என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Home remedies"

    • செல்போன், கணினியை அதிக நேரம் பார்ப்பதால் கருவளையம் வரக்கூடும்.
    • கருவளையத்தை எளிதாக நீக்க சித்த மருந்துகள் உதவும்.

    ஆண்கள் மற்றும் பெண்களில் சிலருக்கு கண்களின் கீழும், கன்னங்களின் இரு பக்கமும் கருவளையம் காணப்படும். இதை எளிதாக நீக்க சித்த மருந்துகள் உதவும்.

    ஜாதிக்காய்-1, கோஷ்டம் சிறிதளவு எடுத்துக்கொள்ளுங்கள். (நாட்டு மருந்து கடைகளில் இவை கிடைக்கும்) இவற்றை நன்றாக பொடித்து அத்துடன், 5 பாதாம் சேர்த்து தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். இதை முகத்தில் பூசி சுமார் 2 மணி நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர முகத்தில் வரும் அனைத்துவித கருப்பு, கரும்புள்ளிகள் மாறும்.

    வாரம் இருமுறை சோற்றுக் கற்றாழை ஜெல்லுடன் எலுமிச்சை சாறு கலந்து, முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இது முகத்திற்கு இயற்கை சூரிய எதிர்ப்பு கவசமாகத் திகழும்.

    குங்குமாதிலேபம்: இது சித்த மருந்து கடைகளில் கிடைக்கும். இதை இரவு நேரத்தில் முகத்தில் பூசி தூங்கலாம். காலையில் முகம் கழுவிடலாம்.

    கேரட், பப்பாளி பழம், தர்பூசணி பழம், மாதுளை, பாதாம், பிளாக்ஸ் விதைகள் சாப்பிட்டு வந்தால் முகம் வசீகரமாகும்.

    • பெண்களை கவலை கொள்ளும் விஷயம் கூந்தல் உதிர்வு.
    • பல்வேறு காரணங்களால் கூந்தல் உதிர்வு பிரச்சனை வருகிறது.

    தலை முடி உதிர்வுக்கு புரதச்சத்து, இரும்புச்சத்து, துத்தநாகம், கால்சியம், பயோட்டின் குறைபாடுகள், மனக்கவலைகள், தூக்கமின்மை, உடல் சூடு, ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, பொடுகு போன்றவை முக்கிய காரணமாக உள்ளன.

    இதற்காக பயன்படுத்த வேண்டிய சித்த மருந்துகள்:

    1) அயச் சம்பீர கற்பம் 200 மி.கி. அல்லது அய பிருங்க ராஜ கற்பம் 200 மி.கி. எடுத்துக்கொண்டு இவற்றுடன் கரிசாலை சூரணம் ஒரு கிராம் வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.

    2) தலைக்கு செம்பருத்தி பூ தைலம் அல்லது கரிசாலை தைலம் தேய்த்து குளித்து வர வேண்டும்.

    3) வாரம் ஒரு முறை கடுக்காய் தோல், நெல்லி வற்றல், வெண் மிளகு, கஸ்தூரி மஞ்சள், வேப்பம் வித்து இவைகளை சம அளவில் எடுத்து பொடித்து பாலில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர வேண்டும். இதனால் பொடுகு, உடல் சூடு நீங்கும், உடல் குளிர்ச்சி அடையும், கண் ஒளி கூடும்.

    உணவில் முட்டை, பால், கருவேப்பிலை கீரை, கரிசலாங்கண்ணி கீரை, பச்சைப் பட்டாணி, முருங்கை கீரை, வேர்க் கடலை, பேரீச்சம் பழம், மாதுளம்பழம் இவைகளை சேர்த்துக்கொள்வது நல்லது.

    சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • இதற்கு எளிய சித்த மருத்துவ தீர்வுகளை பார்க்கலாம்.
    • குளிர் காலத்தில் இந்த பிரச்சினையை பலர் சந்திக்கலாம்.

    சிலருக்கு அடிக்கடி தொண்டையில் கரகரப்பு காணப்படும். சிலருக்கு புண்கள் ஏற்படுவதும் உண்டு. இதனால் சாப்பிட முடியாமல் சிரமப்படுவார்கள். குறிப்பாக குளிர் காலத்தில் இந்த பிரச்சினையை பலர் சந்திக்கலாம். இதற்கு எளிய சித்த மருத்துவ தீர்வுகள்:

    மஞ்சள் தூள், உப்பு கலந்த வெந்நீரால் வாய், தொண்டையை கொப்பளித்து வர வேண்டும்.

