என் மலர்
நீங்கள் தேடியது "Hunter Biden"
- ஜோ பைடன் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை குடியரசு கட்சியினர் முன்வைத்தனர்
- விசாரணைக்கு பிறகு செனட் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்படும்
அமெரிக்காவில் அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
தற்போது அதிபராக உள்ள ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கி உள்ளார். இரு தரப்பிலும் பரஸ்பரம் பல விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் மாறி மாறி வைக்கப்படுகிறது.
சில தினங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் பைடனின் மகன் ஹன்டர் பைடன் மீது சுமார் ரூ.11 கோடி தொகை வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஜோ பைடன் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து அது குறித்து அமெரிக்க அதிபரிடம் பாராளுமன்ற விசாரணையை தொடங்க பாராளுமன்ற கீழ் சபையான பிரதிநிதிகள் சபையில் (House of Representatives) வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அந்த வாக்கெடுப்பில் பைடன் மீதான புகார் குறித்து விசாரணை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சியின் போது துணை அதிபராக இருந்த பைடன் தனது பதவியை தவறாக பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் லாபமடைந்ததாகவும், அக்காலகட்டத்தில் உக்ரைன் மற்றும் சீனாவில் வர்த்தக தொடர்புகளை வைத்திருந்த ஹன்டர் பைடன் தந்தையின் பதவியை ஆதாயம் பெறும் நோக்கில் பயன்படுத்தியதாகவும், அதை பைடன் தடுக்க தவறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை அதிபர் பைடன் மறுத்துள்ளார்.
பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களில் 3 கமிட்டி உருவாக்கப்பட்டு இது குறித்து முன்னரே விசாரணை நடத்த தொடங்கியிருந்தாலும், தற்போதைய வாக்கெடுப்பு வெற்றியினால் அதிகாரபூர்வ விசாரணை நடைபெற வெள்ளை மாளிகை ஒத்துழைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. விசாரணையை முன்னெடுத்துள்ள குடியரசு கட்சி பிரதிநிதிகள் கேட்கும் ஆவணங்களையும், தரவுகளையும் அது தந்தாக வேண்டும்.
விசாரணைக்கு பிறகு அடுத்த கட்டமாக பாராளுமன்ற மேல் சபையான செனட் சபை உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படும். இதிலும் பைடனுக்கு எதிராக வாக்களிக்கப்பட்டால் அவர் பதவி விலக வேண்டும்.
அதிபர் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இந்த விசாரணையின் நிகழ்வுகளை அரசியல் விமர்சகர்கள் கூர்ந்து கவனிக்கின்றனர்.
- 2015 முதல் 2021 வரையிலான காலகட்டம் கணக்கெடுக்கப்பட்டு உள்ளது
- "முதல் குடும்பம்" அலட்சியமாக இருந்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகள், 42 வயதான ஆஷ்லி பைடன் (Ashley Biden).
சமூக ஆர்வலராகவும், ஆடை வடிவமைப்பு கலைஞராகவும் உள்ள ஆஷ்லி, பல சமூக நல தொண்டுகளிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டு வருகிறார். இது மட்டுமின்றி, டெலாவேர் மாநில நீதி மையத்தில் (Delaware Center for Justice) கிரிமினல் சட்டவிதிகளில் மாற்றம் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து ஆஷ்லி பைடன் அமெரிக்க அரசுக்கு வருமான வரி பாக்கியாக ரூ.4 லட்சத்திற்கு ($5000) மேல் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த டிசம்பர் 1 அன்று, பிலடெல்பியா கவுன்டி பகுதியில் உள்ள பென்சில்வேனியா மாநில வருவாய் துறை, ஆஷ்லிக்கு இது குறித்து தகவல் அனுப்பியது.
ஒபாமா அதிபராக இருந்த போது துணை அதிபராக ஜோ பைடன் இருந்த 2015 ஜனவரி 1 தொடங்கி, பைடன் அதிபராக பதவி ஏற்கும் சில தினங்களுக்கு முன்பு 2021 ஜனவரி 1 வரையுள்ள காலகட்டம் இதில் கணக்கிடப்பட்டுள்ளது.
தற்போது வரை இது குறித்து ஆஷ்லி பைடன் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
2023 டிசம்பர் 7 அன்று ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடன் (Hunter Biden) மீதும் வரி ஏய்ப்பு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
"பணக்காரர்களும் உயர்ந்த இடங்களில் தொடர்பு வைத்துள்ளவர்களும் தாங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய சரியான பங்கை செலுத்துவதில்லை என ஜோ பைடன் பலமுறை தெரிவித்துள்ளார். ஆனால் அவரது இரு குழந்தைகளும் வருமான வரி செலுத்தவில்லை. மிக அலட்சியமாக அமெரிக்காவின் முதல் குடும்பமான பைடன் குடும்பம் இருந்துள்ளது" என பைடன் எதிர்ப்பாளர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.
