என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Joe Biden"

    • போரை முடிவுக்கு கொண்டு வர புதினை சந்திக்க தயார் என ஜோ பைடன் தகவல்.
    • அமெரிக்காவும், பிரான்சும் தொடர்ந்து உக்ரைனை ஆதரிக்க முடிவு.

    ரஷியா உக்ரைன் போர் கடந்த 9 மாதங்களாக நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மேக்ரனை, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வரவேற்றார். பின்னர் இருவரும் ஆலோசனை நடத்தினார்.

    தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜோ பைடன் உக்ரைன் மீதான ரஷியாவின் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வழியை ரஷிய அதிபர் புதின் உண்மையிலேயே தேடுகிறார் என்றால், அவரை சந்திக்கவும் தயார். ஆனால், புதின் அவ்வாறு தேடவில்லை. அமெரிக்காவும், பிரான்ஸும் தொடர்ந்து உக்ரைனை ஆதரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    'பின்னர் பேசிய மேக்ரன், ரஷியாவுடன் சமரசமாக செல்லுமாறு உக்ரைனை நாங்கள் வற்புறுத்த மாட்டோம், அதனை அவர்கள் ஏற்க மாட்டார்கள் என்று கூறினார். இந்நிலையில் அமெரிக்க அதிபரின் கருத்து குறித்து தனது நிலைப்பாட்டை ரஷியா வெளிப்படுத்தி உள்ளது.

    மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷிய செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ், சமரச பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பு இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது. அதேநேரத்தில், அதற்கு முன்பாக உக்ரைனை விட்டு ரஷிய படைகள் வெளியேற வேண்டும் என்று அது நிபந்தனை விதித்துள்ளது.

    இந்த நிபந்தனையை ரஷியா ஒருபோதும் ஏற்காது. அதோடு, ரஷியாவுடன் இணைக்கப்பட்ட புதிய உக்ரைன் பகுதிகளை அமெரிக்கா இன்னும் அங்கீகரிக்கவில்லை. அந்தப் பகுதிகளுக்கு ரஷியா சட்டவிரோதமாக உரிமை கோருவதாகவே அமெரிக்கா தெரிவித்து வருகிறது. எனவே, இத்தகைய சூழலில் சமரசப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார். 

    • ஜி20 மாநாடு அடுத்த ஆண்டு நடந்து முடியும் வரை இந்த தலைமை பொறுப்பு இந்தியா வசம் இருக்கும்.
    • ஜி20 அமைப்பிற்கு தலைமை பொறுப்பை ஏற்ற இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆதரவு தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் முடிவில் ஜி20 அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்கான மாநாட்டையும் இந்தியா அடுத்த ஆண்டு தலைமை ஏற்று நடத்தவுள்ளது. இந்த பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடி வசம் ஒப்படைக்கப்பட்டது.

    இதையடுத்து ஜி 20 மாநாடு அடுத்த ஆண்டு நடந்து முடியும் வரை இந்த தலைமை பொறுப்பு நம் வசம் இருக்கும்.

    இந்நிலையில், ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடன் கூறுகையில், இந்தியா, அமெரிக்காவின் வலுவான நட்புறவு நாடு. பருவநிலை மாற்றம், எரிசக்தி, உணவு நெருக்கடி ஆகிய சவால்களை எதிர்கொள்ளும் இவ்வேளையில் ஜி20 அமைப்பிற்கு தலைமை பொறுப்பேற்க உள்ள இந்தியாவிற்கும், எனது நண்பர் பிரதமர் மோடிக்கும் எனது ஆதரவை அளிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

    • பல கட்ட விவாதங்களுக்கு பிறகு கோரிக்கையை ஏற்றுக்கொள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புக்கொண்டுள்ளது.
    • அமெரிக்காவில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கப்படும் போது அது உலக அளவிலும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ஓரின சேர்க்கையாளர்களை அங்கீகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

    இது போல ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்தையும் அங்கீகரிக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது.

    இது தொடர்பாக அமெரிக்க பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தது. இதற்கு ஒருசாரார் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இது தொடர்பான சட்டம் கொண்டு வர அமெரிக்காவில் விவாதங்கள் நடந்து வந்தது.

    பல கட்ட விவாதங்களுக்கு பிறகு இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று நடந்தது. இதில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்தை அங்கீகரிப்பது மற்றும் இத்திருமணங்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்குவதை பிரதிநிதிகள் சபை ஏற்றுக்கொண்டது.