    காலை, இரவு வேளைகளில் மிளகு, மஞ்சள், பனங்கற்கண்டு கலந்த பாலை குடிக்கலாம்.

    ஆடாதோடை இலை, அதனுடன் 5 மிளகு, சுவைக்காக சிறிதளவு தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து காலை, இரவு மென்று சாப்பிட்டு வர தொண்டை வலி, கரகரப்பு நீங்கும்.

    கிராம்பு-2, சிறிதளவு அதிமதுரம், சுக்கு, மிளகு, லவங்கப்பட்டை இவைகளை டீ போன்று தயாரித்து சுவைக்காக பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம்.

    திரிகடுகு சூரணத்தை 500 மில்லி கிராம் அல்லது அரை டீ ஸ்பூன் வீதம் இருவேளை தேன் அல்லது வெந்நீர் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம்.

    சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் தாளிசாதி வடகம், துளசி வடகம் போன்ற மாத்திரைகளை 2 வீதம் இருவேளை கடித்துச் சாப்பிடலாம்.

    வசந்த குசுமாகர மாத்திரை 2, லவங்கம் 2 எடுத்து, இவற்றை ஒரு வெற்றிலையில் வைத்து மென்று சுவைத்து சாப்பிடலாம்.

    • புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது
    • தைராய்டு சுரப்பி பிரச்சினை உள்ளவர்களுக்கு இது ஓர் அருமருந்து.

    சித்த மருத்துவத்தில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் மிகப் பழமையான மூலிகை மருந்து கருஞ்சீரகம். 100 கிராம் கருஞ்சீரகத்தில் கார்போஹைட்ரேட் 24.9, புரதம் 26.7, கொழுப்பு 28.5 சதவீதத்தில் உள்ளது. வைட்டமின்கள் ஏ, சி, ஈ, பி மற்றும் லினோலெய்க் அமிலம் நிறைந்துள்ளது. இதிலுள்ள 'தைமோகுயினோன்' என்ற தாவர வேதிப்பொருள் மிகச்சிறந்த ஆன்ட்டி ஏஜிங், ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆகும்.

    இது உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதிலும், உடல் உள் உறுப்புகளில் ஏற்படும் கோளாறுகளை சீராக்குவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. கருஞ்சீரக விதைகளில் உள்ள எண்ணெய் சத்து கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரித்து இதய செயல் பாட்டை ஊக்குவிக்கிறது. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கும் இது நல்ல பலனைத் தருகிறது. தைராய்டு சுரப்பி பிரச்சினை உள்ளவர்களுக்கு இது ஓர் அருமருந்து.

    இதை தினசரி உண்ணும் அளவு 1-3 கிராம். இதை வறுத்து பொடித்து டீ போல போட்டு குடிக்கலாம். அல்லது சமையலுக்கு பயன்படுத்தும் மசாலாவில் சேர்த்து பயன்படுத்தலாம்.

    கருஞ்சீரக விதைக்கு மாதவிடாயை தூண்டும் தன்மை உடையதால் கர்ப்பிணிகள் பயன்படுத்தக்கூடாது. ரத்த அழுத்தத்திற்கு மருந்து எடுப்பவர்கள் இதை அளவோடு எடுக்க வேண்டும், ஏன் எனில் இது ரத்த அழுத்தத்தை சிறிது குறைக்கும். கருஞ்சீரகத்தை தினமும் அளவோடு எடுத்து வந்தால் `இது ஆயுள் காக்கும் இறை மருந்து' என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    • தோல் வறட்சி அடைவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
    • சித்த மருத்துவத்தில் இதற்கு நிரந்தர தீர்வு உண்டு.

    ரத்தத்தில் உள்ள ஹிஸ்டமின் அளவு அதிகரிப்பதால், கொசு மற்றும் பூச்சிக் கடியினால், சூரிய ஒளியில் உள்ள புற ஊதா கதிர் வீச்சுகளினால், தோலில் ஈரப்பதம் குறைவதால், வைட்டமின் ஏ,ஈ குறைபாட்டினால், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், சிறுநீரக நோய் போன்றவைகளால் தோல்அரிப்பு, வறட்சி ஏற்படும்.

    தோல் அரிப்புக்கு பரங்கிப்பட்டை சூரணம் 2 கிராம், சிவனார் அமிர்தம் 200 மி.கி, பலகரை பற்பம் 200 மி.கி இவற்றை மூன்று வேளை பால் அல்லது வெந்நீரில் கலந்து குடிக்கவும்.

