என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ImranKhan"

    • இம்ரான்கான் 2023-ம் ஆண்டு முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • சமீப காலமாக இம்ரான்கானைச் சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான்கான் பல்வேறு வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வியாழக்கிழமைகளில் சிறையில் அவரை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரது கட்சி தலைவர்கள் சந்திக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    சமீப காலமாக இம்ரான்கானைச் சந்திக்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், சிறையில் இம்ரான்கானைச் சந்திக்க அவரது சகோதரிகளான அலீமா கான், உஸ்மா கான், நொரீன் கான் மற்றும் அவரது கட்சி தலைவர்கள் நேற்று வந்தனர். ஆனால் போலீசார் அவர்களுக்கு அனுமதி மறுத்து சாலை குறுக்கே கன்டெய்னர்களை போட்டு மறித்தனர். அவர்களை அங்கிருந்து திரும்பிச் செல்லும்படி எச்சரித்தனர். இருப்பினும், இம்ரான்கானின் சகோதரிகள் அங்கிருந்து செல்ல மறுத்தனர்.

    இதையடுத்து போலீசார் சகோதரிகள் 3 பேர் மற்றும் இம்ரான்கான் கட்சி தலைவர்கள் சிலரையும் கைது செய்தனர். பின்னர் வாகனத்தில் ஏற்றி சிறையில் இருந்து சற்று தொலைவான பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர்.

    ஏற்கனவே கடந்த செவ்வாய்க்கிழமையும் இம்ரான்கானைச் சந்திக்க வந்தபோது, அவரது 3 சகோதரிகளும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரசு ரகசியங்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது உதவியாளருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை நேற்று விதிக்கப்பட்டது.
    • இருவரும் 10 ஆண்டுகள் அரசு பதவிகள் வகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இதில் தோஷகானா ஊழல் வழக்கில் அவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    தண்டனையை எதிர்த்து இம்ரான்கான் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் மற்ற வழக்குகளில் ஜாமின் கிடைக்கவில்லை.

    இதற்கிடையே அரசு ரகசியங்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது உதவியாளர் ஷா முகமது குரேஷி ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நேற்று கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.


    இந்த நிலையில் இன்று மேலும் ஒரு ஊழல் வழக்கில் இம்ரான்கான், அவரது மனைவிக்கு தலா 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இம்ரான்கான் பிரதமர் பதவியில் இருந்து அவருக்கும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் கிடைத்த பரிசு பொருட்களை அரசிடம் ஒப்படைக்காமல் ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இருவருக்கும் தலா 14 ஆண்டு சிறைத் தண்டனை கோர்ட்டு விதித்துள்ளது. மேலும் இருவரும் 10 ஆண்டுகள் அரசு பதவிகள் வகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது.
    • ஆட்சியை அமைக்கப்போவது யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த தேர்தலில் தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.

    முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சி 2-வது இடத்திலும், முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி பிலாவல் புட்டோ ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 3-வது இடத்திலும் உள்ளன.

    மொத்தமுள்ள 266 இடங்களுக்கு சுமார் 200 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பிடிஐ ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள் சுமார் 70 இடங்களைக் கைப்பற்றினர். பிஎம்எல்-என் கட்சிக்கு 60 இடங்களும், பிபிபி கட்சிக்கு 40 இடங்களும் கிடைத்துள்ளன.

    இம்ரான்கானின் செல்வாக்கு அதிகம் நிறைந்த கைபர் பக்துன்கவா மாகாணத்தில்தான் அவரது பிடிஐ கட்சி ஆதரவு வேட்பாளர்களுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன.

    பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தம் 336 இடங்கள் இருக்கின்றன. இதில் 266 இடங்கள் மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவை. எஞ்சிய 70 இடங்கள் வெற்றி பெற்ற கட்சிகளின் பெரும்பான்மைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்படும். ஒட்டுமொத்தமாக 169 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சி கட்டிலில் அமரும்.

