search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Health Problem"

    • நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை சாப்பிடக் கூடாது என்று பொதுவாகவே கூறுவார்கள்.
    • நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.

    நீரிழிவு நோய் என்பது பொதுவாகவே பெரும்பாலான மனிதர்களுக்கு காணப்படுகிறது. நீரிழிவு நோய் வந்து விட்டாலே அடுத்தடுத்து பல நோய்களும் தொற்றிக் கொள்ளும். என்றுமே நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது. நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை சாப்பிடக் கூடாது என்று பொதுவாகவே கூறுவார்கள்.

    சில பேர் சர்க்கரையை கொஞ்சம் கூட சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். சில பேர் வெள்ளை சர்க்கரையை தவிர்த்து விட்டு தேன் மற்றும் நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்துவார்கள்.

    தேனில் கிட்டத்தட்ட 300 வகைகள் உண்டு. ஒரு டீஸ்பூன் தேனில் 60 கலோரிகள் மற்றும் 17 கிராம் கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) இருக்கிறது. மேலும் இதில் வைட்டமின் சி, பி, இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், சுண்ணாம்பு சத்து மற்றும் ஆன்ட்டிஆக்ஸிடண்ட்ஸ் இருக்கிறது.

    தேனில் உள்ள அதிகமான அளவு கார்போஹைட்ரேட், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். வெள்ளை சர்க்கரையில் ஒரு டீஸ்பூனில் 13 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது.

    ஒரு டீஸ்பூன் தேனில், வெள்ளை சர்க்கரையை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் எப்போதாவது சர்க்கரைக்கு மாற்றாக தேன் சாப்பிடலாம். சர்க்கரையுடன் சேர்த்து கூடுதலாக தேன் சாப்பிடக்கூடாது.

    மார்க்கெட்டில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த தேனை பயன்படுத்துவதை விட கொம்புத்தேன் என்று கிடைக்கும் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட தேனை பயன்படுத்துவது சிறந்தது. தேனில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளதால் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக தேனை சிறிதளவு பயன்படுத்திக் கொள்ளலாம்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி. சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • வாழ்க்கை முறையில் சில மாறுதல்களை செய்வதன் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.
    • ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள செய்ய வேண்டிய விஷயங்கள்:

    உயர் ரத்த அழுத்த பிரச்சினைக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. உடல் எடை அதிகரிப்பது, உடலில் கொழுப்பு அதிகம் படிவது, மன அழுத்தத்தில் இருப்பது, கார்போஹைட்ரேட் உள்ளடங்கிய உணவுப்பொருட்களை அதிகம் சாப்பிடுவது, ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காரும் நிலைமை போன்ற காரணங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படலாம்.

    அதனை கட்டுக்குள் வைப்பதற்கு மருந்துகளை உட்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. உணவு பழக்கங்களிலும், வாழ்க்கை முறையிலும் சில மாறுதல்களை செய்வதன் மூலம் இயற்கையாகவே ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

    * உடல் எடையை குறைப்பது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் விஷயத்தில் உடனடி பலன் தரக்கூடியது. அதனால் உடல் பருமன் கொண்டவர்கள் அதனை குறைப்பதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமானது.

    * உயர் ரத்த அழுத்தம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் தினமும் தவறாது நடைப்பயிற்சி செய்யும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது நடக்க வேண்டும். அதனை தொடர்வது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.

    * வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மீன் சாப்பிடுவது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் விஷயத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

    * மதுப்பழக்கம், புகைப்பழக்கம் இரண்டுமே உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியவை. அந்த பழக்கங்களை அறவே தவிர்ப்பது அவசியமானது.

    * உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்வதும் நல்லது. காய்கறி ஜூஸ் பருகுவதும், குறிப்பாக கோதுமை புல் ஜூஸ் பருகுவது நன்மை அளிக்கும்.

    * பூண்டு, ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது. கொழுப்பையும் குறைக்கக்கூடியது. அதனால் தினமும் உணவில் பூண்டு சேர்த்துக்கொள்வது அவசியமானது.

    * செலரி எனப்படும் கீரையின் தண்டு பகுதியை சாப்பிடுவதும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த துணைபுரியும். அத்துடன் உடல் எடையை குறைப்பதற்கும் இந்த கீரை உதவி புரியும்.

    * மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்வதும் ரத்த அழுத்தத்தை சீராக நிர்வகிக்க உதவும்.

    • நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீர் அதிகமாக வெளியேறும்.
    • நீரிழிவு நோயாளிகளுக்கு மயக்கம் ஏற்படும் பிரச்சனை அதிகமாக வாய்ப்புள்ளது.

