1913-க்கு புகார் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி தெரிவித்து உள்ளது. இதுகுறித்து கமிஷனர் ஜெ.ராதா கிருஷ்ணன் கூறுகையில்,
மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த சாலைகள் சிமெண்ட் கலவைகள் மூலம் நிரப்பப்படுகின்றன. வாகன ஓட்டிகள் பள்ளங்களில் விழுந்து விபத்து ஏற்படுவதை தடுப்பதற்காக இந்த பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
சாலைகளில் உள்ள சிறிய பள்ளங்கள் முதல் பெரிய குழி வரை இந்த கலவையின் மூலம் நிரப்பப்படும். தேவையான இடங்களுக்கு தார் சாலைகளும் போடப்படும். ஜனவரி மாதத்திற்கு பிறகு தான் புதிய சாலை சீரமைக்கும் பணி நடைபெறும் என்றார்.
- மிச்சாங் புயலில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மாநில அரசு முறையாக பயன்படுத்தவில்லை.
- தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு மீட்பு பணியில் மத்திய அரசின் முப்படைகளும் இறங்கி சிறப்பாக பணியாற்றி வருகிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.
கோவிலில் மூலவர், சண்முகர், தட்சிணாமூர்த்தி, சூரசம்ஹாரமூர்த்தி, பெருமாள் உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளிலும் அவர் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மிச்சாங் புயலில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மாநில அரசு முறையாக பயன்படுத்தவில்லை. முறையாக பயன்படுத்தினால் கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கும்.
மேலும் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு மீட்பு பணியில் மத்திய அரசின் முப்படைகளும் இறங்கி சிறப்பாக பணியாற்றி வருகிறது. வெள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட மக்களிடம் நேரடியாகக் கேட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் செய்து கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெரிய வெங்காயத்தின் விலை ஒரு மாதத்துக்கு பின்னர் மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது.
- பெரிய வெங்காயம் வழக்கத்தை விட பாதி அளவே வருகிறது.
போரூர்:
மிச்சாங் புயல் மற்றும் மழை பாதிப்பு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், கோவக்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்து விலையும் அதிகரித்து உள்ளது.
இதேபோல் பெரிய வெங்காயத்தின் விலையும் ஒரு மாதத்துக்கு பின்னர் மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தற்போது 50 சதவீத வெங்காயம் மட்டுமே வருவதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் பெரிய வெங்காயம் விலை ரூ.50-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
சில்லரை விற்பனை கடை களில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.65 வரை விற்பனை ஆகிறது. கடந்த அக்டோபர் மாத இறுதியில் வெங்காயத்தின் விலை ரூ.100-ஐ தொட்டது குறிப்பிடத்தக்கது.
கத்தரிக்காய் கிலோ ரூ.60-க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, புயல், மழை காரணமாக ஆந்திரா பகுதியில் இருந்து வரும் காய்கறி, வெங்காயம் வரத்து குறைந்து உள்ளது. இதனால் விலை அதிகரித்து உள்ளது. பெரிய வெங்காயம் வழக்கத்தை விட பாதி அளவே வருகிறது. வரும் நாட்களில் இதன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்