    பிரதிநிதிகள் சபை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து இந்த மசோதா அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்துக்கு அனுப்பப்படும்.

    இந்த மசோதாவில் ஜனாதிபதி ஜோ பைடன் விரைவில் கையெழுத்திடுவார் என கூறப்படுகிறது. அமெரிக்காவில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கப்படும் போது அது உலக அளவிலும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று அமெரிக்கா சென்றார்.
    • வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10 மாதங்களாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன.

    இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று அமெரிக்கா சென்றடைந்தார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்தார்.

    இது நாடுகளிடையே பரஸ்பரம் நட்புறவு குறித்தும், ஆயுதங்கள், ராணுவ தளவாடங்களை வாங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிகிறது.

    கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய பிறகு ஜெலன்ஸ்கியின் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன் வீழவில்லை. இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகிறது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.
    • உக்ரைனுக்கு கூடுதலாக 1.85 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 300 நாட்களைக் கடந்துள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன.

    இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றடைந்தார். வெள்ளை மாளிகையை அடைந்ததும் அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது மனைவியுடன் வெள்ளை மாளிகைக்கு வெளியே வந்து அதிபர் ஜெலன்ஸ்கிக்கு வரவேற்பு கொடுத்தார். பின்னர் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து, ஏற்கனவே அறிவித்தபடி, உக்ரைனுக்கு கூடுதலாக 1.85 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை அமெரிக்கா வழங்கியது.

    இந்நிலையில், அமெரிக்கா பாராளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியதாவது:

    நீங்கள் கொடுக்கும் நிதியுதவி வெறும் தானம் என்று நினைக்காதீர்கள் இது முதலீடு. இது ஜனநாயகம், பாதுகாப்புக்கான முதலீடு.

    இந்த அவையில் நான் உரையாற்றுவது பெருமைக்குரியது. எல்லா பிரச்சினைகளுக்கும் இடையே உக்ரைன் வீழவில்லை. உக்ரைன் இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகிறது. ரஷியாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கிறது. அதிபர் பைடன் எங்களுக்கு துணை நிற்பதில் மகிழ்ச்சி. உக்ரைன் ஒருபோதும் ரஷ்யாவிடம் சரணடையாது.

    கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய பிறகு ஜெலன்ஸ்கியின் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்க அதிபர் ஜோ பைடனை ஜப்பான் பிரதமர் வரும் 13-ம் தேதி சந்தித்துப் பேசுகிறார்.
    • இருவரும் உக்ரைன், ரஷியா போர் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி ஆலோசனை நடத்த உள்ளனர்.

    வாஷிங்டன்:

    ஜப்பான் நாடு தென்கொரியா மற்றும் அமெரிக்காவுடன் நட்பு ரீதியிலான தொடர்பு கொண்டுள்ளது. மறுபுறம் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

    கடந்த 1-ம் தேதி ஜப்பானை நோக்கி குறுகிய தூர பாலிஸ்டிக் ரக ஏவுகணையை ஏவி சோதித்தது வடகொரியா. இதையடுத்து நடந்த ஆளும் தொழிலாளர் கட்சியின் கூட்டத்தில் பேசிய வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், நாட்டின் அணு ஆயுத உற்பத்தியை அதிவேகத்தில் அதிகரிக்க உத்தரவிட்டார். இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடிக்கிறது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் வைத்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா வரும் 13-ம் தேதி நேரில் சந்தித்துப் பேசுகிறார்.

    இதுதொடர்பாக, வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் வருகையை அதிபர் ஜோ பைடன் எதிர்நோக்கி காத்து இருக்கிறார். இந்தச் சந்திப்பில் எங்களுடைய இரு அரசாங்கங்கள், பொருளாதார விவகாரங்கள் மற்றும் நாட்டு மக்களின் உறவுகளை ஆழப்படுத்துவதற்கான ஆலோசனை நடத்த உள்ளனர். இந்தச் சந்திப்பில் இரு தலைவர்களும், சர்வதேச அளவில் நிலவி வரும் பருவநிலை மாற்றம், வடகொரியா, சீனாவை சுற்றி நிலவும் பாதுகாப்பு தொடர்புடைய விவகாரங்கள், உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி ஆலோசனை நடத்த உள்ளனர் என தெரிவித்துள்ளது.

