search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "K S Alagiri"

    • தி.மு.க.-காங்கிரஸ் வலிமையான அணியாக இருக்கிறது
    • சபை அறிந்து, காலம் அறிந்து கருத்துக்களை பேச வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் காங்கிரஸ், கூட்டணி காரணமாக மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுப்பதில்லை. தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி அமைக்கிறோம். மற்ற நேரங்களில் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தால் மட்டுமே கட்சி வளரும் என்று கார்த்தி ப. சிதம்பரம் எம்.பி. கூறினார். அவரது இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கட்சிக்குள் பலரும் கருத்துக்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தென் சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜர பிறந்த நாளை யொட்டி காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளை கவுரவிப்பது மற்றும் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தி.நகரில் நடந்தது.

    இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும்போது சூசகமாக கார்த்தி ப.சிதம்பரம் பேச்சுக்கு பதில் அளித்து அவருக்கு அறிவுரை வழங்குவது போல் பேசினார். அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் காமராஜர் வழியில் செயல்பட்டு வருகிறது. நமக்கென்று சில சங்கடங்கள் இருந்தாலும் பணிகளில் சுணக்கம் காட்டுவது கிடையாது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை செய்து வருகிறோம்.

    இந்திய அளவில் வலிமையாக இருந்தது காங்கிரஸ். மாநில கட்சிகள் வளர்ந்த போது சில மாற்றங்கள் ஏற்பட்டது.

    2 எம்.பி.க்களை மட்டுமே வைத்திருந்த பா.ஜனதா ஏதோ ஒரு வகையில் பிரசாரத்தை வலிமையாக மேற்கொண்டு வலிமையாகி விட்டார்கள்.

    இப்போது ராகுலின் நடை பயணத்தால் வலிமை பெற்றுள்ளோம். எதை எதை எப்போது பேச வேண்டும் என்ற கணக்கு இருக்கிறது. அப்போதுதான் பேச வேண்டும். அந்த பேச்சுக்குதான் மரியாதை இருக்கும். சபை அறிந்து, காலம் அறிந்து, கட்சி தலைமையோடு கலந்து பேசி கருத்துக்களை பேச வேண்டும்.

    பல மாநிலங்களில் கூட்டணி அமைய பல சுற்று பேச்சுக்கள் நடந்தது. அப்படியும் சில மாநிலங்களில் சிக்கல் ஏற்பட்டது.

    ஆனால் தமிழ்நாட்டில் இரண்டே சுற்றுக்கள் பேசி வலிமையான தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். நம்மை பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸ். வலிமையான எதிரி. பா.ஜனதாவையும், ஆர்.எஸ்.எஸ்சையும் மேலும் பலவீனமாக்க வேண்டும் என்பதுதான் நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

    பிறர் பார்த்து ஏளனம் செய்யும்படி எதையும் பேசக் கூடாது. அப்படியானால் தான் மக்கள் திரும்பி பார்ப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க. தனக்கு சம்பந்தம் இல்லாத உரிமைகளை கோருகிறது.
    • அ.தி.மு.க. என்பது மோடியின் மறு உருவம்.

    சென்னை :

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் இலக்கிய அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் அணியின் தலைவர் பி.எஸ்.புத்தன் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசினார்.

    இதில் மாநில துணைத்தலைவர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, பலராமன், கோபண்ணா, பொதுச்செயலாளர்கள் கே.சிரஞ்சீவி, தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, காண்டீபன், பி.எஸ்.தமிழ்செல்வன், மாநில செயலாளர் அகரம் கோபி, மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கு பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜ.க. தனக்கு சம்பந்தம் இல்லாத உரிமைகளை கோருகிறது. காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு 2 ஆயிரம் மாணவர்கள் செல்வதற்கான செலவை தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, இதில் உரிமை கொண்டாட வேண்டும் என்றால் இந்து அறநிலையத்துறைதான் உரிமை கொண்டாட வேண்டும்.

    பிரதமர் மோடி வேண்டுமானால் நிகழ்ச்சிக்கு வரலாம். ஆனால் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தது தமிழக அரசுதான்.

    மகாத்மா காந்தி நாட்டு மக்களிடம் உண்மையை பேசினார், நேர்மையை பேசினார், மக்களை தன்பால் கவர்ந்தார் என்பதற்காக சுட்டுக்கொல்லப்பட்டார். ராகுல்காந்தியும் அதே பாதையில் பயணிக்கிறார், அதே பாதையில் செயல்படுகிறார். ராகுல்காந்தி நடந்து செல்வதன் மூலம் அவர்கள் மிரண்டு போய் உள்ளனர். எனவே, ராகுல்காந்திக்கு மிரட்டல் விடுக்கிறார்கள்.

    தமிழகத்தில் எங்களின் கூட்டணி என்பது கொள்கை ரீதியானது. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினரின் சித்தாந்தம், மதவெறி தாக்குதல்களை தடுப்பது என்ற ஒற்றை நேர்க்கோட்டில்தான் நாங்கள் சேர்ந்து இருக்கிறோம். இந்த கொள்கையை அ.தி.மு.க.வினால் ஒருபோதும் கடைபிடிக்க முடியாது. அ.தி.மு.க. என்பது மோடியின் மறு உருவம். அதனால்தான், அந்த கட்சி பலவீனப்பட்டு கிடக்கிறது.