    அருகன் தைலம், குப்பைமேனி தைலம் இவற்றில் ஏதாவது ஒன்றை தோல் அரிப்பு ஏற்படும் இடத்தில் பூசலாம். பனி நேரங்களிலும், வெப்பமான பகுதிகளிலும் வேலை பார்ப்பது போன்றவற்றால் தோலின் ஈரப்பதம் குறைந்து தோல் வறட்சி அடைகிறது.

    தோல் வறட்சிக்கு- கற்றாழை ஜெல் எடுத்து தண்ணீரில் கழுவி தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யில் அரைத்து தோல் வறண்ட பகுதியில் பூச வறட்சி நீங்கும்.

    மேலும் நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி பழச்சாறு, ஆரஞ்சு, சாத்துக்குடி, வெண்பூசணி சாறு, முலாம்பழ சாறு, கேரட், இளநீர், வெள்ளரிக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளவும்.

    சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • நாம் உண்ணும் உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும்.
    • மலக்கட்டு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    வேலூரைச்சேர்ந்த சித்த மருத்துவரும் இம்ப்காப்ஸ் இயக்குனருமான டி.பாஸ்கரன் கூறியதாவது:-

    மூட்டு வலியைப் பொறுத்தவரை மூட்டுகளில் (கீல்) வலியின் ஆதிக்கம் அதிகரித்து நோய் உண்டாகும். மூட்டுகளில் வீங்குவது, குத்துவது, நோவது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி கால்களை மடக்கவும், நீட்டவும், அசைக்கவும் முடியாமல் செய்யக்கூடியது இந்த மூட்டு வலி. 60-70 வயதில் ஏற்பட்ட இந்நோய் தற்போதைய சத்தற்ற உணவு மற்றும் நீரின் காரணமாக சிறு வயதினரையும் பாதிக்கிறது.

    இதுபோன்ற சூழலில் முடக்கத்தான் இலைச்சாற்றையும் விளக்கெண்ணெயையும் சம அளவு எடுத்து கலந்து காய்ச்சி வடிகட்டி சர்க்கரை சேர்த்து வேளைக்கு ஒரு டீஸ்பூன் சாப்பிடலாம். இதை தினமும் இரண்டு தடவை வீதம் சாப்பிட்டால் முழங்கால் வலி தீரும்.

    வாதநாராயணன் இலைகளை நிழலில் காயவைத்துப் பொடியாக்கி தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டால் வாதநோய்கள் விலகும்.

    நொச்சிஇலை (5), மிளகு (5) போன்றவற்றை நீர் விடாமல் அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து வெந்நீர் கலந்து சாப்பிடுவது நல்லது.

    இதைச் சாப்பிட்டால் ஓரிரு வேளையிலேயே வாய்வு பிடிப்பு நீங்கிவிடும். சிற்றரத்தையை பால் விட்டு அரைத்து பாலில் கரைத்துக் காய்ச்சி வடிகட்டிச் சாப்பிடலாம். இதனுடன் தகுந்த அளவு சர்க்கரை சேர்த்து தினமும் இரண்டுவேளை பருகி வந்தால் வாத நோய் விலகும்.

    மூட்டு வீக்கம்

    கைப்பிடி அளவு வாதநாராயணன் இலையுடன் ஆறு மிளகு, சிறிது உப்பு சேர்த்து இடித்து சாறு பிழிந்து தினமும் காலையில் அருந்த வேண்டும். இதை 10 நாட்கள் தொடர்ந்து அருந்தி வந்தால் வாத வீக்கம் மற்றும் குடைச்சல் நீங்கும்.

    கட்டுக்கொடியின் வேர், சுக்கு, மிளகு போன்றவற்றை 5 கிராம் வீதம் எடுத்து சிதைத்து குடிநீராக்கி அருந்தினால் வாத வலிகள் தீரும். இதேபோல் முருங்கை ஈர்க்கினை சிதைத்து நீர் விட்டுக் காய்ச்சிக் குடித்தால் உடல் வலி மற்றும் அசதி தீரும்

    உணவு முறைகள்

    மூட்டு வலி, வாத நோய்களால் வரக்கூடிய மூட்டுவலிகளுக்கு நாம் உண்ணும் உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். மலக்கட்டு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக கிழங்கு வகைகளைத் தவிர்த்து உளுந்து, சீரகம், சோம்பு, பூண்டு, இஞ்சி, நாட்டுக்கோழி, முட்டை போன்றவற்றைச் சேர்க்கவும். கீரை, பச்சைக் காய்கறிகள், பிரண்டைத் துவையல், முருங்கைக்கீரை மற்றும் அதன் பூ போன்றவற்றை சாப்பிட வேண்டும். பாதாம், அக்ரோட், பேரீச்சம்பழம், நல்லெண்ணெய் போன்றவையும் நல்லது.

