என் மலர்
நீங்கள் தேடியது "General Medicine"
- தனிமையில் இருப்பவர்களுக்கு அல்சைமர் நோய் உருவாகும்.
- மனச்சோர்வு பிற மன நல பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.
தனிமையும்.. இறப்பும்.. தனிமையால் நேரடியாக மரணத்தை ஏற்படுத்த முடியாது என்றாலும், தனிமையில் இருப்பவர்கள் முன்கூட்டியே மரணத்தை தழுவுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தனிமை, இறப்பு விகிதத்தை அதிகரிக்கச் செய்திருப்பதாக கூறுகின்றன.
தனிமையின் அறிகுறிகள்
* தோழமையாக பழகும் நபர்கள் யாருமே இல்லாதது போன்ற உணர்வு
* தாம் ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வு
* தங்கள் உறவினர்கள், குடும்பத்தினருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பது போன்ற உணர்வு
* நட்பு வட்டம் இல்லை அல்லது குறைந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு
* உரிமையுடன் தொடர்பு கொள்ளக்கூடிய நபர்கள் இல்லை என்ற உணர்வு
பணி, படிப்பு, தொழில் ரீதியாக பலரும் குடும்பத்தினர், நட்பு வட்டத்தினரை பிரிந்து தனிமையில் வசிக்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.
முதியவர்கள்தான் தனிமையில் நேரத்தை செலவிடுவார்கள் என்ற நிலை மாறி இளம் தலைமுறையினரும் தனிமையில் காலத்தை கழிக்கும் சூழலை எதிர்கொண்டுள்ளனர்.
அப்படி தம் மீது அன்பு, அக்கறை செலுத்துபவர்களிடம் இருந்து பிரிந்து வாழ்வது மனத்துயரம், அசவுகரியம், தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
நீண்டகாலமாக தனிமையை அனுபவிப்பது மன ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கு விளைவிக்கும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. தனிமை ஏற்படுத்தும் மனச்சோர்வு பிற மன நல பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.
தனிமையில் இருப்பவர்களுக்கு மறதியை ஏற்படுத்தும் அல்சைமர் நோய் உருவாகும் வாய்ப்பு இரு மடங்கு அதிகமாகும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. நாள்பட்ட தனிமைக்கு ஆளாகுவது மன அழுத்தத்தை தூண்டும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்துவிடும்.
தூக்க சுழற்சியை பாதிப்படைய வைத்து நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமடைய செய்துவிடும். அதற்கு இடம் கொடுக்காமல் தனிமையை எதிர்கொள்ளவும், சமாளிக்கவும் உதவும் விஷயங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்....
அன்புக்குரியவர்களுடன் இணையுங்கள்
தொலை தூரத்தில் இருந்தாலும் செல்போன் உரையாடல், வீடியோ அழைப்புகள் மூலம் உங்கள் மீது அன்பு செலுத்துபவர்களுடன் இணையுங்கள். 10 நிமிடம் தொடர்ந்தால் கூட போதும். அந்த தொடர்பும், மனமார்ந்த உரையாடலும் உங்கள் மன நிலையை திறம்பட மேம்படுத்த உதவிடும்.
நன்றி கூறுங்கள்
வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் உங்களின் உயர்வுக்கு ஏதாவதொரு வகையில் சிலர் காரணமாக இருப்பார்கள். அவர்களுக்கு மனமார நன்றி கூறுங்கள். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தனிமையில் இருக்கும் சூழலிலும் மீண்டும் நினைவு கூர்ந்து மனதுக்குள் நன்றி செலுத்துங்கள்.
தனியாக இருக்கும்போது நேர்மறையான எண்ணங்களை மனதில் நிழலாட செய்யுங்கள். விருப்பமான உணவுகளை ருசியுங்கள். மகிழ்ச்சியை வெளிப்படுத்த உதவிடும் சூழலை கட்டமையுங்கள்.
இசையை ரசியுங்கள்
தனிமையை விரட்டி மனதை சஞ்சலங்களுக்கு இடம் கொடுக்காமல் நிலை நிறுத்தக்கூடிய அபார சக்தி இசைக்கு உண்டு. விருப்பமான இசையை கேட்டு ரசியுங்கள். அவை கவனச்சிதறலை தடுக்கும். நேர்மறையான எண்ணங்களை, சூழலை நிரப்ப உதவிடும்.
இயற்கையோடு இணையுங்கள்
வீடு, அறைக்குள் முடங்கியே கிடப்பது தனிமை உணர்வை அதிகரிக்க செய்துவிடும். விரக்தியான மன நிலைக்கு வித்திடும். அலுவலக பணி, தொழில், படிப்பு இவற்றை தவிர்த்து வெளியிடங்களில் சில மணி நேரத்தை செலவிட வேண்டும். அது காலையிலும், மாலையிலும் நடைப்பயிற்சி செய்வதாக இருக்கலாம்.
இயற்கை சூழ்ந்த இடங்கள், பூங்காக்களில் நேரம் செலவிடுவதாக இருக்கலாம். நண்பர்களுடன் பொழுதை போக்குவதாக இருக்கலாம். இயற்கையோடு செலவிடும் நேரம் மன நலத்திற்கு கூடுதல் நன்மைகளை சேர்க்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உணர்வுகளை வழிநடத்துங்கள்
கலை, இசை அல்லது எழுத்து என உணர்ச்சிகளை வழிநடத்தி செல்லும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். அவை படைப்பாற்றல் திறனை அதிகரிக்கவும், தேவையற்ற சிந்தனைகள் மனதை ஆட்கொள்வதை தவிர்க்கவும், கவனச்சிதறலை கட்டுப்படுத்தவும் வழிவகை செய்யும்.
செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடுங்கள்
செல்லப்பிராணிகள் தோழமை உணர்வை கொடுக்கக்கூடியவை. மன அழுத்தத்தைக் குறைக்க உதவுபவை. உங்களிடம் செல்லப்பிராணி இல்லையென்றால் தெரு நாய்களிடம் நேசம் காட்டுங்கள். விலங்குகள் காப்பகத்திற்கு சென்று அங்குள்ள விலங்குகளுடன் நேரத்தை செலவிடுங்கள். அது மனதுக்கு இதமளிக்கும்.
உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள்
உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது அவற்றின் தீவிரத்தைக் குறைக்கும். உங்களின் உணர்ச்சிகளை அன்புக்குரியவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அல்லது மனதில் பதிந்த விஷயங்கள், எண்ணங்களை டைரியில் எழுதும் பழக்கத்தை கடைப்பிடியுங்கள். இத்தகைய செயல்பாடுகள் நல்வாழ்வுக்கு வித்திடக்கூடியவை.
- அனைத்து மணிக்கட்டு வலிகளுக்கும் மருத்துவ சிகிச்சை தேவையில்லை.
- பொதுவாக ஒற்றடம், ஓய்வு மற்றும் வலி நிவாரணி எண்ணெய்யை பயன்படுத்தலாம்.
மணிக்கட்டு வலி பெரும்பாலும் சுளுக்கு அல்லது திடீர் காயங்கள், எலும்பு முறிவுகள் மற்றும் கீல்வாதம், கார்பல் டன்னல் சிண்ட்ரோம், எலும்பு தேய்மானம், நரம்பு பலவீனம் போன்றவற்றாலும் ஏற்படலாம்.
கம்ப்யூட்டர்களில் நீண்ட நேரம் பணிபுரிபவர்கள், தட்டச்சு பணிகளை செய்பவர்கள், நீண்ட தூரம் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஆகியோருக்கும் மணிக்கட்டு வலிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வலிக்கான சரியான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை எடுப்பது அவசியம்.
