search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "institution"

    • பணத்திற்கு ஆசைப்பட்டுகணவன்-மனைவி நிதி நிறுவனத்தில் கையாடல் செய்து பணம் மோசடி செய்துள்ளனர்.
    • இது குறித்து நடவடிக்க வேண்டும் என நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து புகார் மனு கொடுத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு, கருங்கல்பாளையத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த பொது மேலாளர் மாரிமுத்து(42) என்பவர் தலைமையில் நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

    நாங்கள் ஈரோடு, கருங்கல்பாளையம் நியூ ஸ்டேட் பேங்க் காலனியில் தலைமை இடமாக வைத்து நிதி நிறுவனம் நடத்தி வருகிறோம். எங்களுக்கு ஈரோடு, பவானி, ஓமலூர், சங்ககிரி, அரச்சலூர், மற்றும் அம்பாசமுத்திரம் என 6 இடங்களில் எங்கள் கிளைகள் உள்ளன.

    எங்கள் நிறுவனத்தில் சேலம் மாவட்டம் சங்ககிரி, தேவன்ன கவுண்டனூர் பகுதியை சேர்ந்த ஒருவர் பணிபுரிந்து வந்தார். அவர் சொல்பவர்கள் எல்லாம் எங்கள் நிறுவனத்திற்கு வரச்சொல்லி ஆவணங்களை சரிபார்த்து பெற்றுக்கொண்டு பணத்தை அவரிடம் வழங்கினோம்.

    அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அவர்கள் திருமணத்தையும் நாங்களே தலைமையேற்று நடத்தி வைத்தோம். இந்நிலையில் பணத்திற்கு ஆசைப்பட்டு இருவரும் எங்கள் நிதி நிறுவனத்தில் கையாடல் செய்து பணம் மோசடி செய்துள்ளனர்.

    இருவரும் 3 மாதத்திற்குள் எங்கள் நிதி நிறுவனம் இடமிருந்து ரூ.19 லட்சத்து 37 ஆயிரத்து 325 ரூபாயை மோசடி செய்து கையாடல் செய்து உள்ளனர். இது குறித்து அவர்களிடம் கேட்டபோது முறையாக பதில் சொல்லாமல் உள்ளனர்.

    எனவே அவர்கள் இருவர் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

    • நிதி நிறுவனத்தில் ரூ.1¾ லட்சம்-பொருட்கள் திருட்டப்பட்டது.
    • கம்ப்யூட்டர் மானிட்டர் உள்ளிட்ட பொருட்களும் மாயமாகி இருந்தன.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி பகுதியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது அலுவலகத்தில் 4 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு இரு சக்கர வாக னங்களுக்கு கடன் அளித்து வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் இரவு கடைக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த முன்பணம் ரூ.1 லட்சம் மற்றும் வசூல் செய்த சீட்டு பணம் ரூ.75 ஆயிரம் ஆகியவற்றை அலுவ லகத்துக்குள் வைத்து பூட்டி விட்டு பாக்கியராஜ் வீட்டுக்கு சென்றார்.

    நேற்று காலை மீண்டும் அலுவலகத்தை திறப்ப தற்காக வந்தார். அப்போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அலுவலகத்தில் வைத்து சென்ற ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் பணம் திருடுபோய் இருந்தது. மேலும் கம்ப்யூட்டர் மானிட்டர் உள்ளிட்ட பொருட்களும் மாயமாகி இருந்தன. மர்ம நபர்கள் நள்ளிரவில் பூட்டை உடைத்து அலுவலகத்தில் புகுந்து பணம் மற்றும் பொருட்களை எடுத்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து மல்லி போலீஸ் நிலையத்தில் பாக்கியராஜ் புகார் செய் தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரே நாளில் பல இடங்களில் நடந்த கொள்ளை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • நாளை காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • 100-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக மாதந்தோறும் 3-வது வெள்ளிக்கிழமையில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் அலுவலக வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்த முகாமானது தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முகாமில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம். மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இந்த முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுயவிவர அறிக்கை, கல்விச்சான்று, ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெற்று கொள்ளலாம்.

    மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அக்னிபத்’ திட்டத்துக்கு நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
    • பயிற்சி நிறுவனங்களில் உளவுத்துறை தீவிர கண்காணித்து வருகிறது.

    மதுரை

    ராணுவ வேலையில் இளைஞர்களை சேர்க்கும் மத்திய அரசின் 'அக்னிபத்' திட்டத்துக்கு நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மதுரை மாவட்டத்திலும் அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

    இதையொட்டி இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் மதுரை ெரயில் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் 'அக்னிபத்' போராட்டத்தை சில பயிற்சி நிறுவனங்கள் தூண்டி விடுவதாகவும், இதன் காரணமாக மாணவர்கள் போராட்டத்தில் குதிப்பதாகவும் மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் திரைமறைவில் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், உசிலம்பட்டி, பேரையூர், நாகமலை புதுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் 15 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    மத்திய அரசின் 'அக்னிபத்' திட்டத்தின் கீழ் பணிநியமனம் நடந்தால், தனியார் நிறுவனங்களில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காது என்று அவர்கள் மூளைச் சலவை செய்து வருவதாக உளவுத்துறை விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    எனவே மதுரை மாவட்டத்தில் பயிற்சி நிறுவனங்கள் 'அக்னிபத்' போராட்டத்தை தூண்டி விடுகிறதா? இதில் எத்தனை மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்? அக்னிபத் போராட்டத்தை தூண்டி விடுவதில், அரசியல் கட்சிகளுக்கு பங்கு உள்ளதா? என்பது தொடர்பாக மத்திய உளவுத்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.

    ×