    இதனிடையே முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீப் மற்றும் பிபிபி கட்சியின் இணைத்தலைவர் ஆசிப் அலி ஜர்தாரி ஆகியோர் நேற்று லாகூரில் ஒரு சந்திப்பை நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

    இந்நிலையில், வடமேற்கின் ஷாங்லா பகுதியில் தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரக்காரர்களை கலைத்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மிகப் பெரிய கட்சிகளின் தலைவர்கள் தாங்களே வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளதால், அங்கு அடுத்த ஆட்சியை அமைக்கப் போவது யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

    • நாட்டின் முக்கிய நகரங்கள் முழுவதும் அவருடைய ஆதரவாளர்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர்.
    • சில நாட்களுக்கு முன்னர் நடந்த இந்த போராட்டம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இஸ்லாபாமாத்:

    பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது 'தோஷ்கானா' வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவருடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டு பாகிஸ்தான் கோர்ட்டு அவரை சிறையில் அடைத்தது. மேலும் அவர் நிறுவிய பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாப் கட்சிக்கு நாடு தழுவிய தடை விதிக்கப்பட்டது.

    சிறையில் உள்ள இம்ரான்கானை விடுக்க வலியுறுத்தி தலைநகர் இஸ்லாமாபாத் உள்பட நாட்டின் முக்கிய நகரங்கள் முழுவதும் அவருடைய ஆதரவாளர்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். சில நாட்களுக்கு முன்னர் நடந்த இந்த போராட்டம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் போராட்டத்தை துண்டிவிட்டதாக கூறி இம்ரான்கான் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • எஞ்சிய வழக்குகளில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றன.
    • தோஷகானா வழக்கில் இம்ரான்கானுக்கு இஸ்லாமாபாத் ஐகோர்ட் நேற்று முன்தினம் ஜாமின் வழங்கியது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் உள்பட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதில் பல வழக்குகளில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய வழக்குகளில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றன.

    அந்த வகையில் அரசு கருவூலத்துக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியது தொடர்பான தோஷகானா வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் தோஷகானா வழக்கில் இம்ரான்கானுக்கு இஸ்லாமாபாத் ஐகோர்ட் நேற்று முன்தினம் ஜாமின் வழங்கியது. எனினும் இம்ரான்கான் மீது இன்னும் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவாரா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

    இந்த நிலையில் தோஷகானா வழக்கில் ஜாமின் வழங்கப்பட்ட சில மணி நேரத்திலேயே மற்றொரு வழக்கில் இம்ரான்கானை போலீசார் கைது செய்தனர். கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிப் இ இன்சாப் கட்சியின் சார்பில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக இம்ரான்கான் மீது பயங்கரவாதம் மற்றும் பிற குற்றச்சாட்டுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்தான் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    • இம்ரான்கானின் ஆதரவாளர்கள் அவரை விடுதலை செய்ய கோரி வலியுறுத்தி வருகின்றனர்.
    • பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு செல்போன் மற்றும் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டன.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 72) மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    மேலும் அரசு கருவூலத்துக்குச் சொந்தமான பொருட்களை விற்று சொத்து சேர்த்ததாக இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். எனவே இஸ்லாமாபாத் கோர்ட்டு அவர்களுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. அதன்பேரில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    இதனையடுத்து பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசிய விட்டதாகவும் இம்ரான்கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இஸ்லாமாபாத் கோர்ட்டு அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்தநிலையில் தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான்கானுக்கு கோர்ட்டு ஜாமின் வழங்கியது. எனினும் மற்ற வழக்குகளில் சிறை தண்டனை பெற்று வருவதால் தொடர்ந்து சிறையில் உள்ளார்.