    மூட்டுவலிக்கு எண்ணெய் துத்தி இலை, குப்பைமேனித் தழை, சோற்றுக் கற்றாழை, கோவை இலை போன்றவற்றை வகைக்கு 100 கிராம் அளவு எடுத்து தனித்தனியாக இடித்து சாறு பிழிய வேண்டும். இத்துடன் 750 மில்லி அளவு வேப்பெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி வடிகட்ட வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தடவினால் வாத வலி நீங்கும்.

    தழுதாழை இலையை சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது விளக்கெண்ணெய் கலந்து வதக்கி மூட்டுவலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். மூன்று நாட்கள் தொடர்ந்து ஒத்தடம் கொடுத்தால் மூட்டு வலி நீங்கும்.

    பழங்கள்

    உணவில் வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்து கருப்பட்டி, வெல்லம் சேர்க்க வேண்டும். செக்கில் ஆட்டிய எண்ணெய் பயன்படுத்த வேண்டும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் கேழ்வரகு, சாமை, தினை போன்ற சிறுதானிய உணவுகளையும் மூங்கிலரிசியையும் பயன்படுத்த வேண்டும். முருங்கைக்காய், முருங்கைக் கீரை, பூண்டு, முடக்கத்தான், தேங்காய், நெல்லிக்காய், கைக்குத்தலரிசி சேர்க்கவும். பழங்களில் சப்போட்டா, மாதுளை, அன்னாசி சேர்த்துக்கொள்ள வேண்டும். வெள்ளாட்டுக்கறி, வெள்ளாட்டு கால்கள் சிறந்த உணவு. குறிப்பாக நீர் வடிவமாக எடுத்துக் கொள்ளும்போது தேவையான புரதச்சத்து கிடைக்கும். இரவில் ஊற வைத்த கருப்பு எள்ளினை காலையில் வெறும் வயிற்றில் உண்ணலாம். பாசிப்பருப்பு சுண்டல், கொண்டைக்கடலை சுண்டலை மாலையில் எடுத்துக்கொள்ளலாம்.

    வெளிப் பிரயோகம்

    வேம்பு, புங்கன், இலுப்பை, நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் போன்ற ஐங்கூட்டு எண்ணெய் 10 கிராம் எடுத்து அதனுடன் ஐந்து பழுத்த எருக்கு இலை, பச்சைக் கற்பூரம் சேர்த்து காய்ச்சி பூசினால் வலி உடனே குறையும். 100 மில்லி நல்லெண்ணெயுடன் பூனைக்கண் குங்கிலியம் 10 கிராம் சேர்த்துக் காய்ச்சி பூசலாம். தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி அதில் கற்பூரம் சேர்த்து பயன்படுத்தலாம். இரண்டு டீஸ்பூன் உளுந்துடன் ஒரு டீஸ்பூன் ஆவாரை இலைப் பொடி நீர் சேர்த்துப் பற்றிடலாம். இவற்றையெல்லாம் முறைப்படி செய்தால் மூட்டு வலியில் இருந்து விடுபடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சித்த மருத்துவர் டி.பாஸ்கரன்.

    • உடல் பருமனுள்ளவர்களுக்கு அதிகமாக வருகிறது.
    • நின்றுகொண்டே வேலை பார்ப்பவர்களுக்கு வரும்.

    வெரிகோஸ் வெயின் பிரச்சினை என்பது பெரும்பாலும் கால்களில் தோலுக்கு அருகிலுள்ள ரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் ஒழுங்காக செயல்படாமல் இருப்பது, அல்லது செயலற்று போவதால் ரத்தம் கீழ்நோக்கி தேங்கி, நாளங்கள் வீங்கி, சுருண்டு காணப்படும் நோயாகும். இது பெரும்பாலும் நின்றுகொண்டே வேலை பார்ப்பவர்களுக்கும், உடல் பருமனுள்ளவர்களுக்கும் அதிகமாக வருகிறது. இந்நோயில் ரத்தம் தேங்கி நிற்பதால் நிற மாற்றமடைந்து நீலம் கலந்த கருப்பு நிறத்தில் காணப்படும், அரிப்பு, புண்கள் எளிதில் வருகிறது.