    அ.தி.மு.க. மெகா கூட்டணி, அதைவிட மகா மகா கூட்டணி அமைத்தாலும் அதற்கு ஒரு பயனும் கிடைக்காது. ஏனென்றால் அதை இயக்குபவர்கள் மோடியும், அமித்ஷாவும்தான். அவர்களை (அ.தி.மு.க.வினரை) அவர்களே இயக்க எப்போது ஆரம்பிக்கிறார்களோ அப்போதுதான் தமிழக மக்கள் அவர்களை திரும்பிப்பார்ப்பார்கள். இன்னொருவரின் இயக்கத்தில் அவர்கள் நடித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களால் தமிழகத்தில் பழைய வலிமையை பெற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை, தமிழக காங்கிரஸ் புதிய தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று சந்தித்து பேசினர். #RahulGandhi #KSAlagiri
    புதுடெல்லி:

    தமிழக காங்கிரஸ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கும் கே.எஸ்.அழகிரி, செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டு இருக்கும் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் நேற்று மாலை டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்கள்.

    அப்போது தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்கள் முகுல் வாஸ்னிக், சஞ்சய் தத் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்றது.

    இச்சந்திப்பு குறித்து புதிய தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராகுல்காந்தியை சந்தித்து தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் பற்றி பேசினோம். தேர்தலில் எப்படி பணியாற்றுவது, கட்சி அமைப்பை எப்படி பலப்படுத்துவது என்பது பற்றி விவாதித்தோம்.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை தமிழக அரசு நசுக்கி விட்டது என்று ராகுல்காந்தியிடம் கூறினோம். அரசு ஊழியர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவை வழங்கி இருப்பதாக ராகுல்காந்தி சொல்ல சொன்னார். எனவே, அரசு ஊழியர்களுக்கு எங்கள் ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம்.

    நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் கூட்டணி வெற்றி பெற வேண்டும், அதற்கான பணிகளை செய்யுங்கள் என்று ராகுல்காந்தி உத்தரவிட்டு இருக்கிறார். தேர்தலில் எங்களுக்கு 100 சதவீத வெற்றி வாய்ப்பு இருக்கிறது.

    கோஷ்டி பூசல் என்பதை நீங்கள்தான் (பத்திரிகையாளர்கள்) நினைவூட்டி வருகிறீர்கள். நான் கேட்பது என்னவென்றால், கருத்து வேறுபாடு இல்லாத அரசியல் இயக்கம் எங்காவது இருக்கிறதா?. சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதை கோஷ்டி பூசல் என்று சொல்ல முடியாது.

    திருநாவுக்கரசர் 2½ வருடம் தலைவராக பணியாற்றி இருக்கிறார். அவருக்கு வேறு வாய்ப்புகள் வழங்கப்பட இருக்கின்றன. காங்கிரசில் நிச்சயமாக கோஷ்டி பூசல் இல்லை. கருத்து வேறுபாடு இருப்பதில் எந்த தவறும் இல்லை.

    நாங்கள் நிதர்சனமான அரசியல் கட்சி. தேர்தலில் எங்கெல்லாம் வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ? எங்கெல்லாம் தொண்டர்கள் வேகமாக பணியாற்றுகிறார்களோ? அந்த தொகுதிகளைத்தான் கேட்போம்.

    கூட்டணிக்கு இன்னும் அதிகமான கட்சிகள் வருவார்களானால் அவர்களுக்கும் இடம் கொடுக்க வேண்டியிருக்கும். நாங்களும், தி.மு.க.வும் மட்டுமே கூட்டணி என்றால் பிரித்துக்கொள்ளலாம். கூட்டணிக்கு இன்னும் ஏராளமான கட்சிகள் வர விரும்புகின்றன. 4 மாநில தேர்தல் வெற்றிக்கு பிறகு தமிழ்நாட்டில் பல கட்சிகள் எங்கள் கூட்டணியல் சேர விருப்பமாக இருக்கின்றன.

    ராகுல்காந்தி இந்த மாதம் தமிழ்நாட்டுக்கு வருகிறார். தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. திருநாவுக்கரசர் தேர்தலில் போட்டியிடுவாரா? என்பது பற்றி கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.

    வருகிற 7-ந்தேதி நான் பதவி ஏற்றுக்கொள்ள இருக்கிறேன். அதற்கு முன்னதாக தலைவர்களை சந்திப்பேன். பதவி ஏற்ற பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் நிருபர்கள் “தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க. சேர இருப்பதாக கூறப்படுகிறதே, அதற்கு வாய்ப்பு இருக்கிறதா?” என்று கேட்டனர்.

    அதற்கு அவர் பதில் அளிக்கையில், “கூட்டணிக்கு யார்- யார்? வருவார்கள் என்பதையெல்லாம் இப்போதே நாங்கள் சொல்லி விட்டால் நீங்கள் (பத்திரிகையாளர்கள்) சென்று தடுத்து விடுவீர்கள். அதனால் இப்போது சொல்ல முடியாது. நேரம் வரும்போது அவர்கள் வருவார்கள்” என்று கூறினார்.

    முன்னதாக டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறுகையில் ‘தமிழகத்தில் ஊழல் அற்ற, மக்களை மேம்படுத்துகிற ஆட்சியை உருவாக்குவதே எங்கள் நோக்கம்’ என்று கூறினார்.
    ×