search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IRSO"

    சந்திரயான்-2 திட்டத்திற்கான ராக்கெட் உந்துதலுக்கு பயன்படுத்தப்படும் கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். #Chandrayaan2 #IRSO
    பெங்களூரு :

    இந்திய விண்வெளி ஆய்வு மையம் ‘இஸ்ரோ’ சந்திரன் குறித்து ஆய்வு செய்வதற்காக சந்திரயான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் சந்திரயான்-1 திட்டம் வெற்றியை தொடர்ந்து, தற்போது சந்திரயான்-2-வது திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது.

    இந்த விண்கலம் வரும் ஜனவரி மாதம் 3-ந்தேதி ஜி.எஸ். எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான இறுதி கட்ட சோதனைகளில் இஸ்ரோ ஈடுபட்டு உள்ளது. குறிப்பாக ராக்கெட் உந்துதலுக்கு பயன்படுத்தப்படும் ‘கிரயோஜெனிக்’ என்ஜின் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது.

    இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

    சந்திரன் ஆய்வுக்காக அதனுடைய சுற்றுப்பாதையில் மிதக்கும் சந்திரயான்-2 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் எடை 2 ஆயிரத்து 379 கிலோ. இதனுடன் 1,471 கிலோ எடையுள்ள விக்ரம் மற்றும் 27 கிலோ எடையுள்ள ரோவர் கருவிகளும் விண்ணுக்கு அனுப்பப்படுகின்றன. பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளுக்கு பயன்படுத்தப்படும் ‘கிரயோஜெனிக்’ என்ஜின்கள் ஆரம்ப காலங்களில் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டன. தற்போது உள்நாட்டிலேயே இந்த வகை என்ஜின்கள் தயாரிக்கப்பட்டு, ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

    தற்போது சந்திரன் ஆய்வுக்காக அனுப்பப்பட உள்ள சந்திரயான்-2 விண்கல திட்டம் மிகவும் சிக்கலானது. இந்த விண்கலத்தை கொண்டு செல்லும் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட்டில் கிரயோஜெனிக் என்ஜின் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கான சோதனை நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் தற்போது வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டு உள்ளது. சந்திரனின் சுற்றுப்பாதையில் சந்திரயான்-2 விண்கலம் நுழையும் போது, அதில் பொருத்தப்பட்டுள்ள ‘ரோவர்’ இறங்குவதற்கான சில மாற்றங்களை நிபுணர்கள் பரிந்துரைத்ததால் இந்த திட்டத்தில் மறு ஆய்வு செய்யப்பட்டது. முதல் முயற்சியில் வெற்றி பெறுவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

    வெப்பமண்டலப் பிரதேசத்தில் நீர் சுழற்சி மற்றும் எரிசக்தி பரிமாற்றங்களை ஆய்வு செய்வதற்கும், வானிலை முன்னறிவிப்பு மற்றும் காலநிலை ஆராய்ச்சிக்காக ‘மேகாட்ராபிகிஸ்’ என்ற செயற்கைகோள் கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் 12-ந்தேதி விண்ணில் அனுப்பப்பட்டது. தொடர்ந்து இந்த செயற்கைகோள் 7 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் ஆய்வுகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.



    இந்த செயற்கைகோள், மேகங்களில் உள்ள அமுக்கப்பட்ட தண்ணீரைப் பற்றியும், காற்றுமண்டலத்தில் நீர் நீராவி, மழைப்பொழிவு மற்றும் ஆவியாதல் பற்றிய தகவல்களையும் வழங்குகிறது. இந்த செயற்கைகோளில் உள்ள எல்லா விஞ்ஞான கருவிகளும் சமூகத்திற்கு மதிப்புமிக்க தரவை வழங்கியுள்ளன. இந்த தரவுகளை பயன்படுத்தி பல தேசிய மற்றும் சர்வதேச ஆவணங்களை உருவாக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள். #Chandrayaan2 #IRSO
    ×