search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gastric"

    • துரித உணவு வகைகளை சாப்பிட வேண்டாம்.
    • செரிமானம் சரியாக இருந்தாலே நம்முடைய உடல் சரியாக இருக்கும்.

    இரைப்பை குடல் கோளாறுகள் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் நவீன மையத்தை அப்பல்லோ ஆஸ்பத்திரி நாளை மறுதினம் (திங்கட்கிழமை) தொடங்க இருக்கிறது. இதுதொடர்பாகவும், இரைப்பை குடல் ரத்தப்போக்கு குறித்தும் அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் இரைப்பை குடல் மூத்த டாக்டர் கே.ஆர்.பழனிசாமி, மருத்துவ சேவைகள் இயக்குனர் டாக்டர் ஆர்.கே.வெங்கடாச்சலம், இரைப்பை குடல் சார்ந்த லண்டன் டாக்டர் மோ தபீக் ஆகியோர் விளக்கி கூறினார்கள். இதில் மூத்த டாக்டர் கே.ஆர்.பழனிசாமி கூறியதாவது:-

    இரைப்பை குடல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான நவீன சிகிச்சை மையத்தை வருகிற 18-ந்தேதி (நாளை மறுதினம்) அப்பல்லோ ஆஸ்பத்திரி தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது. இதற்கு முன்னதாக இரைப்பை குடல் சார்ந்த நோய் குறித்த கருத்தரங்கம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அதன் பின்னர், தென் இந்தியாவை சேர்ந்த 24 இளம் டாக்டர்களுக்கு செரிமானப்பாதையில் இரைப்பை குடல் ரத்தப்போக்குக்கான சிகிச்சை குறித்து பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

    இரைப்பை, குடல், ரத்தப்போக்கு பிரச்சினைகளில் பாதிக்கப்படுபவர்களில் 10 சதவீதம் பேர் உயிரிழப்பை சந்திக்கிறார்கள். இந்த பாதிப்பை தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். இரைப்பை குடல் ரத்தப்போக்கு என்பது செரிமான கோளாறு, வயிற்று புண்கள் மற்றும் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களின் அறிகுறிகளாக இருக்கிறது.

    தற்போதைய நாகரிக உலகில் துரித உணவுகள் (ஜங்க் மற்றும் பாஸ்ட் புட்) குடல் சார்ந்த நோய்களுக்கு ஆணி வேராக உள்ளது. ஏனென்றால் இந்த வகை உணவுகளால் செரிமான கோளாறு ஏற்படுகிறது. துரித உணவு வகைகளை சாப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அதை தொடர்ந்து சாப்பிடக்கூடாது என்றுதான் சொல்கிறோம். அதுவும் தற்போது கல்லூரி மாணவர்கள், ஐ.டி. நிறுவன ஊழியர்கள் பலருக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

    தாமதமாக இரவு உணவு சாப்பிடுவது, தூக்கமின்மை, ஆல்கஹால் அதிகம் எடுத்துக்கொள்வது, சிகரெட் பிடிப்பது போன்றவை காரணமாகவும் இரைப்பை குடல் நோய் பிரச்சினை வருகிறது. இதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடல் அழற்சிநோய் மேற்கத்திய நாடுகளில் அதிகம் இருந்தது. தற்போது மேற்கத்திய கலாசாரத்தை நாம் கடைப்பிடிக்க தொடங்கியதில் இருந்து, இங்கும் குடல் அழற்சிநோய் பாதிப்பு அதிகரித்துவிட்டது. அதிலும் இன்றைய இளைய தலைமுறையினர் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

    செரிமானம் சரியாக இருந்தாலே நம்முடைய உடல் சரியாக இருக்கும். அதில் பழைய சோறு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதை சாப்பிடுவதால் செரிமானம் சீராக உள்ளது. குடிநீர் குடிப்பது, உடற்பயிற்சி செய்து நன்றாக தூங்குவது, வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது ஆகியவற்றை பின்பற்றுவதன் மூலமும் நம் உடல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×