    இதற்கான சித்த மருந்துகள்: அமுக்கரா சூரணம் 1 கிராம், முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி., நாக பற்பம் 100 மி.கி., எடுத்து தேன், பால் அல்லது வெந்நீரில் மூன்று வேளை சாப்பிடலாம். பாதிக்கப்பட்ட பகுதியில் எட்டித் தைலம் தேய்க்கலாம். அரிப்பு இருந்தால் அருகன் தைலமும், புண் இருந்தால் பச்சை எண்ணெய்யும் அந்த இடத்தில் போடலாம். அவுரியை அரைத்து வெரிகோஸ் வெய்ன் பிரச்சினை உள்ள இடத்தில் கட்டலாம்.

    சிறப்பு சிகிச்சையாக "அட்டை விடுதல் சிகிச்சை" செய்யலாம். இது சித்தர் பெருமான் அகத்தியர் அருளியது. இந்த சிகிச்சையில் வலி இருக்காது. தொடர்ந்து அட்டை விடும் போது இந்த வெரிகோஸ் வெய்ன் பிரச்சினை நன்றாக சரியாகிவிடும். இது ஒரு பாதிப்பில்லாத எளிய சிகிச்சை முறை. பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவமனையில் இந்த சிகிச்சை இலவசமாக கிடைக்கும்.

    வெரிகோஸ் வெய்ன் பாதிப்புள்ளவர்கள் நெடுந்தூரம் நடக்கும் போது அல்லது வெகு நேரம் நிற்கும் போது பாதிக்கப் பட்ட இடத்தில் இறுக்கமாக துணி அல்லது பேண்டேஜ் கட்டுவது நல்லது.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • சுகாதாரமான உணவுகளை சாப்பிட வேண்டும்
    • காரமான, புளிப்பான உணவுகளை அளவோடு சாப்பிடுங்கள்.

    வயிற்றுப்புண் குணமடைய நேரம் தவறாமல் உணவு சாப்பிடுங்கள். காரமான, புளிப்பான உணவுகளை அளவோடு சாப்பிடுங்கள். இரவு நெடுநேரம் கண்விழித்து டி.வி, மொபைல் பார்ப்பதை தவிர்க்க வேண்டும், மனச்சோர்வு, மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். சுகாதாரமான உணவுகளை சாப்பிட வேண்டும், சுகாதாரமற்ற தண்ணீர், உணவுகளால் ஹெச்.பைலோரை பாக்டீரியா தொற்றினாலும் குடல் புண் வரும்.

    இதற்கான சித்த மருந்துகள்: வில்வாதி லேகியம், சீரக வில்வாதி லேகியம் இவைகளில் ஒன்றை காலை, இரவு ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிடுங்கள். அடுத்து, ஏலாதி சூரணம் ஒரு கிராம், சங்கு பற்பம் 200 மி.கி. எடுத்து மூன்று வேளை, நெய்யுடன் கலந்து சாப்பிட வேண்டும். மேலும், குன்ம குடோரி மெழுகு கால் டீ ஸ்பூன் (250 மி.கி) காலை, இரவு உணவுக்குப் பின்பு சாப்பிடுங்கள்.

    உணவில் மோர், தயிர், பிரண்டைத் தண்டு துவையல், மணத்தக்காளி கீரை, சுண்டை வற்றல் குழம்பு மற்றும் பழைய சாதத்துடன் சின்ன வெங்காயம், இஞ்சி, மோர் கலந்து சாப்பிடுங்கள். பழங்களில் மாதுளம்பழம், செவ்வாழைப்பழம், ஆப்பிள் சாப்பிடுங்கள்.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • கொழுப்பு செரிமானத்திற்கு பித்த நீர் இன்றியமையாதது.
    • பித்தப் பை பேரிக்காய் வடிவிலிருக்கும் ஜீரண உறுப்பு.

