என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IPL"

    • இவ்விரு அணிகளும் இதுவரை 34 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • இதுவரை நடந்த 3 ஆட்டங்களிலும் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

    பஞ்சாப் 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி (குஜராத், லக்னோ, சென்னை, கொல்கத்தா, பெங்களூருவுக்கு எதிராக), 2 தோல்வி (ராஜஸ்தான், ஜதராபாத் அணியிடம்) கண்டுள்ளது. பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு நடந்த முந்தைய ஆட்டத்தில் பஞ்சாப் 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை சாய்த்தது. மழையால் 14 ஓவர்களாக குறைக்கப்பட்ட அந்த ஆட்டத்தில் பெங்களூரூவை 95 ரன்னில் கட்டுப்படுத்திய பஞ்சாப் அணி 12.1 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்தது. ஒருநாள் இடைவெளியில் இரு அணிகளும் மறுபடியும் மல்லுக்கட்டுகின்றன.

    பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (257 ரன்), பிரியான்ஷ் ஆர்யா (232), நேஹல் வதேரா, பிரம்சிம்ரன் சிங்கும், பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், மார்கோ யான்சென்னும் நல்ல நிலையில் உள்ளனர்.

    பெங்களூரு 7 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (கொல்கத்தா, சென்னை, மும்பை, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக), 3 தோல்வியை (குஜராத், டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்) சந்தித்துள்ளது. அந்த அணியில் பேட்டிங்கில் விராட் கோலி (249 ரன்), பில் சால்ட் (212), கேப்டன் ரஜத் படிதார் (209), டிம் டேவிட் வலுசேர்க்கின்றனர். ஜிதேஷ் ஷர்மா, லிவிங்ஸ்டன் நல்ல பங்களிப்பை அளித்தால் மிடில் வரிசை மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார், குருணல் பாண்ட்யா, யாஷ் தயாள் மிரட்டக்கூடியவர்கள்.

    தங்களது சொந்த மைதானத்தில் அரங்கேறிய பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்த பெங்களூரு அணி அதற்கு சூட்டோடு சூடாக பதிலடி கொடுக்க பகீரத முயற்சி மேற்கொள்ளும் என்பதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 34 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 18-ல் பஞ்சாப்பும், 16-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன. இந்த சீசனில் முல்லாப்பூரில் இதுவரை நடந்த 3 ஆட்டங்களிலும் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த ஆட்டத்தில் 'டாஸ்' முக்கிய பங்கு வகிக்கும் எனலாம்.

    • சென்னை அணி நடப்பு தொடரில் வழக்கத்துக்கு மாறாக தடுமாறிக் கொண்டிருக்கிறது.
    • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை, மும்பை மோதல் என்றாலே எப்போதும் அனல் பறக்கும்.

    மும்பை:

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். குறைந்தது 8 வெற்றிகள் பெற்றால் தான் 'பிளே-ஆப்' சுற்றை நினைத்து பார்க்க முடியும்.

    இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 38-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை அணிக்கு இந்த சீசன் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அந்த அணி 7 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி (கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத் அணிகளுக்கு எதிராக), 4 தோல்வியை (சென்னை, குஜராத், லக்னோ, பெங்களூரு அணிகளிடம்) சந்தித்துள்ளது. முதல் 5 ஆட்டங்களில் 4-ல் தோல்வி அடைந்த அந்த அணி சரிவில் இருந்து மீண்டு கடைசி 2 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி வாகை சூடியுள்ளது.

    மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் (265 ரன்), திலக் வர்மா (231), விக்கெட் கீப்பர் ரையான் ரிக்கெல்டன் (180 ரன்) உள்ளிட்டோர் பேட்டிங்கில் கணிசமான பங்களிப்பை அளித்துள்ளனர். ஆனால் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 6 ஆட்டங்களில் ஆடி 82 ரன் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்துள்ளார். அவரது பேட்டில் இருந்து பெரிய இன்னிங்ஸ் வெளிப்படுமா? என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். பந்து வீச்சில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (11 விக்கெட்), டிரென்ட் பவுல்ட், தீபக் சாஹர் நம்பிக்கை அளிக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பழைய பார்முக்கு திரும்பி கொண்டிருக்கிறார். சொந்த ஊரில் ஆடுவது கூடுதல் பலமாகும்.