    நீரிழிவு நோயாளிகளுக்கு மயக்கம் ஏற்படும் பிரச்சனை அதிகமாக வாய்ப்புள்ளது. ஏனென்றால், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீர் அதிகமாக வெளியேறும். இதன் காரணமாக நீரிழப்பு அதிகளவில் இருக்கும். இதன் காரணமாகவும் தலை சுற்றல் ஏற்பட்ட்டு, மயக்கம் வரும். இரத்த சர்க்கரை அளவு அதிகமாதல், இரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு காரணமாக திடீரென்று மயக்கம் வர வாய்ப்புகள் அதிகமுள்ளது.

    நீரிழிவு நோயாளிகளுக்கு தலை சுற்றல் ஏற்படுவதற்கு கீழ்க்கண்ட காரணங்களில் ஒன்றோ அதற்கு மேலும் இருக்கலாம்:

    ரத்த சர்க்கரை தாழ்நிலை (ஹைபோ கிளைசீமியா), ரத்த சர்க்கரை அதிகரித்தல், நீரிழப்பு (வயிற்றுப்போக்கு, வாந்தி அல்லது வேறு காரணங்களாலோ உடலில் இருந்து அதிகப்படியான நீரை இழக்கும் போது ஏற்படும் நிலை), குறைந்த ரத்த அழுத்தம், உயர் ரத்த அழுத்தம், மீனியர் நோய் (இது ஒரு சமநிலை கோளாறு ஆகும்.

    இதில் காதில் உள்ள எண்டோலிம்ப் திரவம் அதிகம் சேர்வதால் காதுகளுக்குள் அழுத்தம் எற்படும். இந்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்படும் போது மூளைக்கு சமிக்ஞைகள் அனுப்பப்பட்டு தலை சுற்றல் ஏற்படுகிறது), கழுத்து எலும்பு தேய்மானம், இதய கோளாறு, ரத்த சோகை, அதிகமான கொலஸ்ட்ரால் அளவு, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை, உட்கொள்ளும் மாத்திரைகள் செயல்பாடுகள். (உதாரணமாக - சர்க்கரை அளவை குறைக்க, கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த, நரம்பு பாதிப்புக்காக பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் செயல்பாடுகள்)

    எனவே நீரிழிவு நோயாளிகள் தலைசுற்றல் ஏற்படும் போது அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரிடம் சென்று உரிய பரிசோதனை செய்து மேற்கூறிய காரணங்கள் ஏதேனும் உள்ளதா என கண்டறிந்து, அதற்குரிய மருத்துவம் செய்து கொள்வது அவசியம்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • காய்ச்சல்களில் பல வகைகள் இருக்கின்றன.
    • காய்ச்சலை கையாளும் முறையில் மாற்றம் வேண்டும்.

    காய்ச்சலை நாம் அணுகும் முறையால்தான் உணவுரீதியாகவும் நாம் தடுமாற்றம் அடைகிறோம். எனவே, காய்ச்சலை கையாளும் முறையில் மாற்றம் வேண்டும். காய்ச்சல்களில் பல வகைகள் இருக்கின்றன என்பது பலரும் அறிந்ததுதான். அது சாதாரண காய்ச்சலாக இருந்தாலும், தீவிரமான காய்ச்சலாக இருந்தாலும் நாம் பயப்படத் தேவையில்லை.

    காய்ச்சல் வந்தவுடன் நம்மில் பலர் அப்படியே படுத்துவிட்டு, சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருப்பார்கள். இதைத்தான் முதலில் தவிர்க்க வேண்டும். நமது உடலில் காய்ச்சல் ஏன், எதனால் ஏற்படுகிறது. அதை எப்படி சரிசெய்வது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

    நமது சுற்றுப்புறத்திலுள்ள வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற ஏதாவதொரு கிருமி நம் உடலுக்குள் சென்றுவிட்டால் அதை நமக்கு உணர்த்தக்கூடிய ஓர் அறிகுறிதான் காய்ச்சல். அப்படி உடலுக்குள் சென்ற கிருமியை எதிர்த்து உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு செயல்படுகிறபோது உடலின் வெப்பநிலை அதிகரிப்பதை காய்ச்சல் என்று சொல்கிறோம்.

    காய்ச்சலோடு தலைவலி, வாந்தி, குமட்டல், மூட்டுவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அது வைரஸ் காய்ச்சலாக இருக்கலாம். காய்ச்சலோடு சிறுநீர் கழிக்கையில் எரிச்சல் அல்லது ரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அது சிறுநீரக நோய்த் தொற்றாக இருக்கலாம். காய்ச்சலோடு வாந்தி, குமட்டல், பேதி போன்ற அறிகுறிகள் இருந்தால் வயிற்றில் ஏதாவது தொற்று ஏற்பட்டிருக்கலாம். காய்ச்சலோடு கண் மஞ்சள் நிறமாக இருந்தால் கல்லீரலில் நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கலாம். காய்ச்சலோடு இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் நுரையீரலில் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம்.

