search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fireaccident"

    • சம்பந்தப்பட்ட கார் ஓட்டுனரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காரால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே வெலக்கல்நாத்தம் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

    இந்நிலையில், அந்த காரில் கட்டுக்கட்டாக இருந்த ரூ.2,000 நோட்டுகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, சம்பந்தப்பட்ட கார் ஓட்டுனரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், காரில் கட்டுக்கட்டாக இருந்தது போலி ரூ.2000 நோட்டுகள் என தெரியவந்துள்ளது.

    மேலும், தான் சினிமா தயாரிப்பாளர் எனவும், படப்பிடிப்பிற்காக கொண்டு சென்றதாகவும் வாகன ஓட்டி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே, தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காரால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    • தீபாவளி பண்டிகை தினத்தில் திருச்சியில் 13 இடங்களில் தீவிபத்து நடைபெற்றது
    • கீழ தேவதானபுரத்தில் பழைய பேப்பர் குடவுன் பட்டாசு தீப்பொறியினால் எரிந்து நாசமானது

    திருச்சி,

    தீபாவளி திருநாள் நேற்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட்டது. திருச்சியில் தீபாவளி தினமான நேற்று முழுவதும் பட்டாசு வெடிக்கும் ஓசை எதிரொலித்து கொண்டே இருந்தது.

    தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு துறையினர், சத்திரம் பேருந்து நிலையம், காஜாபேட்டை ஆகிய பகுதிகளில் தீயணைப்பு வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர்.

    இந்நிலையில் பட்டாசு வெடித்ததன் காரணமாக திருச்சியில் ஆங்காங்கே தீவிபத்துக்கள் ஏற்பட்டது. ராக்கெட் பட்டாசு விட்டதினால் ராஜாகாலனி, கே.கே.நகர், அம்மையப்பநகர் ஆகிய பகுதிகளில் உள்ள தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் பந்தல் போட வைத்திருந்த கீற்றுகள் பட்டாசு பொறி பட்டு தீப்பிடித்து எரிந்தது. சோழராஜபுரம் பகுதியில் வீட்டின் முன்புறம் போடப்பட்டிருந்த கீற்று கொட்டகை பட்டாசு தீப்பொறி பட்டு எரிந்து நாசமானது. கீழ தேவதானபுரத்தில் பழைய பேப்பர் குடவுன் பட்டாசு தீப்பொறியினால் எரிந்து நாசமானது. மேலும் பழைய பால்பண்ணை மகாலட்சுமிநகர் பகுதியில் கேஸ்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது.

    இதே போல ஸ்ரீரங்கம் பகுதியில் திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர் நகர், அகிலாண்டேஸ்வரி நகர், கீதாபுரம் ஆகிய பகுதிகளில் ராக்கெட் பட்டாசு காரணமாக 3 இடங்களில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் ராவேந்திரா அபார்மெண்டில் பால்கனியில் வைத்திருந்த துணிகள் பட்டாசு தீப்பொறியின் காரணமாக எரிந்தது. இதனை ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர் அணைத்தனர். 

    • தீபாவளியன்று தீ பற்றி எரிந்த கூரை வீடு
    • மங்களமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் ராசி நகரில் வசித்து வருபவர் கலியபெருமாள் மகன் கோவிந்தராஜ் (58), பந்தல் அமைப்பு காண்ட்ராக்டர் . அருகில் இருக்கும் தமக்கு சொந்தமான வீட்டில் தனது தாயாருடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் இவரது கூரை வீடு மின் கசிவால் நேற்று தீ பற்றி எரிந்தது. அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்து தீயை அணைத்தனர் .

    மேலும் கூரை வீட்டில் பந்தல் போடும் பணிக்கான துணிகள், சோபா ஆகிய பொருட்கள் முற்றிலும் சேதம் அடைந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் ஆகும். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை இச்சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • குன்னம் அண்ணாநகர் ரேசன் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் அரிசு மூட்டைகள் எரிந்து நாசமானது
    • பட்டாசு வெடித்ததால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம்

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே அண்ணா நகர் பகுதியில் ஒரு ரேஷன் கடை இயங்கி வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதா ரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த கடையின் பின்புறம் அப்பகுதி சிறுவர்கள் விளையாடுவது வழக்க மானது. இந்த நிலையில் சிலர் பட்டாசு வெடித்து விளையாடினர்.மேலும் அதிக சத்தம் எழுப்ப வேண்டும் என்பதற்காக ரேஷன் கடை ஜன்னலில் பட்டாசை வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. இதில் தீப்பொறி கடைக்குள் விழுந்து தீப்பிடித்தது.