கார்பல் டன்னல் சிண்ட்ரோம்:
மணிக்கட்டின் உள்ளங்கை பகுதி கார்பல் டன்னல் ஆகும். இதன் வழியாக செல்லும் மீடியன் நரம்பு மீது அழுத்தம் அதிகரிக்கும் போது வலி ஏற்படும்.
கேங்க்லியன் நீர்க்கட்டிகள்:
இந்த மென்மையான திசு நீர்க்கட்டிகள் பெரும்பாலும் உள்ளங்கைக்கு பின்புறம் உள்ள மணிக்கட்டின் பகுதியில் ஏற்படும்.
கீன்பாக் நோய்:
இந்த கோளாறு பொதுவாக இளம் வயதினரை பாதிக்கிறது. மணிக்கட்டில் உள்ள சிறிய எலும்புகளில் ஒன்றான லூனேட் எலும்பிற்கு போதுமான ரத்த ஓட்டம் இல்லாததால் கீன்பாக் நோய் ஏற்படுகிறது.
ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ்:
இது கைகள், கால்கள் மற்றும் உடலின் பல மூட்டுகளை பாதிக்கும் நாள்பட்ட அழற்சி நோயாகும். இந்நோயில் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு மூட்டுகள் மற்றும் சொந்த திசுக்களை தாக்குவதால் இது ஏற்படுகிறது.
டெனோசினோவிடிஸ்:
இது மணிக்கட்டில் உள்ள தசை நாண்களைப் பாதுகாக்கும் இணைப்பு திசுக்களின் வீக்கம் ஆகும்.
மணிக்கட்டு பகுதியில் ஏற்படும் காயங்கள், சுளுக்குகள், எலும்பு முறிவுகள், எலும்பு பிறழ்தல் போன்ற பல காரணங்களால் மணிக்கட்டு பகுதியில் வலி ஏற்படுகிறது. எந்த வகையான நோய் என்பதை ரத்த பரிசோதனைகள், எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்றவை மூலம் கண்டுபிடிக்கலாம்.
அனைத்து மணிக்கட்டு வலிகளுக்கும் மருத்துவ சிகிச்சை தேவையில்லை. சிறு சுளுக்கு மற்றும் வலிகளுக்கு பொதுவாக ஒற்றடம், ஓய்வு மற்றும் வலி நிவாரணி எண்ணெய்யை பயன்படுத்தலாம். ஆனால் வலி மற்றும் வீக்கம் சில நாட்களுக்கு மேல் நீடித்தால் அல்லது மோசமாக இருந்தால், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.
- ஆரோக்கியத்திற்கு நல்ல சுத்தமான கிருமிகள் அற்ற குடிநீர் மிகமிக முக்கியம்.
- குடிநீர் பாட்டில்களில் வெயில் பட்டு பாக்டீரியா வளர வாய்ப்புண்டு.
நீரின்றி அமையாது உலகம் என்ற சொல்லுக்கேற்ப தண்ணீர் இல்லாமல் உலகமும் இயங்காது, உடலும் இயங்காது. நமது உடல் எடையில் சுமார் 60 சதவீதம் தண்ணீரால் நிரப்பப்பட்டிருக்கிறது. எனவே உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல சுத்தமான கிருமிகள் அற்ற குடிநீர் மிகமிக முக்கியம்.
நல்ல குடிநீருக்கென்று ஒரு சுவை, மணம், தரம் உண்டு. அதிக வெப்பம் உள்ள இடத்தில் இருக்கும் குடிநீரில் பாக்டீரியாக் கிருமிகள் வளரவும், நேரடி சூரிய ஒளி படும் இடத்தில் இருக்கும் குடிநீரில் பாசி படரவும் வாய்ப்பு அதிகம். குளிர்ச்சியான இடத்தில் வைக்கப்படும் குடிநீரில் கிருமிகள், பாசிகள் வளர வாய்ப்பு குறைவு.
வீட்டினுள் சாதாரண இடத்தில் நாம் குடிநீரை பாத்திரத்தில் வைத்திருக்கிறோம் என்றால் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் காலி பண்ணிவிடுவது நல்லது. வீட்டிற்குள் பிரிட்ஜில் வைக்கப்படும் வடிகட்டிய குடிநீரை சுமார் நான்கைந்து நாட்களுக்கு மட்டுமே வைத்துக் கொள்ளலாம்.
குடிநீர் வைத்திருக்கும் பாத்திரம் நன்றாக மூடி வைக்கப்பட வேண்டும். இல்லையென்றால் பிரிட்ஜின் உள்ளே இருக்கும் உணவுப் பொருட்கள் மூலம் பூஞ்சைக் காளான் படர வாய்ப்புண்டு.
அதிக நாட்களுக்கு வடிகட்டிய குடிநீரை சேமித்து வைக்க வேண்டும் என்றால் நன்றாக மூடப்பட்ட, சீல் வைக்கப்பட்ட பெரிய பெரிய பாத்திரங்களில் சேமித்து வைக்க வேண்டும். அத்துடன் இந்த பாத்திரங்கள் குளிர்ந்த, இருட்டான பகுதியில் தான் பாதுகாக்கப்பட வேண்டும்.
சூரிய ஒளி நேராக படக்கூடாது. வெப்பமும் அருகில் இருக்கக் கூடாது. அப்பொழுதுதான் நுண்ணுயிர்க் கிருமிகள் வளரும் வாய்ப்பில்லாமல் தடுக்கப்படும்.
பிளாஸ்டிக் பாட்டில்களில் கேன்களில், வைக்கப்படும் குடிநீர் வெப்பத்திலும், சூரிய வெளிச்சத்திலும் அதிக நேரம் இருந்தால் பிளாஸ்டிக்கில் உள்ள கண்ணுக்குத் தெரியாத ரசாயனப் பொருட்கள் சிதைந்து குடிநீரில் கலந்துவிட வாய்ப்புண்டு. எனவே உயர்தரமான பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கேன்களில் தண்ணீரை வைத்து பாதுகாப்பது நல்லது.
நமது வீட்டு வெப்ப சூழ்நிலையில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தான் குடிநீரை சேமித்து வைக்க முடியும். மிகப் பழைய குடிநீரை குடிப்பது நல்லதல்ல. பாட்டிலை திறந்து விட்டால் அந்தத் தண்ணீர், நமது அறையில் இருக்கும் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்ஸைடை இழுத்துக் கொள்ளும். அதனால் சுவை மாறிவிடும்.
பாட்டிலைத் திறந்து விட்டால் ஓரிரு நாட்களுக்குள் குடித்து முடித்து விடுவது நல்லது. காரில் வைக்கப்படும் குடிநீர் பாட்டில்களில் வெயில் பட்டு பாக்டீரியா வளர வாய்ப்புண்டு. தினமும் கண்ணாடி டம்ளரை உபயோகித்து தண்ணீர் குடிப்பது, குடித்த பின் அவ்வப்பொழுது கழுவி வைப்பது மிகவும் நல்லது.
- நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க மருந்து மாத்திரைகள் தேவையில்லை.
- உணவுகளின் மூலமே நோய் எதிர்ப்பு காரணிகளை உடலில் உருவாக்கலாம்.
உடலில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க மருந்து மாத்திரைகள் தேவையில்லை. நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவுகளின் மூலமே நோய் எதிர்ப்பு காரணிகளை உடலில் உருவாக்கலாம்.
இயற்கையில் விளைந்த பழங்களிலும், காய்கறிகளிலும், மூலிகைகளிலும் கொட்டிகிடக்கிறது ஊட்டசத்துக்கள். உடலில் தீங்கு விளைவிக்கும் காரணிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முதலிடம் வகிப்பது வைட்டமின் சி, அடுத்தது வைட்டமின் ஏ மற்றும் பி.