    உடலில் அதிக களைப்பு ஏற்பட்டு, தண்ணீர் குடிக்காமல் வெயில் காலங்களில் வெளியே செல்கிறபோதும் உடல் வெப்பநிலை அதிகரித்து காய்ச்சல் வருவதை Heat Stroke என்று சொல்கிறோம். அதேபோல அம்மை நோய்கள் ஏற்படுகிறபோது உடலில் கொப்புளங்களோடு காய்ச்சலும் வரும். எனவே, என்ன காரணத்தால் அல்லது எந்தக் கிருமியினால் காய்ச்சல் வந்துள்ளது என்பதை சரியாக கண்டறிவதற்கே இரண்டு நாட்கள் வரை ஆகும்.

    மலேரியா, டைபாய்டு, டெங்கு, சிக்கன்குனியா என்று நூற்றுக்கணக்கான காய்ச்சல் இருக்கிறது. எனவே, உடல் வெப்பநிலை எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என்பதை தெர்மாமீட்டர் மூலம் கண்டறிவதோடு என்ன காரணத்தினால் அந்த காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்பதை சரியாக கண்டறிந்த பிறகே அதற்குரிய சரியான மருத்துவத்தை மேற்கொள்ள முடியும்.

    காய்ச்சலின்போது நீர்ச்சத்து தொடர்பான எல்லா உணவுகளையுமே நாம் புறக்கணிக்கிறோம். உடல் மேலும் குளிர்ச்சியடைந்து காய்ச்சல் அதிகமாகிவிடும் என்றும் தவறாக நம்புகிறோம். காய்ச்சலின்போது உடல் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் உடலில் நீர்வறட்சி ஏற்படுகிறது. இந்த நீர்வறட்சியினால் ஏற்படுகிற பாதிப்புகள்தான் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துகிற நிலைக்குக் கொண்டுபோய் விடுகிறது. எனவே, அதிகளவு நீர் அருந்துவதோடு நீராகாரங்களையும் எடுத்துக்கொள்வது நல்லது.

    இந்த நீராகாரங்கள் நமது உடலில் உள்ள எலக்ட்ரோலைட்களின்(Electrolyte) அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. தண்ணீரின் சுகாதாரம் தொடர்பாக பல சந்தேகங்கள் இருப்பதால், கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடித்துக் கொள்ளலாம். முக்கியமாக, காய்ச்சல் வந்த பிறகு இரண்டு நாட்கள் வரை உடலுக்கு போதுமான ஓய்வு கொடுக்க வேண்டும்.

    காய்ச்சல் வந்துவிட்டால் இதைத்தான் சாப்பிட வேண்டும். இதையெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதே தவறான புரிதல். இதுபோன்ற நேரங்களில் நாம் இவற்றை எல்லாம் சாப்பிடக்கூடாது என்று நாமாகவே நினைத்துக்கொண்டு, சாப்பிடாமலேயே இருப்பதுதான் உடல் பிரச்னைகளை இன்னும் அதிகமாக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

    காய்ச்சலின்போது மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகளை சாப்பிடுவதோடு தண்ணீர், இளநீர், மோர், பழச்சாறுகள், சூப் போன்ற நீராகாரங்களை அதிகளவில் எடுத்துக்கொள்வது அவசியம். உடலுக்குள் புகுந்திருக்கிற கிருமிக்கு எதிராக செயல்படுகிறபோது, அதற்கு உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைப்பதற்கு நாம் எப்போதும்போல உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் இருக்கையில் நமது வாய்க்கு எதை சாப்பிடப் பிடிக்கிறதோ அதை சாப்பிடலாம்.

    நாம் வழக்கமாக சாப்பிடுகிற எல்லா விதமான உணவுகளையும் சாப்பிடலாம். நாம் சரியாக சாப்பிட்டால்தான் காய்ச்சலில் இருந்து விரைவாக குணமடைய முடியும். ஆனால், நமக்குப் பிடிக்கும் என்பதற்காக குளிர்பானங்கள், துரித உணவுகள் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்ற ஆரோக்கியக் கேடான உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வயிறு சம்பந்தமான பிரச்னைகள் இருந்தால் அதிகக் காரமான உணவுகளைத் தவிர்ப்பது முக்கியம்.

    • உறக்கம் மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதது.
    • குறட்டை என்பது கொடுமையானது.