    கடைக்குள் இருந்து கரும்புகை வெளியேறுவதை அறிந்த கடையின் விற்ப னையாளர் தொல்காப்பியன் அங்கு விரைந்து வந்து, கடையை திறந்து பார்த்தபோது அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேசன் அரிசி மூட்டைகள் தீயில் எரிந்து கொண்டி ருந்தது கண்டு அதிர்ச்சிய டைந்தார். பின்னர் அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை கட்டுப்ப டுத்தினர். இருப்பினும் இந்த தீ விபத்தில் 23 மூட்டை ரேஷன் அரிசி எரிந்து நாசமானது. மேலும் 500க்கும் மேற்பட்ட காலி சாக்குகள் எரிந்து சாம்பல் ஆனது.இதுகுறித்து தொல்காப்பியன் குன்னம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுக்கோட்டை மணல்மேல்குடியில் பட்டாசு கடையில் இன்று திடீர் தீ விபத்து
    • ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்தன

    அறந்தாங்கி, 

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர் மணமேல்குடி கடைவீதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏ.கே.எம்.ட்ரேடர்ஸ் என்ற வெடிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை பூட்டியிருந்த கடையில் இருந்து பெரும் சத்தம் கேட்டுள்ளதை கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.தொடர்ந்து அங்கு வந்து பார்த்த போது பூட்டப்பட்ட பட்டாசு கடையில் இருந்து பெரும் சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறி உள்ளன. மேலும் அந்த கடையில் இருந்து பெரும் புகைமூட்டம் எழுந்துள்ளது. ஏற்கனவே அத்திடிப்பள்ளி பட்டாசு விபத்து செய்தி அறிந்ததால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக யாரும் கடைக்கு அருகில் செல்லவில்லை.

    இது குறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு துறை அங்கு வந்தனர். பாதுகாப்பு கவசங்கள் அணிந்த தீயணைப்பு வீரர் கடைக்கு அருகில் சென்று கடையின் பூட்டை உடைத்து திறந்தார். பின்னர் தீயணைப்பு வீரர்கள் சற்று தூரத்தில் நின்று தண்ணீர் அடித்து வெடித்து சிதறிக்கொண்டிருந்த பட்டாசு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அருகில் சென்று தண்ணீர் உதவியுடன் தீயை முற்றிலுமாக அணைத்தனர். இதனால் தீயானது அருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்துஅங்கு வந்த மணல்மேல்குடி போலீசார், தீ விபத்து குறித்து உரிமையாளர் காளிமுத்து, மற்றும் அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசமானது தெரிய வந்தது. மேலும் இந்த தீ விபத்து மின் கசிவின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காலை நேரம் என்பதாலும், கடை திறக்கப்படவில்லை என்பதாலும், தீ விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • மணமேல்குடி சந்தைப்பேட்டையில் நடந்த தீ விபத்தி 6 கடைகள் எரிந்து நாசமாகின
    • விபத்து குறித்து மணமேல்குடி போலீசார், வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மணமேல்குடி சந்தைப்பேட்டையில் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான சிறு கடைகள் உள்ளன. இந்த கடைகளை மீன் மார்க்கெட்டில் வியாபாரம் செய்பவர்கள் வாடகைக்கு எடுத்து மீன் மற்றும் கருவாடு வியாபாரம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஒரு கடையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே மளமளவென பக்கத்துக்கு கடைகளுக்கும் தீ பரவியது.இதையடுத்து, அப்பகுதி மக்கள் ஜெகதாப்பட்டினம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.இந்த விபத்தால் 6 கடைகள் எரிந்து நாசமாயின. மேலும் கடைகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள கருவாடு மற்றும் மீன்கள் மற்றும் தளவாட பொருட்கள் எரிந்து சாம்பலானது. இந்த விபத்து குறித்து மணமேல்குடி போலீசார், வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வேலாயுதம்பாளையம் காந்திநகர் பழைய இரும்பு கடை எதிரில் வீடு தீப்பிடித்து பொருட்கள் எரிந்து பொருட்கள் நாசமானது
    • தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காந்திநகர் பழைய இரும்பு கடை எதிரில் வசித்து வருபவர் சந்திரசேகர்.இவரது மனைவி விஜயா. இவர்கள் வீட்டில் திடீரென வீட்டுக்குள் மின் கசிவால் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. அதை பார்த்த சந்திரசேகர் மனைவி விஜயா அக்கம் பக்கத்தினரை அழைத்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இது குறித்து விஜயா வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று வீட்டுக்குள் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து அனைத்து அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.இருப்பினும் வீட்டுக்குள் இருந்த சமையல் பொருட்கள் துணிமணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் எரிந்து நாசமாயின.

