search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jayalalitha death inquiry"

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விரைவில் சசிகலாவிடம் விசாரணை நடை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Sasikala #Jayalalithaa

    சென்னை:

    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி கமி‌ஷன் விசாரணை நடத்தி வருகிறது.

    அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் தொடங்கி ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள், போயஸ் கார்டன் பணியாளர்கள், சசிகலா உறவினர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் என இதுவரை 118 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    சசிகலா சார்பில் ஏற்கனவே வக்கீல் மூலம் வாக்கு மூலம் தாக்கம் செய்யப்பட்டது. மரணத்தில் சந்தேகம் எழுப்பியவர்களிடம் சசிகலா வக்கீல் குறுக்கு விசாரணை செய்தார்.

    அடுத்த கட்டமாக சசிகலாவிடம் நேரடியாக விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது. சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருப்பதால் அவருக்கு முதலில் சிறை அதிகாரிகள் மூலம் சம்மன் அனுப்பப்படும்.

    முதலில் சகிகலாவிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்பட்டது. இதற்கு சிறையில் போதுமான வசதிகள் இல்லை என்பதால் நீதிபதி ஜெயிலுக்கு போய் சசிகலாவை ஜெயில் அதிகாரிகள் அறைக்கு வரவழைத்து விசாரணை நடத்தலாமா? அல்லது சசிகலாவுக்கு பரோல் அளித்து சென்னைக்கு வரவழைத்து கமி‌ஷன் முன் ஆஜர்படுத்தி விசாரணை நடத்தலாமா? என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.


    இதில் நீதிபதி ஜெயிலுக்கு போய் விசாரணை நடத்துவதற்கும் சாத்தியம் இல்லை என்றும், பரோலில் வரவழைத்து விசாரணை நடத்துவதுதான் முறையாக இருக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.

    அடுத்து அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைவர், துணைத் தலைவர், லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட சில அமைச்சர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த விசாரணையை வருகிற டிசம்பர் 10-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. எனவே விரைவில் சசிகலாவிடம் விசாரணை நடை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்ததும் அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கும். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிற பிப்ரவரி மாதம் 24-ந் தேதிக்குள் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. #Sasikala #Jayalalithaa

    கடலோர ஒழுங்குமுறை ஆணையம் ஜெயலலிதா நினைவிடத்துக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டில் வக்கீல் வழக்கு தொடர்ந்துள்ளார். #Jayalalithamemorial

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், மூத்த வக்கீல் எஸ்.துரைசாமி தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:-

    மெரினா கடற்கரையில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே, வழக்கு தொடர்ந்துள்ளேன். சென்னை மெரினா கடற்கரை என்பது உலகிலேயே 2வது நீளமான கடற்கரை ஆகும்.

    இந்த கடற்கரை மிகவும் அழகான, சுற்றுச்சூழல் பாதுகாப்பானதாக இருந்தது. 20ம் நூற்றாண்டில், மனித கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளினால், இந்த கடற்கரை மாசு அடைய தொடங்கியது.

    வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், முதல் அட்டவணையில் இடம் பெற்றுள்ள அரிய வகை ஆமைகள் இனப் பெருக்கத்துக்காக மெரினா கடற்கரைக்கு வருகிறது.

    இந்த கடலில் அரிய வகை மீன்கள், இறால்கள், நூற்புழுக்கள் உள்ளன. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மெரினா கடற்கரையை, தமிழ் வளர்ச்சி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சுடுகாடாக மாற்றி வருகிறது.

    ஊழல் வழக்கில் குற்றவாளி என்று கோர்ட்டு அறிவித்தவரின் உடலை, இங்கு அடக்கம் செய்திருப்பது அவமானமாகும். ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என்னுடைய வழக்கு, கடந்த 18-ந்தேதி விசாரணைக்கு வந்தது.

    அப்போது அட்வகேட் ஜெனரல், கடலோர ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் அனுமதி வழங்கி கடந்த மார்ச் 16ந்தேதி தமிழ்நாடு மாநில கடலோர ஒழுங்குமுறை நிர்வாக ஆணையம் மற்றும் சுற்றுச்சூழல் இயக்ககத்தின் உறுப்பினர் செயலாளர் வழங்கியுள்ள அனுமதி உத்தரவை தாக்கல் செய்தார்.


    இத்தனைக்கும், இந்த வழக்கில் இந்த உறுப்பினர் செயலாளர் எதிர்மனு தாரராக உள்ளார். அவர் பதில் மனு எதுவும் தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில், ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டுவதற்கு அவர் அனுமதி வழங்கியுள்ளார்.

    இந்த நினைவிடம் 36 ஆயிரத்து 806 சதுர மீட்டர், அதாவது 9.09 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளார். நினைவிடம் கட்டுவதற்கு தமிழ் வளர்ச்சித்துறை கடந்த மார்ச் 14-ந்தேதி தான் விண்ணப்பமே செய்துள்ளது.

    அந்த விண்ணப்பம் குறித்து மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்திடமும், மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையத்திடமும், முறையான அனுமதியை பெறவில்லை. சுற்றுச்சூழல் சட்டத்தின்படி, மாநில அளவிலான சுற்றுச் சூழல் மதிப்பீட்டு நிபுணர்கள் கமிட்டியின் பரிந்துரையையும் வாங்கவில்லை. அனைத்து விதிகளையும் மீறி, இரண்டே நாளில் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.

