search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dissatisfied"

    கஜா புயல் நிவாரணத்துக்கு தமிழக அரசு ரூ.15 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்ட இடத்தில் மத்திய அரசு ரூ.1146 கோடி வழங்கியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. #GajaStorm #TNGovernment
    சென்னை:

    தமிழகத்தை கஜா புயல் தாக்கியதில் கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கரூர் உள்பட 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    புயல் மழைக்கு 63 பேர் பலியானார்கள். லட்சக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தென்னை, பலா, வாழை உள்ளிட்ட லட்சக்கணக்கான மரங்களும் சாய்ந்து விழுந்தன.

    ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சார வினியோகம் அடியோடு துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வந்தனர்.

    புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு முதற்கட்டமாக ரூ.1000 கோடியை ஒதுக்கி மீட்பு பணிகளை செய்து வந்தது.



    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 22-ந்தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து புயல் சேத விவரங்களை தெரிவித்தார். அப்போது தற்காலிக நிவாரண பணிக்கு ரூ.1,431 கோடியும், நிரந்தர சீரமைப்புக்கு ரூ.14 ஆயிரத்து 910 கோடியும் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

    இதைத்தொடர்ந்து அன்று மாலையே மத்திய குழு சென்னை வந்து, புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களுக்கு சென்று பார்வையிட்டது.

    இதைத்தொடர்ந்து மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.200 கோடியும், 2-ம் கட்டமாக ரூ.353 கோடியும் வழங்கியது.

    மத்திய குழுவினர் தாக்கல் செய்யும் இறுதி அறிக்கையின் அடிப்படையில் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

    அதன்படி தேசிய பேரிடர் நிதியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக ரூ.1,146 கோடியே 12 லட்சத்தை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.

    இது தமிழக அரசு கேட்டுக்கொண்ட நிதியில் வெறும் 7.64 சதவீதம் என்பதால் மத்திய அரசு மீது தமிழக அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

    ஏனென்றால் இந்த தொகையை வைத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க முடியாது என்று தமிழக அரசு கருதுகிறது.

    ஏற்கனவே சாய்ந்து கிடந்த மின்கம்பங்களை சீரமைக்கவே ரூ. 800 கோடிக்கு அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளது.

    இடிந்து தரைமட்டமான வீடுகளுக்கு பதில் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். அதற்கான போதிய நிதி இல்லை. சாய்ந்து விழுந்த 8 லட்சத்துக்கும் அதிகமான தென்னை மரங்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும். அதற்கும் நிதி இல்லை.

    வாழை, பலா, முந்திரி நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நிதி கிடையாது. மத்திய அரசு தரும் நிதியை வைத்து ஓரளவு சமாளிக்கலாம் என அரசு எதிர்பார்த்திருந்தது. ஆனால் ரூ.15 ஆயிரம் கோடிக்கு பதில் ரூ.1146 கோடியை ஒதுக்கியது தமிழகத்துக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    புயல் சேதத்தை பார்வையிட்ட மத்திய குழுவினர் சேத மதிப்பு அதிகமாக உள்ளது என்று தெரிவித்திருந்த நிலையிலும் மத்திய அரசு வெறும் ரூ.1,146 கோடியைதான் ஒதுக்கி உள்ளது. இது தமிழக அரசுக்கு பெரும் நிதிச்சுமையை உருவாக்கி விட்டது. இதில் இருந்து அரசு எப்படி மீளப் போகிறது என்று தெரியவில்லை என்று அந்த அதிகாரி ஆதங்கத்துடன் தெரிவித்தார். #GajaStorm #TNGovernment

    கூடலூரில் பஸ் நிறுத்தங்களை போக்குவரத்து போலீசார் அடிக்கடி மாற்றுவதால் கிராம மக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
    கூடலூர்:

    கூடலூரில் இருந்து ஓவேலி, தேவர்சோலை, பாட்டவயல், பந்தலூர், சேரம்பாடி, ஊட்டி, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதுதவிர கேரள-கர்நாடகா பஸ்களும் வந்து செல்கிறது. இதேபோல் ஓவேலி, பந்தலூர் பகுதியை சேர்ந்தவர்கள் வேலைநிமித்தம் காரணமாக கூடலூருக்கு தினமும் வந்து செல்கின்றனர். இதனால் கூடலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஓவேலிக்கு செல்லும் பஸ்கள் சக்தி விநாயகர் கோவில் அருகே உள்ள நிறுத்தத்தில் நின்று பயணிகளை அழைத்து செல்வது வழக்கம்.

    இதேபோல் ஊட்டியில் இருந்து வரும் பஸ்கள் கோவிலின் எதிர்புறம் பயணிகளை இறக்கி விட்டு செல்வது வாடிக்கை. மேலும் அதே பகுதியில் சாலையோரம் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எந்தவித சிரமம் இன்றி பயன் அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு போக்குவரத்து போலீசார் தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் வரிசையாக இரும்பு தடுப்பு கம்பிகளை வைத்தனர். இதனால் கூடலூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதைதொடர்ந்து இருசக்கர வாகனங்களை சாலையோரம் நிறுத்துவதற்கு போலீசார் தடை விதித்தனர். ஆனால் ஆட்டோ, ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் நிறுத்தி கொள்ள போலீசார் அனுமதி வழங்கினர். இருசக்கர வாகனங்கள் சாலையோரம் நிறுத்த அனுமதிக்காததால் நகராட்சி வணிக வளாகத்தில் நிறுத்தப்பட்டன. ஆனால் வியாபாரிகள் எதிர்ப்பு காரணமாக நகராட்சி வணிக வளாகத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்த நகராட்சி நிர்வாகம் தடை விதித்தது.

    இதனால் கூடலூர் கடைசி பகுதியான ராஜகோபாலபுரத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்த போலீசார் அனுமதித்தனர். இதனிடையே அரசு பஸ்கள் நிறுத்தும் இடத்தை போக்குவரத்து போலீசார் மாற்றி உள்ளனர். இதனால் கிராம மக்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர். ஏற்கனவே பயன்படுத்தி வந்த பஸ் நிறுத்தத்தில் ஆட்டோ, ஜீப் மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இது குறித்து இருசக்கர வாகன ஓட்டிகள், கிராம மக்கள் கூறியதாவது-

    கூடலூரில் போக்குவரத்து போலீசாரின் குளறுபடியால் வாகன நிறுத்தும் இடங்கள் அடிக்கடி மாற்றி அமைக்கப்படுகிறது. மேலும் நாளுக்குநாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளால் தேசிய நெடுஞ்சாலை குறுகலாகி வருகிறது. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே வாகனங்கள் நிறுத்த போதிய இடம் கிடைக்கும். இல்லை எனில் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 
    ×