    • வீட்டில் இருந்த அடுப்பில் காகிதத்தை எரித்த பெண்ணின் உடலில் தீப்பிடித்து எரிந்ததால் உயிரிழந்தார்
    • சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே முனியங்குறிச்சி கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் செல்வம். கூலி தொழிலாளி. இவரது மனைவி வள்ளி(வயது 35). இவருக்கு கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று செல்வம் வேலைக்கு சென்று விட்டநிலையில், வீட்டில் தனியாக இருந்த வள்ளி விறகு அடுப்பில் காகிதங்களை போட்டு கொளுத்தியுள்ளார். அப்போது வள்ளியின் உடையில் தீப்பற்றி உடலில் பரவியது. இதனால் அவர் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து வள்ளியை மீட்டு, சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கரூர் குப்பை கிடங்கு தீ 6 நாட்களுக்கு பின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது
    • தொடர்ந்து தண்ணீர் தெளித்து அணைக்கப்பட்டது

    கரூர்,

    கரூர் வாங்கல் சாலையில் அரசு காலனி அருகே கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பைக்கிடங்கில் கடந்த 31-ந்தேதி மாலை 5.30 மணி அளவில் திடீரென தீப்பற்றி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனையடுத்து கரூர், புகழூர், அரவக்குறிச்சி, முசிறி தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடந்த 5 நாட்களாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் தீ ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. ஆனாலும் முழுவதுமாக தீயை அணைக்க முடியவில்லை. இந்நிலையில் தொடர்ந்து 6-வது நாளாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வீரர்கள், நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து, அதனை முழுவதுமாக அணைத்தனர். இதனால் கரூர் வாங்கல் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    • பெரம்பலூரில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 70 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது
    • விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீசாருக்கான வளாகம், குடியிருப்பு மற்றும் மைதானம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர்பந்தலில் உள்ளது. இங்கு ஆயுதப்படை போலீசார் குடியிருக்கும் வீடுகளின் பின்புறம் மற்றும் அருகே உள்ள பகுதியில், மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இந்த வாகனங்கள் மீது கோர்ட்டில் வழக்கு முடிவடையாமல் நிலுவையில் உள்ளதால், அவை மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வந்தன. மேலும் வாகனங்களை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்தும், புதர் மண்டியும் காணப்பட்டன. இந்த நிலையில் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் யு, வி பிளாக்குகள் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் நேற்று மதியம் 12.45 மணியளவில் திடீரென்று தீப்பற்றி எரிய தொடங்கியது. பின்னர் தீ மள, மளவென பரவி இருசக்கர வாகனங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. இதனால் கரும்புகை வெளியேறியதால் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு வளாகம் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனை கண்ட குடியிருப்பில் வசிப்பவர்கள் இது குறித்து உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனங்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்கிடையே பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி இருசக்கர வாகனங்கள் மீது எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் 70 இருசக்கர வாகனங்கள் தீக்கிரையாகி எலும்புக்கூடாக காட்சியளித்தன.

    • மூலிமங்கலம் பகுதியில் தீப்பிடித்து எரிந்து தென்னை மரங்கள் நாசமானது
    • காய்ந்த செடி, கொடிகளில் தீப்பிடித்ததால் தென்னை மரங்கள் நாசம்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் மூலமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி (50).விவசாயி. இவரது தோட்டம் அருகாமையில் உள்ளது. அதில் தென்னை மரங்களை பயிர் செய்துள்ளார். இந்நிலையில் தென்னை மரங்கள் உள்ள பகுதியில் ஏராளமான செடி கொடிகள் முளைத்து காய்ந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென காய்ந்திருந்த செடி கொடிகளில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்து. தென்ன மரங்களிலும் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.அதை பார்த்த ராமமூர்த்தி அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து தீயை அணைக்க முயற்சி செய்தார்.இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து அனைத்து கட்டுப்படுத்தி தீ அருகில் உள்ள தோட்டங்களுக்கு பரவாமல் தடுத்தனர்.இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

    • கரும்புத்தோட்டம் அருகே திடீர் தீவிபத்து ஏற்பட்டது
    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் திருக்காடுதுறை அருகே உள்ள கரும்பு தோட்டம் அருகே இருந்த முள்வேலிகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சித்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து தீயை அனைத்து கட்டுப்படுத்தி அருகில் உள்ள கரும்பு தோட்டங்களுக்கும், குடியிருப்பு வீடுகளுக்கும் பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

    ×