    சென்னை அணி நடப்பு தொடரில் வழக்கத்துக்கு மாறாக தடுமாறிக் கொண்டிருக்கிறது. தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்திய சென்னை அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் (பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா அணிகளிடம்) சரண் அடைந்தது. முந்தைய ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை தோற்கடித்து ஒரு வழியாக வெற்றிப்பாதைக்கு திரும்பியிருக்கிறது. அந்த ஆட்டத்தில் லக்னோ நிர்ணயித்த 167 ரன் இலக்கை 3 பந்துகள் மீதம் வைத்து சென்னை அணி எட்டிப்பிடித்தது. புதிய தொடக்க ஜோடி ரச்சின் ரவீந்திரா, ஷேக் ரஷீத் ஆகியோர் அளித்த திடமான தொடக்கமும், ஷிவம் துபே, கேப்டன் டோனியின் பொறுப்பான பேட்டிங்கும் அணியை கரைசேர்த்தது.

    சென்னை அணிக்கு பேட்டிங் தான் பெரும் தலைவலியாக உள்ளது. மிடில் வரிசையில் ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் துடிப்பாக ரன் சேர்க்க வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் நூர் அகமது, கலீல் அகமது, பதிரானா வலு சேர்க்கிறார்கள்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை, மும்பை மோதல் என்றாலே எப்போதும் அனல் பறக்கும். அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளுக்கும் இனி ஒவ்வொரு ஆட்டமும் வாழ்வா-சாவா போன்றது என்பதால் வெற்றிக்காக வரிந்துகட்டி நிற்பார்கள்.

    இவ்விரு அணிகளும் ஏற்கனவே சென்னை சேப்பாக்கத்தில் சந்தித்த தொடக்க ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. அந்த தோல்விக்கு பழிதீர்க்க மும்பை அணி தீவிரமாக முயற்சிக்கும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    ஒட்டுமொத்த ஐ.பி.எல்.-ல் இதுவரை 38 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை 20 ஆட்டங்களிலும், சென்னை 18 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இவ்விரு அணிகளும் வான்கடே மைதானத்தில் 12 முறை சந்தித்ததில் மும்பை 7-5 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    மும்பை: ரையான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, கரண் ஷர்மா.

    சென்னை: ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, விஜய் சங்கர், டோனி (கேப்டன்), ஜாமி ஓவர்டான், அன்ஷூல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, பதிரானா.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • ஐபிஎல் தொடரில் இதுவரை 34 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன.
    • இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 34 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    அதில் மாலை 3.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் 35-வது லீக் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து விச்சை தேர்வு செய்துள்ளது. 

    • ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் அரங்கேறுகின்றன.
    • நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் குஜராத்- டெல்லி அணிகள் மோதுகிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் 35-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதுகிறது.

    இந்நிலையில் இந்த போட்டியை நேரில் காண வரும் ரசிகர்களுக்கு இலவசமாக தண்ணீர், சன்ஸ்கிரீன் மற்றும் ORS ஆகியவற்றை குஜராத் அணி வழங்குவதாக அறிவித்துள்ளது. வெயிலை சமாளிக்க இந்த சலுகை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இதேபோல் சிஎஸ்கே நிர்வாகமும் சென்னையில் நடக்கும் 3.30 போட்டிக்கு இத்தகைய சலுகை வழங்குமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • ஐதராபாத் அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 5 தோல்வியுடன் உள்ளது.
    • டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராவதற்காக நாடு திரும்புகிறாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு 2-வது இடம் பிடித்த முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த சீசன் திருப்திகரமாக அமையவில்லை. ஐதராபாத் அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    இந்த நிலையில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்சின் (ஆஸ்திரேலியா) மனைவி ரெபேக்கா விமான நிலையத்தில் மூட்டை முடிச்சுகளுடன் கம்மின்சும் இருக்கும் இரண்டு புகைப்படத்தை பகிர்ந்து, அதில் 'இந்தியாவில் இருந்து விடைபெறுகிறேன். இந்த அழகான நாட்டுக்கு வருவதை நாங்கள் மிகவும் விரும்பினோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதனால் கம்மின்ஸ் எஞ்சிய ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராவதற்காக நாடு திரும்புகிறாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் இது குறித்து ஐதராபாத் நிர்வாகம் தரப்பில் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    • குறைந்த போட்டியில் ஆயிரம் ரன்கள் விளாசிய சச்சின், ருதுராஜ் சாதனையை படிதார் முறியடித்துள்ளார்.
    • இந்திய வீரர்களில் குறைந்த போட்டியில் ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை சாய் சுதர்சன் பெற்றிருக்கிறார்.

    ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய 34-வது லீக் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் போட்டி 14 ஓவராக குறைக்கப்பட்டது.

    இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணி 95 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 98 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் ரஜத் பட்டிதார் 23 ரன்கள் அடித்திருந்த போது ஒரு மகத்தான சாதனையை முறியடித்து இருக்கிறார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸில் ஆயிரம் ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ருதுராஜ் ஆகியோரை ரஜத் பட்டிதார் பின்னுக்கு தள்ளி உள்ளார்.

    சச்சின் டெண்டுல்கரும், ருதுராஜூம் 31 இன்னிங்சில் ஆயிரம் ரன்களை கடந்தனர். ஆனால் தற்போது ரஜத் 30 இன்னிங்ஸ்லே ஆயிரம் ரன்களை கடந்து அசத்தி இருக்கிறார்.

    இந்திய வீரர்களில் குறைந்த போட்டியில் ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை குஜராத் அணியின் சாய் சுதர்சன் பெற்றிருக்கிறார். சாய் சுதர்சன் 25 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்கள் கடந்து இருக்கிறார்.

    ஒட்டுமொத்தமான ஐபிஎல் இல் ஆஸ்திரேலிய வீரர் சேன் மார்ஸ் 21 இன்னிங்ஸில் ஆயிரம் ரன்களை கடந்தார். இந்த ரெக்கார்டை அவர் 2011 ஆம் ஆண்டு படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் ஒரு தனித்துவமான சாதனையை படிதார் படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் 35-க்கும் மேற்பட்ட சராசரி மற்றும் 150-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1000 ரன்களை எட்டிய முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படிதார் படைத்துள்ளார்.

    • வான்கடே மைதானத்தில் உள்ள ஒரு ஸ்டாண்டில் எனது பெயர் இருக்கிறது என்பதை என்னால் நம்ப கூட முடியவில்லை.
    • இந்த பெருமையை எனக்கு வழங்கிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 18-வது சீசனை முன்னிட்டு, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் எம்.எஸ். தோனி ஆகியோருக்கு 18 தொடர்ச்சியான ஐபிஎல் சீசன்களில் விளையாடியதற்காகவும், இந்திய கிரிக்கெட்டுக்கு அவர்களின் பங்களிப்பிற்காகவும் சிறப்பு விருது வழங்கி கவுரவித்தார்.

    இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள ஒரு பகுதியை ரோகித் சர்மாவின் பெயர் சூட்டப்படுகிறது.

    இது குறித்து ரோகித் கூறியதாவது:-

    இப்படி ஒன்று நடக்கும் என்று நான் என் கனவில் கூட நினைத்தது கிடையாது. நான் இங்கு விளையாடிய முதல் போட்டி இன்னும் என் நினைவில் இருக்கின்றது. தற்போது என்னுடைய பெயர் இங்கு சூட்டப்படுவது நம்ப முடியவில்லை.

    என் பெயர் உள்ள ஸ்டேண்ட் முன் நான் விளையாட போகிறேன் என்று நினைத்துப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்த மைதானத்தில் எனக்கு பல நல்ல நினைவுகள் இருக்கின்றது.

    வான்கடே மைதானம் புதிதாக புனரமைக்கப்பட்ட பின் இங்குதான் நாம் உலக கோப்பையை வென்றோம். இங்கு நாம் அதிக போட்டிகளில் விளையாடிருகின்றோம். தற்போது இந்த மைதானத்தில் உள்ள ஒரு ஸ்டாண்டில் எனது பெயர் இருக்கிறது என்பதை என்னால் நம்ப கூட முடியவில்லை.

    நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன் இந்த பெருமையை எனக்கு வழங்கிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    முதன் முதலில் கிரிக்கெட் விளையாடும்போது நாம் எவ்வளவு தூரம் எவ்வளவு நாள் விளையாட போகிறோம் என்று நமக்கு தெரியாது. ஆனால் நான் இந்த மைதானத்தில் ஒரு சாதாரண வீரராக வந்து தற்போது எனது பெயரிலே ஒரு ஸ்டாண்ட் அமைக்கப்படுகிறது என்பதில் நினைக்கும் போது உணர்ச்சி வசமாக இருக்கின்றது.

    என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    தோனிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணிக்கு இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா படைத்திருக்கிறார். இந்திய அணியில் வீரராக நான்கு ஐசிசி கோப்பையை ரோகித் சர்மா வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக இந்த ஆட்டம் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்ததன் மூலம் ஆர்.சி.பி. அணி மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. ஐ.பி.எல். தொடரில் ஹோம் மைதானத்தில் அதிக தோல்விகளை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை ஆர்.சி.பி படைத்துள்ளது.

    இதற்கு முன்னர் இந்தப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த டெல்லி அணி (45 தோல்வி, டெல்லி மைதானம்) இருந்தது.

    ஹோம் மைதானத்தில் அதிக தோல்விகளை சந்தித்த அணிகள் பட்டியல்:-

    ஆர்.சி.பி - 46 தோல்விகள் (பெங்களூரு)

    டெல்லி கேப்பிடல்ஸ் - 45 தோல்விகள் (டெல்லி)

    கே.கே.ஆர் - 38 தோல்விகள் (கொல்கத்தா)

    மும்பை இந்தியன்ஸ் - 34 தோல்விகள் (மும்பை வான்கடே)


    • கடினமான லென்த் பந்துகளை அடிப்பது கடினமாக இருப்பதாக அர்ஷ்தீப் என்னிடம் கூறினார்.
    • இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை சிறந்த லெக் ஸ்பின்னராக சாஹல் செயல்பட்டு வருகிறார்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய 34-வது லீக் போட்டியில் ஆர்சிபி- பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டி மழை காரணமாக 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய ஆர்சிபி 14 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து விளையாடிய பஞ்சாப் 12.1 ஓவரில் 98 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் புதிய பேட்ஸ்மேன் வந்து உடனடியாக செட்டிலாகி விளையாடுவதை நான் விரும்பவில்லை என பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறினார்.

    இது குறித்து பஞ்சாப் அணி கேப்டன் கூறியதாவது:-

    பல்வேறு வகைகள் தான் வாழ்க்கையின் ருசி என்று சொல்வார்கள். அதுபோல இந்த மைதானத்தில் நாங்கள் நிறையப் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளோம். அது நல்ல சவால். வித்தியாசமாக நான் எதுவும் சிந்திக்கவில்லை. எனது உள்ளுணர்வுகளை பின்பற்றி விக்கெட்டுகளை எடுக்க முயற்சி செய்தேன்.

    புதிய பேட்ஸ்மேன் வந்து உடனடியாக செட்டிலாகி விளையாடுவதை நான் விரும்பவில்லை. மார்கோ யான்சென் பிட்ச்சில் எக்ஸ்ட்ரா பவுன்சை உருவாக்கி வேகமாக பௌலிங் செய்து எங்களுடைய கப்பலை நிலை நிறுத்தினார். பவுலர்கள் அவருக்கு உதவி செய்தனர். பிட்ச் எப்படி இருக்கும் என்று தெரியாத நிலையில் எங்களுடைய பவுலர்கள் அதற்குத் தங்களை உட்படுத்திக் கொள்வார்கள் என்று நம்பினேன்.

    கடினமான லென்த் பந்துகளை அடிப்பது கடினமாக இருப்பதாக அர்ஷ்தீப் என்னிடம் கூறினார். ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நேராக சிக்சர் அடிக்க முடியவில்லை. எனவே அதை வைத்து நாங்கள் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினோம்.