    பித்தப் பை பேரிக்காய் வடிவிலிருக்கும் ஜீரண உறுப்பு. பித்தப்பையில் தான் கல்லீரலில் சுரக்கும் பித்த நீர் சேகரிக்கப்பட்டு உணவு செரிமானத்தின் போது சிறு குடலை வந்தடையும். சுமார் 30-50 மி.லி. பித்த நீர் பித்தப் பையில் இருக்கும். கொழுப்பு செரிமானத்திற்கு பித்த நீர் இன்றியமையாதது. கல்லீரல் சுரக்கும் பித்த நீரில் கொழுப்பு அதிக அடர்த்தியாக இருப்பது, பித்த நீரில் பிலிரூபின் அதிகமாக இருப்பது, பித்தப் பை சரியாக சுருங்கி, விரியாமல் இருப்பது, இவை பித்தப் பையில் கற்கள் உருவாகுவதற்கான பொதுக் காரணங்கள்.

    இவை தவிர பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரப்பது, சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, குறிப்பாக காலை உணவைத் தவிர்ப்பது, அதிக எண்ணெய் பலகாரங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பது, உடல் பருமன் போன்ற காரணங்களால் பித்தப்பையில் கற்கள் உருவாகின்றன.

    சித்த மருத்துவத்தில் பித்தப்பை மற்றும் பித்தத்தாரை கற்களுக்கான சிகிச்சை முறைகள் வருமாறு:

    இஞ்சிச்சாறு, பூண்டுச்சாறு, பழச்சாறு, புதினா சாறு இவைகளை சமஅளவில் எடுத்து, அதனுடன் சமஅளவு ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து கலந்து பிரிட்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலை 10 மி.லி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.

    மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை எடுத்து பழச்சாற்றில் கலந்து குடிக்க வேண்டும். கீழாநெல்லி பொடி அல்லது கீழாநெல்லி சாறு மற்றும் கரிசாலை பொடி அல்லது கரிசாலைச் சாறு எடுத்து மோருடன் கலந்து காலை, இரவு என இருவேளை குடித்து வரவேண்டும்.

    கீழாநெல்லி மாத்திரை காலை, மதியம், இரவு 2 மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும். சாந்த சந்திரோதய மாத்திரை காலை, மதியம், இரவு 2 மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும்.

    பிடங்கு நாறி இலைப்பொடி, மஞ்சள், கடுக்காய்த் தோல் இவை மூன்றையும் பொடித்து வைத்துக் கொள்ளவும். அதில் ஒரு டீஸ்பூன் பொடியை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் குடிக்க வேண்டும். இது பிடங்கு நாறிக் குடிநீர் எனப்படும். மண்டூராதிக் குடிநீர், வெடியுப்புச் சுண்ணம், வெடிஅன்னபேதிச் செந்தூரம் இவைகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ளலாம்.

    நார்ச்சத்து அதிகமுள்ள அவரை, பீன்ஸ், கோவைக்காய், சுரைக்காய், பாகற்காய், புடலங்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, கீரைகள் இவைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். கொழுப்பு அதிகமுள்ள உணவுகள், பேக்கரி உணவுகளை தவிர்க்க வேண்டும். தினமும் 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீரை கட்டாயம் குடிக்க வேண்டும்.

    சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • சிலருக்கு முகத்தில் அங்கும் இங்குமாக பல இடத்தில் கருந்திட்டுகள் இருக்கும்.
    • கருந்திட்டுகள் பிரச்சனைக்கு சித்த மருத்துவத்தில் நிரந்தர தீர்வு உண்டு.

    முகத்தில் உள்ள கருமை நிறத் திட்டுகள் நீங்க உதவும் சித்த மருந்து குங்குமாதி லேபம். இதை இரவு நேரங்களில் முகத்தில் பூசி வர வேண்டும். அடுத்து, ஒரு ஜாதிக்காய், 2 பாதாம் பருப்பு எடுத்து நன்றாக பொடி செய்து அரைத்து அதை கருந்திட்டு உள்ள இடத்தில் பூசி வர வேண்டும்.

    ஜாதிக்காயிலுள்ள 'மிரிஸ்டிசின்' என்னும் சத்து, தோல் கருமை, தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுத்து, முதுமையிலும் இளமையான தோற்றத்தை தரும். வாரம் இருமுறை சோற்றுக் கற்றாழை ஜெல்லுடன் எலுமிச்சைச் சாறு கலந்து, முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இது முகத்திற்கு இயற்கை சூரிய எதிர்ப்பு கவசமாகத் திகழும். இதனால் முகத்தில் ஏற்படும் கருந்திட்டுகள் மறையும்.