    இதற்கிடையே இம்ரான்கானின் ஆதரவாளர்கள் அவரை விடுதலை செய்ய கோரி வலியுறுத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணி நடத்த இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

    எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. மேலும் பாதுகாப்பு கருதி ராணுவ வீரர்கள், போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன. அதேபோல் பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு செல்போன் மற்றும் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டன.

    ஆனால் இதனை பொருட்படுத்தாமல் இம்ரான்கான் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணியாக சென்றனர். பஞ்சாப் மாகாணத்தில் நுழைந்தபோது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. எனவே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். மேலும் போராட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 4 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

    • இம்ரான்கான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.
    • இந்த வன்முறையில் 6 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

    இஸ்லாமாபாத்,

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (72), மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான்கானுக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது. மற்ற வழக்குகளில் சிறை தண்டனை பெற்று வருவதால் தொடர்ந்து சிறையில் உள்ளார். ஆனால், இம்ரான்கானை விடுதலை செய்ய அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணி நடத்த இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் அழைப்பு விடுத்தனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. பாதுகாப்பு கருதி ராணுவ வீரர்கள், போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன. பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதனைப் பொருட்படுத்தாத இம்ரான்கானின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணியாக சென்றனர். பஞ்சாப் மாகாணத்தில் நுழைந்தபோது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

    அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 4,000 பேரை போலீசார் கைதுசெய்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

    இம்ரான்கான் ஆதரவாளர்களின் போராட்டத்தில் வெடித்த வன்முறையில் 4 துணை ராணுவ வீரர்கள் மற்றும் 2 போலீசார் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வீரர்கள் காயமடைந்தனர்.

    இந்நிலையில், பாகிஸ்தானில் வன்முறையில் ஈடுபடும் போராட்டக்காரர்களைக் கண்டதும் சுட அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    • இம்ரான்கானுக்கு கைது வாரண்ட்டை இஸ்லாமாபாத் மாஜிஸ்திரேட்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.
    • பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், இங்கிலாந்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    தேசத்துரோக வழக்கில் தனது உதவியாளர் ஷாபாஸ் கில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த இந்த கூட்டத்தில் பெண் நீதிபதிக்கு இம்ரான்கான் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.

    போலீஸ் அதிகாரிகள், ஷாபாஸ் கில்லை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்த கூடுதல் செசன்ஸ் கோர்ட்டு பெண் நீதிபதி ஜெபா சவுத்ரிவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க போவதாக தெரிவித்தார்.

    இதையடுத்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் அந்த குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டன. மேலும் பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் இருந்து சாதாரண அமர்வு கோர்ட்டுக்கு வழக்கு மாற்றப்பட்டது.

    இதற்கிடையே இஸ்லாமாபாத்தில் உள்ள கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் இம்ரான்கான் ஆஜராகி, தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்பதாக கூறி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

    இந்த நிலையில் இம்ரான்கானுக்கு கைது வாரண்ட்டை இஸ்லாமாபாத் மாஜிஸ்திரேட்டு பிறப்பித்து உத்தரவிட்டார். பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    கான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்றும் அவரது இல்லத்துக்கு 300 போலீசார் அனுப்பப்பட்டு உள்ளனர் என்றும் தகவல் வெளியானது.

    ஆனால் அதனை போலீசார் மறுத்தனர். இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை. இது ஆதாரமற்றது. வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இஸ்லாமாபாத் போலீசார் தெரிவித்தனர்.

    இந்த வழக்கில் கடந்த கோர்ட்டு விசாரணையில் இம்ரான்கான் ஆஜராக தவறினார். இதையடுத்து அவர் ஆஜராவதற்காக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது குறித்து பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் கூறிய கருத்து காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சி தான் என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். #Nirmalasitharaman #ImranKhan
    புது டெல்லி:

    இந்தியாவில் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில், பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான, அமைதி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்திருந்தார். பிரதமர் மோடிக்கு ஆதரவாக இம்ரான் கான் பேசியிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தன.