வைட்டமின் சி பெரிய நெல்லிக்காய், கொய்யாப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, குடைமிளகாய், போன்றவற்றில் வைட்டமின் சி அதிகமாக காணப்படுகிறது. புற்று நோயை கூட கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. திசுக்களின் வளர்ச்சிக்கும், உயிரணுக்களை பாதுகாக்கவும் பயன்படுகிறது.
வைட்டமி சி
வைட்டமின் சி அடங்கிய எலுமிச்சை பழச்சாறு நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிகரிக்க உதவுகிறது. அமிலத்தன்மை வாய்ந்த சூழ்நிலையில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வேகமாக வளர்ச்சியுறும்.
மேலும் நன்மை செய்யும் பாக்டீரிக்கள் வாழ்வதற்கு வெப்பமான சூழ்நிலையை பராமரிக்க எலுமிச்சைபழச்சாறு உதவுகிறது. சாலட், அசைவ உணவுகள் போன்றவற்றில் எலுமிச்சை பழச்சாறு கலந்து எடுத்துக்கொள்ளலாம்.
கொய்யாப்பழம், சுலபமாக எல்லோராலூம் வாங்கக்கூடிய பழம். ஆனால் அளப்பறிய வைட்டமின்களை தன்னகத்தே கொண்டது. வைட்டமின் பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், போன்ற ஊட்டச்சத்துக்களை நிறைந்துள்ளது.
எலும்புகள் வளர்ச்சிக்கும், உடலுக்கு உறுதியையும் தருகிறது. பொட்டாசியம் சத்து கொய்யப்பழத்தில் அதிகம் உள்ளது. கொய்யாப்பழத்திலிருக்கும் மெக்னீஷியம் பிற உணவுகளிலிருந்து சத்துக்களை உறிஞ்சு எடுத்து உடலுக்கு அளிக்கிறது.
இதன் காரணமாக நாம் உண்ணும் உணவுகளில் உள்ள முழு ஊட்டச்சத்தும் உடலுக்கு சென்றடைகிறது. நோய் காரணிகளை எதிர்த்து போராடுவதோடு, நோய் தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.
வைட்டமின் ஏ
வைட்டமின் ஏ அகத்தி கீரை, பொன்னாங்கன்னி கீரை, முருங்கைகீரை, கேரட், சக்கரை வள்ளி கிழங்கு, முட்டை, பப்பாளி பழம், மாம்பழம், பசலைக்கீரை, ஆட்டிறைச்சி, கோழி, மாட்டிறைச்சி இவற்றின் ஈரல், வெண்ணெய், நெய் ஆகிவற்றில் உள்ளது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
வைட்டமின் பி
வைட்டமின் பி- நோய் எதிர்ப்பு மண்டலத்தின் உயிரி ரசாயன விளைவுகளுக்கு உதவுகிறது. பாதாம், புரோக்கோலி, பால், முட்டை, சிறு தானியங்கள், கீரை வகைகளில் அதிகம் காணப்படுகிறது.
ஒமேகா 3
ஓமேகா 3 பாலி அன்ச்சாச்சுரேட் கொழுப்பு அமிலங்கள் இதயத்தின் வளர்ச்சிதை மாற்றம், அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற திறனை மேம்படுத்துகிறது. சால்மன் மீன், ஆளிவிதை, அவகேடோ, வால்நட், முட்டை, ஆலிவ் ஆயில் ஆகியவற்றில் நிறைந்துள்ளது. பூசணி விதைகளில் ஆளிவிதைகளுக்கு அடுத்தபடியாக ஓமேகா 3 உள்ளது. இதனையும் சாலட் போன்ற உணவுகளோடு சேர்த்து எடுத்து கொள்ளலாம்.
தயிர்
தயிரிலுள்ள நல்ல பாக்டிரியாக்கள் (புரோபயாடிக்) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, உடலுக்கு நல்ல சக்தியையும் அளிக்கிறது. தயிராக இல்லாமல் மோராக தினமும் எடுத்துக்கொள்ளலாம். உடல்எடையை குறைப்பதிலும், உடலை குளிர்ச்சியாக வைப்பதிலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதிலும் மிக முக்கிய இடம் வகிக்கிறது மோர்.
மக்னீஷயம், சிறுநீரகச் செயல்பாட்டிற்கும், ஒவ்வொரு உறுப்புகளின் செயல்பாட்டிற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் அவசியமானது. நட்ஸ், கீரைகள், கோதுமை, விதைகள் இவற்றில் காணப்படுகிறது. துத்தநாகம்-பீன்ஸ், தேங்காய், கடலை பருப்பு, சிப்பி வகை மீன்கள், பருப்புக்கள், எள், தயிர், பால்பொருட்கள் இவற்றில் காணப்படுகிறது.
புராக்கோலியில் மினரல்ஸ், வைட்டமின் சி, ஏ அடங்கியுள்ளது. இதனை வாரத்தில் இரண்டு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மஞ்சள், இஞ்சி, சோம்பு, மிளகு இவை போன்ற மூலிகைகள் பல்வேறுவகையான நோய்களை அண்டவிடாமல் ஆரம்பத்திலே அழிக்கிறது.
பச்சை பட்டாணியில் வைட்டமின் ஏ,சி,பி1,பி6 போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாய் உள்ளது கராட்டினாய்டுகள், பினோலிக் அமிலங்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் உள்ளது. இந்த சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.
வைட்டமின் ஈ அடங்கிய பாதாம் அதிக நோய் எதிர்ப்பு சக்தியையும் ஆரோக்கியத்தையும் தரக் கூடியது. இரும்பு சத்து, கால்சியம், நார்ச்சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது. புரதமும், நார் சத்துக்களும் நிறைந்த பருப்புக்களை உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.
துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, சுண்டல் வகைகள், தானியங்கள் இவற்றில் எதேனும் ஒன்றை தினமும் எடுத்து கொள்ளலாம். நாளொன்றிற்கு முப்பது கிராம் வரை பருப்புகளை சேர்த்து கொள்ள வேண்டும்.
தண்ணீர், காலையில் வெறும் வயிற்றில் காபி, தேநீர் குடிப்பதை தவிர்த்து, தண்ணீரை குடிக்க வேண்டும். ரத்த ஓட்டம் சீராகி, நச்சுக்கள் அகற்றபட்டு, உடல் ஆரோக்கியம் பெறும். நோய் எதிர்ப்பு திறனை அதிகரிப்பதில் இயற்கை உணவுகள், இயற்கையில் விளைந்த பழங்கள், காய்கறிகள் இவற்றிற்கே முதலிடம்.
இயற்கை உணவுகளினால் உடலுக்கு முழுமையான வைட்டமின்கள், தாதுஉப்புகள், ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. எனவே ரெடிமேட் உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.
உணவுகள் மட்டுமே ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுத்துவிடாது. போதுமான அளவு உடற்பயிற்சியும் அவசியம். இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றது.
உணவு இடைவெளியே இல்லாமல் சாப்பிட்டு கொண்டே இருக்கக்கூடாது. உணவு நன்றாக செரிமானம் அடைந்த பிறகே, செரிமானம் அடைவதற்கு இடைவெளி தந்து, அடுத்தவேளை உணவை உண்ண வேண்டும். இவ்வாறு பழக்கமாக்கிக் கொண்டால், உடலுக்கு வேறெந்த மருந்தும் தேவையே இல்லை.
- வஜ்ரவல்லி, சஞ்சீவினி என பல பெயர்கள் வைத்து அழைக்கிறார்கள்.