    மனிதனுக்கு தூக்கம் சுகமானது...இதில் குறட்டை என்பது கொடுமையானது. ஆகவே குறட்டை நோயை கண்டறியும் நவீன முறைகள் பல இருக்கிறது. இதுகுறித்து ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை டாக்டர் சுந்தரகுமாா் கூறியதாவது:-

    குறட்டை நோய்

    உறக்கம் மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதது. மனிதன் ஒரு நாளில் மூன்றில் ஒரு பங்கு உறங்குவதற்கு என்று ஒதுக்க வேண்டும். உறக்கம் என்பது கண் மூடி இருப்பது அல்ல. ஆழ்நிலை உறக்கமே ஆகும். நல்ல உறக்கம் இல்லையெனில் பகல் நேரங்களில் உடற்சோர்வு, மனச்சோர்வு, உறக்கம் வருதல், செயல்திறன் குறைபாடு போன்றவை ஏற்படும். இந்த உறக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய ஒன்று தான் குறட்டை. குறட்டை ஒரு வியாதியா அல்லது பழக்கமா? எல்லா குறட்டையும் வியாதியாக எடுத்துக்கொள்ள இயலாது. 30 சதவீத மக்களுக்கு பொதுவான பிரச்சினையாக குறட்டை உள்ளது. ஆனால், அவை அனைத்தும் வியாதி அல்ல. சில சமயங்களில் உடல் பருமனாக உள்ளவர்களுக்கு குறட்டை வருவதால் மூச்சு அடைத்து இடையில் விழிப்பு வரலாம். அதற்கு obstructive sleep apnea (OSA) குறட்டை நோய் என்று பெயர்.

    அறிகுறிகள்

    தூக்கத்தில் குறட்டையால் மூச்சு அடைத்து இடையில் விழிப்பு வருவது, காலையில் எழும் போது மீண்டும் தூங்க வேண்டும் என்று தோன்றுவது, உடல் சோர்வு, மனச்சோர்வு, பகலில் வாகனங்கள் ஓட்டுவதில் சிரமம், சிறிய விஷயங்களில் கூட கோபம் வருதல் போன்றவை குறட்டை நோய் அறிகுறிகள் ஆகும்.

    தீர்வுகள்

    உடல் பருமனாக இருந்தால் (உயரத்திற்கும், வயதிற்கும் ஏற்ற பி.எம்.ஐ. இல்லையென்றால்) உடல் எடையை குறைப்பதே முக்கிய தீர்வு. அதற்கு உணவு பழக்கத்தில் மாற்றம் மற்றும் உடற்பயிற்சி போன்றவை வலியுறுத்தப்படும். Morbid Obesity எனக்கூடிய அதீத உடல் பருமனை குறைப்பது குறித்து பரிந்துரைக்கப்படும். continuous positive airway pressure (CPAP) என்ற கருவி பரிந்துரைக்கப்படும். இது ஒரு வெண்டிலேட்டர் போன்ற கருவி. இதை மூக்கிலும், வாயிலும் பொருத்திக்கொண்டு உறங்க முயற்சிக்கும் போது, உங்களது சுவாச பாதையின் அழுத்தத்தை எப்போதும் பாசிட்டிவாக வைக்கும் உத்தியை கையாளும். அதாவது உங்கள் சுவாச குழாயை எப்போதும் திறந்து வைக்க உதவும். இதனால் உங்கள் சுவாசம் சீராக இருக்கும். இதனால் குறட்டை இருக்காது. மேலும் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று, மறுநாள் விழிக்கையில், அதற்கான பலன்களை அனுபவிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

    • நீரிழிவு நோயாளிகள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று முடி உதிர்வு.
    • உணவு விஷயத்திலும், உடற்பயிற்சி முறையிலும் கவனம் செலுத்த வேண்டும்.

    சாதாரண நபர்களை காட்டிலும், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு முடி உதிர்தல் அதிகமாக இருக்குமாம். பெருமாலான நீரிழிவு நோயாளிகள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று அதி வேக முடி உதிர்வு. நீரிழிவு நோயினால் ஏற்படும் முடி உதிர்தலுக்கு சீரான இரத்த ஓட்டம் இல்லாததே என்று சொல்லலாம்.

    நீரிழிவு நோயாளிகளுக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்க காரணம், நீரிழிவு நோயினால் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டம் தடைப்படுவதால் ஊட்டச்சத்துக்கள் மயிர்கால்களை அடைய முடிவதில்லை. இதனால் உச்சந்தலை நுண்ணறைகள் பலவீனமடைந்து முடி உதிர்தல் ஏற்படுகிறது.

    நாள்பட்ட சர்க்கரை நோய் ஆக்ஸீஜன் மற்றும் ஊட்டச்சத்து விநியோகத்தை குறைக்கலாம். இதன் விளைவாக வாஸ்குலர் குறைபாடு இது முடி உதிர்தல், கூந்தல் உடைவு, முடி உதிர்தல் உண்டாக்கும்.

    ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது, பாலிகுலைட்டிஸ் எனப்படும் பாக்டீரியா தோல்தொற்று ஏற்பட்டு முடி உதிர்வை ஊக்குவிக்கிறது. முடி உதிர்தல் தலையில் மட்டுமின்றி கை, கால்கள் மற்றும் உடம்பின் வேறு பகுதிகளிலும் ஏற்படலாம்.

    நீரிழிவு நோய் உடலில் நாள்பட்ட அழற்சியை ஏற்படுத்தும், முடியின் வேர்களை சேதப்படுத்தும் மற்றும் முடி உதிர்தலை ஏற்படுத்தும்.

