search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Father Killed Car Driver"

    தனது எதிர்ப்பையும் மீறி சென்னை துணை நடிகை கார் டிரைவரை திருமணம் செய்வேன் என்றதால், டிரைவரை நடிகையின் தந்தை கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டினார். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உகார்தே நகரில் கடந்த 25-ந் தேதி கார் ஒன்று அனாதையாக நின்றுகொண்டிருந்தது. கொடைக்கானல் போலீசார் அந்த காரை திறந்துபார்த்தபோது, உள்ளே ரத்தம் உறைந்துகிடந்ததுடன் மிளகாய் பொடியும் தூவப்பட்டிருந்தது. விசாரணையில், அந்த காரின் உரிமையாளர் கொடைக்கானலை சேர்ந்த பிரபாகரன் (வயது 28) என்று தெரிந்தது.

    24-ந் தேதி இரவு வாடகைக்கு செல்வதாக கூறிச்சென்ற பிரபாகரன் பின்னர் வீடு திரும்பவில்லை. போலீசார் தீவிரமாக தேடியதில் சிட்டிடவர் என்ற இடத்தில் வனப்பகுதியில் 50 அடி பள்ளத்தில் பிரபாகரனின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது. அவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பிரபாகரனின் செல்போனுக்கு கடைசியாக 24-ந் தேதி இரவு தொடர்புகொண்டு பேசிய அவரது நண்பரான மற்றொரு கார் டிரைவர் செந்தில்குமார் (37) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பணத்துக்காக பிரபாகரனை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். செந்தில்குமாரை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின் பேரில் கொலையில் தொடர்புடைய மணிகண்டன் (28), முகமது சல்மான் (20), அவரது தம்பி முகமது இர்பான் (18) ஆகியோரையும் கைது செய்தனர்.

    செந்தில்குமார் போலீசாரிடம் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு-

    சென்னை திருவான்மியூர் வால்மீகி நகரை சேர்ந்தவர் ரமேஷ்கிருஷ்ணன். அவருடைய மனைவி துணை நடிகை விஷ்ணுபிரியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். விஷ்ணுபிரியா நடிகர் சூர்யா நடித்த ‘மாயாவி’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்துள்ளார்.

    விஷ்ணுபிரியாவின் தந்தை சூரியநாராயணன் ஐதராபாத்தில் தொழில் அதிபராக உள்ளார். இவருக்கு கொடைக்கானலில் வீடு, நிலம் உள்ளது. ரமேஷ்கிருஷ்ணன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் கொடைக்கானலில் உள்ள ஒரு விடுதியில் தங்கவைத்துள்ளனர். அவரை பார்க்க விஷ்ணு பிரியா அடிக்கடி கொடைக்கானலுக்கு வந்துசெல்வார்.

    இதற்காக சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வரும் அவரை கொடைக்கானலுக்கு அழைத்துவருவதற்காக பிரபாகரன் காரில் செல்வார். அப்போது அவர்களுக்கிடையே தொடர்பு ஏற்பட்டு நெருங்கி பழகினர். பிரபாகரனுக்கு சொந்தமாக கார் வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு பழக்கம் அதிகரித்தது. ரூ.15 லட்சம் வரை பிரபாகரனுக்கு அவர் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

    விஷ்ணுபிரியா மூலம் பிரபாகரன் வளர்ச்சி அடைவது எனக்கு பொறாமையாக இருந்தது. ஒரு மாதம் முன்பு விஷ்ணுபிரியா கொடைக்கானல் வந்தபோது, ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து இருவரும் தங்கினார்கள். அப்போது சூரியநாராயணன், விஷ்ணுபிரியாவுடன் செல்போனில் பேசினார்.

    அவர், கார் டிரைவர் பிரபாகரனை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தந்தையிடம் தெரிவித்தார். பிரபாகரனின் புகைப்படத்தையும் செல்போன் மூலம் தந்தைக்கு அனுப்பினார். இதற்கு சூரியநாராயணன் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் மகளை கண்டித்தார்.

    இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரத்தில் விஷ்ணுபிரியா தனது செல்போனை வீசி எறிந்தார். அந்த செல்போன் செயல்பாட்டில் இருந்ததால் பிரபாகரனும், விஷ்ணுபிரியாவும் பேசியதை சூரியநாராயணன் கேட்டுக்கொண்டிருந்தார். 2 பேரும் ஓட்டல் அறையில் ஒன்றாக இருப்பதையும் தெரிந்துகொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சூரியநாராயணன், பிரபாகரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

    விஷ்ணுபிரியா சென்னை திரும்பியதும், சூரியநாராயணன் என்னை தொடர்புகொண்டார். கொடைக்கானலில் அவர் கட்டிய வீட்டின் காண்டிராக்டருக்கு நான் டிரைவராக பணிபுரிந்தேன். அப்போதே சூரியநாராயணனை எனக்கு தெரியும். பிரபாகரனை கொலை செய்ய ரூ.3½ லட்சமும், 13 சென்ட் நிலமும் தருவதாக அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து நான் மணிகண்டன் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து பிரபாகரனை கொலை செய்ய திட்டமிட்டேன். மணிகண்டனின் வங்கி கணக்கில் சூரியநாராயணன் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் செலுத்திவிட்டு, மீதியை பின்னர் தருவதாக கூறினார்.

    24-ந்தேதி பிரபாகரன் நான் கேட்டுக்கொண்டபடி குறிஞ்சி ஆண்டவர் கோவில் பகுதிக்கு வந்தார். நான், எனது கூட்டாளிகள் அனைவரும் பிரபாகரனுடன் சேர்ந்து மது குடித்தோம். குடிபோதையில் இருந்த பிரபாகரனின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி, அவரது கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தோம்.

    பின்னர் உடலை காரில் ஏற்றி சிட்டிடவர் வனப்பகுதியில் வீசிவிட்டு சென்றோம். அவரது காரை உகார்தே நகரில் நிறுத்திவிட்டு போலீசார் கண்டுபிடிக்காமல் இருக்க காருக்குள் மிளகாய் பொடியை தூவிவிட்டு சென்றோம்.

    இவ்வாறு அவர் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சூரியநாராயணன் தலைமறைவாகிவிட்டார். அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    ×