- பிரண்டையில் ஏராளமான சத்துகள் காணப்படுகின்றன.
பிரண்டை எனும் தாவரம், வேலி ஓரங்களில் படர்ந்து வளரும் ஒரு கொடி வகையாகும். இது, தண்ணீர் இன்றி வெப்பத்தை தாங்கி வளரும். மழைக்காலங்களில் துளிர் விட ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் பிரண்டையை பறித்து உணவாக உண்பது வழக்கம்.
பழங்காலத்தில் இருந்து பிரண்டை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மனித எலும்பு மண்டலத்தை இரும்பு போல் வலுவாக வைக்கும் திறன் பிரண்டைக்கு உண்டு. இதனால் இதை வஜ்ரவல்லி, சஞ்சீவினி என பல பெயர்கள் வைத்து அழைக்கிறார்கள்.
பிரண்டையில் ஏராளமான சத்துகள் காணப்படுகின்றன. குறிப்பாக, வைட்டமின் ஏ, சி, கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்துகள், பிளவனாய்டு, டேனின், கரோட்டீன் உள்ளிட்ட சத்துகள் உள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக எலும்பு தொடர்பான பாதிப்புகளை சரிசெய்வதில் பிரண்டைக்கு இணை எதுவும் இல்லை என்கிறார்கள் இயற்கை மருத்துவ நிபுணர்கள்.
எலும்பு முறிவு, எலும்பு மூட்டு நகர்வு, எலும்பு தேய்மானம், எலும்பு புரை ஆகியவற்றை சரிசெய்யவும் எலும்புகளை வலிமையாக்கவும் பிரண்டையை மருந்தாக பயன்படுத்தலாம், என்கிறார்கள்.
இதே போல, வயிற்றில் பாக்டீரியா மற்றும் பிற கிருமித் தொற்றுகளின் பாதிப்பினால் ஏற்படும் குடல் புண், வாய்ப்புண், அமிலத்தன்மை குடலில் அதிகரிப்பதால் ஏற்படும் குடல் பாதிப்புகள் ஆகியவற்றையும் குணப்படுத்தும் தன்மை பிரண்டைக்கு உண்டு. தற்போது இந்த பிரண்டை அனைத்து இடங்களிலும் செழிப்பாக வளர்ந்து கிடக்கிறது.
பிரண்டையின் மருத்துவ பயன்கள்:
பிரண்டை எலும்பு வளர்ச்சி, பசியின்மை, சுளுக்கு, செரிமானம், வயிறு உப்பிசம், முதுகு வலி, கழுத்து வலி, வாந்தி, பேதி, வாய்ப்புண், வயிற்றுப்புண், உடல் பருமன், பசியின்மை, மலச்சிக்கல், போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு மருந்தாக அமைகிறது.
துவையல் செய்து சாப்பிடுவதால், அடிபட்ட வீக்கம், சுளுக்கு, வாயுப் பிடிப்பு, தீராத வலி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணமாக செயல்படுகிறது.
மேலும் உடல் சுறுசுறுப்பை அதிகரித்து ஞாபக சக்தியை பெருகச் செய்கிறது. மற்றும் மூளை நரம்புகளை பலப்படுத்தும், எலும்புகளுக்கு அதிக சக்தி தருகிறது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துகிறது.
வாயு சம்பந்தமான நோய்கள் இருந்தால், வயிறு செரிமான சக்தியை இழந்துவிடும். அச்சூழலில் பிரண்டை துவையலை சாப்பிட்டு வந்தால், செரிமான சக்தியைத் தூண்டி, அஜீரணக் கோளாறைப் போக்குகிறது.
மேலும் ரத்தக் குழாய்களில் ஏற்படும் கொழுப்பைக் கரைத்து, ரத்த ஓட்டத்தை சீராக செயல்பட வைக்கிறது. பெண்கள் மாதவிடாய் காலங்களில் ஏற்படுகின்ற இடுப்பு வலி, முதுகுவலியால் அவதிப்படுபவர்கள் பிரண்டை துவையல் சாப்பிட்டுவந்தால் நல்ல பலன் தரும்.
எலும்பு முறிவு ஏற்பட்டால் பிரண்டையின் இளந்தண்டை அரைத்து பற்றுப் போட்டால் எலும்பு முறிவு, அடிப்பட்ட வீக்கம், வலி நிவாரணம் கிடைக்கும். பிரண்டையை பறித்து காயவைத்து அம்மியில் வைத்து அரைத்து, தூள் செய்து நீர்விட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள பகுதியில் தினமும் பூசி வர, எலும்பு முறிவு சரியாகி எலும்புகள் கூடி வலுப்பெறும்.
பிரண்டையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அந்த சாற்றை ஒரு தேக்கரண்டியுடன், ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து தினமும் காலை வேளையில் ஏழு நாட்கள் சாப்பிட்டு வர பெண்களுக்கு வரும் மாதவிடாய் பிரச்சனை சரியாகி ஒழுங்காக மாதவிடாய் ஏற்படக்கூடும்.
பிரண்டைத் துவையலை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள, பூச்சிகள் அழியும். . பசியைத் உண்டு பண்ணும். வயிற்றில் உள்ள குடல் புழுக்கள் நீங்குவதற்கு மருந்தாக சிறந்து விளங்குகிறது. பிரண்டை, சுளுக்கிற்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.
பிரண்டையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு, மோரில் சிறிது உப்புத்தூள் சேர்த்து ஊறவைத்து, காயவைத்து எண்ணெயில் பொரித்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை, நாக்கில் சுவையின்மை போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
பிரண்டைத் துவையல் வயிற்றுப்புண், வாய்ப்புண், ஊளைச்சதை இவற்றைத் குணமாக்குகிறது. பிரண்டைத் துவையலை சாப்பிட்டு வருவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் நீங்கும்.
- கருப்பு பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதன் மூலம் நச்சு ரசாயனங்கள் உணவில் சேரும்.
- நச்சு ரசாயனங்கள் உணவில் கலந்து உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும்.
ஆன்லைன் மூலமாக எல்லாவிதமான பொருட்களையும் வாங்கும் நிலைமை தற்போது காணப்படுகிறது. வீடுகளில் சமையல் செய்வதற்கு பதிலாக ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து வரவழைத்து சாப்பிடும் பழக்கமும் அதிகரித்து வருகிறது.
உணவுகள் கருப்பு பிளாஸ்டிக் பாக்ஸ்கள் மற்றும் டப்பாக்களில் வைத்து விநியோகம் செய்யப்படுகிறது. இதை சேமித்து மீண்டும் பயன்படுத்துவது பலருக்கு வசதியாகவும் இருக்கிறது.
கருப்பு பிளாஸ்டிக் பொருட்கள் (உணவு தட்டுகள், கரண்டிகள், கொள்கலன்கள்) அன்றாட பயன்பாட்டில் இருக்கிறது. கருப்பு பிளாஸ்டிக் பெரும்பாலும் பழைய எலக்ட்ரானிக்ஸ் உள்பட மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
சமீபத்திய ஆய்வில் கருப்பு பிளாஸ்டிக் பொருட்களில் 85 சதவீதத்தில் நச்சு தீப்பிழம்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது புற்றுநோய் அபாயங்களுடன் தொடர்புடையது. கருப்பு பிளாஸ்டிக்கில் உணவை சூடாக்குவது அல்லது கருப்பு பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பாத்திரங்களை பயன்படுத்துவதன் மூலம் நச்சு ரசாயனங்கள் உணவில் சேரும். இதனால் கருப்பு பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இது குறித்து புற்றுநோய் டாக்டர்கள், நிபுணர்கள் கூறியதாவது:-
கருப்பு பிளாஸ்டிக் பாத்திரங்கள், பொருட்களில் புற்றுநோய் அபாயங்களுடன் தொடர்புடைய நச்சு தீப்பிழம்புகள் இருக்கின்றன. இந்த ரசாயனங்கள் உணவில் கலந்து காலப்போக்கில் பாதிப்பை ஏற்படுத்தும்.
