search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "joint declaration"

    • அறிக்கையில் புதியதாக சில வாக்கியங்களை இந்தியா சேர்த்தது
    • 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' கோட்பாடு வலியுறுத்தல்

    அமெரிக்கா, ரஷியா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட 19 நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்த ஜி20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புது டெல்லியில் இன்று காலை தொடங்கியது.

    உக்ரைன் போர் விவகாரத்தில் ஜி20 உறுப்பு நாடுகளில், ரஷியாவை சீனாவும், உக்ரைனை அமெரிக்காவும் ஆதரிப்பதால், மாநாட்டில் வெளியிடப்பட வேண்டிய கூட்டு பிரகடனத்தில் உக்ரைன் போர் குறித்த நிலைப்பாட்டை அறிவிக்க எந்த முடிவும் எடுக்கப்படாததால், வரைவறிக்கையில் இந்தியா புதியதாக சில வாக்கியங்களை சேர்த்து தலைவர்களின் பார்வைக்கு அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், ஜி20 தலைவர்களுக்கிடையே பிரகடனம் குறித்து கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சியுடன் அறிவித்தார். 'டெல்லி பிரகடனம்' என அழைக்கப்படும் இந்த அறிக்கையில் உக்ரைன் போர் குறித்து இந்த கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளியாகியுள்ளது.

    அதில், "சர்வதேச பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை, சர்வதேச மனிதாபிமான சட்டம் ஆகியவற்றுடன் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் பாதுகாக்கும் வகையில் பலதரப்பு அமைப்புகளை உள்ளடக்கிய சர்வதேச சட்டங்களின் அடிப்படை கொள்கைகளை எப்போதும் நிலைநிறுத்த அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம்."

    "நாடுகளுக்கிடையேயான மோதல்களையும் நெருக்கடிகளையும் அமைதியான வழிமுறைகளில் தீர்த்து கொள்ளவும், ராஜதந்திரத்தின் மூலம் பேச்சுவார்த்தையின் மூலமாகவுமே பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்."

    "போரினால் உலக பொருளாதாரத்தின் மீது ஏற்படும் மோசமான தாக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான எங்கள் முயற்சியில் நாங்கள் ஒன்றுபடுவோம். மேலும், அண்டை நாடுகளுக்கிடையே அமைதியான நட்பும் நல்லுறவும் நிலவ 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' எனும் கோட்பாட்டின் அடிப்படையிலும், ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகளின் அடிப்படையிலும், உக்ரைனில் அமைதியை கொண்டு வர ஒரு விரிவான, நியாயமான மற்றும் நீடித்து நிற்க கூடிய அனைத்து வகையான ஆக்கபூர்வமான முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். இன்றைய காலகட்டம் ஒரு போருக்கான காலகட்டமாக மாறக்கூடாது." என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • போரில் ரஷியாவை சீனா ஆதரிக்கிறது, ஆனால் அமெரிக்கா எதிர்க்கிறது
    • போர் குறித்து ஜி20 நாடுகளுக்கிடையே தெளிவான கருத்தொற்றுமை ஏற்படவில்லை

    அமெரிக்கா, ரஷியா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட 19 நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்த ஜி20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புது டெல்லியில் இன்று காலை தொடங்கியது. ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கிடையே நடைபெற்று வரும் போரின் தாக்கம் ஜி20 கூட்டறிக்கை வெளியிடுவதில் பெரிதாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    மாநாட்டின் கடைசி நாளான நாளை, மாநாட்டின் முடிவில் அனைத்து உறுப்பினர் நாட்டு தலைவர்களின் ஒன்றிணைந்த கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்படுவது வழக்கம். உக்ரைன் போர் விவகாரத்தில் ஜி20 உறுப்பு நாடுகளில், ரஷியாவை சீனா ஆதரிக்கிறது. ஆனால் அமெரிக்கா, உக்ரைனை ஆதரித்து ரஷியாவிற்கு எதிரான நிலைபாட்டை எடுத்திருக்கிறது.

    இதனால் நாளை படிக்கப்பட வேண்டிய தலைவர்களின் மாநாட்டு பிரகடன கூட்டறிக்கையில் உக்ரைன் குறித்த நிலைப்பாட்டை அறிவிக்கப்பட வேண்டியவை தெளிவில்லாமல் இருக்கிறது. ரஷிய உக்ரைன் போரை குறிப்பிடாமல் வெளியிடப்படும் எந்த பிரகடனத்திற்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் ஜி7 அமைப்பை சேர்ந்த நாடுகள் ஒப்புதல் அளிக்காது என தகவல்கள் வெளியாகி இருந்தது.

    இந்த கட்டாயத்தினால், தலைவர்களுக்கான இந்த இறுதி கூட்டறிக்கையில் புதியதாக சில வாக்கியங்களை இந்தியா சேர்த்து அந்நாட்டு அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஜி20 உச்சி மாநாட்டிற்கு முன்பு நடந்த எந்த முக்கிய சந்திப்புகளிலும், நிதி மற்றும் வெளியுறவுத்துறை உட்பட எந்த துறையிலும், உக்ரைன் போரினை குறிப்பிடும் எந்த சொற்றொடரையும் உள்ளடக்கிய ஆவணங்களுக்கும் சீனா மற்றும் ரஷியா ஒப்புதல் அளிக்க மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    ×