- ஹண்டர் பைடனின் காரில் இருந்து கோல்ட் ரிவால்வர் துப்பாக்கியையும், கோகைன் உள்ளிட்ட பொருட்களைக் கண்டெடுத்தார்.
- எங்களது குடும்பம் நிறைய கஷ்டங்களை சந்தித்துள்ளது, ஒரு தந்தையாக எனது மகனுக்கு எப்போதும் பக்கத்துணையாக நிற்பேன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கி வைத்திருந்த வழக்கில் சிக்கி நீதிமன்றத்துக்கு நடையாக நடந்து வருகிறார். மூளை கேன்சரால் கடந்த 2015 ஆம் ஆண்டு உயிரிழந்த ஜோ பைடனின் இளைய மகன் பீயு பைடனின் மாணவி கடந்த 2018 ஆம் ஆண்டு ஹண்டர் பைடனின் காரில் இருந்து கோல்ட் ரிவால்வர் துப்பாக்கியையும், கோகைன் உள்ளிட்ட போதைப்பொருட்களையும் கண்டெடுத்தார்.
இதுதொடர்பாக அவர் போலீசுக்கு வாக்குமூலம் அளித்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. போதைப்பழக்கத்துக்கு அடிமையான அதிபரின் மகன் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தார் என்பதே இந்த வழக்கு ஊடக வெளிச்சம் பெற போதுமான காரணாமாக அமைந்தது.
அதன்படி அமெரிக்காவில் அதிகம் பேசப்பட்டு வரும் இந்த வழக்கில் ஹண்டர் பைடன் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டால் அவரை மன்னிக்கப் போவதில்லை என்று ஹண்டரின் தந்தையும் அமெரிக்க அதிபருமான ஜோ பைடன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நான் அதிபராக இருந்தாலும் ஒரு தந்தையாக, எனது மகன் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளேன், எங்களது குடும்பம் நிறைய கஷ்டங்களை சந்தித்துள்ளது, ஒரு தந்தையாக எனது மகனுக்கு எப்போதும் பக்கத்துணையாக நிற்பேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆட்சியில் உள்ள அதிபரின் மகன் மீது குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும். நவம்பர் மாதம் அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதர்க்கனா தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- குற்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறை.
- போதைப்பொருட்களை அதிபர் பைடனின் மனைவி கண்டெடுத்தார்.
போதை பழக்கத்துக்கு அடிமையான அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் மூலம் பதவியில் உள்ள அமெரிக்க அதிபரின் மகன் ஒருவர் குற்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.
முன்னதாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த போது, மகனுக்கு எதிரான தீர்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவரை மன்னிக்க மாட்டேன் என்று அதிபர் பைடன் தெரிவித்து இருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஹண்டர் பைடனின் காரில் இருந்து கோல்ட் ரிவால்வர் துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்களை அதிபர் பைடனின் மனைவி கண்டெடுத்தார்.
இது தொடர்பாக அவர் காவல் துறையில் வாக்குமூலம் அளித்ததை அடுத்து ஹண்டர் பைடன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அந்த வகையில், தற்போது ஹண்டர் பைடன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.
மகன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்த அதிபர் ஜோ பைடன், "நான் அதிபர், மற்றும் ஒரு தந்தை. தங்களது செல்ல பிள்ளைகள் ஒரு விஷயத்திற்கு அடிமையாகி அதில் இருந்து அவர்கள் விடுப்பட்டு, மீண்டு வருவதை பார்த்து பெருமை கொள்ளும் உணர்வை பல்வேறு குடும்பத்தினர் புரிந்து கொள்வர்."
"இந்த வழக்கின் தீர்ப்பை நான் ஏற்றுக் கொண்டு, நீதிமன்ற வழிமுறைகளுக்கு தொடர்ந்து மரியாதை அளிப்பேன். இந்த தீர்ப்பை எதிர்த்து ஹண்டர் பைடன் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளார்," என்றார்.
- வழக்கறிஞர்கள் மற்றும் அதிபர் பைடனுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.
- ஹண்டர் பைடனுக்கு அதிகபட்சம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பான விசாரணையில் குற்றம் செய்ததாக ஒப்புக்கொண்டார். ஹண்டர் பைடனின் இந்த செயல், அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மற்றும் அதிபர் பைடனுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.
54 வயதான ஹண்டர் பைடன் கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 1.4 மில்லியன் டாலர்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார். குற்றத்தை ஒப்புக் கொண்டால் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்கும் சூழல் உருவாகலாம் என்று ஹண்டர் பைடன் இவ்வாறு செய்ததாக தெரிகிறது.