டெகாபிடி மற்றும் இதேபோன்ற கலவைகள் ஹார்மோன்களில் தலையிடலாம். கருப்பு பிளாஸ்டிக்கில் பெரும்பாலும் பிஸ்பெனால் ஏ(பிபிஏ) மற்றும் பித்தலேட்டுகள் போன்ற பொருட்கள் உள்ளன. அவை இருதய நோய்கள், நீரிழிவு மற்றும் இனப்பெருக்க பிரச்சினைகளுடன் தொடர்புடையவை.
கருப்பு பிளாஸ்டிக்கில் இருந்து மைக்ரோ பிளாஸ்டிக்கள், தேநீர் பைகள், பாட்டில் தண்ணீர் போன்ற அன்றாடப் பொருட்களின் மூலம் அடிக்கடி உட்கொள்வதால், உடலில் நச்சுத்தன்மையை அதிகரிக்கிறது.
கருப்பு பிளாஸ்டிக்கை புற்றுநோயுடன் நேரடியாக இணைக்கும் உறுதியான சான்றுகள் இல்லை என்றாலும் அதன் ரசாயன கலவை எச்சரிக்கையாக இருக்க போதுமான ஆபத்துகளை ஏற்படுத்துகிறது.
உணவு சேமிப்பு மற்றும் தயாரிப்புக்காக கருப்பு பிளாஸ்டிக்கை தவிர்ப்பதோடு கண்ணாடி அல்லது துருப்பிடிக்காத எக்கு போன்ற பாதுகாப்பான, பாதிப்பை ஏற்படுத்தாத ரசாயன பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
மைக்ரோவேவ் அல்லது வேறு வகையில் கருப்பு பிளாஸ்டிக்கில் உணவை சூடாக்குவதை தவிர்க்க வேண்டும். சூடுபடுத்துவதால் நச்சு ரசாயனங்கள் உணவில் கலந்து உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பி.பி.ஏ. மற்றும் பித்தலேட்டுகள் போன்ற கருப்பு பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் நாளமில்லா சுரப்பிகளை சீர்குலைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது இனப்பெருக்க சுகாதார பிரச்சனைகள், உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.
கருப்பு பிளாஸ்டிக்கில் உள்ள சில சேர்க்கைகளால் வளர்ச்சி மற்றும் நரம்பியல் விளைவு ஏற்படுவதாக ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.
கருப்பு பிளாஸ்டிக்கில் இருந்து வரும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் உணவு, நீர் மற்றும் காற்றில் ஊடுருவி வீக்கம், ஆக்சிஜனேற்ற அழுத்தம் மற்றும் செல்கள் சேதத்தை மனித உடலில் ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கருப்பு பிளாஸ்டிக்குகளுக்கும், புற்றுநோய்க்கும் இடையே உள்ள நேரடி தொடர்பு இன்னும் ஆராய்ச்சியில் இருந்தாலும், அவற்றின் வேதியியல் கலவை மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்துடன் தொடர்புடைய அபாயங்கள் அதிகமானவை.
கருப்பு பிளாஸ்டிக்கில் உணவை சூடாக்குவதை தவிர்ப்பது ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான விவேகமான முடிவாகும்.
- நாக்கு புற்றுநோய் வாய் முழுவதும் பரவக்கூடும்.
- வாய் அல்லது நாக்கில் சிவப்பு அல்லது வெள்ளை புள்ளிகள்.
நாக்கு புற்றுநோய் ஸ்குவாமஸ் செல் கார்சினோமாவால் ஏற்படுகிறது. ஸ்குவாமஸ் செல்கள் என்பது தோல் மற்றும் நாக்கின் மேற்பரப்பில் இருக்கும் மெல்லிய, தட்டையான செல்கள் ஆகும்.
புற்றுநோய் உடலின் எந்த பகுதியிலும் தோன்றலாம். அதன் சில அறிகுறிகள் ஆரம்பத்திலேயே தோன்றினாலும், அவை பெரும்பாலும் சாதாரணமானவை என்று புறக்கணிக்கப்படுகின்றன. எனவே, அதன் அறிகுறிகள் இறுதிக் கட்டத்தை அடையும் வரை தோன்றாமல் போகலாம். குறிப்பாக நாக்கு புற்றுநோய் வாய் முழுவதும் பரவக்கூடும்.
நாக்கில் பல்வேறு வகையான புற்றுநோய்கள் ஏற்படலாம். இந்த புற்றுநோய் நாக்கில் தொடங்கலாம் அல்லது தொண்டையில் தோன்றி பின்னர் வளரலாம். எனவே, அவை இரண்டையும் பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
நாக்கு புற்றுநோயின் அறிகுறிகள்:
இந்த வகை புற்றுநோய் வாய் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. இதை எளிதாக கண்டறியலாம். ஏனெனில், அதன் அறிகுறிகள் நாக்கில் எளிதில் தெரியும்.
அது ஓரோபார்னீஜியல் நாக்கு புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. அதன் அறிகுறிகள் சிறிது தாமதத்துடன் தோன்றும். அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே இது நிணநீர் முனைகளுக்கு பரவியுள்ளது. இது நாக்கின் பின்புறத்தில் காணப்பட்டால், முதலில் அதை அடையாளம் காண்பது கடினமாக இருக்கும்.
அறிகுறிகள்:
* வாய் அல்லது நாக்கில் சிவப்பு அல்லது வெள்ளை புள்ளிகள்
* தொடர்ந்து தொண்டை வலி
* தொண்டையில் சிக்கிக்கொள்வது போன்ற உணர்வு.
* தொனியில் மாற்றம்
* தாடையில் வீக்கம்
* வாய் அல்லது நாக்கில் உணர்வின்மை
காரணங்கள்:
நாக்கில் உள்ள ஆரோக்கியமான திசுக்களின் டி.என்.ஏ. மாறத் தொடங்கும் போது புற்றுநோய் தொடங்குகிறது. திசுக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய தகவல்கள் திசுக்களின் டி.என்.ஏ.வில் உள்ளன.
ஆனால் இதில் உள்ள மாற்றம் என்னவென்றால், திசுக்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இயற்கையான செயல்முறைகள் மூலம் அவை இறக்கும் நேரம் வந்தாலும் அவை இறக்காது.
கூடுதல் திசுக்கள் வளர்ந்து கட்டிகளை உருவாவதற்கு காரணமாகிறது. இந்த நிலையில், திசுக்கள் உடைந்து மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும். சில நேரங்களில் புற்றுநோய் HPV வைரசாலும் ஏற்படலாம்.
புகையிலை பயன்பாடு மிகவும் ஆபத்தானது. நீங்கள் எந்த வடிவத்தில் புகையிலையைப் பயன்படுத்தினாலும் உங்களுக்கு வாய்வழி புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம்.
மது அருந்துவதும் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
HPV வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது வாய்வழி புற்றுநோயை ஏற்படுத்தும்.
சிகிச்சை முறைகள்:
மருத்துவர் நாக்கின் நிலையை பரிசோதித்து அதற்கு சிகிச்சை அளிப்பார். கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி, நோயெதிர்ப்பு சிகிச்சை மற்றும் சில நேரங்களில் நாக்கு அறுவை சிகிச்சை கூட தேவைப்படுகிறது. அது தொண்டை வரை பரவினால், நிணநீர் முடிச்சு அறுவை சிகிச்சை அவசியம்.
