என் மலர்
நீங்கள் தேடியது "Devotee death"
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாராபுரத்தை சேர்ந்த பக்தர் ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
- கோவிலுக்கு வந்த பக்தர் உயிரிழந்ததை தொடர்ந்து உச்சிகால பூஜைக்கு முன்பாக நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்து மீண்டும் நடை திறக்கப்பட்டது.
பழனி:
பழனி முருகன் கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். ரோப்கார், வின்ச் போன்றவற்றில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் நடந்து சென்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த சேகர்(52) என்பவர் தனது குடும்பத்தினருடன் பழனி கோவில் படிப்பாதையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவர் மீது தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றனர்.
ஆனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டது தெரியவரவே அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை கீழே கொண்டுவந்து அடிவாரம் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தபோது உயிரிழந்தது உறுதியானது. இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகம் அடைந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாராபுரத்தை சேர்ந்த பக்தர் ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றதால் இயல்பு நிலைக்கு திரும்பினார்.
தற்போது கடும் கோடைவெயில் அடித்துவரும் நிலையில் பகல் பொழுதில் படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு செல்பவர்கள் மயங்கி விழும் நிலை ஏற்படுகிறது. இதனை போக்க பல்வேறு இடங்களில் தண்ணீர்பந்தல் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கோவிலுக்கு வந்த பக்தர் உயிரிழந்ததை தொடர்ந்து உச்சிகால பூஜைக்கு முன்பாக நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்து மீண்டும் நடை திறக்கப்பட்டது.