அமெரிக்க மாவட்ட நீதிபதி மார்க் ஸ்கார்சி வழக்கில் டிசம்பர் 16 ஆம் தேதி தண்டனை அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இதில் ஹண்டர் பைடனுக்கு அதிகபட்சம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1 மில்லியனுக்கும் அதிகமாக அபராதம் விதிக்கப்படலாம்.
- பொது மன்னிப்பு மூலம் குற்ற வழக்குகளில் சிக்கிய நபரின் சிறை தண்டனையை ரத்து செய்ய முடியும்.
- என் மகன் மீதான விசாரணை நியாயமற்ற முறையில் நடந்த போதும் நான் என் வார்த்தையைக் காப்பாற்றினேன்
நவம்பர் 5 ஆம் தேதி நடந்து முடிந்த அமரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜோ பைடன் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை தோற்கடித்து முன்னாள் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றார். அடுத்த ஜனவரியுடன் ஜோ பைடன் பதவிக்காலம் முடிவடைகிறது.
பதவியேற்கும் முன்பே டிரம்ப் முக்கிய முடிவுகளை அறிவித்து வருகிறார். இதற்கிடையே பதவியில் இருந்து வெளியேறும் ஜோ பைடனும் கடைசியாக தனது அதிகாரத்தை பயன்படுத்தி முக்கிய முடிவுகளை செயல்படுத்தி வருகிறார்.
ரஷியா மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்கி ஜோ பைடன் திடீர் அதிரடி காட்டினார். இந்நிலையில் கிரிமினல் வழக்கில் சிக்கியுள்ள தனது மகன் ஹண்டர் பைடனுக்கு ஜோ பைடன் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

ஜோ பைடனின் மூத்த மகனான ஹண்டர் பைடன் [54 வயது] சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கி வைத்திருந்த வழக்கிலும், பத்து ஆண்டுகளில் சுமார் 1.4 மில்லியன் டாலர்கள் வரி ஏய்ப்பு செய்த வழக்கிலும் சிக்கியுள்ளார். இதற்கிடையே தனது போதைப் பழக்கத்தில் இருந்தும் அவர் மீண்டு வருகிறார்.
அமெரிக்காவில் அதிபராக இருக்கும் ஒருவர் பொது மன்னிப்பு மூலம் குற்ற வழக்குகளில் சிக்கிய நபரின் சிறை தண்டனையை ரத்து செய்ய முடியும். ஆனால் தனது மகனுக்கு அவ்வாறு மன்னிப்பு வழங்கமாட்டேன் என ஜோ பைடன் கூறி வந்த நிலையில் தற்போது அதற்கு மாறாக ஹண்டர் பைடனுக்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், இன்று, என் மகன் ஹண்டருக்கு பொது மன்னிப்பு வழங்கி கையெழுத்திட்டேன். நான் பதவியேற்ற போது நீதித்துறையின் முடிவுகளில் தலையிட மாட்டேன் என்று கூறியிருந்தேன், அதை இதுநாள் வரை காப்பாற்றி வந்துள்ளேன்.
என் மகன் மீதான விசாரணை நியாயமற்ற முறையில் நடந்த போதும் நான் என் வார்த்தையைக் காப்பாற்றினேன். ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மகன் என்ற ஒரே காரணத்தால் ஹண்டர் மீது விசாரணை நடந்துள்ளது. என் மகனை வைத்து எனது செயல்பாடுகளை நிறுத்த முயற்சி நடந்தது. எனவே தற்போது மன்னிப்பு வழங்கியுள்ளேன் என்று பைடன் குறிப்பிட்டுள்ளார்.
தனது மகன் சிறைக்குச் செல்வதிலிருந்து ஜோ பைடன் காப்பாற்றி உள்ள நிலையில் அடுத்து அதிபராகப்போகும் டிரம்ப் இதை விமர்சித்துள்ளார். நீதித்துறையே கருச்சிதைவு செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.

மேலும் ஹண்டருக்கு பொது மன்னிப்பு வழங்கியதுபோல் 2021 இல் டிரம்ப் ஆட்சியை இழந்தபோது வெள்ளை மாளிகை பகுதியில் போராட்டம் நடத்தி தற்போது சிறையில் இருக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் சேர்த்து பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
டிரம்ப் பாலியல் குற்றச்சாட்டு உட்பட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நிலையில் பதவியேற்றதும் தனக்குத் தானே பொது மன்னிப்பு வழங்கிக்கொள்வார் என்ற கருத்தும் நிலவுவது குறிப்பிடத்தக்கது.