- வாசனை திரவியத்தில் மறைந்திருக்கும் ஆபத்துகள் குறித்து யாரும் அறிந்திருப்பதில்லை.
- பித்தலேட்டுகள் போன்ற ரசாயனங்கள் உள்ளன.
தற்போதைய இளம் தலைமுறையின் இடையே வாசனை திரவியங்கள் பயன்படுத்தும் பழக்கம் அதிகம் உள்ளது. மேலும் குளிர்காலத்தில் இன்னும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் மறைந்திருக்கும் ஆபத்துகள் குறித்து யாரும் அறிந்திருப்பதில்லை.
வயது வித்தியாசமின்றி அனைவரும் வாசனை திரவியத்தை தினமும் பயன்படுத்து வருகிறார்கள். வெளிநாட்டு வாசனை திரவியங்களைப் பயன்படுத்துவதை பெருமையாக கருதுகின்றனர்.
உடலில் உள்ள வாசனை ஈர்ப்பை அதிகரிப்பது போல, வாசனை திரவியத்தில் ஒரு பயங்கரமான ஆபத்து மறைந்திருக்கிறது.
ஆய்வாளர்களின் கருத்துபடி வாசனை திரவியங்களில் பித்தலேட்டுகள் போன்ற ரசாயனங்கள் உள்ளன. இந்த ரசாயனம் நெயில் பாலிஷ் மற்றும் கூந்தல் பராமரிப்பு பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இது பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் உணவு பேக்கேஜிங் தயாரிப்பிலும் கூட பயன்படுத்தப்படுகிறது.
இந்த வேதிப்பொருள் இன்சுலின் எதிர்ப்பு, இதய நோய் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சியை கூட பாதிக்கிறது. உடலில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். வாசனை திரவியங்களில் உள்ள ரசாயனங்கள் குழந்தைகளின் மூளையையும் பாதிக்கின்றன.
வாசனை திரவியத்தைப் பயன்படுத்துவது மனநிலையை மேம்படுத்தும் அதே வேளையில், அது ஆபத்தையும் உருவாக்கும்.
கூடுதலாக, உடலின் நாளமில்லா சுரப்பி அமைப்பிலும் பிரச்சனைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது இனப்பெருக்கத்தை பாதிக்கிறது. ஹார்மோன், பிட்யூட்டரி, தைராய்டு மற்றும் மனநிலை ஊசலாட்டங்களும் ஏற்படலாம்.
நம்முடை சிறிய மாற்றங்கள் மூலம் பெரிய இழப்புகளை தவிர்க்கலாம். ரசாயனங்கள் இல்லாத பொருட்களை பயன்படுத்துவதே சிறந்தது. இந்த மாற்றம் ஒரே நாளில் சாத்தியமில்லை. பழகுவதற்கு நீண்டகாலம் ஆகும். அதேபோல் துணிகளை துவைக்கும் போது வாசனை பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பதும் நல்லது.
- உடற்பயிற்சிகள் மற்றும் மருத்துவம் எடுப்பது சிறந்தது.
- வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் அவசியம்.
தாம்பத்தியத்தின் போது விரைவில் விந்து வெளியேறுதல் என்பது பரவலாக ஆண்களுக்கு காணப்படும் பிரச்சனையாகும். தாம்பத்தியத்தில் 1 முதல் 3 நிமிடங்களுக்குள் விந்து வெளியேறுவதை விரைவில் விந்து வெளியேறுதல் எனப்படுகிறது.
சராசரியாக ஒரு நாளின் முதல் தாம்பத்தியத்தின் போது 5 முதல் 7 நிமிட நேரம் என்று மருத்துவ ரீதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. 10 நிமிடத்திற்கு மேல் நீடித்தவை, 'மிக நீளமான நேரம்' என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் இதில் ஒவ்வொரு நபரும் வெவ்வேறு நேரத்தில் உச்சத்தை அடைவதால் இந்த கால அளவு நபருக்கு நபர் வேறுபடுகிறது. மேற்குறிப்பிட்ட நேரம் தாம்பத்தியத்தின் முன் உள்ள, பேச்சு கொஞ்சுதல், முத்தம், இவைகளை தவிர்த்தது ஆகும்.
காரணங்கள்:
முன்கூட்டியே விந்து வெளியேறுவதற்கான காரணங்கள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. ஒரு காலத்தில் இது உளவியல் ரீதியானது என்று மட்டுமே கருதப்பட்டது. ஆனால் இது உளவியல் மற்றும் உடலியல் காரணிகளின் சிக்கலான தொடர்புகளை உள்ளடக்கியது என்று சுகாதார வல்லுநர்கள் இப்போது கூறுகிறார்கள்.
உளவியல் காரணங்கள்:
மனச்சோர்வு, பயம், பதற்றம், குற்ற உணர்வுகள், முன்கூட்டியே விந்து வெளியேறி விடுமோ என்று கவலைப்படுதல்.
உடல் ரீதியான காரணம்:
ஒழுங்கற்ற ஹார்மோன் அளவுகள், குறிப்பாக குறைந்த டெஸ்டோஸ்டிரோன் அளவு, டோபமைன், செரட்டோனின் போன்ற மூளை ரசாயனங்களின் குறைந்த அளவுகள், புரோஸ்டேட் அல்லது சிறுநீர்க்குழாய் வீக்கம் மற்றும் தொற்றுகள், நீரிழிவு, ரத்த அழுத்த நோய்கள், மற்றும் உடல் பருமன்.
உணவுகள், உடற்பயிற்சிகள்:
இந்த பிரச்சினை உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மனச் சோர்வை ஏற்படுத்துகிறது. ஆகவே இதற்கான உடற்பயிற்சிகள் மற்றும் மருத்துவம் எடுப்பது சிறந்தது. இடுப்பு தசைகளை பலப்படுத்த 'கெகல்' பயிற்சிகளை செய்யலாம். உடல் வெப்பத்தை தணிப்பதற்கு வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் அவசியம்.
தினசரி இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். மாதுளம் பழம், வாழைப்பழம், தர்பூசணி பழம், திராட்சைப் பழம் இவைகளில் ஒன்றை தினசரி சாப்பிட வேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மலச்சிக்கல் இருந்தால் நிலவாகைச் சூரணம் 1 கிராம் வீதம் இரவு தூங்குவதற்கு முன்பு வெந்நீரில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பயம், பதற்றம், கவலை, மனச்சோர்வு நீக்குவதற்கு தியானம், பிரார்த்தனை செய்ய வேண்டும். தேவைப்பட்டால் உளவியல் ஆலோசனைகள் பெற வேண்டும். இரவு குறைந்தது ஆறு மணி நேரம் தூங்க வேண்டும். தினசரி நடைப்பயிற்சி, சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
உணவில் முருங்கைப்பூ, முருங்கைக்கீரை, முருங்கைக்காய், பசலைக்கீரை, அரைக்கீரை, தூதுவளை, பாதாம், பிஸ்தா, வால்நட், பூசணி விதை, முருங்கை விதை, அத்திப்பழம், பேரீட்சை பழம், சுரைக்காய், பூசணிக்காய், புடலங்காய், முட்டை, பால், தயிர், மோர், நெய் இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
- கொழுப்பின் அளவையும் சர்க்கரை அளவையும் குறைக்கிறது.
பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருபவைகளில் முக்கியமான ஒன்று பனங்கிழங்கு. கற்பகத்தரு என்று அழைக்கப்படும் பனை மரம் பல்வேறு பலன்களை தருகிறது. அதில் பனங்கிழங்கும் மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் பனை உணவாக திகழ்கிறது.