    மோசமான இரத்த ஓட்டம் முடி உதிர்தலுக்கு பங்களித்தால், நீரிழிவு நோயை நிர்வகித்தல் மற்றும் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்துதல் ஆகியவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், முடி மீண்டும் வளரவும் உதவும்.

    மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மன அழுத்தத்தினாலும் கூடுதலாக தைராய்டு நோய் இருக்கும் நிலையிலும் முடி உதிரும். டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு செல்கள் மயிர்க்கால்களில் பாதிப்பை ஏற்படுத்தி அலோபீசியா ஏரியேட்டா (திட்டு திட்டாக முடி விழுதல்) என்ற நோய் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

    நீரிழிவு நோயாளிகள் முடி உதிர்தலுக்கு சிகிச்சை

    உணவு விஷயத்திலும், உடற்பயிற்சி முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். வழக்கமான உடற்பயிற்சி உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. உடலில் இரத்த சர்க்கரை அளவு அளவாக இருந்தால் மயிர்க்கால்கள் மற்றும் முடியின் முனைகளில் ஆக்ஸிஜன் விநியோகம் தடையில்லாமல் பெற முடிகிறது.

    உணவு முறையில் சர்க்கரை அளவை குறைத்து மெலிந்த புரதங்களை சேர்க்க வேண்டும். இது முடியின் வலிமையை மேம்படுத்தவும், உச்சந்தலையை வலுவாக வைக்கவும் உதவும்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • நீரிழிவு நோய் தற்போது பரவலாக பெரும்பாலான மக்களிடம் காணப்படுகின்றது.
    • நீரிழிவு நோயாளிகள் தங்கள் விருப்பம் போல் அனைத்து உணவுகளையும் சாப்பிட முடியாது.

    நீரிழிவு நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோய் தற்போது பரவலாக பெரும்பாலான மக்களிடம் காணப்படுகின்றது. சிலவகை நீரிழிவு நோயானது குழந்தை பருவத்தில் இருந்தே காணப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் விருப்பம் போல் அனைத்து உணவு வகைகளையும் உண்ணுவதென்பது இயலாத காரியம். நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

    பாகற்காயில் வைட்டமின் ஏ, சி, பி2, ஈ, கே, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து ஆகியவை இருக்கின்றன. மேலும், பிளாவினாய்ட்ஸ், பாலிபினால் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்திருக்கின்றது.

    பாகற்காயில் கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட், கலோரிகள் போன்றவை குறைந்த அளவே இருப்பதாலும், புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்து இருப்பதாலும், இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கச் செய்யும் வேதிப்பொருட்கள் இருப்பதாலும், சர்க்கரை நோயாளிகள் உணவில் இதை தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். ரத்த சர்க்கரையை குறைக்கும் சரண்டி, விசைன், இன்சுலின் போல செயல்படும் பாலிபெப்டைட் - பி போன்றவை இருப்பதால் இதை சர்க்கரை நோயாளிகள் உட்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    பொதுவாக பாகற்காயின் விதைகளால் கசப்பு தன்மை அதிகமாக இருந்தாலும், நாம் விதையையும் சேர்த்து உட்கொள்வது நல்லது. பாகற்காயை அதிகமாக சாப்பிட்டால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, தலைவலி போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். கருவுற்றிருக்கும் பெண்கள் பாகற்காயை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அது கருப்பை சுருக்குதலை ஏற்படுத்தி கருக்கலைப்பு கூட நேரலாம். பாகற்காயில் உள்ள கசப்பை போக்குவதற்கு, அதை தயிரில் ஊறவைத்தோ அல்லது வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குடன் சேர்த்து சமைத்தோ சாப்பிடலாம்.

    மேலும் பாகற்காயில் உள்ள லெக்டின், திசுக்களில் உள்ள செல்களுக்குள் குளுக்கோஸ் செல்ல உதவி புரிகிறது. மேலும் இது பசியை குறைத்து, உணவை குறைவாக உட்கொள்ள செய்வதால் ரத்தத்தில் சர்க்கரை அளவும் குறைகிறது.

    நீரிழிவு நோயாளிகள் தினமும் பாகற்காய் சாற்றை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. ஆனால் பாகற்காய் சாறு குடிப்பது நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் என்றாலும் கல்லீரலை பாதிக்கலாம். இது கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தினமும் பாகற்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • எலும்புப்புரை என்பது எலும்புகளை பலவீனமாக்க கூடியதாகும்.
    • ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஏற்படலாம்.

    எலும்புப்புரை நோயை தடுக்கும் வழிகள் என்ன என்பது குறித்து கடலூர் முதுநகரில் சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள மனோன்மணி மருத்துவமனை எலும்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் பிரவீன் மனோகரன் விளக்கம் அளித்துள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

    முதலில் எலும்புப்புரை (ஆஸ்டியோபோரராசிஸ்) என்றால் என்ன? என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது, எலும்புப்புரை என்பது எலும்புகளை பலவீனமாக்க கூடியதாகும். இதன் விளைவாக எலும்புகள் மெல்லியதாகி அவை உடைந்து போகின்றன.

