search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ennore Estuary Water"

    • இறால், மீன் இனப்பெருக்கம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் கவலை.
    • கழிவு நீர் மற்றும் ரசாயனம் கலந்து வருவதால் ஆற்றின் நிறம் மாறுகிறது.

    எண்ணூர்:

    எண்ணூரில் கொசஸ்தலை ஆறும், கடலும் கலக்கும் முகத்துவார பகுதியில் ஏராளமான மீன்களும், இறால்களும் அதிக அளவில் கிடைக்கும். இதனை நம்பி 10 மீனவ கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் எண்ணூர் முகத்துவார பகுதியில் கொசஸ்தலை ஆறு இணையும் பகுதி முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி உள்ளது. இதனை கண்டு மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தொழிற்சாலைகளில் இருந்து அதிக அளவு வெளியேற்றப்படும் கழிவு நீரால் இந்த மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் இறால், மீன் இனப்பெருக்கம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

    மேலும் இதேபோல் எண்ணூர் முகத்துவார பகுதி அடிக்கடி மஞ்சள் நிறமாக மாறி காட்சி அளிப்பதாக குற்றம் சாட்டினர்.

    இது தொடர்பாக மீனவர்கள் கூறியதாவது:-

    எண்ணூர் முகத்துவார பகுதி ஆண்டுதோறும் பல நாட்கள் மஞ்சள் நிறமாக மாறி காட்சி அளித்து வருகிறது.

    ஆற்றை சுற்றி இருக்கும் தொழிற்சாலையில் இருந்து கழிவு நீர் மற்றும் ரசாயனம் கலந்து வருவதால் ஆற்றின் நிறம் மாறுகிறது. இதனால் ஆற்றில் இருக்கும் மீன்கள் மற்றும் இறால்கள் இனப்பெருக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் கொசஸ்தலை ஆற்றை நம்பி இருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    எனவே எண்ணூர் முகத்துவாரத்தை சுற்றி உள்ள தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தண்ணீரை ஆய்வு செய்து உரிய நடவடிக்கையை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதேபோல் எண்ணூரில் குழாய்கள் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீர் கடந்த சில மாதங்களாக மஞ்சள் நிறமாக வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    ×