search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Freight Service"

    • ஒரே நேரத்தில் 42 சரக்கு பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயிலை கையாள முடியும்.
    • சரக்கு நிலைய நடைமேடை உள்பட பல்வேறு நவீன வசதிகள் ரூ.5 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    மதுரை:

    தேனி ரெயில் நிலையத்தில் சரக்கு போக்குவரத்து சேவையை தெற்கு ரெயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய சரக்கு அலுவலகம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அனைத்து நாட்களிலும் செயல்படும். இங்கு பெட்ரோலிய பொருட்கள், நிலக்கரி தவிர மற்ற பொருட்களை கையாள அனுமதிக்கப்படும். இது மதுரை ரெயில்வே கோட்டத்தின் 19-வது சரக்கு முனையமாகும்.

    இந்த அலுவலகம் முழுமையாக கணினி மயமாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் சரக்கு பார்சல்களை பதிவு செய்வது, வாடிக்கையாளருக்கு பதிவு மூப்பு அடிப்படையில் வழங்குவது, சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது போன்ற தகவல்களை பதிவது, வாடிக்கையாளர்களுக்கு சரக்குகளை பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சி ரசீதுகளை வழங்குவது, சரக்கு ரெயில் எங்கு வந்துகொண்டிருக்கிறது போன்ற தகவல்களை அறிவது போன்ற பணிகளை கணிப்பொறி வாயிலாக செயல்படுத்த முடியும்.

    இந்த சேவை மூலம் மதுரை, திண்டுக்கல் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும் சரக்குகளை அனுப்ப முடியும். சரக்கு அலுவலக ரெயில் பாதை அருகே சரக்குகளை கையாள 650 மீட்டர் நீளமும், 16.20 மீட்டர் அகலமும் கொண்ட கான்கிரீட் தளம் அமைக்கப் பட்டுள்ளது. இதனால் மழைக் காலங்களிலும் தங்கு தடையின்றி சரக்குகளை கையாள முடியும்.

    இங்கு ஒரே நேரத்தில் 42 சரக்கு பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயிலை கையாள முடியும். மேலும் சரக்கு போக்குவரத்திற்காக தனி ரெயில் பாதை அமைப்பு உள்ளதால் பயணிகள் ரெயில் போக்குவரத்து தங்கு தடையின்றி நடைபெற வசதி செய்யப்பட்டுள்ளது.

    இங்கு வர்த்தகர்கள் அறை மற்றும் கழிவறை குளியல் அறை வசதியுடன் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு தனித்தனி ஓய்வு அறைகள் அமைக்கப் பட்டுள்ளது. சரக்குகளை லாரிகளில் விரைவாக ஏற்றிச்செல்ல தரமான தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    போதுமான விளக்கு வசதிகளுடன் இரவு நேரத்திலும் சரக்குகளை தடையில்லாமல் கையாள போதுமான மின் விளக்குகள் மற்றும் உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சரக்கு நிலைய நடைமேடை உள்பட பல்வேறு நவீன வசதிகள் ரூ.5 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மதுரை-போடிநாயக்கனூர் மின்மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சரக்குகளை ரெயில் பாதையும் விரைவில் மின்மயமாக்கப்படும்.

    இத்தகவலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    ×