    உடலில் பழைய எலும்புகளுக்கு பதிலாக புதிய எலும்புகள் வளர தவறும்போது எலும்புப்புரை நோய் ஏற்படுகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஏற்படலாம். இந்த நோய் உள்ளவர்கள், எலும்பு முறிவுகளால் மிக எளிதில் பாதிக்கப்படுவார்கள்.

    யாருக்கெல்லாம் வர வாய்ப்பு

    புகை பிடிப்பவர்கள், மது அருந்துதல் பழக்கம் உள்ளவர்கள், உடற்பயிற்சிகள் இல்லாத வாழ்க்கை முறை, தைராய்டு நோய் உள்ளவர்கள், ஸ்டீராய்டு மருந்து உட்கொள்பவர்கள், நீண்ட நாள் படுத்த படுக்கையில் உள்ளவர்கள். இவை அனைத்தும் மாற்றக்கூடிய காரணிகளாக உள்ளன.

    குறைந்த வயதில் மாதவிடாய் நின்று போகுதல், மரபியல் மற்றும் நாளமில்லா சுரப்பி பிரச்சினை உள்ளவர்கள், முடக்கு வாதம், சிறுநீரகம், கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள், வயது முதிர்ச்சி உள்ளிட்ட காரணங்களை மாற்ற இயலாத ஒன்றாகும்.

    எலும்பு முறிவுகள்

    தோள்பட்டை, முதுகு தண்டுவடம், இடுப்பு மற்றும் கை மணிக்கட்டு எலும்பு முறிவுகள் அதிகமாகும்.

    50 வயதுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எலும்புப்புரை நோய்வர வாய்ப்பு உள்ளது. இதனை கண்டறிய எலும்பு தாது பொருள் அடர்த்தி கண்டறிதல், ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி யின் அளவு, டெக்ஸா ஸ்கேன், ரத்தத்தில் எலும்பு மார்க்கர் அளவு போன்ற பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம்.

    தீர்வு என்ன?

    எலும்புப்புரை நோய்க்கான காரணங்களை கண்டறிந்து, அதனை குறைப்பது. மருத்துவரின் ஆலோசனைப்படி உடற்பயிற்சிகள் மேற்கொள்வது. மருத்துவரின் ஆலோசனைப்படி, மருந்து மாத்திரைகள் உட்கொள்வது இதற்கு உகந்த சிகிச்சை முறைகள் ஆகும்.

    அவ்வப்போது பரிசோதனைகள் மேற்கொள்வதன் மூலம், ஒருவர் தமக்கு எலும்புப்புரை நோய் உள்ளதா? இல்லையா? என அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் எலும்பு முறிவுகள், மேலும் நடக்க முடியாமல் போவது, மருத்துவ செலவினங்கள் வாழ்க்கை முறை மாற்றம், போன்றவைகளில் இருந்து விடுபடலாம். பலர் தங்களுக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்ட பின்னரே, இது போன்ற நோய் இருப்பதை தெரிந்து கொள்ளும் நிலை உள்ளது.

    மேலும் பலரும் இது பெண்களுக்கு மட்டும் வரும் நோய் என்று நம்பி உள்ளனர். ஆனால் இது ஆண்களுக்கும் வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்தியாவில் மிக எளிதாகக் கிடைக்கும் காய்கறிகளில் வெங்காயம் ஒன்றாகும்
    • நீரிழிவு நோயாளிகள் உணவைப் பற்றி மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    உடலில் கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அளவு நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும். இதனால் நீரிழிவு நோயாளிகள் உணவைப் பற்றி மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    நீரிழிவு நோயைத் தவிர்க்க உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்பினால், ஆரோக்கியமான உணவு தேவை. நார்ச்சத்து நிறைந்த உணவை நீங்கள் சேர்க்க வேண்டும். வெங்காயத்தையும் சேர்க்கலாம்.

