search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "illegal termination"

    • 5000 சிறு செயற்கை கோள்களை விண்வெளியில் செலுத்தியுள்ளது.
    • ஸ்பேஸ்எக்ஸ் நடவடிக்கை எடுத்திருப்பது சட்டவிரோதம் என வழக்கறிஞர் கூறினார்.

    கடந்த 2002ல் அமெரிக்காவை சேர்ந்த கோடீசுவரரான எலான் மஸ்க், கலிபோர்னியா மாநிலத்தில் தொடங்கிய நிறுவனம் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX).

    செயற்கை கோள் தயாரிப்பு, விண்வெளியில் செயற்கை கோள்களை நிலைநிறுத்துதல், விண்வெளி ஆராய்ச்சி, தொலை தொடர்பு உள்ளிட்ட பல துறைகளில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், அதிவேக இணையவழி சேவைக்காக ஃபால்கன் (Falcon) எனும் ராக்கெட்டுகள் மூலம் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கை கோள்களை செலுத்துவதில் முன்னணியில் உள்ளது.

    இதுவரை, இந்நிறுவனம் 5000 சிறு செயற்கை கோள்களை விண்வெளியில் செலுத்தியுள்ளது.

    கடந்த 2022ல் ஸ்பேஸ்எக்ஸ் பணியாளர்கள் பலர், பணியிடத்தில் நிலவும் அசாதாரண சூழலை குறித்தும், எலான் மஸ்கின் பொதுவெளி நடவடிக்கைகள் குறித்தும் விமர்சித்து ஸ்பேஸ்எக்ஸ் உயர் அதிகாரி க்வைன் ஷாட்வெல் (Gwynne Shotwell) என்பவருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

    அதில் மஸ்கின் நடத்தை, நிறுவனத்தின் பரந்த நோக்கங்களுக்கு எதிராக "கவனத்தை திசைதிருப்பும் இடையூறு" என குறிப்பிட்டிருந்தனர்.

    இதை தொடர்ந்து புகார் அளித்த பணியாளர்களில் 8 பேரை ஸ்பேஸ்எக்ஸ் பணிநீக்கம் செய்துள்ளது.

    விமர்சனம் செய்ததால் தங்களை முறைகேடாக பணிநீக்கம் செய்ததாக அவர்கள் அமெரிக்காவின் தேசிய பணியாளர் நல வாரியத்திடம் புகாரளித்தனர்.

    "எந்தவித விருப்பு வெறுப்புமின்றி நிறுவனத்தின் குறிக்கோளை நிலைநாட்டவும், சக பணியாளர்களின் நலன் குறித்தும், பணியிட சூழல் வசதியை மேம்படுத்த வலியுறுத்தியும் முறையிட, பணியாளர் நல சட்டப்படி ஊழியர்களுக்கு எல்லாவித உரிமைகளும் இருந்த போதிலும் அதனை பயன்படுத்தியவர்களுக்கு எதிராக ஸ்பேஸ்எக்ஸ் நடவடிக்கை எடுத்திருப்பது சட்டவிரோதம்" என பணியாளர்களின் வழக்கறிஞர் டெபோரா லாரன்ஸ் தெரிவித்தார்.

    இதனையடுத்து, நல வாரியத்தின் வழக்கறிஞருடன் ஸ்பேஸ்எக்ஸ் தரப்பு வழக்கறிஞர்கள் விவாதிப்பார்கள். இதில் சுமூக முடிவு எட்டப்படாவிட்டால் அடுத்தடுத்த நீதிமன்ற வழக்குகளை எலான் மஸ்க் சந்திக்க நேரிடும்.

    பணிநீக்கம் சட்டவிரோதம் என உறுதியானால், ஸ்பேஸ்எக்ஸ் மீண்டும் அவர்களை பணியில் சேர்த்து கொள்ளவும், அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×