    100 மில்லி அளவு தேங்காய் எண்ணெய் எடுத்து அதில் குங்குமப்பூ ஒரு கிராம் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். சூரியக்கதிர்கள் உடலில் படும் இடங்களான முகம், கழுத்து, கை, கால்களில் இதை தினமும் தடவி வர வேண்டும். இதன்மூலம் சூரியக் கதிரினால் வரும் கருமையை நீக்கி தோலுக்கு இளமையான வசீகரத்தைப்பெறலாம்.

    வைட்டமின் ஏ சத்துள்ள உணவுகள் தோலின் கொலாஜன் மற்றும் எலாஸ்டிக் தன்மையை அதிகப்படுத்தும். இவற்றிலுள்ள ரெட்டினாய்டுகள் தோலுக்கு பளபளப்பைக் கொடுக்கும். ஆகவே, வைட்டமின் ஏ சத்து நிறைந்த மாம்பழம், பப்பாளி, கேரட், முருங்கைக்காய், கீரை, முட்டை, மீன், இறைச்சி, பால் மற்றும் தர்ப்பூசணி பழம், வெள்ளரிக்காய் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முகத்தை அடிக்கடி தண்ணீரில் கழுவி வர வேண்டும்.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • தூக்கம் குறைவானாலும் தாய்ப்பால் சுரப்பு குறையும்.
    • தாய்ப்பாலை சுரக்க வைக்கும் உணவுகளை அதிக அளவில் சாப்பிடுங்கள்.

    60% பெண்கள் தாய்ப்பால் எனக்கு சரியாக சுரக்கவில்லை எனக் கருதி, தாய்ப்பால் கொடுப்பதை சீக்கிரமாகவே நிறுத்திவிடுகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

    புரொலெக்டின் ஹார்மோன் மற்றும் ஆக்சிடோசின் ஹார்மோன் சீராக இருந்தால் நன்றாக பால் சுரக்கும். இவைகளை அதிகப்படுத்தி பால் சுரப்பை மேம்படுத்த உதவும் சித்த மருந்துகள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் வருமாறு:

    தண்ணீர் விட்டான் கிழங்கு அல்லது சதாவேரி பொடி அல்லது லேகியம் காலை, இரவு ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிடலாம். சவுபாக்கிய சுண்டி லேகியம் காலை, இரவு ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிடலாம்.

    வெந்தயத்தை பொடித்து நல்லெண்ணெய் சேர்த்து களியாக கிண்டி காலை, இரவு இருவேளை கொடுக்க வேண்டும். பூண்டு, பால் சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும். அல்லது பூண்டு குழம்பு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அம்மான் பச்சரிசி இலையைக் கீரையாக சாப்பிட்டு வரவேண்டும். பெருஞ்சீரகம் பால் சுரப்பை அதிகரிக்கும். பெருஞ்சீரக டீ அல்லது பெருஞ்சீரகத்தை வறுத்து சாப்பிடலாம்.

    பாதாம் பால் குடிக்கலாம். கருப்பட்டியில் செய்த கறுப்பு எள்ளுருண்டை சாப்பிட வேண்டும். பசலைக்கீரை, அரைக்கீரை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பப்பாளிக்காயை கூட்டு வைத்து சாப்பிட வேண்டும். பால், தயிர், கேரட், கேழ்வரகு, முருங்கைக்காய், பாலாடைக்கட்டி, சுறாமீன், பாறை மீன், ஓட்ஸ் கஞ்சி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பூசணி சாறு இவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு தூங்க வேண்டும். இதனால் புரொலெக்டின் மற்றும் அன்புக்குரிய ஹார்மோன் ஆக்சிடோசின் இவை அதிகரித்து பால் சுரப்பை அதிகப்படுத்தும்.

    குழந்தைக்கு ஒவ்வொரு முறை தாய்ப்பால் கொடுக்கும்போது, சரியான நிலையில் நீங்களும் குழந்தையும் இருக்க வேண்டும். தாய்ப்பால் சுரப்புக்காக நீங்கள் மார்பகத்தை அவ்வபோது அழுத்தி விடுங்கள். மார்பகத்தை அளவாக பம்ப் செய்யுங்கள். தாய்ப்பால் நன்றாக சுரக்கும். தாய்ப்பாலை சுரக்க வைக்கும் உணவுகளை அதிக அளவில் சாப்பிடுங்கள். நீங்களும் குழந்தையும் நன்கு தூங்க வேண்டும். தூக்கம் குறைவானாலும் தாய்ப்பால் சுரப்பு குறையும்.

    சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • பனிக்காலத்தில் மூக்கடைப்பு, சளி, இருமல் போன்ற நோய்கள் ஏற்படும்.
    • பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன

    பனிக்கால நோய்களில் இருந்து உடலை காக்க சித்த மருத்துவ முறைகள் குறித்து இம்ப்காப்ஸ் இயக்குனரும், வேலூரை சேர்ந்த சித்த மருத்துவருமான டி.பாஸ்கரன் கூறியதாவது:-

    பொதுவாக பனிக்காலம் என்பது (முன்பனி, பின்பனி) மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களில் வரக்கூடியது.

    இந்த பனிக்காலத்தில் மூக்கடைப்பு, சளி, இருமல் போன்ற நோய்கள் ஏற்படும். இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு போன்ற பண்டங்களை உட்கொள்ள வேண்டும்.

    நீரை கொதிக்க வைக்கும்போது ஒரு டீஸ்பூன் மிளகு அல்லது லவங்கம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். காலையில் எழுந்து மூச்சுப்பயிற்சி செய்து துளசி, மிளகு, வெற்றிலை மற்றும் தேன் சேர்த்த பானத்தை அருந்தினால் மூச்சுப்பாதை சீராகி கோழையினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் வராமல் தடுக்கப்படும். அத்துடன் உடலுக்கு குளிரைத் தாங்கும் சக்தி ஏற்படும்.

    மேலும் பருவ மாற்றத்தால் ஏற்படக்கூடிய சுரம் (காய்ச்சல்), சளித் தொல்லையைப் போக்க திரிகடுகு சூரணத்தை தேன் சேர்த்துச் சாப்பிடலாம். நெஞ்சில் சளி கட்டுதல், தொண்டையில் டான்சில் வீக்கம், ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் நோய்கள் வர வாய்ப்பு உள்ளதால் கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டையை நீரில் சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்து வருவது நல்லது.

    பனிக்காலத்தில் காற்றில் பிராணவாயு குறைவாக இருப்பதால் சுவாசிப்பதில் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. இதற்கு கல்யாண முருங்கை இலையை வடை அல்லது அடை செய்து சாப்பிட்டு வருவது நல்ல தீர்வைத் தரும். சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் முற்றிய முருங்கை விதையைச் சாப்பிட்டு அந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடலாம். சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் சளி, இருமல் மட்டுமின்றி மலக்கட்டினையும் தடுக்கலாம். மேலும் இந்த காலக்கட்டத்தில் எப்போதும் குளிர்ந்த சூழல் நிலவுவதால் அந்த குளிர்ந்த காற்றை சுவாசிக்கும்போது ஜலதோஷத்துடன் தும்மல், மூக்கடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

    இந்தச் சூழலில் வாய் வழியாக சுவாசிக்க நேர்வதால் மூச்சுக்குழாய்க்குள் கிருமிகள் எளிதாக நுழைந்துவிடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. நொச்சி, வேப்பிலை, நுணா போன்றவற்றை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடிப்பது மூக்கடைப்பிலிருந்து விடுபட உதவும். மிளகை தீயில் எரித்து அதன் புகையை சுவாசித்தால் மூக்கடைப்பு விலகும். கற்பூரவல்லி, தூதுவளை போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் சளித்தொல்லையை மட்டுமல்ல மூட்டு வலியையும் தவிர்க்கலாம். மூட்டு வலி உள்ளவர்கள் அவ்வப்போது முடக்கத்தான் கீரையை தோசை செய்து சாப்பிடுவது, ரசம் வைத்து சாப்பிட்டு வருவது நல்லது.

    பனிக்காலத்தின்போது வாரத்தில் இரண்டு நாட்கள் சுக்கு மற்றும் நொச்சித் தைலத்தை உடல் முழுவதும் தடவ வேண்டும். முக்கியமாக எல்லா மூட்டுகளிலும் இந்த தைலங்களைத் தடவி குளித்தால் மூட்டுவலி நன்றாகக் குறையும். அத்துடன் உடல் வறட்சியும் குறையும். உடல் வறட்சி அதிகம் உள்ளவர்கள் குளிப்பதற்கு 10 நிமிடத்துக்கு முன் உடலில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். பனிக்காலத்தில் காலை எழுந்ததும் வரும் அடுக்குத் தும்மல், மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சினைகளுக்கு ஒரு டம்ளர் பாலில் 10 பூண்டுப்பற்களை உரித்துப்போட்டு நன்றாக வேகவைத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், கால் டீஸ்பூன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால் தீர்வு கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×