search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fodder for cows"

    • கொழுப்பு, புரதம், சர்க்கரை, சாம்பல் சத்து ஆகியவை உள்ளன.
    • புரதம், சாம்பல் சத்து, சர்க்கரை ஆகியவை கொழுப்பற்ற திடப்பொருட்கள் ஆகும்.

    பாலுக்கு விலை என்பது பாலில் அடங்கியுள்ள சத்துக்களின் அளவை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. பாலில் கொழுப்பு மற்றும் இதர சத்துக்களை உயர்த்த சரியான தீவன மேலாண்மையை கையாள வேண்டும்.

    பாலில் தண்ணீர், கொழுப்பு, புரதம், சர்க்கரை, சாம்பல் சத்து ஆகியவை உள்ளன. இதில் புரதம், சாம்பல் சத்து, சர்க்கரை ஆகியவை கொழுப்பற்ற திடப்பொருட்கள் ஆகும். இவற்றை தவிர கொழுப்பின் அளவை கொண்டு பாலுக்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது. பொதுவாக, பசும்பாலில் 3.5 சதவீதம் கொழுப்பும், 8.5 சதவீதம் கொழுப்பற்ற திடப்பொருட்களும் இருக்க வேண்டும். பாலில் கொழுப்பு மற்றும் இதர சத்துக்களை தீவனம் உள்பட சில வழிகளில் அதிகரிக்கலாம். மாடுகளில் 1 லிட்டர் பால் உற்பத்திக்கு 400 கிராம் கலப்புத் தீவனம் கொடுக்கலாம்.

    மேலும், கலப்புத் தீவனத்தில் மாவுச்சத்துக்களின் அளவு அதிகரித்தால், பாலில் கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவு அதிகரிக்கும். மாடுகளின் பாலில் இதர சத்துப் பொருட்கள் அதிக அளவில் இருக்க 12 மணி நேரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக பால் கறக்க வேண்டும். மடியில் பாலை சேர விடக்கூடாது. சினை மாடுகளுக்கு 8 மாத சினைக்காலம் முதல் 2 கிலோ அடர்தீவனம் கொடுத்தால் பாலின் உற்பத்தியும், பாலில் கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவு அதிகரிக்கும்.

    பாலில் கொழுப்பின் அளவை அந்த மாடுகளின் மரபு கூறுகள் தீர்மானிக்கின்றன. சில மாடுகளின் பாலில் குறைந்த அளவு கொழுப்பு சத்து இருப்பது அதன் மரபு பண்பாக இருந்தால் அதை நாம் மாற்ற முடியாது. எரிசக்திக்கான தீவனம் மற்றும் நார்ச்சத்து தீவனங்களை அளிப்பதால் கொழுப்புச் சத்தை அதிகரிக்கலாம்.

    பொதுவாக, கன்று ஈன்றவுடன் பசுவின் உடலில் உள்ள கொழுப்பு சத்து பால் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு விடுவதால் மாடுகளின் உடலில் கொழுப்பு சத்து குறைந்து மாடுகள் மிகவும் மெலிந்து இருக்கும்.

    பாலில் கொழுப்பும் குறைவாக இருக்கும். இது போன்ற பாதிப்பு வராமல் தடுக்க, மாடுகள் கன்று ஈனுவதற்கு 2 முதல் 3 வாரங்களுக்கு முன்பிருந்து மாடுகளுக்கு பருத்தி கொட்டை, சோயா, சூரியகாந்தி போன்ற எரிசக்தி மிகுந்த தீவனங்களை அளிக்க வேண்டும்.

    மாடுகள் கறவையில் உள்ள போது கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற எரிசக்தி மிகுந்த தானியங்களை தரவேண்டும். கலப்பு தீவனத்தில் 33 சதவீதம் பிண்ணாக்கு, 30 சதவீதம் தவிடு கலந்து ஒவ்வொரு 3 லிட்டர் கறவைக்கு 1 கிலோ கலப்பு தீவனம் என்ற அளவில் தர வேண்டும். இதன் மூலம் கறவை மாடுகளின் பாலில் கொழுப்பின் அளவை சீராக தக்க வைக்கலாம்.

    மாடுகளின் தீவனத்தில் நார்ச்சத்து குறைவாக இருந்தால் பாலில் கொழுப்பின் அளவும் குறையும். எனவே ஒரு மாட்டிற்கு அன்றாடம் 15 கிலோ பசுந்தீவனம், 4 முதல் 5 கிலோ காய்ந்த தீவனம் அளிக்க வேண்டும்.

    இது தவிர கலப்பு தீவனத்தில் மக்காச்சோளம், கம்பு போன்ற தீவனங்கள் பெரிய அளவு துகள்களாக இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.

    ஒரு மாட்டிற்கு 30 சதவீதம் என்ற அளவில் தாது உப்பு கலவையை தீவனத்துடன் கலந்து அளித்தால் சத்து குறைபாடுகள் நீக்கப்படும். இத்துடன், ஒரு மாட்டிற்கு 15 முதல் 20 கிராம் அளவில் சோடா உப்பை தீவனத்தில் கலந்து கொடுக்கும் போது வயிற்றில் அமிலத் தன்மையால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

    இதனால் பாலில் கொழுப்பு அதிகமாகும். இது போன்ற பராமரிப்புகளை கால்நடை விவசாயிகள் கடைப்பிடித்தால் பாலில் கொழுப்பும், இதர சத்துக்களும் சரியான அளவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம்.

    ×