உடலுக்கு பல்வேறு நன்மைகள் தரும் பனங்கிழங்கு, கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பனைமரத்தில் இருந்து கிடைக்கப்பெறுகிறது. இது மருத்துவ குணமும் கொண்டது. இதில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் ரத்த சோகையை போக்கும் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
இதில் பொட்டாசியம், வைட்டமின் பி1, பி2, பி3 மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. நார்ச்சத்து, கால்சியம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது சரியான செரிமானத்தை உறுதி செய்கிறது.
நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்த சோகை பிரச்சினையை குறைக்கிறது.
பனங்கிழங்கில் கால்சியம் அதிகம் இருப்பதால் மூட்டு வலி மற்றும் முழங்கால் வலியைக் குறைக்க உதவுகிறது. எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஆக்குகிறது. நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவையும் சர்க்கரை அளவையும் குறைக்கிறது.
மெக்னீசியம் நிறைந்திருப்பதால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இதயம் தொடர்பான பிரச்சினைகளை குறைக்கிறது. அத்துடன் நரம்பு பலவீனம், நரம்புகளில் உள்ள அடைப்புகளையும் நீக்குகிறது. நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளை குறைக்கிறது.
இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலில் உள்ள பாதுகாப்பான வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. எனவே, பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
பெருங்குடலில் அசுத்தங்கள் சேராமல் தடுக்கிறது. நச்சுக்களை நீக்குகிறது. பனங்கிழங்கில், கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்..
மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. பசியை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு இருப்பதால், அதிகமாக சாப்பிடுவது குறையும்.
தலை பொங்கல் கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு பெண் வீட்டார் சார்பில் சீதனங்களுடன் பனங்கிழங்கும் கண்டிப்பாக வழங்கப்படும். இதற்காக பெரும்பாலானோர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே பனை மரத்தில் இருந்து விழும் பனம்பழத்தை தனித்தனியாக பிய்த்து எடுத்து மண்ணில் புதைத்து வைப்பார்கள். ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்து பனங்கிழங்கை தோண்டி எடுத்து தங்களது பிள்ளைகளுக்கு கொடுப்பார்கள். இடவசதி இல்லாதவர்கள் மார்க்கெட்டுகளுக்கு சென்று பனங்கிழங்குகளை வாங்குவார்கள்.
நெல்லை, தென்காசி தூத்துக்குடி மாவட்டங்களில் பனங்கிழங்கு சாகுபடி அதிக அளவில் நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் பணகுடி, திசையன்விளை, ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளிலும், தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி, கடையநல்லூர், சேர்ந்தமரம், சுரண்டை, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி, எட்டையபுரம் பகுதிகளிலும் சாகுபடி செய்யப்படும் பனங்கிழங்குகள் பொங்கல் பண்டிகையையொட்டி மார்க்கெட்டுகளில் விற்பனைக்காக கொண்டு செல்லப்படும்.
தற்போது நெல்லை டவுன் மார்க்கெட், பாளையங்கோட்டை சமாதானபுரம் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் பனங்கிழங்கு விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. 20 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.120-க்கும், 25 கிழங்குகள் கொண்ட கட்டு ஒன்று ரூ.150-க்கும் விற்கப்படுகிறது.
பனங்கிழங்கு விளைச்சல் அடைந்த பிறகு அதோடு இணைந்த விதையை உடைத்தால் அதற்குள் கெட்டியான கேக் போன்ற உணவுப் பொருள் இருக்கும். அது தவுன் என்று அழைக்கப்படுகிறது. இதையும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சுவைத்து மகிழ்கின்றனர்.
- உண்ண வேண்டிய உலர் பழங்கள்.
- புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் அதிகம் கலந்திருக்கும்.
உலர் பழங்கள் அளவில் சிறியவை. ஆனால் ஊட்டச்சத்துகள் மிகுந்தவை. பழங்களை தவிர்க்கும் குழந்தைகள் கூட உலர் பழங்களை ருசிக்க விரும்புவார்கள். சுவையான, குறைவான கலோரி கொண்ட சிற்றுணவை தேர்வு செய்ய தடுமாறுகிறீர்களா?
பசியை போக்குவதுடன், உற்சாகமாக செயல்பட வைக்கும் உணவு வகைகளை விரும்புகிறீர்களா? ஆம்! எனில் உலர் பழங்களை தேர்வு செய்யலாம். ஏனெனில் உலர் பழங்களில் சோடியம், கொலஸ்ட்ரால் அளவு குறைவாகவே இருக்கும்.
புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் அதிகம் கலந்திருக்கும். அவை வழங்கும் நன்மைகள் ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகை செய்யும். உலர் பழங்களை ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?
பிஸ்தா
தொடர்ந்து உலர் பழங்கள் சாப்பிடும் வழக்கம் கொண்டவர்களுக்கு பிஸ்தா சிறந்த தேர்வாக அமையும். இது பசியை கட்டுப்படுத்தி நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்கும் உணர்வை தரும். இதில் ஒலிக் அமிலம், ஆன்டி ஆக்சிடென்டுகள், கரோட்டின்கள், வைட்டமின் ஈ, தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, செலினியம், துத்தநாகம் மற்றும் பாலிபீனாலிக், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
ஆரோக்கிய நன்மைகள்:
* நீரிழிவு நோயை தடுக்கும்.
* கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
* உடல் எடையைக் குறைக்க உதவும்.
28 கிராம் பிஸ்தாவில் புரதம் 5.72 கிராம், நார்ச்சத்து 3 கிராம், கார்போஹைட்ரேட் 7.7 கிராம், கொழுப்பு 12.85 கிராம், 159 கலோரிகள் உள்ளன.
முந்திரி
இதில் உடலுக்கு தேவையான வைட்டமின் ஈ, வைட்டமின் பி6, புரதம் மற்றும் மெக்னீசியம் போன்றவை நிறைய உள்ளன. சிறுநீரக வடிவிலான இந்த உலர் பழம் உடல் எடையைக் குறைக்கவும், இதய நோய் ஏற்படும் அபாயத்தை தடுக்கவும், கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
28 கிராம் முந்திரி பருப்பில் புரதம் 5 கிராம், நார்ச்சத்து ஒரு கிராம், இரும்பு (தினசரி தேவையில் 11 சதவீதம்), தாமிரம் (தினசரி தேவையில் 67 சதவீதம்), கார்போஹைட்ரேட் 9 கிராம், கொழுப்பு 12 கிராம், 157 கலோரிகள் உள்ளன.
அத்தி
ஊட்டச்சத்துக்கள் மிகுந்த அத்தி, எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். உடல் எடையை குறைக்க உதவும்.
100 கிராம் உலர்ந்த அத்திப்பழத்தில் புரதம் 3.3 கிராம், நார்ச்சத்து 9.8 கிராம், இரும்பு 2.03 மி.கி., மெக்னீசியம் 68 மி.கி., கால்சியம் 162 மி.கி., வைட்டமின் சி 1.2 மி.கி., 249 கலோரிகள் உள்ளடங்கி இருக்கின்றன.
பாதாம்
இது உலர் பழங்களிலேயே முதன்மையானது, பிரபலமானது. இதில் வைட்டமின் ஈ, அத்தியாவசிய எண்ணெய்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளடங்கி இருப்பதால் பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் ஏற்றது. இதனை அப்படியே பச்சையாகவோ, வறுத்தோ, தண்ணீரில் ஊறவைத்தோ சாப்பிடலாம்.
