search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "District Sports Complex"

    • மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ஒலிம்பிக் அகாடமி கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
    • ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16.06 ஏக்கரில் ரூ.15 கோடி மதிப்பில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம்.

    சென்னை:

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை நேரு உள்விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கி பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் தொகுப்பான 'சாம்பியன்ஸ் கிட்' வழங்குவதை முதற் கட்டமாக 553 மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்.

    இத்தொகுப்பில் பை, நவீன தண்ணீர் பாட்டில், தசைப்பிடிப்பிற்கு ஒத்தடம் கொடுக்கும் பை, தொப்பி, கர்சீப் டவல், வேர்வை உறிஞ்சும் துண்டு, கைக்கடிகாரம் மற்றும் டீ கப் ஆகியவை இடம் பெற்றிருந்தது.

    அதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டும் பணிக்கும், மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ஒலிம்பிக் அகாடமி கட்டிடம் கட்டும் பணிக்கும் அடிக்கல் நாட்டி உரையாற்றினார்.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2023-2024-ம் ஆண்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கான அறிவிப்பில், புதியதாக உருவாக்கப்பட்ட தென்காசி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16.06 ஏக்கரில் ரூ.15 கோடி மதிப்பில் பல்வேறு விளையாட்டு வசதிகள் கொண்ட புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் 15 மாதத்திற்குள் கட்டி முடிப்பதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    இவ்விளையாட்டு வளாகத்தில் நிர்வாக அலுவலக கட்டிடம், 1500 இருக்கை வசதிகள் கொண்ட கேலரி, ஓடுதளப்பாதை, கால்பந்து மைதானம், இறகுப்பந்து, கூடைப்பந்து, கையுந்துபந்து, கோ-கோ,டென்னிஸ் ஆடுகளங்கள் மற்றும் உடைமாற்றும் அறை, ஆண், பெண் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறை வசதிகள் கொண்ட திறந்தவெளி விளையாட்டரங்கம் அமைக்கப்படும்.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் உயர்திறன் வாய்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் பதக்க மேடையை அடைவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் கொண்ட ஒலிம்பிக் அகாடமி சென்னை, திருச்சி, மதுரை மற்றும் நீலகிரி மாவட்டங்களில், அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2024-2025-ம் ஆண்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கான அறிவிப்பில், மதுரை மாவட்டத்தில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பின் ஓர் அங்கமாக, ரூ.6 கோடி அளவில் மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் கபாடி மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாட்டினை ஊக்குவிக்கும் வகையில் தரை தளத்தில் ஒரு கபாடி ஆடுகளம், முதல் தளத்தில் 6 எண்ணிக்கை கொண்ட டேபிள் டென்னிஸ் ஆடுகளம் கொண்ட 250 இருக்கைகளுடன் கூடிய உள்விளையாட்டரங்கம் மற்றும் ஆண், பெண் உடைமாற்றும் அறைகள் கொண்ட வசதியுடன் அமைக்கப்படும்.

    நவீன வசதிகளுடன் கொண்ட புதிய உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும். தற்போது உள்ள திறந்தவெளி கூடைப்பந்து ஆடுகளம் செயற்கை தரையமைப்பு, பார்வையாளர் இருக்கைகளுடன் கூடிய புதிய கூடைப்பந்து ஆடுகளமாக புனரமைக்கப்படும்.

    தற்போது உள்ள திறந்தவெளி டென்னிஸ் ஆடுகளம் செயற்கை தரையமைப்பு, பார்வையாளர் இருக்கைகளுடன் கூடிய புதிய டென்னிஸ் ஆடுதளமாக மாற்றியமைக்கப்படும்.

    ×