    இது குறித்து செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

    இதுப்போன்ற கருத்துகள் ஏன் பரவுகின்றன என தெரியவில்லை. பிரதமர் மோடியை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்கிற எண்ணத்துடன் செயல்படும் காங்கிரசின் முக்கிய தலைவர்கள், பாகிஸ்தான் சென்று இம்ரான் கானை சந்தித்து  திட்டம் தீட்டி வருகின்றனர்.

    அதேபோல் இம்ரான் கானின் இந்த கருத்துக்கும் காங்கிரசின் சூழ்ச்சியே காரணமாகும். இப்படி செய்வதால் என்ன தான் நடந்துவிடப்போகிறது என புரியவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷா முகமது குரேஷி, இந்தியா, பாகிஸ்தானை ஏப்ரல் 16 மற்றும் ஏப்ரல் 20 ஆகிய தேதிகளில் தாக்குதல் செய்யவுள்ளது என கூறியிருந்தார். இது குறித்து நிர்மலா கூறுகையில், ‘இந்த தேதிகள் குறித்த விவரத்தை இந்தியாவில் இருந்து யார் அனுப்புகின்றனர் என தெரியவில்லை. இந்த கருத்து வேடிக்கையாகவும், வியப்பாகவும் இருந்தது’ என கூறியுள்ளார். #Nirmalasitharaman #ImranKhan

    மேற்கத்திய நாடுகள் மூலம் பாகிஸ்தான் பொருளாதாரத்தை மேம்படுத்த மோடியை இம்ரான்கான் புகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #PMModi #Imrankhan
    புதுடெல்லி:

    ‘இந்தியாவில் மீண்டும் மோடி ஆட்சி அமைத்தால் பேச்சுவார்த்தை மூலம் காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க முடியும்’ என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கருத்து வெளியிட்டு இருந்தார். இது காங்கிரஸ் கட்சியால் விமர்சிக்கப்பட்டது. இந்தநிலையில் பிரதமர் மோடி சிறந்தவர் என இம்ரான்கான் புகழ்ந்தது ஏன் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    பாகிஸ்தானில் ஆட்சி செய்யும் இம்ரான்கானின் அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. சர்வதேச நிதியகம் பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதி உதவியை நிறுத்தி விட்டது. பயங்கரவாதிகள் பிரச்சனையால் அதிருப்தி ஆன அமெரிக்காவும் நிதி உதவி வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இத்தகைய காரணங்களால் தற்போது பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி உள்ளது.

    அதை சமாளிக்க இம்ரான் கான் தனது பாரம்பரிய நட்பு நாடுகளான வளைகுடா நாடுகளிடம் கூடுதல் நிதி உதவியை பெற்றார். இருந்தும் அது போதுமானதாக இல்லை. இதுதவிர அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நட்பு நாடுகளான சீனாவும், பாகிஸ்தானுக்கு பொருளாதார உதவிகள் அளித்து வருகிறது.



    அத்துடன் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளிடம் இருந்து நிதி உதவி பெற்று அதன் மூலம் பாகிஸ்தான் பொருளாதாரத்தை மேம்படுத்த இம்ரான்கான் விரும்புகிறார். அதற்காகவே அண்டை நாடான இந்திய பிரதமர் மோடியை பாராட்டி புகழ்ந்ததாக தெரிகிறது.

    பாகிஸ்தானில் பிப்ரவரி மாத அன்னிய செலாவணி கையிருப்பு 8 பில்லியன் டாலராக இருந்தது. அது 2 மாதங்களுக்கான இறக்குமதிக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு 12 பில்லியன் டாலர் இருந்தது. #PMModi #Imrankhan
    இந்தியா குண்டுவீச்சில் இருந்து பயங்கரவாதிகளை இம்ரான்கான் அரசு பாதுகாக்கிறது என்று பெனாசிர் மகன் குற்றம் சாட்டியுள்ளார். #ImranKhan

    இஸ்லாமாபாத்:

    புல்வாமா தாக்குதலை தொடர்ந்து சர்வதேச நாடுகளின் நெருக்கடியால் பல பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது.