    ஒரு பேட்ஸ்மேன் அதிரடியாக விளையாட வேண்டும். அதை இன்று எங்களுக்கு நேஹல் செய்தார். நீங்கள் மேட்ச் வின்னர் என்பதால் நமக்கு விக்கெட்டுகளை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று சஹாலிடம் கூறினேன். கம்பேக் கொடுக்கும் தன்மை கொண்டுள்ள அவர் இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை சிறந்த லெக் ஸ்பின்னராக செயல்பட்டு வருகிறார்.

    இவ்வாறு ஷ்ரேயாஸ் ஐயர் கூறினார்.

    • பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர், முகமது சிராஜ், ரஷித் கான் கலக்குகிறார்கள்.
    • தொடர்ந்து சொதப்பும் தொடக்க ஆட்டக்காரர் ஜேக் பிராசர் மெக்குர்க் இடத்தை, காயத்தில் இருந்து மீண்டும் இருக்கும் பாப் டு பிளிஸ்சிஸ் பிடிக்கிறார்.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் 35-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதுகிறது.

    குஜராத் அணி தனது தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் வீழ்ந்தது. அதன் பிறகு மும்பை, பெங்களூரு, ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளை அடுத்தடுத்து துவம்சம் செய்தது. முந்தைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவிடம் பணிந்தது. அந்த ஆட்டத்தில் குஜராத் நிர்ணயித்த 181 ரன் இலக்கை 3 பந்துகள் மீதம் வைத்து லக்னோ எட்டிப்பிடித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் சாய் சுதர்சன்- சுப்மன் கில் அமைத்து கொடுத்த வலுவான அடித்தளத்தை (12 ஓவரில் 120 ரன்), அதன் பிறகு வந்த வீரர்கள் சரியாக பயன்படுத்தி ரன் விகிதத்தை அதிகரிக்க தவறியது சறுக்கலுக்கு வழிவகுத்தது.

    குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன் (329 ரன்), ஜோஸ் பட்லர், கேப்டன் சுப்மன் கில், ரூதர்போர்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ராகுல் திவேதியா இன்னும் சோபிக்கவில்லை. பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர், முகமது சிராஜ், ரஷித் கான் கலக்குகிறார்கள்.

    அக்ஷர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணி 6 ஆட்டங்களில் ஆடி 5-ல் வெற்றியை (லக்னோ, ஜதராபாத், சென்னை, பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக) ருசித்து வலுவான நிலையில் உள்ளது. 5-வது ஆட்டத்தில் மட்டும் மும்பையிடம் தோல்வியை தழுவியது முந்தைய ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை சாய்த்தது. சூப்பர் ஓவரில் யார்க்கர்களாக போட்டு அமர்க்களப்படுத்திய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்ததுடன் ஆட்டநாயகனாகவும் தேர்வானார்.

    டெல்லி அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல், அபிஷேக் போரெல், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், கருண் நாயரும், பந்து வீச்சில் குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், விப்ராஜ் நிகம், முகேஷ் குமாரும் நல்ல பார்மில் உள்ளனர். தொடர்ந்து சொதப்பும் தொடக்க ஆட்டக்காரர் ஜேக் பிராசர் மெக்குர்க் இடத்தை, காயத்தில் இருந்து மீண்டும் இருக்கும் பாப் டு பிளிஸ்சிஸ் பிடிக்கிறார்.

    மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப குஜராத் அணியும், 6-வது வெற்றியை தனதாக்கி முதலிடத்தில் நீடிக்க டெல்லி அணியும் முழு பலத்துடன் கோதாவில் குதிப்பதால், விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 3-ல் டெல்லியும், 2-ல் குஜராத்தும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    குஜராத்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ரூதர்போர்டு, ஷாருக்கான், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திவேதியா, ரஷித் கான், அர்ஷத் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

    டெல்லி: பிளிஸ்சிஸ் அல்லது மெக்குர்க், அபிஷேக் போரெல், கருண் நாயர், லோகேஷ் ராகுல், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அக்ஷர் பட்டேல் (கேப்டன்), அஷூதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மொகித் ஷர்மா, முகேஷ் குமார்.

