search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "female doctor murdered"

    • உயிரிழந்த பெண் அந்த மருத்துவமனையில் சட்டவிரோத போதைப் பொருள் புழக்கத்தை எதிர்த்ததால் அவர் கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது
    • பணிநீக்கம் செய்யப்பட்ட அக்கல்லூரி முதல்வர் சந்தீப் கோஸ் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

    கொல்கத்தா பயங்கரம் 

    கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தினந்தோறும் வெளியாகும் தகவல்கள் இந்த சம்பவத்தில் உண்மையில் என்னதான் நடந்தது என்ற கேள்வியைப் பலமாக எழுப்புகிறது.

    கேள்விக்குறி? 

    இந்த குற்றத்தில் தொடர்புடைய மருத்துவமனை ஊழியர் சந்தீப் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். ஆனால் இந்த சம்பவத்தின் முதற்கட்ட போலீஸ் விசாரணைகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் அரங்கேறியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பயிற்சி பெண் மருத்துவர், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பெண் மருத்துவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டது.

     

     விடை கிடைக்காத மர்மங்கள் 

    இதோடு, இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகள் பலர் உள்ளதாகவும், அவர்களை காப்பாற்ற அம்மாநிலத்தில் ஆளும் அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. உயிரிழந்த பெண்ணின் பெற்றோரும், இதில் ஒன்றிற்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டு இருக்கக் கூடும் என்றும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    உயிரிழந்த பெண் அந்த மருத்துவமனையில் சட்டவிரோத போதைப் பொருள் புழக்கத்தை எதிர்த்ததாகவும் அதன்பொருட்டே திட்டமிட்டு அவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சக மாணவர் ஒருவர் பரபரப்பைக் கிளப்பினார். பயிற்சி பெண் மருத்துவர், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பெண் மருத்துவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டது.

    அதிர்ச்சியூட்டும் பின்புலம்  

    இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளும் மர்மங்களும் பெண் மருத்துவர் கொலை வழக்கில் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன. இந்த சம்பவத்துக்கு பிறகு பணிநீக்கம் செய்யப்பட்ட அக்கல்லூரி முதல்வர் சந்தீப் கோஸ் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. உரிமை கோரப்படாத உடல்களை உறுப்புகளுக்காக விற்று கமிஷன் பெற்றது, மருத்துவ கழிவுகளையும் சட்டவிரோதமான முறையில் விற்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் மீது சக ஊழியர் ஒருவர் முன்வைத்துள்ளார். இதற்கிடையில் சந்தீப் கோஸ் சிபிஐ விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

     

    விசரணையும் போராட்டங்களும் 

    இதைத் தொடர்ந்து இந்த சம்பவத்தை சிபிஐ விசாரணை செய்ய கொல்கத்தா உயர்நதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சிபிஐ அதிகாரிகள் குழு இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கண்டித்தும், பெண் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நாடு முழுக்க பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் நடவடிக்கையை உறுதிப்படுத்த உடனடியாக மத்திய அரசு சட்டம் கொண்டுவர வலியுறுத்தியும் நாடு முழுக்க மருத்துவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையத்துக்கு நிகரான பாதுகாப்பை மருத்துவமனைகளுக்கு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை இந்திய மருத்துவ சங்கம் முன்வைத்தது.

     

    உச்சநீதிமன்றத்தின் தலையீடு 

    போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும் ஆங்காங்கே இன்னும் காலவரையின்றி நடந்து வரும் நிலையில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தது. இந்த  வழக்கின்  மீது நேற்று நடந்த விசாரணையில் மேற்கு வங்காள மாநில அரசு மற்றும் போலீசின் மெத்தனப் போக்கை நீதிபதிகள் கடுமையாக கண்டித்தனர்.

     

    வழக்கில் நடந்த குளறுபடிகள் குறித்து சரமாரியான கேள்விகளை முன்வைத்தனர். மேலும் நாடு இன்னொரு வன்கொடுமை நடக்கும் வரை காத்திருக்காது என்று கூறிய நீதிபதிகள் இந்த வழக்கில் விசாரணை நிலையை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். வருகிற 22-ந் தேதிக்குள் (வியாழக் கிழமை) சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    இதேபோல மேற்கு வங்காள அரசும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும் பயிற்சி மருத்துவர்களின் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 பேர் கொண்ட குழுவை உருவாக்கி உத்தரவிட்டனர்.

     

    அடுத்தது என்ன?

    மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதால் அவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் நீதிபதிகள் கோரிக்கை வைத்தனர். ஒட்டுமொத்தமாகப் பதில் கிடைக்காத கேள்விகளும், மருத்துவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பும்  இந்த வழக்கின் போக்கை அடுத்து எந்த திசையில் கொண்டு செல்லும் என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது திண்ணம்.

    ×