    இந்தியாவில் மிக எளிதாகக் கிடைக்கும் காய்கறிகளில் வெங்காயம் ஒன்றாகும், இது கிட்டத்தட்ட எல்லா உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

    ஒரு வெங்காயத்தில் கிட்டத்தட்ட 44 கலோரிகள் இருக்கிறது. மேலும் இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, போலெட், பொட்டாசியம், சல்பர் போன்றவை அதிகமாக இருக்கிறது. வெங்காயத்தில் கிட்டத்தட்ட 17 வகையான பிளாவினாய்ட்ஸ், (ஆன்ட்டிஆக்சிடென்ட்ஸ்) இருக்கிறது. இதன் சர்க்கரை உயர்தல் குறியீடு 11 ஆகும். இது மிகக் குறைந்த அளவு என்பதால் நீரிழிவு நோயாளிகள் தாராளமாக வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    வெங்காயத்தில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்ஸ், குறிப்பாக ஆன்தோசயனின் மற்றும் கொர்சிட்டின், செல்களின் அழற்சியை குறைத்து நீரிழிவு நோய், இதய நோய், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு ஆகியவற்றை தடுக்கிறது. மேலும் கொர்சிட்டின், கணையம், கொழுப்பு, கல்லீரல் மற்றும் தசைகள் உள்ள செல்களுடன் ஒருங்கிணைந்து சர்க்கரை அளவை குறைக்க வழிவகுக்கிறது.

    கோடையில் வெங்காயம் சாப்பிடுவதோ அல்லது அதன் சாற்றைக் குடிப்பதோ வெப்பத்தை ஏற்படுத்தாது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை நிலையானதாக வைத்திருக்கும்.

    வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது. இதில் உள்ள அதிகமான வைட்டமின் சி நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க செய்கிறது. குறிப்பாக எஸ்சர்சியா, ஸ்டபைலோகாக்கஸ் போன்ற பாக்டீரியாக்களின் தொற்றுக்கள் வராமல் ஓரளவு தடுக்கிறது. வெங்காயத்தில் உள்ள 'ஆனயானின் ஏ' என்ற வேதிப்பொருள் புற்றுநோய் வராமல் தடுப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    வெங்காயத்தில் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதாலும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் மற்றும் பிளவினாய்ட்ஸ் அதிகமாக இருப்பதாலும், சர்க்கரை உயர்தல் குறியீடு மிகவும் குறைவாக இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகள் அதை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

    - நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன்

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • டி.வி. பார்த்தபடியே தூங்கும் பழக்கத்தை பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள்.
    • சிலர் அறைக்குள் விளக்கு வெளிச்சம் இருந்தால்தான் தூங்குவார்கள்.

    ஒவ்வொருவரும் விதவிதமான சூழல்களில் தூங்கும் பழக்கத்தை பின்பற்றுகிறார்கள். சிலர் அறைக்குள் விளக்கு வெளிச்சம் இருந்தால்தான் தூங்குவார்கள். சிலருக்கு சிறு வெளிச்சம் அறைக்குள் பரவினாலும் தூக்கம் தடைபட்டுவிடும். சிலர் குளிர் காலத்தில் கூட மின் விசிறி இல்லாமல் தூங்கமாட்டார்கள். சிலர் கோடையிலும் போர்வை போர்த்திக்கொண்டு தூங்கும் வழக்கத்தை கடைப்பிடிப்பார்கள்.

    காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டே இசையை கேட்டபடி தூங்குபவர்களும் இருக்கிறார்கள். டி.வி. பார்த்தபடியே தூங்கும் பழக்கத்தை பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள். டி.வி. பார்க்கும்போது தூக்கம் கண்களை தழுவினாலும், டி.வி.யை 'ஆப்' செய்ய மாட்டார்கள். டி.வி. சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அந்த சத்தத்துக்கு நடுவே தூங்கிக்கொண்டிருப்பார்கள்.

    இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், படுக்கை அறையில் டி.வி.யை பார்த்துக்கொண்டே தூங்குவது உடல் பருமன் அபாயத்தை அதிகரிக்கும், டி.வி.யில் இருந்து வெளிப்படும் நீல ஒளி உடல் நலத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கும் என்பது தெரியவந்துள்ளது. அப்படி என்னென்ன கேடுகளை விளைவிக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோமா?

    * டி.வி.யில் இருந்து வெளிப்படும் ப்ளூ-ரே எனப்படும் நீல ஒளி விழித்திரையை சேதப்படுத்தும். எலிகளை கொண்டு நடத்தப்பட்ட சோதனையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எலியின் கண்களின் விழித்திரை வழியாக ஊடுருவிய நீல ஒளியின் தாக்கத்தால் சில நாட்களுக்கு பிறகு அந்த பகுதி கருப்பு நிறமாக மாறியது தெரியவந்தது.

    * நீல ஒளி அதிகம் வெளிப்படுவது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கச் செய்யும். இரவில் டி.வி., லேப்டாப் உபயோகிப்பவர்கள் அதனை 'ஆப்' செய்யாமல் தூங்கும்போது மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    * இரவில் டி.வி., செல்போன், லேப்டாப், டேப்லெட், கணினி போன்ற மின்னணு சாதனங்களை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படும் அபாயம் அதிகம். டி.வி.யில் இருந்து வரும் நீல ஒளி, தூங்கிய பிறகும் மூளையை விழிப்பு நிலையிலேயே வைத்திருக்கும். இதன் காரணமாக, மூளைக்கு போதுமான ஓய்வு கிடைக்காமல் சோர்வு உண்டாகும். அது மன அழுத்தத்திற்கு வித்திடும்.