ஆரோக்கிய நன்மைகள்:
* இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
* உடல் எடையை சீராக நிர்வகிக்க துணை புரியும்.
* சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு பலம் சேர்க்கும்.
* ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
28 கிராம் பாதாமில் 6 கிராம் புரதம், 4 கிராம் நார்ச்சத்து, தினசரி வைட்டமின் ஈ தேவையில் 35 சதவீதம், தினசரி மெக்னீசியம் தேவையில் 20 சதவீதம், தினசரி கால்சியம் தேவையில் 8 சதவீதம் இருக்கிறது.
பேரீட்சை
உலர் பேரீச்சம்பழத்தில் நார்ச்சத்து, இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இந்த உலர் பழம் குளிர்காலத்தில் ஆரோக்கியத்தை பாதுகாக்க ஏற்றது. உடல் எடையைக் குறைக்க உதவும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். உடல் ஆற்றல், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 7 கிராம் பேரீச்சம்பழத்தில் (ஒரு பழம்) புரதம் 0.2 கிராம், நார்ச்சத்து 0.6 கிராம், சோடியம் 0.14 மி.கி, கார்போஹைட்ரேட் 5.3 கிராம், 20 கலோரிகள் உள்ளன.
ஒரு நாளைக்கு எத்தனை உலர் பழங்கள் சாப்பிட வேண்டும்?
உலர் பழங்களின் அதிகபட்ச நன்மைகளைப் பெற, தினமும் 4 முதல் 7 வரை சாப்பிடலாம். சரியான அளவில் உட்கொள்வது உடலுக்கு சரியான ஊட்டச்சத்தை அளிக்கும்.
எல்லா உலர் பழங்களையும் ஒரே நேரத்தில் சாப்பிடலாமா?
ஏதேனும் ஒரு உலர் பழம் சாப்பிடுவதாக இருந்தால் 4 முதல் 7 வரை உட்கொள்ளலாம். அனைத்து உலர் பழங்களையும் சாப்பிடுவதாக இருந்தால் எல்லாவற்றிலும் ஒன்று, இரண்டு எடுத்துக்கொண்டு மொத்தம் ஒரு கைப்பிடி அளவுக்குள்ளாகவே (20 முதல் 30 கிராமுக்குள்) சாப்பிட வேண்டும்.
உடல் எடையை குறைப்பதற்கு எந்த உலர் பழம் சிறந்தது?
உடல் எடை குறைப்பு நடவடிக்கையை விரைவுபடுத்த விரும்பினால், தினமும் பேரீச்சம்பழம், அக்ரூட் பருப்புகள், உலர் திராட்சை, ஆப்ரிகாட் போன்றவற்றை மிதமான அளவில் உட்கொள்ளலாம்.
உடல் எடை அதிகரிக்க எந்த உலர் பழம் சிறந்தது?
உடல் எடை அதிகரிக்க விரும்பினால், முந்திரி, பாதாம், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணி விதைகளை சாப்பிடுவது நல்லது.
உலர் பழங்களை இரவில் சாப்பிடலாமா?
உலர் பழங்களை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்த பிறகு அதிகாலையில் சாப்பிடுவதே சிறந்தது.
- ஒட்டுமொத்த கொழுப்பின் அளவை குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.
- ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கும் உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை பொறுத்த வரை ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். அது மட்டுமல்லாமல், உணவுப் பொருள்களைத் தயார் செய்யத் தேவைப்படும் எண்ணெயும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எவ்வாறு இதய ஆரோக்கியத்திற்கு கடுகு எண்ணெய் நன்மை பயக்கும் என்பது குறித்து காணலாம்.
உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், நட்ஸ், விதைகள் போன்றவை அடங்கும். இதுதவிர, நம் அன்றாட உணவில் தேர்ந்தெடுக்கும் எண்ணெய் வகைகளும் உடல் ஆரோக்கியத்திற்குப் பாதுகாப்பைத் தரக்கூடியதாக அமைகிறது.
குறிப்பாக, இதய ஆரோக்கியத்திற்கு உகந்த எண்ணெய்களை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமாகும். அந்த வகையில் உணவுப்பொருட்களில் ஒன்றான கடுகு இல்லாமல் சில உணவு வகைகள் முழுமையடையாது. ஆனால், இது ஏன் பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் அதன் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து யோசித்ததுண்டா?
ஆம். சிறிய அளவிலான கடுகு உடல் ஆரோக்கியத்திற்கு பலதரப்பட்ட நன்மைகளைத் தருகிறது. கடுகு கொண்டு தயாரிக்கப்படும் கடுகு எண்ணெய் உண்மையில் உடலுக்கு மிகுந்த நன்மையை தருகின்றன.
கடுகானது ஆக்சிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளது. கடுகு எண்ணெய்யில் சைனசிடிஸ், சளி, தடுக்கப்பட்ட மூக்கு, தோல் மற்றும் முடிக்கு போன்றவற்றிற்கு நன்மை தருகிறது.
கடுகு எண்ணெய் நன்மைகள்:
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
கடுகு எண்ணெயில் ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தின் ஒரு வகையான ஆல்பா-லினோலெனிக் அமிலம் நிறைந்துள்ளது. இது உடலின் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதால், இது இதய நோயாளிகளுக்கு பெரிதும் பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த கொழுப்பு அமிலங்கள் வழக்கமான கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், பிளேட்லெட்டுகளின் ஒட்டும் தன்மையைக் குறைக்கிறது. மேலும், இது பக்கவாதம், அரித்மியா மற்றும் மாரடைப்பு அபாயங்களைக் குறைக்க உதவுகிறது.
ஆரோக்கியமான கொழுப்புகள்
கடுகு எண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்து காணப்படுகிறது. இதில் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.
இந்த இரண்டு அமிலங்களுமே HDL கொழுப்பை அதிகரிப்பதற்கும், எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைப்பதற்கும் உதவுகிறது. இவை இரண்டுமே இதய ஆரோக்கியத்திற்கு உதவும் கொழுப்புகள் என அழைக்கப்படுகிறது.
ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்த
கடுகு எண்ணெயில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் பண்புகள் உள்ளது. இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பிற கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கும் உதவுகிறது. இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் போன்ற நோய்களைத் தடுக்கலாம்.
ஆக்சிஜனேற்றிகள்
இந்த எண்ணெயில் அதிகளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும், இது ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி, செல்களை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
மேலும், இது இரத்த நாளங்கள் மற்றும் இதய திசுக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கிறது. கூடுதலாக, இதில் அதிகளவிலான வைட்டமின் ஈ உள்ளது.
ரத்த ஓட்டத்தை மேம்படுத்த
கடுகு எண்ணெயை உட்கொள்வது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. எனவே, இது இதயம், செல்கள் மற்றும் திசுக்கள் போதுமான அளவு ஆக்சிஜனைப் பெறுவதையும், ஆக்சிஜனை மாற்றுவதற்கான முழு செயல்முறையும் சரியாகச் செயல்படுவதையும் உறுதி செய்கிறது. இல்லையெனில் இது மோசமான ரத்த ஓட்டம் அடைப்புகள் மற்றும் இதய பாதிப்புகளை விளைவிக்கலாம்.
கொலஸ்ட்ரால் அளவை ஒழுங்குபடுத்த
ஆய்வுகளில் கடுகு எண்ணெய் ஒட்டுமொத்த கொழுப்பின் அளவை குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, எல்டிஎல் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்கவும், அதே சமயத்தில் எச்டிஎல் கொழுப்பின் ஆரோக்கியமான அளவை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
மேலும், இது தமனிகளில் பிளேக் கட்டமைப்பதைக் குறைத்து, சீரான ரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் மேம்பட்ட இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.