    இதுகுறித்து மறைந்த பெனாசிர் பூட்டோவின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பயங்கரவாதிகளை கைது செய்து இருப்பதாக இம்ரான் கான் அரசு சொல்கிறது. இதை நம்ப நான் தயாராக இல்லை. பயங்கரவாதிகள் கைது செய்யப்படவில்லை. மாறாக இந்திய போர் விமானங்களின் குண்டு வீச்சில் இருந்து பாதுகாக்க அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், பயங்கரவாதிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அது எந்த விதத்தில் முடக்கப்பட்டுள்ளது. மு‌ஷரப்பின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. ஆனால் நடந்தது என்ன? அவர் பணத்துக்காக வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார்.

    பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது இந்தியாவுடன் நடத்திய பேச்வார்த்தைக்கு துரோகம் இழைப்பதாகும் என்றார்.

    முன்னதாக டுவிட்டரில் பிலாவல் பூட்டோ செய்தி வெளியிட்டார். அதில் இம்ரான் கானுக்கு சரமாரியாக கேள்வி விடுத்தார்.

    தேர்தல் நேரத்தில் ஆதரவு அளித்த பயங்கரவாதிகளுக்கு இம்ரான்கான் அமைச்சரவையில் உள்ள மந்திரிகள் ஆதரவாக செயல்படுகின்றனர். அவர்களை அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற தயாரா? என சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தார். #ImranKhan

    புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கருதினால் அதற்கான ஆதாரத்தை வழங்கினால் நடவடிக்கை எடுப்பதாக இம்ரான்கான் கூறியுள்ளார். #ImranKhan #PulwamaAttack #CRPFA

    இஸ்லாமாபாத்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ந்தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர். பி.எப். வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

    பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது எனும் இயக்கம் இந்த பயங்கரவாத தாக்குதலை நடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக எடுத்து வருகிறது.

    புல்வாமா தாக்குதலுக்காக பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதலை நடத்த இந்திய ராணுவம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறுகையில், “புல்வாமா தாக்குதலுக்கும், பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்தியா போர் தொடுத்தால் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும்” என்றார்.

    ஆனால் புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளே காரணம் என்பதற்கான ஆதாரங்களை ராணுவம் வெளியிட்டது. இந்த நிலையில் மோடி பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார்.


    பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ராஜஸ்தானில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசுகையில், “பயங்கரவாதத்தை ஒழிக்க உலக நாடுகள் ஓருங்கிணைந்து உள்ளன. பயங்கரவாதத்தை ஒழிக்கும் வி‌ஷயத்தில் இப்போது இந்தியாவிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது இருப்பது புதிய இந்தியா. இனியும் பயங்கரவாதத்தால் ஏற்படும் வலிகளை பொறுக்க இயலாது. பயங்கரவாதத்தை எப்படி அழிப்பது என்பது பற்றி எங்களுக்கு தெரியும்“ என்றார்.

    மோடியின் இந்த பேச்சால் பாகிஸ்தான் தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக இம்ரான்கான் இந்தியாவை சமரசம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இதன் அடிப்படையில் இம்ரான்கான் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா கருதினால் அதற்கான ஆதாரத்தை தரட்டும். அந்த ஆதாரத்தில் உண்மை இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது.

    இந்த வி‌ஷயத்தில் கொடுத்த வாக்கை பாகிஸ்தான் ஒரு போதும் மீறாது. பாகிஸ்தானியர்கள் யாருக்காவது குண்டு வெடிப்பில் தொடர்பு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    அமைதிக்கு ஒரு வாய்ப்பை இந்தியா வழங்க வேண்டும்.

    இவ்வாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறி உள்ளார்.  #ImranKhan  #PulwamaAttack #CRPFA

    ×