    * அதிக ஆற்றல் கொண்ட நீல ஒளி, டி.என்.ஏ.வை சேதப்படுத்தும் என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும் சரும செல்கள், திசுக்கள் மற்றும் தோல் சேதமடையும் அபாயமும் இருக்கிறது.

    • நீரிழிவு நோயாளிகள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
    • 100 கிராம் நுங்கில் 43 கலோரிகள் தான் இருக்கிறது.

    நீரிழிவு நோயாளிகள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். என்ன சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் உடலில் இரத்த சர்க்கரையை அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, பழங்கள் சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். பழங்கள் நார்ச்சத்து, சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. சில பழங்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காத பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.

    நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. வெயில் காலத்தில் நீரிழிவு நோயாளிகளுக்கு நுங்கு ஒரு சிறந்த பழமாக திகழ்கிறது. நுங்கில் அதிக அளவு வைட்டமின் சி, ஈ, எ, பி1, பி2, பி7 இருக்கிறது. நுங்கில் கார்போஹைட்ரேட் அளவு குறைவாக இருப்பதாலும், சர்க்கரை உயர்தல் குறியீடு 35 என்ற மிகக் குறைந்த அளவு இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகள் நுங்கை பயமின்றி உண்ணலாம்.

    100 கிராம் நுங்கில் 43 கலோரிகள் தான் இருக்கிறது. இதில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம், நீர்ச்சத்து சமநிலைக்கு பெரிதும் உதவி புரிகிறது. நுங்கில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் இதை உட்கொள்ளும்போது வயிறு கனத்துப் போவதால் பசி குறைந்து, மற்ற கார்போஹைட்ரேட் உணவுகள் அதிகம் சாப்பிடாமல் தடுக்கப்படுகிறது. முற்றிய நுங்கை சாப்பிடுவதால் வயிற்று வலி ஏற்படலாம். அதனால் முற்றிய நுங்கை சாப்பிடுவதை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்கலாம். இதனை நீரிழிவு நோயாளிகளும் அச்சம் இன்றி அளவாக எடுத்து கொள்ளலாம்.

    மேலும் நுங்கு சாப்பிடுவதால் மலச்சிக்கல், வயிற்றுப்புண், வேர்க்குரு போன்ற பிரச்சினைகளும் குறைய வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

    ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் நீண்டகாலத்துக்கு பக்க விளைவுகளை கொண்டிருக்கும் என்பது பலருடைய எண்ணமாக இருக்கிறது.
    கொசுக்களில் இருந்து பரவும் டெங்கு காய்ச்சல் உடல் ஆரோக்கியத்தை பலவீனப்படுத்தக்கூடியது. காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, உடல் வலி, வாந்தி, வயிற்று வலி, கண்களையொட்டிய பகுதியில் வலி, எலும்பு பகுதிகளில் வலி போன்றவை டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும். காய்ச்சலுடன் இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனே சிகிச்சை பெறுவது நோயின் வீரியத்தை குறைக்க உதவும்.

    ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் நீண்டகாலத்துக்கு பக்க விளைவுகளை கொண்டிருக்கும் என்பது பலருடைய எண்ணமாக இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருந்தால் எந்த நோயிலிருந்தும் மீள்வது எளிது. எனினும் டெங்கு காய்ச்சல் காரணமாக, உடலில் உள்ள பிளேட்லெட் எனப்படும் ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகும். மேலும் ரத்த அணுக்களை நிறமற்றதாக மாற்றுவதால் ரத்த உறைவு பிரச்சினையையும் எதிர்கொள்ள நேரிடும். அப்படி பிளேட்லெட் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பட்சத்தில் நோய் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு கால அவகாசம் தேவைப்படும். அப்போது சில பக்க விளைவுகள் ஏற்படலாம். எனினும் டெங்குவால் நீண்டகால பக்கவிளைவுகள் ஏற்படாது என்பதே மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.

    டெங்கு காய்ச்சல் உடலை பலவீனப்படுத்தி தசை மற்றும் மூட்டுகளில் வலிகளை ஏற்படுத்தும். எழுந்து நடமாட முடியாத நிலையையும் சிலர் எதிர்கொள்ள நேரிடும். நோய் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு 10 முதல் 15 நாட்கள் ஆகும். ஒருமுறை டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளானால் நோய் எதிர்ப்பு சக்தி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு சில மாதங்களாகும். அதற்குள் இரண்டாவது முறையாக டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் பாதிப்பு கடுமையாக இருக்கும்.

    அதனால் நோய் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் தொய்வு ஏற்படக்கூடாது. நீர், இளநீர், பப்பாளி சாறு போன்ற திரவங்களை உட்கொள்வது டெங்கு நோயில் இருந்து விரைவில் மீள்வதற்கு உதவும்.
    ×