    • உக்ரைனுக்கு ஆதரவை அதிகரிக்கப் போகிறோம்.
    • ரஷியா மெதுவாக முயற்சி செய்யவில்லை.

    வாஷிங்டன் :

    உக்ரைன் மீதான ரஷியாவின் போர் ஓர் ஆண்டை நெருங்கி கொண்டிருக்கிறது. இந்த போரில் அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு பக்கபலமாக இருந்து வருகின்றன.

    இந்த நிலையில் உக்ரைன் போர் விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கோல்சுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். அப்போது இருநாடுகளும் இணைந்து உக்ரைனுக்கு பிராட்லி காலாட்படை சண்டை வாகனங்களை வழங்குவதாக இரு நாட்டு தலைவர்களும் அறிவித்தனர்.

    ஜெர்மனி அதிபருடனான பேச்சுவார்த்தைக்கு பின் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தற்போது, உக்ரைனில் போர் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. ரஷிய ஆக்கிரமிப்பை எதிர்க்க உக்ரைனியர்களுக்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். ரஷியா மெதுவாக முயற்சி செய்யவில்லை. அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததைப் போலவே காட்டுமிராண்டித்தனமாகவே உள்ளன. அவர்கள் எதையும் விடவில்லை.

    ஜெர்மனி பிரதமருடன் உக்ரைன் போர் குறித்து நீண்டதொரு ஆலோசனை நடத்தினேன். போரில் அடுத்தக்கட்டமாக நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று பேசினோம். நாங்கள் உக்ரைனுக்கு ஆதரவை அதிகரிக்கப் போகிறோம். ரஷிய வான் தாக்குதல்களுக்கு எதிராக உக்ரைனைப் பாதுகாக்க நாங்கள் உதவப் போகிறோம். அதன்படி உக்ரைனுக்கு பிராட்லி காலாட்படை சண்டை வாகனங்களை வழங்குவதற்கான அறிவிப்பை நாங்கள் கூட்டாக வெளியிட்டோம்.

    இவ்வாறு ஜோ பைடன் கூறினார்.

    • பிரேசில் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
    • பாராளுமன்றத்திற்குள் புகுந்த வன்முறையாளர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.

    வாஷிங்டன்:

    பிரேசிலில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வியடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரேசிலின் புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்ததால் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இதற்கிடையே, பிரேசில் பாராளுமன்றத்திற்குள் போல்சனேரோவின் ஆதரவாளர்கள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். ஜனாதிபதி மாளிகை, சுப்ரீம் கோர்ட்டு வளாகம் முன் திரண்ட போல்சனேரோ ஆதரவாளர்கள் தற்போதைய அதிபருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    இந்நிலையில், பிரேசில் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய சம்ப்வத்துக்கு அமெரிக்கா கன்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், பிரேசிலில் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலையும், அமைதியான முறையில் அதிகாரத்தை மாற்றுவதையும் நான் கண்டிக்கிறேன். பிரேசிலின் ஜனநாயக நிறுவனங்களுக்கு எங்கள் முழு ஆதரவு உள்ளது. அவர்களின் விருப்பத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தக் கூடாது. பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுடன் தொடர்ந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

    • அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் முறையாக அமெரிக்க- மெக்சிகோ எல்லைக்குச் சென்றார்.
    • சட்டவிரோத குடியேற்றம் மற்றும் கடத்தல் தொடர்பான விவாதங்களின் மையமான டெக்சாசுக்கு அவர் சென்றார்.

    எல் பாசோ:

    அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் முறையாக அமெரிக்க- மெக்சிகோ எல்லைக்குச் சென்றார்.

    அங்கு சட்டவிரோத குடியேற்றம் மற்றும் கடத்தல் தொடர்பான விவாதங்களின் மையமான டெக்சாஸின் எல் பாசோ பகுதிக்கு அவர் சென்றார்.

    மெக்சிகோ மற்றும் கனடாவின் தலைவர்களுடன் பிராந்திய உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் மெக்சிகோ நகரத்திற்குச் சென்றதாக தகவல் வெளியானது.

    • அமெரிக்க அதிபர் ஜோ பைடனை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று சந்தித்தார்.
    • இருவரும் உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி ஆலோசனை நடத்தினர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் வைத்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.

    இதுதொடர்பாக, அதிபர் பைடன் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் செய்தி தெளிவாக உள்ளது. அமெரிக்க, ஜப்பான் கூட்டணியில் நமது முதலீடு பெரும் ஈவுத்தொகையை அளிக்கிறது. தேசிய பாதுகாப்பு முதல் பொருளாதார பிரச்சினைகள் வரை. மேலும் இது இன்னும் பல ஆண்டுகளாக தொடரும்.

    ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா, அமெரிக்காவுடன் உறுதியான நட்பு மற்றும் நண்பராக இருந்து வருகிறார். அவருடன் அமர்ந்து, இந்தோ-பசிபிக் மற்றும் உலக நாடுகள் ஆகிய இரு நாடுகளுக்கும் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்பை மேம்படுத்த நாம் எவ்வாறு இணைந்து செயல்படுகிறோம் என்று விவாதிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • உக்ரைன்-ரஷியா போரில் அமெரிக்கா உக்ரைனுக்கு பெரும் பக்கபலமாக இருந்து வருகிறது.
    • உக்ரைனுக்கு மேலும் 2.5 பில்லியன் டாலர் ராணுவ உதவியை அமெரிக்கா வழங்குகிறது.

    வாஷிங்டன்:

    ரஷியா உடனான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா பெரும் பக்கபலமாக இருந்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுப்பதற்கான சூழல் தென்பட்டது முதல் இருந்தே உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது.

    அமெரிக்கா வழங்கி வரும் அதிநவீன ஆயுதங்களை கொண்டே உக்ரைன் ராணுவம் கிட்டத்தட்ட ஓர் ஆண்டாக ரஷிய படைகளை துணிவுடன் எதிர்த்து நிற்கிறது.

    இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவியை வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

    இதுதொடர்பாக, அமெரிக்க ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து உக்ரைனுக்கு ராணுவ தளவாடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது 30-வது தொகுப்பாக ராணுவ தளவாடங்கள் வழங்கப்பட்டவுள்ளன. இந்த புதிய தொகுப்பில் 59 பிராட்லி காலாட்படை சண்டை வாகனங்கள், 90 ஸ்ட்ரைக்கர் கவச வாகனங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அதிநவீன பீரங்கி மற்றும் ராக்கெட் அமைப்புகள் உள்ளிட்டவை அடங்கும் என தெரிவித்துள்ளது.

    • அரசின் அதிமுக்கிய, ரகசிய ஆவணங்கள் அதிபர் ஜோ பைடனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட நிலையில் சோதனை.
    • ஜோ பைடன் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்த 2009 முதல் 2016 ஆண்டு வரையிலான ஆணவங்கள் ஆகும்.

    அமெரிக்க அதிபர் ஜோபைடனின் வீடு மற்றும் தனிப்பட்ட அலுவலகத்தில் அரசின் ரகசிய ஆவணங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கடந்த நவம்பர் 2-ந்தேதி, டிசம்பர் 20-ந்தேதி மற்றும் ஜனவரி 12-ந்தேதிகளில் நடந்த சோதனையில் 10-க்கும் மேற்பட்ட அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    அந்த ஆவணங்கள் ஜோபைடன் 2009 முதல் 2017-ம் ஆண்டு வரை துணை அதிபராக பதவி வகித்த கால கட்டத்தை சேர்ந்தவை ஆகும்.

    இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அரசின் ரகசிய ஆவணங்கள் ஜோபைடன் வீட்டில் இருந்தது தொடர்பாக விசாரணை நடத்த அமெரிக்க அட்டர்ரனி ஜெனரல் மெரிக் ஹார் லெண்ட் உத்தரவிட்டார். இதற்கான விசாரணை குழு அமைக்கப்பட்டது.

    எப்.பி.ஐ. சோதனை

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை டெலாவேரின் வில்மிங்டனில் உள்ள ஜோ பைடன் வீட்டில் நடந்தது. சுமார் 13 மணி நேரம் நடந்த சோதனையில் மேலும் 6 ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    இதில் சில ஆவணங்கள் ஜோபைடன் செனட்டராக இருந்த காலத்திலும், மற்றவை துணை அதிபராக இருந்த காலத்திலும் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

    இது தொடர்பாக ஜோபைடனின் வக்கீல் பாப் பாயர் கூறும்போது, "ஜோ பைடன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 6 ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கையால் எழுதப்பட்ட குறிப்புகள் மற்றும் சுற்றப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை எடுத்து சென்றனர். தனது வீட்டில் நீதித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த அதிபர் ஜோபைடன் சம்மதம் தெரிவித்தார்" என்றார்.

    அதிபர் ஜோபைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் நீதித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×