     

    ராஜஸ்தான்-லக்னோ மோதல்

    ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை சந்திக்கிறது.

    ராஜஸ்தான் அணி 7 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (சென்னை, பஞ்சாப் அணிக்கு எதிராக), 5 தோல்வி (ஐதராபாத், கொல்கத்தா, குஜராத், பெங்களூரு, டெல்லி அணிகளிடம்) கண்டுள்ளது. கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக உதை வாங்கியுள்ளது.

    ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால், கேப்டன் சஞ்சு சாம்சன், துருவ் ஜூரெல், ரியான் பராக், நிதிஷ் ராணா, ஹெட்மயர் என்று பெரிய பட்டாளமே இருக்கிறது. தொடக்கத்தில் தடுமாறிய ஜெய்ஸ்வால் இப்போது அரைசதங்களாக நொறுக்குகிறார். இதே போல் மற்றவர்களும் ஒருசேர கைகொடுத்தால் எழுச்சி பெற முடியும். பந்து வீச்சில் ஹசரங்கா, ஜோப்ரா ஆர்ச்சர், தீக்ஷனா நம்பிக்கை அளிக்கின்றனர்.

    கடந்த ஆட்டத்தின்போது வயிற்று பகுதியில் காயம் அடைந்து பாதியில் வெளியேறிய கேப்டன் சஞ்சு சாம்சன் இந்த ஆட்டத்தில் ஆடுவாரா? என்பது கேள்விக்குறியாகி இருகிறது. அவர் ஆடமுடியாமல் போனால் முதல் 3 ஆட்டங்களில் கேப்டன் பொறுப்பை கவனித்த ரியான் பராக் அணியை வழிநடத்துவார். சாம்சன் காயம் குறித்து ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேற்று கூறுகையில், 'சாம்சனுக்கு வயிற்று பகுதியில் லேசான வலி உள்ளது. அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. ஸ்கேன் அறிக்கையின் அடிப்படையில் அவர் விளையாடுவது குறித்து முடிவு செய்யப்படும்' என்றார்.

    லக்னோ அணி 7 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (ஐதராபாத், மும்பை, கொல்கத்தா, குஜராத் அணிகளுக்கு எதிராக), 3 தோல்வியை (டெல்லி, பஞ்சாப், சென்னை அணிகளிடம்) தோல்வியை சந்தித்துள்ளது. பேட்டிங்கில் நிகோலஸ் பூரன் (357 ரன்), மிட்செல் மார்ஷ், மார்க்ரம் நல்ல நிலையில் உள்ளனர். டேவிட் மில்லர், அப்துல் சமத் ஜொலித்தால் அந்த அணியின் பேட்டிங் வரிசை மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் ஷர்துல் தாக்குர், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான் மிரட்டுகிறார்கள். மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசும் இளம் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பி இருப்பது அந்த அணிக்கு புதிய தெம்பை கொடுக்கும்.

    சொந்த மைதானத்தில் முதலாவது ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் அணி உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் சாதிக்க முனைப்பு காட்டும். அதேநேரத்தில் லக்னோ அணி வெற்றி வழியில் பயணிக்க வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை மோதியதில் ராஜஸ்தான் அணி 4-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்) அல்லது வைபவ் சூர்யவன்ஷி அல்லது சுபம் துபே, நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரெல், ஹெட்மயர், ஹசரங்கா, ஜோப்ரா ஆர்ச்சர், தீக்ஷனா, சந்தீப் ஷர்மா, துஷர் தேஷ்பாண்டே அல்லது ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா.

    லக்னோ: மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்குர், ஆவேஷ் கான், மயங்க் யாதவ், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய்.

    போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • டெல்லி அணி 6 ஆட்டத்தில் 5 வெற்றி, ஒரு தோல்வி என 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
    • குஜராத் 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வி பெற்று 8 புள்ளிகளுடன் உள்ளது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நாளை 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு அகமதாபாத்தில் நடக்கும் 35-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டெல்லி அணி 6 ஆட்டத்தில் 5 வெற்றி, ஒரு தோல்வி என 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. டெல்லி அணியில் கேப்டன் அக்சர் பட்டேல், கே.எல்.ராகுல், போரல், ஸ்டேப்ஸ், மிட் செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    குஜராத் 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வி பெற்று 8 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணியில் கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ரஷித்கான் ஆகிய வீரர்கள் உள்ளனர். அந்த அணி 5-வது வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது.

    இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடக்கும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    லக்னோ 7 ஆட்டத்தில் 4 வெற்றி, 3 தோல்வி பெற்று 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணியில் கேப்டன் ரிஷப் பண்ட், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், மார்க்ரம், டேவிட் மில்லர், ஷர்துல் தாக்கூர், அவேஷ் கான் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.

    ராஜஸ்தான் 7 ஆட்டத்தில் 2 வெற்றி பெற்றது. 5 ஆட்டத்தில் தோற்றது. இந்த சீசனில் ராஜஸ்தான் திணறி வருகிறது. கடந்த 3 போட்டியிலும் தோல்வியை சந்தித்தது. இதனால் அந்த அணி வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சிக்கும். கேப்டன் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், நிதிஷ் ராணா, ஹெட் மயர், ஹசரங்கா, ஆர்ச்சர், துருவ் ஜூரல் ஆகிய வீரர்கள் ராஜஸ்தான் அணியில் உள்ளனர்.

    • யாராவது அவரிடம் சென்று முதல் 10 பந்துகளை பொறுமையாக விளையாடுமாறு கூற வேண்டும்.
    • ஏதாவது ஒரு இன்னிங்ஸில் ரோகித் சர்மா புல் ஷாட் விளையாட கூடாது என்று களமிறங்க வேண்டும்.

    மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா. இவர் தற்போது மோசமான பார்மில் உள்ளார். பவர்பிளேயில் அதிரடியாக விளையாடி விக்கெட்டை பறிகொடுத்து வருகிறார்.

    ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக தொடங்கிய ரோகித் சர்மா, 3 சிக்சர்களை விளாசியதால் பெரிய ஸ்கோரை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் 16 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். இந்த சீசனில் ரோகித் சர்மா இதுவரை ஆடிய 6 இன்னிங்ஸ்களில் 82 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார்.

    இந்நிலையில் இந்த சீசனோடு ரோகித் சர்மா ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் சேவாக் கூறியுள்ளார்.

    இதுகுறித்து சேவாக் கூறியதாவது:-

    ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பதற்கான நேரம் ஏற்கனவே வந்துவிட்டது. ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் போது ரோகித் சர்மா விலகுவது நல்லது. ஏனென்றால் வரும் காலங்களில் ரசிகர்களே, போதும்.. ஓய்வு பெறுங்கள் என்று கூற தொடங்கிவிடுவார்கள்.

    கடந்த 10 ஆண்டுகளில் ரோகித் சர்மா ஒரேயொரு முறை மட்டுமே 400 ரன்களுக்கு மேல் சேர்த்திருக்கிறார். அவர் ஒவ்வொரு சீசனில் 500 முதல் 700 ரன்களை அடிக்க வேண்டும் என்று நினைக்கும் வீரரும் அல்ல. இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் போது, பவர் பிளேவில் அட்டாக் செய்து ரன்களை குவிக்க வேண்டும் என்று ஆடினார். அணிக்காக தியாகம் செய்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் ரன்களை சேர்க்கவில்லை என்றால், அவரின் இத்தனை நாட்கள் கட்டி காத்த லெகசி பாதிப்படையும்.

    யாராவது அவரிடம் சென்று முதல் 10 பந்துகளை பொறுமையாக விளையாடுமாறு கூற வேண்டும். ஏதாவது ஒரு இன்னிங்ஸில் ரோகித் சர்மா புல் ஷாட் விளையாட கூடாது என்று களமிறங்க வேண்டும். நான் விளையாடும் போது, பார்மில் இல்லாத போது சச்சின், ராகுல் டிராவிட், கங்குலி உள்ளிட்டோர் கொஞ்சம் நிதானமாக விளையாடுமாறு கூறியுள்ளனர். அதனை ரோகித் சர்மாவுக்கு யாராவது சொல்ல வேண்டும்.

    என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

    ×