    எனவே, ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டுவதற்கு வழங்கப்பட்ட இந்த அனுமதி சட்டவிரோதமானது. தன்னிச்சையானது. அதனால், இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது. #Jayalalithamemorial

    மருத்துவமனையில் ஜெயலலிதா பேசிய ஆடியோவை விசாரணை ஆணையம் தற்போது வெளியிட என்ன காரணம்? என டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.#jayalalithadeath
    ஆலந்தூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான டி.டி.வி.தினகரன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடாததால் கொதித்து போய் உள்ளனர். கலெக்டரிடம் மனுக்களை தரச்சென்ற எங்களை போலீசார் சுட்டு கொன்று உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடினால்தான் பழைய நிலைக்கு திரும்புவோம். இல்லை என்றால் எங்களை சுட்டு கொன்றுவிடுங்கள் என்று கூறுகின்றனர்.

    ஆலையை மூடுவதற்கான உத்தரவாதத்தை அரசு தரவேண்டும். தூத்துக்குடி கலெக்டர் சரியாக கையாளாததால்தான் இந்த பிரச்சினை ஏற்பட்டதாக நினைக்கின்றனர். துப்பாக்கி சூட்டிற்கு யார் உத்தரவிட்டது?.

    காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து விரைவில் அரசிதழில் வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதில் மத்திய அரசு காலதாமதம் செய்யக்கூடாது.

    ஜெயலலிதா மருத்துவமனையில் பேசிய ஆடியோவை தற்போது விசாரணை ஆணையம் வெளியிட காரணம் என்ன?. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை மறைக்கவே இவ்வாறு அரசு செயல்பட்டு உள்ளது. இதுபற்றி நீதிபதி ஆறுமுகசாமியிடம்தான் கேட்கவேண்டும்.

    இந்த அரசு மீது தூத்துக்குடி மக்கள் கோபமாக உள்ளனர். இது தெரியாமல் முதல்-அமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் விஷப்பரீட்சையில் இறங்க பார்க்கிறார்கள். போலீசாருடன் செல்வது விபரீத விளைவுகள் ஏற்படும். ஆலையை மூடிவிட்டு மக்களை சந்திக்க தூத்துக்குடி சென்றால் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார். #jayalalithadeath 
    ஜெயலலிதா ஆடியோ வெளியிட்டது, துப்பாக்கி சூட்டை திசைதிருப்ப தமிழக அரசு தந்திரம் என்று தினகரன் அணியை சேர்ந்த சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார். #jayalalithadeath

    சென்னை:

    ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் கடைசி பேச்சு ஆடியோவை வெளியிட்டது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை திசை திருப்பும் செயல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இது பற்றி தினகரன் அணியை சேர்ந்த செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆடியோ பேச்சு ஆஸ்பத்திரியில் பதிவு செய்யப்பட்டது. தங்களிடம் உள்ளதாக டாக்டர் சிவக்குமார் கடந்த ஜனவரி மாதம் விசாரணை ஆணையத்தில் தெரிவித்திருந்தார்.

    அந்த ஆடியோவை விசாரணை ஆணையம் இதுவரை கேட்காமல் நேற்று திடீரென டாக்டர் சிவக்குமாரை வரவழைத்து வாங்கி உள்ளது. இந்த ஆடியோவை விசாரணை ஆணைய செயலாளர் பத்திரிகைகளுக்கு வெளியிட்டுள்ளார். ஆடியோவை வெளியிட செயலாளருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? என்ற கேள்வி எழுகிறது.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவின் வீடியோவை வெளியிட்டதற்கு வெற்றிவேல் எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் இப்போது விசாரணை ஆணைய செயலாளரே ஆடியோவை வெளியிடலாமா? அவர் மீது வழக்கு பாயுமா?


    பொதுவாக விசாரணை ஆணைய தகவல்கள் அனைத்தையும் நீதிபதி தான் முதல்-அமைச்சரை சந்தித்து கொடுப்பது வழக்கம். பின்னர் சட்டமன்ற கூட்டத்தில் வைக்கப்பட்டு அதன் விவரங்கள் மக்களுக்கு முறையாக தெரிவிக்கப்படும். இதுதான் நடைமுறை.

    ஆனால் இப்போது விசாரணை ஆணையத்தை எடப்பாடி பழனிசாமி அரசு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது.

    இதற்கு முன்பு சசிகலா பரோலில் வந்திருந்த போது கொடுத்த பிரமாண பத்திர அபிடவிட் விவரங்களையும் இதே விசாரணை ஆணைய செயலாளர்தான் பத்திரிகைகளுக்கு வெளியிட்டார்.

    அன்றைய தினம் நீதிபதி விடுமுறையில் இருந்தார். அப்படி இருக்கையில் செயலாளர் அதை பிரித்து பார்த்து பத்திரிகைக்கு கொடுப்பது எந்த வகையில் நியாயம்?

    எனவே விசாரணை ஆணையத்தை அரசு தவறாக வழி நடத்துவதாகவே கருத வேண்டி உள்ளது.

    இன்னும் சொல்லப் போனால், சசிகலா உறவினர்கள், டாக்டர்கள், போயஸ் கார்டனில் பணி புரிந்த ராஜம்மாள் உள்பட பலரை அழைத்து விசாரிக்கிறார்களே தவிர, அன்றைய தினம் முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை இதுவரை விசாரணை ஆணையம் அழைத்து விசாரிக்கவில்லை. அது மட்டுமல்ல அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து சென்ற அனைத்து அமைச்சர்களையும் விசாரணை ஆணையம் ஏன் விசாரிக்க வில்லை.

    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிகிச்சை விவரங்கள் அனைத்தும் தெரியும். அவரை ஏன் விசாரணை ஆணையம் விசாரிக்க மறுக்கிறது.

    எனவே விசாரணை ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவே கருத வேண்டி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #jayalalithadeath

    ×